காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!

மன்னரின் மலத்தைத் துடைக்க மஸ்லின் துணி. அதையும் ஆட்டயப்போட்ட தலைமை அமைச்சர். 75,000 ரூபாய்க்கு கிழக்கிந்தியக் கம்பெனியிடம் விலைக்கு வாங்கப்பட்ட காஷ்மீர்.

11

“காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்?” காஷ்மீரிகளுக்கு இந்தியாவின் எல்லைகளைக் காக்கும் படைகளின்மேல் எந்த மரியாதையும் இல்லையே, ஏன்? கொல்லப்படும் போராளிகளின் இறுதி ஊர்வலங்களுக்கு லட்சக்கணக்கான காஷ்மீரிகள் கூடுகிறார்களே, ஏன்? இந்தக் கேள்விகளுக்கு ஆசிஃபாவின் முறிக்கப்பட்ட முதுகெலும்பும், குனான் போஷ்புராவில் வழிந்தோடிய குருதி வெள்ளமும் பதிலளித்துள்ளன. ஆனாலும், பார்ப்பன தேசியத்தில் ஊறிய இந்தியப் பொதுப்புத்திக்கு இந்தப் பதில்கள் புரிவதில்லை. காஷ்மீரிகளைப் புரிந்துகொள்ள காஷ்மீரின் முந்தைய ஆட்சியாளர்களையும் புரிந்து கொள்வது அவசியம்.

அந்த வகையில் கவுண்டர்கரண்ட்ஸ் இணையதளத்தில் எம்.ஜே அஸ்லம் எழுதிவரும் கட்டுரைத் தொடர் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். கீழ்வரும் பகுதி அத்தொடரில் காஷ்மீரை ஆண்ட டோக்ரா மன்னர்களின் வாழ்க்கைக் குறித்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

***

காஷ்மீர் என்றென்றைக்கும் பாரத தேசத்தின் பகுதியாகவும் இந்து மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது என்பதுதான் சங்கிகள் கூறிவரும் கதை.

ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங் டோக்ரா, 16-03-1846 அன்று கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இழிபுகழ் பெற்ற அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் மூலம் 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மீரை விலைக்கு வாங்கினார். மலைச் சிகரங்களும், பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன் அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. அன்றைய காஷ்மீரின் மக்கள் தொகையைக் கணக்கிட்டால், தலையொன்றுக்கு ஏழேகால் ரூபாய்க்கு வாங்கிப் போட்டிருக்கிறார் குலாப் சிங் டோக்ரா. அந்தக் காலகட்டத்தில் காஷ்மீரால் தனது கல்லாப் பெட்டிக்கு எந்தப் பயனுமில்லை என்பதே ஆங்கிலேயக் கும்பினியரின் கணக்காக இருந்திருக்கிறது.

குலாப் சிங்கின் ஆட்சி 1846-ல் இருந்து 57 வரை நடந்தது. அதன் பின் ரன்பீர் சிங் (1857-1885), பிரதாப் சிங் (1885-1925), இறுதியாக ஹரிசிங் (1925-1947) என ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடித்த டோக்ராக்களின் ஆட்சியில், விவசாயிகளான இசுலாமிய மக்கள் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்தனர். மக்களைத் துன்புறுத்திய நேரம் போக மிஞ்சிய நேரங்களில் டோக்ராக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரத்தைப் பார்ப்போம்.

சமஸ்தான மன்னர்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு அருவெறுப்பானது என்பதற்கு ஜூனாகட் மன்னன் மகபத்கான் ரசூலுக்கு நாய்களின் மீதிருந்த காதலை உதாரணமாகச் சொல்வார்கள். அவர் 800 நாய்களை வைத்திருந்தார். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணியாளர்களை நியமித்து சம்பளம் கொடுத்தாராம். நாய்களுக்காக மிகுந்த பொருட்செலவில் திருமணங்கள் நடத்துவது ஜூனாகட் மன்னரின் வழக்கம். அப்படி ஒரு “கல்யாணத்திற்கு” வைசிராய் இர்வின் பிரபுவுக்கே அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை இர்வின் பிரபு “நாகரீகமாக” மறுத்து விட்டார் என்பது தனிக் கதை.

பிரதாப் சிங்

ஆனால், காஷ்மீரின் டோக்ராக்கள் மற்றைய சமஸ்தானாதிபதிகளைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருவாழ்வு வாழ்ந்துள்ளனர்.

மூன்றாவது டோக்ரா மன்னரான பிரதாப் சிங்கின் ஆட்சிக்காலத்தில் மன்னர் கக்கூசு போன வகையில் ஏராளமாக செலவாகியிருக்கிறது. மன்னருக்கு ஆயி வந்தவுடன் மூன்று பணியாளர்கள் தயாராகி விடுவார்கள். அதில் இரண்டு பணியாளர்கள் விலை உயர்ந்த முப்பத்தாறாம் நெம்பர் மஸ்லின் துணியைச் (chatees ki malmal) சுருட்டித் தயாராக வைத்துக் கொள்வார்கள். மன்னர் முக்கி வெளிக்கிப் போனவுடன் இரண்டு பணியாளர்களும், மன்னருக்கு புட்டத்தின் பின்னும் முன்னும் நின்றபடி, மஸ்லின் துணியை மன்னரின் கனமான துடைகளுக்கு இடையே, மிகவும் ஜாக்கிரதையான முறையில் ரம்பம் இழுப்பது போன்ற முறையில் மென்மையாக அசைத்து மலத் துவாரத்தைத் துடைக்க வேண்டும். டைமிங் மிகவும் முக்கியம். மூன்றாவது பணியாளர் வெள்ளி லோட்டாவில் “மிகச் சரியான இலக்கில்” தண்ணீரை ஊற்ற வேண்டும். தாமதமாகி புட்டத்திலும் விரைக் கொட்டைகளிலும் பீ அப்பி விட்டால்…? வேறென்ன, கடுமையான தண்டனைதான்.

முக்கி மலத்தை வெளியே வரவைப்பது, அதில் வெற்றி பெற்றபின், தண்ணீர் படுவதற்கு ஏற்ற முறையில் முன்புறம் குனிந்துக் கொள்வது போன்ற கடினமான பணிகளை மாட்சிமை தங்கிய மன்னரே செய்து கொள்வார்.

மேற்படி மஸ்லின் துணி மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அது பீ துடைத்தத் துணியாக இருந்தபோதிலும், அதனை ராஜ சன்மானமாக பணியாளர்கள் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பீ துடைக்க இறக்குமதி செய்யப்பட்ட மஸ்லின் துணிகளை அப்போதைய தலைமை அமைச்சர் மன்னருக்கே தெரியாமல் ஆட்டையப் போட்டுள்ளார். திருடிய துணியை அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. நிச்சயமாக சட்டை தைத்துப் போட்டிருக்க முடியாது. மன்னர் கண்டுபிடித்து விடுவார். மன்னரைப் போல் அதைப் பயன்படுத்தும் உரிமை அமைச்சருக்கு இருக்க வாய்ப்பில்லை. கருவாட்டைக் களவாண்ட பாப்பாத்தியின் கதைதான்.

மன்னர் அடிக்கடி ஆய் போனால்தானே நிறைய மஸ்லின் துணிகளை ஆட்டையப் போட முடியும்? இதற்காகவே தலைமை அமைச்சர் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார். மன்னர் குடிக்கும் பாலில் கொப்பறை விதைப் பொடியைக் கலந்து விடுவாராம். அது கடுமையாக பேதியைத் தூண்டக் கூடியது. மன்னர் எந்த நேரமும் கக்கூசிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டதால் அரசாங்கம் நிறைய மஸ்லின் துணிகளை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளது. ஒருபக்கம் பயன்படுத்தப்படாத மஸ்லின் துணிகளை அமைச்சர் பிளாக்கில் ஓட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பீ துடைத்த துணிகளோடு பணியாளர்கள் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

அல்லக்கை அலுவலர்களைக் கொண்ட மன்னர் பிரதாப் சிங்கின் கிரிக்கெட் அணி.

ஒரு முறை மன்னர் பிரதாப் சிங்குக்கு கிரிக்கெட் விளையாடும் ஆசை உண்டானது. தனது அல்லக்கைகள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு ஒரு அணியை உண்டாக்கி அதற்குத் தன்னையே தலைவராகவும் நியமித்துக் கொண்டார். காஷ்மீரில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் அணியுடன் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டி நடக்கும் நாளும் வந்தது. தலையில் பொன்னாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய தலைப்பாகையுடனும், மன்னருக்கான அலங்கார உடையுடனும், கழுத்தில் பல லட்சம் பெருமானமுள்ள நகைகளுடனும் களத்தில் இறங்கினார் மன்னர்.

மன்னர் சற்றுக் குள்ளமானவர் என்பதால், மேற்படி அலங்காரத்தோடும் கையில் கிரிக்கெட் மட்டையுடனும் இறங்கிய உருவத்தைப் பார்த்து, போட்டியைப் பார்க்க வந்தவர்கள் சிரிப்பை அடக்க மிகுந்த சிரமப்பட்டனர். சிரித்தால் வாயைத் தாங்கிக் கொண்டிருக்கும் தலை துண்டிக்கப்பட்டு விடுமே! போட்டி துவங்கியது. அனைத்து ஏற்பாடுகளுடனும் மைதானத்துக்கு வந்திருக்கிறார் மன்னர். கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மட்டை பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற விசயம் மட்டும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

எதிரணியில் இருந்த வெள்ளைக்கார அதிகாரிகளுக்கோ தர்ம சங்கடம். வேறு வழியின்றி குழந்தைக்கு பந்து போடுவதைப் போல, அல்லது லட்டுவைத் தூக்கிப் போடுவது போல மிக மெதுவாக மன்னருக்குப் பந்து ‘வீசினர்’. அதையும் அடிக்கத் தெரியாமல் ஒவ்வொரு பந்துக்கும் கிளீன் போல்டு ஆனார் மன்னர். மன்னரை அவுட்டாக்குவது ராஜத்துரோக குற்றமல்லவா? அவர் அவுட்டாகும் ஒவ்வொரு பந்தையும் “நோ பால்” என அறிவித்துக் கொண்டிருந்தார் அம்பயர். நோ பாலுக்கு ஒரு ரன் உண்டல்லவா? எனவே மன்னரின் அணி தொடர்ந்து ரன்களாக குவித்துக் கொண்டிருந்தது. இவ்வாறாக நடந்த போட்டியின் இறுதியில் யார் வென்றது என்பதைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

பிரதாப் சிங் இப்படி என்றால், காஷ்மீரை விலைக்கு வாங்கிய அவருடைய பாட்டனார் குலாப் சிங் பணவெறி பிடித்தவர். குலாப் சிங்கை யார் வேண்டுமானாலும் சுலபமாகப் பார்த்து விடலாம். மக்கள் யாராவது அவரிடம் மனுக் கொடுக்க விரும்பினால், ஒரு கையில் மனுவையும் இன்னொரு கையில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு “மகாராஜா… மனு” என்று உரக்கக் கத்த வேண்டும். பசித்த கழுகைப் போல் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் என்ன விசயம் என்றே கேட்பார் குலாப் சிங். இப்படி ஒருமுறை பணத்தைப் பறிக்க குலாப் சிங் பாய்ந்தபோது மனுவுடன் வந்தவர் சட்டென்று கையை மூடிக் கொண்டிருக்கிறார். தனது பிரச்சினையைக் கேட்டால்தான் காசு கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் அந்த ஒற்றை ரூபாய்க்காக பொறுமையாக உட்கார்ந்து அவரது பிரச்சினைக்கு காது கொடுத்திருக்கிறார் குலாப் சிங்.

ஹரிசிங்

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஒப்பந்தம் போட்ட கடைசி டோக்ரா மன்னனான ஹரிசிங் ஒரு பெண் பித்தன். நாடெங்கும் சுதந்திரப் போராட்டம் வீச்சுடன் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர் அடிக்கடி பாரிசுக்கும் லண்டனுக்கும் சென்று கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. வெள்ளை விலைமாதர்களைத் தேடி ஐரோப்பாவுக்கு அலைந்ததுதான் மாட்சிமை தாங்கிய மன்னரின் நிர்வாக நடவடிக்கையாக இருந்திருக்கிறது.

1921-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு விலைமாதுவுக்கு 1.50 லட்சம் பவுண்டுக்கு காசோலை கொடுத்து வில்லங்கத்தில் சிக்கி போலீசில் மாட்டிக் கொண்டார் ஹரிசிங். நீதிமன்றத்தில் ஹரிசிங் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தன் கட்சிக்காரரைப் பற்றிச் சொல்லும்போது, அவர் ஒரு ஏழை துர்ப்பாக்கியசாலி என்றும் அவர்மீது கருணை வைத்து விடுவித்து விடுமாறும் கோரினாராம்.

ஹரிசிங் மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத தந்தக் கோபுர வாசி. அவரை சுற்றியிருந்தவர்கள் அனைவரும் துதிபாடிகள். மன்னர் அடிக்கடி ஐரோப்பாவுக்கு போய்விடுவார். ஆகையால், பண்டிட், டோக்ரா அதிகாரிகள் குடிமக்களான இசுலாமிய மக்களை விரும்பியபடியெல்லாம் சுரண்டியிருக்கின்றனர்.

காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறதா?

சாக்கியன்

11 மறுமொழிகள்

  1. இது என்னங்க 23 ம் புலிகேசியை மிஞ்சிவிடும் கதையாக அல்லவா இருக்கிறது. தற்போதுதான் வாசிக்க கிடைத்தது இவ்வரலாறு.

  2. அருமையை
    பெறுமையாக்குவோம்!!!

    எழுத்திலிருந்து

    எடுத்தாளப்பட்டு

    எழுதிய

    ஏழுத்து

    எதுவென்று
    தெரியவில்லையே!!!

  3. எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் உயர்குடிகளின் என்று சொல்லிகொண்டவர்களுடையதுதான்.. எளியவர்களுக்கு காகிதம், குறிப்புகள் பதிவாக காப்பாற்ற வாய்ப்பு ம் வசதியும் ஏது? ஆகவே, எழுதப்பட்ட எந்த வரலாறும் பொதுவாக உண்மை பேசுவதில்லை. ஆனால் சுயரூபத்தை காட்டிவிடும்.

  4. முஸ்லீம் மன்னர்கள் இந்தியாவிற்கு செய்த தியாகத்தை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

Leave a Reply to %e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க