காலத்திற்கேற்ப வினவு தளத்தை புதுப்பிப்பது குறித்து அவ்வப்போது ஆலோசிப்போம். பிறகு அப்படி மாறினாலும் தொடர்வதற்கு நம்மிடம் பலம் இல்லையே என மறப்போம். இந்த முரண்பாடு இப்போது என்றில்லை, வினவு துவக்கம் முதலே இருக்கிறது. சமூக மாற்றத்திற்கான அனைத்து முயற்சிகளிலும் இந்த முரண்பாடு இல்லையென்றால்தான் அதிசயம். மோடி, டிரம்பின் டிஜிட்டல் படையெடுப்பை எதிர்த்து சண்டையிடுவதில் நாம் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். அதே நேரம் நம்மிடம் கருவிகளும், ஆள் பலமும் போதுமானதாக இருப்பதில்லை.
ஆரம்ப காலத்தில் இருந்து வினவு தளத்தினை வளர்த்தெடுக்க நண்பர்கள், வாசகர்கள் பலர் ஆலோசனைகளை தெரிவித்திருக்கின்றனர். அவற்றில் பல நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு காரணம், முன்னர் கூறியதுதான். அதே நேரம் அந்த முரண்பாட்டை களைவதற்கான முயற்சிகள் இல்லை என்றால் இன்று வரை வினவு நீடித்திருக்காது. இப்படியும் சொல்லலாம். போராட்டத்திற்கான கருவிகள் குறைபாடுகளோடு இருந்தாலும், போராடும் உணர்ச்சியை நாம் இழந்து விடவில்லை! இழந்து விடக்கூடாது!
வினவு அன்றும் இன்றும்
அமெரிக்காவில் சப் பிரைம் நெருக்கடி துவங்கிய 2008-ம் ஆண்டு, வினவு தளத்தின் துவக்கமும் கூட. அன்று சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் இல்லை. இணைய பழக்கத்தின் ஆரம்ப காலமது. பிளாக் எனப்படும் வலைப்பூக்கள் பலருக்கும் எழுதும் பயிற்சியை அளித்து வந்தன. தமிழகத்தில் கருணாநிதி அரசு, ஈழத்தில் போராட்டம் என அந்த ஆண்டுகள் கடந்து கொண்டிருந்தன.
“ஐ.டி. நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா” என்றொரு கட்டுரை அப்போது வெளியிட்டோம். ஐ.டி. துறையில் சங்கம் எதற்கு என்று நிறைய எதிர்வினைகள் வந்தன. பத்தாண்டுகளில் ஐ.டி. துறையில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் போராட்டம் என்பது தவிர்க்க வியலாத ஒன்றாக மாறிவிட்டது.
இடைக்காலத்தில் மோடி அரசு வந்த பிறகு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் கூட வேறு ஒரு திசையில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளும், சமூகத்தை நிர்வகிக்கும் அரசின் இயலாமையும் அதிகரித்து வருகின்றன. போராட்டமோ, எதிர்ப்போ இல்லாத நாளோ, செய்தியோ இல்லை.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் முகமாக நேற்று (10.04.2018) ஐ.பி.எல். கிரிக்கெட் பந்தயத்தை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். உள்ளேயும் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட்டுடன் கிரிக்கெட் விறுவிறுப்பை பார்க்கச் சென்றனர். இடையில் ஆயிரக்கணக்கான போலிசார் போராட்டக் காரர்களை அடித்தும், கலைத்தும் விரட்டினர். ஊடகங்களோ இரண்டு ‘விறுவிறுப்பையும்’ அதிரடிச் செய்திகளாக காட்டிக் கொண்டிருந்தன.
இப்படித்தான் நமது சமூகம் பிரிந்திருக்கிறது. காவிக்கறையின் ஏவலில் கறை வேட்டிகள் இரண்டு தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விதிமுறைப்படி வேட்டி கட்டுவோருக்கு அனுமதி இல்லை. வேட்டி தமிழ் மரபுதான். ஐல்லிக்கட்டும் தமிழ் மரபுதான். பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து காளைகளை விடுவித்த தமிழ் மக்கள் தங்களை விடுவிப்பதற்கு இன்னமும் போராடி வருகிறார்கள்.
ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்தினால் காவிரி நீர் வந்து விடுமா என்கிறார்கள்? டிக்கெட்டுகளை பல நூறு ரூபாய்களுக்கு வாங்கிய ரசிகர்கள். பதவி விலகினால் காவிரி வந்து விடுமா என்று பொன்.இராதாகிருஷ்ணனும் கேட்டார். அ.தி.மு.க. அமைச்சர்களும் கேட்டனர். எப்போதுதான் காவிரி வரும் என்று கேட்டு சலித்த மக்கள் இப்போது இல்லை என்றால் எப்போதுமில்லை என்று போராடுகிறார்கள்.
ஆம். இப்படித்தான் போராட்டமும், போராட வேண்டாமென்பதுமாக நம் சமூகம் பிரிந்திருக்கிறது. ஆகையால் சமூகவலைத்தளங்கள் வளர்ந்த இன்றைய நிலையில் கூட பெரும்பான்மை மக்கள் சமூக மாற்றத்திற்கான அரசியல் வெளி குறித்து அறியாத நிலையிலேயே முடக்கப் பட்டிருக்கிறார்கள்.
மெரினா ஜல்லிக்கட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், ஐ.பி.எல். போட்டியை நிறுத்துவதில் என்ன பயன் என்று ஆர்.ஜே.பாலாஜி வீடியோவில் பேசுவதை ஏற்கலாம். வாட்சப் வதந்திகளைப் பார்த்து இலுமினாட்டி சதிகளை நம்பலாம். மோடியைத் திட்டி முழக்கமிட்டுவிட்டு பிக்பாசில் நியாயம் பேசலாம். இதன் நீட்சியில் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம் நம்மையும் கட்டிப் போடுகிறது. தேவைக்கேற்ப ஆட்டுவிக்கிறது.
முற்போக்கு கருத்துக்கள் அதிகரித்து வருவதான இன்றைய தோற்றத்தை ஊடுருவிப் பார்த்தால் அது பெரிதும் கலங்கலாக இருக்கும். முக்கியமாக கட்சி, அரசியல், மார்க்சியம் போன்றவற்றை மறுத்து தனிநபர் நீதிபோதனைகளை ஊக்குவிக்கும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் மாற்றப்பட்டுவிட்டது. அல்லது அந்த நோக்கத்திற்குத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இடத்தில்தான் வினவு தேவைப்படுகிறது.
இன்றைய இணைய வளர்ச்சியில் வினவு தளத்தின் இடமென்ன?
இணைய அரசியல் உலகில் சமூக மாற்றம் குறித்த நம்பிக்கையை மட்டுமல்ல அதன் அறிவியலையும் அயராமல் கொடுப்பதிலேயே வினவு உயிர்த்திருக்கிறது. அதன் வழி ஒரு வாசகர் தன்னை நடைமுறையில் செயல்படும் கடமையை கண்டுணர முடியும்.
தமிழ் இணைய வரலாற்றில் காத்திரமான இடத்தோடு துவங்கிய வினவு தளத்தின் இடம் முன்னிலும் அதிகமாய் தேவைப்படுகிறது. அதை ஏற்பதால்தான் நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் இன்றைய இணைய வளர்ச்சியில் வினவு தளத்தின் இடமென்ன?
பிரேக்கிங் நியூஸ் போய் இப்போது பிக் பிரேக்கிங் நியூஸ் என அதிரடி செய்திகளை கடை விரிக்கும் ஊடகங்கள் பரபரப்பை நோக்கி ஓடுகின்றன. முதல் செய்தி, முதல் காட்சி, விறுவிறுப்பான விவாதங்கள் என்பதை அளவிடும் கருவிகளாய் வைத்திருப்பதால் கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் ஒரே மாதிரி பேசுகின்றன. அந்த ஒரே மாதிரியில் சமூக மாற்றத்திற்கான இடம் அரிதான ஒன்று. அம்பானிகளும், கல்வி ’வள்ளல்களும்’, மணல் ‘முதலாளிகளும்’ ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டு ’நீதி போதனை’ பேசும் போது முன்னிலும் அதிகமாய் பேசவேண்டிய வினவு ஏன் பேசுவதில்லை என்று நண்பர்கள் பலர் அவ்வப்போது கேட்பதுண்டு.
முன்பு நாம் பேசிய போது மைதானத்தில் சில நூறுபேர் இருந்தனர். இன்றோ அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் வந்த வண்ணம் இருக்கின்றனர். வீட்டோடு மட்டும் தமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று மக்கள் உணர்ந்த படியால் அவர்கள் போராட்ட வெளியை தேடி வருகிறார்கள். அதே மைதானத்தில் ஆங்காங்கே சிறு சிறு கவன ஈர்ப்புகள். யூ டியூப் காமடி வீடியோக்கள், ஃபேஸ்புக்கின் மீம்கள், வாட்ஸ் அப்பின் வதந்திகள், அன்றாடம் உருவாகும் பெயர்ப்பலகை அமைப்புகள், தனிநபரை முன்னிறுத்தும் சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள், புதிய கட்சிகள்…..
இந்தப் பிரச்சினை எமக்கு மட்டுமல்ல. தமிழில் முற்போக்கு கட்சிகள் – அமைப்பினர் சார்ந்து இணைய தளம் நடத்தி வந்த பலர் பிறகு அதன் தோல்வி காரணமாக விலகினர் அல்லது ஒப்புக்கு நடத்துகின்றனர். அதே போல இன்று ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பலரும் தத்தமது இணைய தள முயற்சிகளை கை கழுவித்தான் வாசகர் வட்டத்தை விரித்திருக்கின்றனர்.
இணைய தளமோ, சமூக வலைத்தளமோ எங்கு பேசினால் என்ன, நாம் பேசுவது அதிகம் கேட்கப்படுவதுதானே முக்கியம் என்று சிலர் கேட்கலாம். ஆனால் நாம் பேசுகிறோமா இல்லை நம்மை பேச வைக்கிறார்களா என்பதை கேம்ரிட்ஜ் அனலாட்டிகா தெளிவாக காட்டிவிட்டது. அல்லது இதையே இப்படி பெயர்க்கலாம்.
நீங்கள் முற்போக்காவே பேசினாலும் அது அரட்டை, பொழுது போக்கு, நடைமுறையில் இருந்து விலகி நிற்பது என்ற விதிகளின் படியே ஃபேஸ்புக்கில் பிரபலமாக முடியும். இன்றைக்கு வலது சாரிகள், சாதி, மதவெறியர்கள் கூட சமூகவலைத்தளங்களில் தத்தமது ஆதரவை பெருக்கிக் கொண்டுதான் வருகின்றனர். பிற்போக்கான கொள்கைகள் தம்மை கடை விரிப்பதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஒரு குத்து விளக்கு பூசை மூலம் அப்பாவி பெண்களிடம் முசுலீம்கள் மீதான வன்மத்தை விதைக்க முடியும்.
எச்.ராஜாவின் ஒரு வாந்தியை வைத்துக் கூட ஊடகங்களில் ஒரு இந்துத்துவ அஜண்டாவை பேசுபொருளாக்க முடியும். கவுன்சிலர் தேர்தலில் வெல்ல முடியாத கட்சியாக கேலி செய்யப்படும் பா.ஜ.க.-வின் தலைவர் தமிழிசையின் அறிக்கைகள் மாலை நேர டி.வி. விவாதத்திற்கு கருப் பொருளாகும். மக்கள் அதிகாரம் திரட்டிய மக்களை விட மக்கள் நீதி மய்யம் குறைவாகவே மக்களை திரட்டினாலும் லைவ், ’நம்மவருக்குத்தான்’!
கொள்கையைக் கேட்டால் தலை சுற்றும் ரஜினியின் பொன் மொழிகளுக்கு கிடைக்கும் இடம் கொள்கைக்காகவே வாழ்வை அளித்தோருக்கு இருக்க வேண்டியதில்லை. ஆகவே படிப்போரை ஒரு திசை வழி நோக்கி சமூக மாற்றத்திற்கான நடைமுறையில் ஈடுபடுத்தவேண்டும் என்ற இலக்கே வினவு தளத்தின் பலம். நமது பாதையை சிரமமாக இருப்பதற்கும் காரணமும் அதுதான்.
பலர் இந்த முயற்சியில் தோற்றாலும் வினவு தொடர்ந்து பயணிக்கிறது. அதாவது வாசகர்களை தோழர்களாக மாற்றும் கடமையை விருப்பத்துடன் செய்து வருகிறது. ஆகவே பரபரப்பு, டி.ஆர்.பி., பிரபலம், அதிக ஹிட்ஸ் போன்ற போட்டிகளில் நாம் என்றும் இல்லை. ஆனால் நம் கருத்துக்களை, நோக்கத்தை பரந்து பட்ட மக்களிடம் கொண்டு சென்றே ஆக வேண்டும். அதற்கு தொழில் நுட்ப சாத்தியங்களை பயன்படுத்தியாக வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கவர வேண்டும். கருத்தில் இளைமைத் துடிப்பிருப்பது போல வடிவத்திலும் இருக்க வேண்டும். தத்துவத்தை எளிமையாகவும், ஆழமாகவும் விளக்குவது போல இது.
வினவு தளத்தின் புதிய பகுதிகள்
வினவு தளத்தின் இந்த புதிய வடிவமைப்பு அப்படி ஒரு முயற்சி. இதில் அன்றாடம் மாறும் புதிய பகுதிகளை சேர்த்திருக்கிறோம். இன்றைய புகைப்படம் – மேற்கோள் – வரலாற்றில் இன்று – கேலிச்சித்திரம் போன்றவை நாளுக்கொன்றாய் இடம்பெறும்.
வாசகர் விவாதங்களை எளிமைப்படுத்தும் பொருட்டு மறுமொழிகளை மட்டறுப்பதை எடுத்து விட்டோம். மின்னஞ்சல் முகவரியுடன் கணக்கு துவங்கும் எவரும் நேரடியாக மறுமொழிகளை வெளியிடலாம். (தற்போது தொழில் நுட்ப பணிகள் நிறைவடையவில்லை என்பதால் பழைய மட்டறுத்தல் முறையில் இருக்கிறது.)
குறுஞ்செய்திகள், அரசியல் கட்டுரைகள், சமூக பண்பாட்டு கட்டுரைகள், வீடியோ என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி இந்த வடிவம் உங்களுக்கு பயனளிக்கும்.
சமூக ஊடகத்தை அரசு அதிகாரத்தின் மூலம் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும், பொய்ச் செய்திகளைப் பரப்புவதும், தமது நோக்கத்துக்கேற்பத் திசை திருப்புவதும் மென்மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வலதுசாரிகள் மற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்தை பயனுள்ளதாகவும் வீரியமிக்கதாகவும் மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இணைய உலகில் இலக்கின்றித் தெறித்துச் சிதறும் முற்போக்குக் கருத்தாளர்களை இயன்றவரை ஒருமுனைப்படுத்தவும், அவர்களை சமூக செயல்பாட்டாளர்களாக மாற்றியமைக்கவும் வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர்கள் பங்குபெறும் கருத்தாடல் பக்கம்
இதனைக் கணக்கில் கொண்டு, இளைஞர்களிடம் நமது கருத்துக்களை எளிமையாகவும், விரும்பத்தக்க வகையிலும் கொண்டு செல்லும் விதத்தில் எழுத்தாளர் சிலரின் பத்திகள் இடம்பெறுகின்ற கருத்தாடல் பக்கத்தை அறிமுகம் செய்கிறோம். ஆங்கில இணையத் தளங்களில் வரும் Opinion page போன்ற பக்கமிது.
இது இணையப் பரப்பில் திக்குத் தெரியாமல் உழலும் எண்ணற்ற இளம் தலைமுறை வாசகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். அதன் போக்கில் அவர்கள் செயல்படுபவர்களாக வளருவதையும், அவர்களிடையே ஓர் ஒருங்கிணைவு ஏற்படுவதையும் சிறிய அளவிலேனும் சாத்தியமாக்கும்.
சமூகவலைத்தளத்தின் வடிவமைப்பு காரணமாக, பலருடைய முகநூல் பக்கங்களில் எழுதப்படும் காத்திரமான விசயங்கள் கூட காலப்போக்கில் ஒரு “முற்போக்கு அரட்டையாக” காற்றில் கரைந்து பயனற்றுப் போய்விடுகின்றன. மேலும், ஆர்வமுள்ள ஒரு வாசகர் அத்தகைய எழுத்துக்களை ஒரு நூலகத்தைப் பயன்படுத்துவதைப் போலத் தேடிப் பயன்படுத்த முடிவதும் இல்லை. கருத்தாடல் பகுதியில் வெளிவரும் எழுத்தாளர்களது பத்திகள் கால வரிசைப்படி தொகுக்கப்படுவதால் மேற்கண்ட குறை நீங்கி அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
இதற்கடுத்து புதிய வினவு தளத்தில் வரும் முக்கியமான பகுதி “மெரினா”. ஃபேஸ்புக் போன்ற வசதிகள், வடிவமைப்பில் மக்கள் பங்கேற்கும் குழும பக்கம் இது. ஓரிரு நாளில் அறிமுகம் செய்கிறோம். மெரினாவில் வினவு வாசகர்கள் பேசிக் கொள்வதற்கும், பகிர்வதற்கும், விவாதிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும் சமூக அக்கறையுள்ள வாசகர் வட்டத்தில் பேசிக் கொள்வதற்கும், பயின்று கொள்வதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. நாம் தனியாக இல்லை என்ற நம்பிக்கையையும் மெரினா கொடுக்குமென நம்புகிறோம்.
வினவுக்குத் தோள்கொடுங்கள்! நன்கொடை தாருங்கள்!!
புதிய வினவு தளத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையவில்லை. உங்கள் ஆலோசனைகள் இருப்பின் தெரியப்படுத்தவும். புதிய வினவு தளத்தை ஒரு தொழிற்முறை பத்திரிகையாக மாற்றுவதற்கு நாங்கள் தயார் என்றாலும் நீங்கள் தயார் இல்லை என்றால் அது சாத்தியமில்லை.
ஆம். நிதிச் சுமை. அனைத்து துறைகளிலும் அதிக பணி செய்வதற்கு போதுமான நிதி தேவைப்படுகிறது. தற்போது பேபால் வசதி இருப்பதால் வெளிநாட்டில் இருப்போரும் நன்கொடை அளிக்கலாம். பொதுவில் தோழர்களை உள்ளிட்டு, வினவு தளத்தை தவறாமல் படிக்கும் நண்பர்களும் இந்த ஊடக வேலைக்கு பெரும் செலவு இருப்பதை உணர்வதில்லை. ஒக்கி புயல் குறித்து ஒரு ஆவணப்படம் எடுப்பதோ, உடனுக்குடன் போராட்டச் செய்திகளை நேரலை செய்வதோ, செய்தியாளர்களை பணியில் அமர்த்துவதோ, வீடியோக்கள் தயாரிப்பதோ அனைத்தும் பெரும் செலவு பிடிக்கும் பணி என்பதை அறிவீர்கள்.
ஆதரியுங்கள். ஆலோசனைகளை தெரிவியுங்கள். சேர்ந்து பயணிப்போம்.
வாழ்த்துக்களுடன்
வினவு
Computer browser மூலமாக தமிழில் பின்னூட்டமிட வசதி செய்ய வேண்டுகின்றேன். அது ஒன்றே விரைவாகவும் விரிவாகவும் செய்தியை அனுப்ப உதவும்.