இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !

இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மைதான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?

8

 

ன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணினி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கைத்தொலைபேசியில் சொடுக்கி வாங்கி விடலாம். நாம் வாங்கிய பொருள் அடுத்த நாளே வீடு தேடி வரும்.

முந்திய காலங்களைப் போல வெளியே கடைக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் தொழில்நுட்ப அதிசயத்தை எண்ணி வியக்கிறோம். வருங்காலத்தில் தெருக்களில் கடைகளைக் காண முடியாமல் போகலாம். இணையக் கடைகளின் பெருக்கம் காரணமாக, பல பெரிய நிறுவனங்களின் அங்காடிகள்கூட விற்பனையின்றி மூடப்படுகின்றன.

மறுபக்கத்தில், இணையக் கடைகளுக்கான களஞ்சிய அறைகள், விநியோக மையங்கள் என்பன திறக்கப்படுகின்றன. அவை நகரத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்படுகின்றன. இணைய சேவை காரணமாக இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தூங்காமல் இரவிரவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியது இந்தக் கட்டுரை.

என்னதான் நவீன தொழில்நுட்பம் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கினாலும், உழைப்புச் சுரண்டல் மட்டும் மாறுவதில்லை. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தைவிட, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தக் கட்டுரையை எனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன். நான் குறைந்தது ஒரு வருடமேனும் தபால் துறையில் வேலை செய்திருக்கிறேன். சில மாதங்கள், விநியோக மையத்தில் பார்சல் தரம் பிரிப்பவராக செய்த வேலைதான் மிகவும் கடினமானது. அடிமை வேலைக்கு ஒப்பானது.

2012-ஆம் ஆண்டளவில், நான் வசிக்கும் நெதர்லாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. எல்லா இடங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை. வேலை எங்கே தேடியும் கிடைக்காத நிலைமை. நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுப்பதைவிட, இருப்பவர்களின் வேலையை பறிப்பதில் ஆர்வமாக இருந்தன.

அத்தகைய பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும், பார்சல் தரம் பிரிக்கும் நிலையத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருந்தது. அப்போது அது வளர்ந்து வரும் நவீன தொழிற்துறை என ஊடகங்களால் புகழப்பட்டது. அங்கே சென்ற பிறகுதான், எதற்காக அந்த தொழிற்துறையில் மட்டும் வேலையாள் பற்றாக்குறை நிலவுகின்றது என்பது தெரிய வந்தது.

நெதர்லாந்து நாட்டின் தபால்துறை முழுக்க முழுக்க PostNL என்ற தனியார் நிறுவனத்தினால் நடத்தப்படுகின்றது. இது முன்பிருந்த அரசுத் தபால்துறையின் தொடர்ச்சி ஆகும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த நூறு சதவீத தனியார்மயமாக்கல் காரணமாக, ஆயிரக்கணக்கான தபால்துறை ஊழியர்கள் வேலையிழந்தனர்.

PostNL நிறுவனத்தின் பார்சல் வகைபிரிக்கும் பகுதி.

முந்திய காலங்களைப் போல தற்போது யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. இன்று உலகம் முழுவதும் அப்படித்தான். கடிதப் போக்குவரத்து மின்னஞ்சல் ஆகி, அது பின்னர் வாட்ஸ் – ஆப் வரை வந்து விட்டது. கடிதங்களை மட்டுமல்ல, முத்திரைகளைக்கூட கண்ணால் கண்டிராத தலைமுறை ஒன்று உருவாகி விட்டது.

தனியார்மயப்படுத்தப்பட்ட தபால் நிறுவனம், அதைக் காரணமாகக் காட்டியே தபால்காரர்களின் வேலை நேரத்தைக் குறைத்து விட்டது. நான் சுமார் ஒரு வருடமாவது தபால்காரர் வேலை செய்துள்ளேன். தற்காலத்தில் அது ஒன்றும் பெருமைக்குரிய வேலை அல்ல. நிச்சயமற்ற தன்மை காரணமாக பலர் அந்த வேலையை தெரிவு செய்வதில்லை.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீடுகளுக்கு தபால் போடும் வேலை செய்து, வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது. ஏனெனில், வேலை நேரம் மிகக் குறைவு. மொத்தம் வாரத்திற்கு பன்னிரண்டு மணித்தியாலம் மட்டுமே. எப்போதும் அது ஒரு பகுதிநேர வேலைதான். அதனால் கிடைக்கும் வருமானம் வீட்டு வாடகை கட்டுவதற்குகூடப் போதாது.

சைக்கிள் கேரியரில் இரண்டு பக்கமும் ஐம்பது கிலோ பொதிகளை சுமந்து கொண்டு, உறை பனியில் நடுங்கியபடியும், அடைமழையில் நனைந்தபடியும் செய்யும் வேலையை எண்ணிப் பாருங்கள். நாம் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், சம்பளம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தொகைதான் கிடைக்கும். தபால்கள் அதிகளவில் வரும் சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம், குறைவாக வரும் புதன்கிழமைகளில் அரை மணிநேரம் மட்டுமே சம்பளம் போடுவார்கள். அதுவும் மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளம்தான்.

சிலநேரம், சாதாரண தபால்களை மட்டுமல்லாது, விளம்பரப் பத்திரிகைகளையும் சேர்த்துப் போடுமாறு கொடுத்து விடுவார்கள். அதைவிட, மாதமொருமுறை நகரசபை வெளியிடும், குடி மக்களுக்கான தகவல் தெரிவிக்கும் பத்திரிகையையும் நாமே விநியோகிக்க வேண்டும். அதற்காக மேலதிக கொடுப்பனவு எதுவும் கிடையாது.

இந்த மேலதிக விளம்பர சேவைக்காக நகர சபையும், விளம்பர நிறுவனங்களும் கொடுக்கும் பணம் முழுவதையும் தபால் நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. அதில் ஒரு துளிகூட வேலையாட்களுக்கு கொடுப்பதில்லை. அதற்கான காரணம் கேட்ட பொழுது, “தபால் சேவை நட்டத்தில் இயங்குவதாகவும், அதை ஈடுகட்டுவதற்காக கம்பெனி விளம்பரப் பத்திரிகை போடும் சேவையை நடத்துவதாகவும்” தெரிவித்தார்கள்.

தபால்துறையில் ஒரு அரசு நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்திய காலம் எப்போதோ மலையேறிவிட்டது. இன்று கூரியர் நிறுவனங்கள் என்ற பெயரில், ஒரு டஜனுக்கும் குறையாத தனியார் தபால் நிறுவனங்கள் சந்தையில் போட்டி போடுகின்றன. இணைய வணிகம் காரணமாக பார்சல் விநியோகத்தில் கடும் போட்டி நிலவுகின்றது. இதனால் “பாரம்பரிய” தபால் நிறுவனம், முடிந்தளவுக்கு தொழிலாளர்களைச் சுரண்டி இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றது.

இணைய வணிகத்தின் வருகை காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆயிரம் பேரின் வேலை காணாமல் போன இடத்தில், சில பத்துப் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதற்குப் பெயர் பொருளாதார வளர்ச்சி அல்ல. பொருளாதார வீழ்ச்சி. இதனால் முதலாளிகளின் இலாபம் மட்டுமே கூடியுள்ளது.

இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்.

நானும் பார்சல்கள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்துள்ளேன். அது வழமையாக இரவு வேலைதான். இரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரையில் தூங்காமல் கண் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இரவு வேலை செய்து வந்தால், நீரிழிவு வருத்தம் வரும். இதய நோய் கூட உண்டாகலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தரம் பிரிக்கும் வேலை இரண்டு ஷிப்டுகளாக நடக்கும். மாலை ஆறு மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரையில் ஒரு ஷிப்ட். அது மாலை நேர வேலை. அதை அங்கு நீண்ட காலம் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேருவோரும், தற்காலிகத் தொழிலாளர்களும் இரவு வேலை மட்டுமே செய்யலாம். நடுநிசி பன்னிரண்டு மணியில் இருந்து அதிகாலை ஆறு மணி வரை வேலை செய்ய வேண்டும்.

அதைவிட, தரம் பிரிக்கும் நிலையத்தில் உள்ள இராட்சத இயந்திரங்கள் போடும் இரைச்சலில் காது செவிடாகிவிடும். பக்கத்தில் நிற்பவர் சத்தமாகப் பேசினாலும் கேட்காத அளவிற்கு பேரிரைச்சல். தொழிலகங்களில் சத்தம் 80 டெசிபெல் அளவுக்கு மீறினால், காதுக்கு பாதுகாப்புக் கவசம் போட வேண்டும் என்று தொழிற்துறை பாதுகாப்பு விதி கூறுகின்றது. ஆனால், அதையெல்லாம் யார் பின்பற்றுகிறார்கள்?

அந்தக் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டாலும், வேலை இயந்திரகதியில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு மெஷின் போல இயங்க வேண்டும். இது ரோபோவுக்கும் மனிதனுக்கும் இடையிலான போட்டி. ஒரு தொழிற்சாலையில் இருப்பதைப் போன்று, ரப்பர் பட்டி ஓடிக் கொண்டிருக்கும். ஒரு ரோபோ இயந்திரம் அதை இயக்கிக் கொண்டிருக்கும்.

இணையக் கடைகளில் வாங்கப்பட்ட பொருட்களின் பார்சல்கள், வண்டி வண்டியாக வந்து குவிந்து கொண்டே இருக்கும். சிறிதும் பெரிதுமான பார்சல்களை (அதிகபட்ச நிறை இருபது கிலோ) ஒவ்வொன்றாக எடுத்து பட்டியில் போட வேண்டும். மறுபக்கத்தில் தானாகவே தரம் பிரித்து வரும் பார்சல்களை எடுத்து, பிரதேச வாரியாக அடுக்க வேண்டும். முகவரிகளை ஸ்கேன் பண்ணி தரம் பிரிப்பதை மட்டுமே ரோபோ இயந்திரம் செய்கிறது. மற்றதை எல்லாம் மனிதர்கள்தான் செய்ய வேண்டும்.

ஒரு நிமிடத்தில் எத்தனை பார்சல்கள் போடுகிறோம் என்பதை நேரக் கணிப்பு மணிக்கூடு வைத்து அளப்பார்கள். நிமிடத்திற்கு சராசரி ஐம்பது பார்சல்கள் தூக்கிப் போட வேண்டும். எமது செயற்படும் வேகம் குறைந்தால் பட்டி ஓடுவது நின்று விடும். அப்படி நின்றால் மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்க வேண்டும்.

அதனால், நாம் ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி இயந்திரம் மாதிரி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். எம்மிடம் இருந்து கூடிய அளவுக்கு உழைப்பை பிழிந்து எடுப்பதற்காக, வேண்டுமென்றே ரப்பர் பட்டி வேகமாக ஓட விடப்படுவதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

இது எனது அனுபவம். அண்மையில் பத்திரிகையில் ஒரு தகவலைக் கண்டேன். தரம் பிரிக்கும் நிலையத்தில் எட்டு வருடங்களாக மேற்பார்வையாளர் வேலை செய்து வந்த ஒருவர் வேலையை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், தான் அங்கு வேலை செய்யும் பொழுது “அடிமை மேய்ப்பர்” போன்று உணர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவில் அடிமைகள் வைத்திருந்த காலத்தில், அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க விடாமல் விரட்டி விரட்டி வேலை வாங்க ஒரு மேற்பார்வையாளர் இருந்தார். அவரை “அடிமை மேய்ப்பவர்” என்று சொல்வார்கள். அது நூறாண்டுகளுக்கு முந்திய வரலாறு என்றுதான் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மைதான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?

ஒரு நிமிடம் கூட இடத்தை விட்டு நகர முடியாது. இடையில் சிறுநீர் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்கவே வேண்டாம். எமது இடத்திற்கு இன்னொரு தொழிலாளியை பிடித்து விட்டுத்தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். அதுவும் எப்போதும் சாத்தியமில்லை.

இதனால் வேலை நேரத்தில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வோம். ஓய்வில்லாத வேலை காரணமாக வியர்த்துக் களைப்படைந்து, உடலில் நீர்த் தன்மை வற்றி, தாகம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.

நிச்சயமாக இப்படியான இடங்களில் பலர் நீண்ட காலம் வேலை செய்வதில்லை. அடிக்கடி சுகயீன விடுப்பில் நிற்கிறார்கள். அதனால்தான் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை நிலவும் காலத்திலும் அங்கே வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்பவர்களில் அரைவாசிப் பேராவது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த தொழிலாளர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ், மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை செலுத்தத் தயாரான மலிவு விலை தொழிலாளர்கள் அங்கிருந்து வருகிறார்கள்.

தபால் தரம் பிரிக்கும் நிலையத்தில் ஆள் பற்றாக்குறையா? போலந்தில் உள்ள முகவருக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு வந்து, திங்கட்கிழமை வேலை தொடங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வேலைக்கு வருவோர் மாடு மாதிரி உழைப்பார்கள். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்தவர்கள், இந்நாட்டு சட்ட விதிகளை அறிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். அதற்குள் வேண்டியளவு சுரண்டி விடலாம். இணைய வணிகம் என்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால், நவீன அடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கமும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றது.

தற்காலத்தில் தபால் சேவையால் இலாபம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, முத்திரை விலையை கூட்டி வைத்திருக்கிறார்கள். பார்சல் அனுப்பும் கட்டணமும் மிக அதிகம். இருந்த போதிலும் தபால் நிறுவனம் இலாபம் சம்பாதிப்பது மட்டும் குறையவில்லை. ஒரு பக்கம் தொழிலாளர்களை சுரண்டி, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். மறுபக்கம் தலைமை நிர்வாகிகளின் ஊதியமும், இலாபத்தில் அவர்களது பங்கும் அதிகரிக்கின்றது.

பொது மக்கள் தபால்கள் அனுப்புவது குறைந்து விட்டதால், “நட்டத்தில்” இயங்குவதாக எதிர்பார்க்கப்படும், தபால் நிறுவனம் சம்பாதிக்கும் நிகர இலாபம் வருடத்திற்கு ஐந்து சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அடிமைத் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப்படும் உழைப்புதான் இலாபமாக மாறுகின்றது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

  •  கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம்  தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர் . வெகுசன ஊடகப் பிரச்ச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

8 மறுமொழிகள்

  1. மிகவும் அதிர்ச்சியளிக்கும கட்டுரை தோழர் கலையரசன் எழுத்தில் சுரண்டப்படும் தொழிலாளிகளின் வாழ்க்கை கண்முன்னே அனைவரைய அனைவரையும் தொந்தரவு செய்வது நிச்சயம்,.

  2. The workers at Maruti car factory at Manesar,Haryana work like robots only in the assembly section.They have to fit a particular part of the car in split second.If they miss the moment,the conveyor belt will move without that part.Drinking water in glasses will be available just in front of you.But,you cannot drink.Lunch and tea intervals will be of very short duration.You have to pass urine only during those intervals.OK.They work like robots.Are they getting good wages.Their ( most of them are contract labourers)wages are one half of what permanent labourers are getting.There is no job security and no PF or ESI.When they protested some years back,false murder charges were foisted upon them and more than 90 workers were dismissed.

  3. அங்காவது 8மணி நேர ஷிப்ட் பணி முடிந்து வீட்டிற்கு போகலாம்.ஆனால் ஏற்றுமதி வர்த்த நகரமான திருப்பூரில் 12மணி நேர வேலை நேரம் ,திரும்ப வீட்டிற்கு எப்போது போவது என்பது நமக்கு தெறியாது.

  4. அருமையான கட்டுரை .. உலகம் முழுவதும் தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் தான் முதலாளிகள் நீடித்து நிற்கிறார்கள். . .

  5. !AS@தொழிலாளியின் வியர்வை காயும் முன் அவர்களின் கூலியையே கொடுக்க வேண்டும் என்றும், அவர்களை வேலை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என்றும் மார்க்கம் சொல்கிறது, தொழிலாளியை முதலாளி போல் நடத்தவேண்டும்@@@#

Leave a Reply to Vijay பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க