privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விநமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்

நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்

-

இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19 -ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். இதற்கு மாற்று சோசலிசமே!

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் எஸ்.பாலன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

வம்பர் புரட்சிக்குப் பின், ரஷ்யாவில் முதலாளித்துவம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. பண்ணை நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1917-க்குப் பிறகு பல நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கம் கண்டு போராடினர். காலனிய, அரைக்காலனிய நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

அதன் விளைவாக 1926-இல் இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் வருகிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, போராடும் உரிமை என மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனுடைய தியாகத்தினால் பாசிசம் வீழ்த்தப்பட்டது, அதே காலக்கட்டத்தில் இந்தியாவில் 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்டு, அதன் இடத்தில் இந்திய அரசு நிறுவப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் 1947-க்குப் பின் இந்தியாவில் 44 சட்டங்கள் வருகின்றன, சட்டப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, குடியுரிமை, பணிப் பாதுகாப்பு, L.T.C., E.S.I., P.F., தொழிற்தகராறு சட்டங்கள், தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர் துறை என அனைத்தும் தொடங்கப்பட்டன. இந்த ஆரம்ப காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் உரிமை எப்படி இருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்று.

அன்று நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளிக்கு, E.S.I., BASIC PAY, P.F., பஞ்சப்படி, குடியிருப்பு என அனைத்துச் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. அதேபோல் மத்திய தொழிற்சாலைகளான H.A..L., B.H.E..L., தனியார் வங்கி, இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் போன்றவற்றிலும்கூட அனைத்துத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்கள். இந்த நிலைமை 1980 வரைதான்.

1980-இல் சுமார் 20% தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள். 80% தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சட்டப் பாதுகாப்பு இல்லாதவர்கள். இந்த நிலைமை 1990-இல் 10% பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள், 90% பாதுகாப்பற்ற தொழிலாளர்கள். தற்போது 97% தொழிலாளர்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர், வெறும் 3% தொழிலாளர்களுக்கு மட்டுமே சலுகைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

1971-இல் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள் – CONTRACT REGULATION AND ABOLITION ACT – ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளியாக ஆக்கக்கூடிய சட்டம் அது. 1976-இல் மத்திய அரசின் அரசாணை ஒன்று வருகிறது. அந்த அரசாணையின்படி துப்புரவு, கேண்டீன், கார்டனிங், செக்கியூரிட்டி ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கூறியது அந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தை முன்மாதிரியாக வைத்து நடந்த வழக்கில்தான் பல ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். 1997-இல் நடந்த ஏர்-இந்தியா வழக்கில் உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளியானார்கள்.

பின்னர் வாஜ்பாய் அரசு வந்தது. 2002-இல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. துப்புரவு, கேண்டீன், கார்டனிங், டிரைவிங் முதலிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்கத் தேவையில்லை என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் போட்டார்கள். 2001-இல் STEEL AUTHORITY OF INDIA வழக்கு தொடர்பான தீர்ப்பில் உச்சநீதி மன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தகைய  நடவடிக்கையின் மூலம் இந்த நாட்டின் 100கோடி கைகளும், கால்களும் இலவசம் என்று அறிவித்து விட்டார்கள். ஆகையால்தான் மோடி நாடுநாடாகச் சென்று எங்கள் நாட்டில் உள்ளதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூவிக்கூவி அழைக்கிறார்.

இந்த நிலைமையில் நாட்டில் எவ்வாறு தொழில் நடக்கிறது என்றால், மாருதி தொழிற்சாலையை எடுத்துக் கொள்ளுங்கள். மாருதி தொழிற்சாலையில் 15% நிரந்தரத் தொழிலாளர்கள், 80% ஒப்பந்த தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளிக்கு ரூ.30,000 சம்பளம், ஒப்பந்த தொழிலாளிக்கு ரூ.7000 அல்லது 8000 தான். ஹுண்டாய் கம்பெனியில் 18% நிரந்தரத் தொழிலாளர்கள், 82% ஒப்பந்த தொழிலாளர்கள்.
H.A.L., H.M.T., B.H.E.L., ஆகியவற்றில் ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தரத் தொழிலாளர்களும் சரிபாதியாக உள்ளார்கள்.

மாநில அரசின் ஆம்புலன்ஸ், செவிலியர், EB control, கணினி ஆப்பரேட்டர்கள் என அனைத்திலும் ஒப்பந்த தொழிலாளர்கள். அரசு அலுவலகத்திலும் டைப்பிஸ்ட் முதற்கொண்டு அனைத்தும் குத்தகைமயம். இவர்களுக்கு ஊதியம் வெறும் ரூ.7,000 அல்லது 8,000 தான். நீதிமன்றங்களில் என்ன நிலைமை என்றால், நீதிபதியும் குத்தகை நீதிபதி, ஊதியம் ரூ.10,000 தான்.

பெங்களூரில் துப்பரவுத் தொழிலாளர்கள் துடைப்பம் கேட்டார்கள் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் செருப்பு கேட்டார்கள் என்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். சங்கம் வைத்தால், சங்கத்தில் பெயர் பதிவிட்டுள்ள அனைவரும் வீட்டிற்குப் போகவேண்டியதுதான்.   இந்த மாதிரியான நிலைமையில்தான், இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.

டொயோட்டோ கார் ஜெர்மனியில் என்ன விலையோ அதேதான் பெங்களுரிலும், சென்னையிலும், இங்கிலாந்து, அமெரிக்காவிலும். ஆனால், அதே இந்தியத் தொழிலாளியின் கூலி மட்டும் ஒரு டாலரில் கால் பங்கு, ஜெர்மனியில் 32 டாலர்.
1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியபோது ஜெர்மானிய முதலாளிகள் ஹிட்லரைத் தேர்ந்தெடுத்தார்கள். காரணம் போராடினால் இவர் இரும்புக் கரம் கொண்டு அடக்குவார் என்பதால்தான்.  போராடுபவர்களை நசுக்குவதற்காகவே இங்கே மோடி அரசு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஆகவே, இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19 ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். அப்படியென்றால், இந்த நூறு கோடி கைகள், நூறு கோடி கால்கள் நியாயம் கேட்டு எங்கே போவார்கள் என்பது தான் கேள்வி. சட்டசபையிலே சென்று முறையிட்டால் நடக்குமா, பாராளுமன்றத்தில் முடியுமா? நீதிமன்றத்தை நாடினால் உச்சநீதி மன்றம் கூறுகிறது தரமுடியாது என்று. ரஷ்யத் தொழிலாளி, முதலாளி வர்க்கத்தை தூக்கியெறிந்த பின்புதான் சுரண்டலிலிருந்து விடுபட்டான். இந்தியத் தொழிலாளிக்கு வேறு எதாவது மார்க்கமுண்டா என்றால், கிடையாது,

இந்த மூன்றாண்டுகால மோடியின் ஆட்சியில் பி.எஃப்., இ.எஸ்.ஐ., தொழிலாளர் துறை முடக்கம் எனத் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய, எந்த உரிமையும் பெறப்படவில்லை. மக்கள் நல அரசு என்ற தகுதியை மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் என அனைத்தும் இழந்துவிட்டன. இவர்கள் யாரும் தொழிலாளியின் பக்கமில்லை. ஆகவே தீர்வுதான் என்ன என்றால், ரஷ்யப் புரட்சி. வழிதான் நமது வழி.

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர. ஆனால், அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மார்க்ஸ். அதேதான் இன்றும். ஆனால், முதலாளிகள் இன்று என்ன சொல்கிறார்கள்? இதற்கு மாற்று என்ற ஒன்று இல்லை என்கிறான்.

நாம் கூறுகிறோம் சோசலிசமே மாற்று, இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானது சோசலிசம். சோசலிசமே வெல்லும், கம்யூனிசமே வெல்லும், தொழிலாளர்கள் அவர்களுடைய போராட்டத்தினால் வெற்றி பெற முடியும் என்று கூறி உரையை முடிக்கிறேன். நன்றி!

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க