ரலாற்றில் ஒரு சில சந்தர்ப்பங்களில் நாம் அடிப்படை ஆதாரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய காலகட்டங்கள் வரும். அப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இன்றைய காலகட்டத்தில் நம்மால் தவிர்க்க முடியாத ஒரு நூலை எழுதியிருக்கிறார், பேராசிரியர்  டி.என்.ஜா. (D.N.Jha)

”பொதுப்புத்திக்கு எதிராக: அடையாளம், சகிப்பின்மை மற்றும் வரலாறு குறித்த குறிப்புகள்” (Against the Grain: Notes on Identity, Intolerance and History) என்ற தனது நூலில் இந்தியாவின் பண்டைய வரலாற்றை அக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்களின் குறிப்புகள், எழுத்துக்கள் மூலம் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் முலம், இன்றைய பாடபுத்தகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகளை உடைக்கிறார்.  

பரிசுத்தமான சகிப்புத்தன்மை, அகிம்சை மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியே பண்டைய இந்தியா இருந்ததாக பல்வேறு அரசியல் துறையினரும் சித்தாந்த வேறுபாடின்றி கூறிவருகின்றனர். வரலாற்று உண்மைகள் குறித்த அக்கறையற்றவர்களுக்கும் அன்று நிலவிய சாதிய, பாலின மற்றும் வர்க்கரீதியிலான ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளை அலட்சியமாகக் கடந்து செல்பவர்களுக்கும் இவ்வாறு பூசி மொழுகப்பட்ட பண்டைய இந்தியா மிகவும் வசதியானதாக இருக்கிறது. கடந்த கால மற்றும் சமகால வரலாற்றின் கடுமையான யதார்த்தத்தைக் குறித்து அவர்கள் கண்டுகொள்வதில்லை

டி.என்.ஜா அவர்களின் ”பொதுப்புத்திக்கு எதிராக” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல், பல்வேறு வரலாற்று உண்மைகளை எவ்வளவு அபாயகரமான அளவிற்கு நாம் மறந்து வருகிறோம் என்பதை சரியான நேரத்தில் நினைவுபடுத்துகிறது. ’பசுப் புதிர்’, ’பாரதமாதா’, ’பண்டைய இந்தியாவில் பார்ப்பனிய சகிப்பின்மை’ உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பல்வேறு பிரச்சினைக்குரிய விசயங்களை எடுத்துரைப்பதன் மூலம் ஒருகாலத்தில் சங்கபரிவாரத்தால் கட்டியமைக்கப்பட்டு, தற்போது பள்ளிக்கூடங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வெகுவாகப் பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகளை உடைத்திருக்கிறார் நூலாசிரியர்.

வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா

பண்டைய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை மறுகட்டமைப்பு செய்வதற்கான முயற்சியில் மார்க்சிய அறிஞரான டி.என்.ஜா. இறங்கியிருக்கிறார். அதற்காக பண்டைக்கால நூல்களை பல பத்தாண்டுகளாக படித்திருக்கிறார். ஆம், இவ்வுலகம் கடந்து வந்த நீண்ட பாதையின் வரலாற்றை வெளிக் கொணரும் இத்தகைய கடுமையான பணிகளுக்கு குறுக்கு வழிகள் வேறு எதுவும் கிடையாது.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் அறிஞர்கள் பல நூல்களை ஆய்ந்து, அதிலிருந்து பெற்ற கண்டுபிடிப்புகளை தொல்பொருளியல், கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் ஆதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் பல பத்தாண்டுகள் செலவிடுகின்றனர். அத்தகைய அறிவுத்திறனை வரலாற்றுக்கு புறம்பானவை என்றோ, அரசியல் வேட்கையைத் தணிப்பதற்கான சுவாரசியமான முழக்கங்கள் என்றோ வெறுமனே வெட்டிச் சுருக்கிவிட முடியாது.

இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் சாரமானது, கலாச்சார தேசியத்தின் நம்பிக்கையாளர்களின் ’பெரும்பான்மைவாதத்தை’ ஆதரிக்கும் கருத்துக்களுக்கு நேர்மாறானதாக இருக்கிறது. அகிம்சை, மத நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகங்களின் மீதான சகிப்புத்தன்மை என இந்தியாவின் ‘வளமான கலாச்சாரம்’ குறித்து ஓதப்படும் சுயதுதி தம்பட்டங்களுக்கு நேரெதிராக, பண்டைய நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார் டி.என்.ஜா.

சில அறிஞர்கள் பண்டைய இந்தியாவில் பல்வேறு மதப்பிரிவுகளுக்கு மத்தியிலான பரஸ்பர இணக்கம் இருந்ததாகக் காட்டுவதற்கு குறிப்பிடும் சில உதாரணங்களை, தனது நூலில் ”பண்டைய இந்தியாவில் பார்ப்பனிய சகிப்பின்மை” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாயத்தில் உற்று நோக்குகிறார். கிபி ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் வேத எதிர்ப்பு மதமான பௌத்த மதத்தின் நிறுவனரான புத்தர், பல்வேறு புராணங்களிலும் விஷ்ணுவின் அவதாரமாக காட்டப்படுகிறார். 11-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தசாவதார சரித்திரம் மற்றும் 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கீதா கோவிந்தம் போன்ற நூல்களிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதையும் டி.என்.ஜா நோக்குகிறார்.

பண்டைய இந்தியாவைக் குறித்த இத்தகைய ஓர் இனிமையான பிம்பத்தை டி.என்.ஜா மறுக்கிறார். இந்தியா சமயங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்ற கருத்தாக்கத்தை குறுக்கு விசாரணை செய்ய போதுமான எதிர் ஆதாரங்கள் இன்னுமும் இருக்கின்றன என்கிறார். இது குறித்து மேலும் கூறுகையில் ”வெவ்வேறு பார்ப்பனப் பிரிவுகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதற்கு நம்மிடம் எக்கச்சக்கமான ஆதாரங்கள் உள்ளன. அது மட்டுமல்லாது, பண்டைய இந்தியாவில் இருந்த வேறுபட்ட இரு மதங்களான புத்த மதம் மற்றும் சமண மதத்தின்பாலும் அவர்கள் கடுமையான விரோதம் கொண்டிருந்தனர்” என்கிறார்.

ஒவ்வொரு வகுப்புவாத, மதவாத வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகும் அரசியல்வாதிகளால் வழக்கமாக விடப்படும் வாய்ஜாலங்களுக்கு நேர் முரணாக, பண்டைய இந்தியா குறித்த டி.என்.ஜா-வின் மறுகட்டமைப்பு அமைந்துள்ளது. இந்நூல், மதங்களுக்கிடையிலான மோதல் நிலைமைகளும், வன்முறைகளும் பண்டையகாலத்திலிருந்தே இந்திய கலாச்சாரத்தில் ஊடாடி இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியா முழுவதும் முசுலீம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் சமகால கும்பல் வன்முறை கலாச்சாரம் என்பது ஏதோ ஒரு தடப்பிறழ்வு அல்ல. எப்போதுமே காட்சியிலிருக்கும் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளின் பெரும் வடிவம்தான் அது.

கூன் பாண்டியனால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு.

புத்த, சமண மதங்களுக்கு எதிரான வசைகள் அடிக்கடி கடுமையான வன்முறை நடவடிக்கைகளாக மாற்றப்பட்டன என்பதை குறிப்பிடுகிறார் டி.என்.ஜா. ஹுனா ஆட்சியாளனான மிஹிரகுலா என்ற சிவபக்தன், 1600 புத்த ஸ்தூபிகள் மற்றும் மடங்களை அழித்ததோடு ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகளையும் பாமரர்களையும் கொன்றதை, 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த யுவான் சுவாங் எழுதியிருப்பதை உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார்.  ஆனால் இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் கலாச்சாரத்தை, முசுலீம் வருகையின் பண்பாக்குவதையே ஆதிக்க அரசியல் பிரச்சாரம் விரும்பியது. இந்தியக் கலாச்சாரத்தின் உயர்ந்த தன்மையை, அமைதி மற்றும் சகிப்புத் தன்மையின் கலாச்சாரமாக நிறுவ சமூக அறிவியல் நூல்களை மாற்றும் முயற்சிகள் தற்போது விடாப்பிடியாக மேற்கொள்ளப்படுகின்றன. மாறாக, தீவிரத்தன்மையும் சகிப்பின்மையும் இசுலாத்தின் குணமாகக் காட்டப்படுகின்றன.

இந்த தளத்தில்தான் டி.என்.ஜா-வின் ஆய்வு கேள்வி எழுப்புகிறது. ”ஸ்ரமணியத்தைப் பின்பற்றியவர்கள் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுத்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும், பார்ப்பனப் பிரிவினர், பிற மதத்தினர் மீது சகிப்புத்தன்மையோடு இருந்ததாகச் சொல்லப்படுவதால் அவர்கள் வன்முறையற்றவர்கள் என்ற கருத்தே நீடித்து வருகிறது. ஆனால், இதற்கு முரணாக மத்திய காலங்களிலும் அதன் பின்னரும் அவர்கள் மதச் சண்டைகளைத் தூண்டுவதிலும், வகுப்புவாத வன்முறைகளைப் தூண்டுவதிலும் முன்னணி பாத்திரம் வகித்ததாகத் தெரிகிறது” என்கிறார் டி.என்.ஜா.

இந்தியா குறித்து ஆய்வு செய்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக அறிஞர் அல்பெருனி, பார்ப்பன மதத்தினர் குறித்துக் கூறுகையில் அவர்கள், ”இருமாப்புடையவர்களாகவும், முட்டாள்தனமான தற்பெருமையும், கர்வமும் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் மதத்தைப் போன்று வேறு மதம் எதுவும் இல்லை என நினைக்கின்றனர்” என்று எழுதியிருக்கிறார்.

மிஹிரகுலா

விரிவான தளத்தில் பார்க்கையில், அமைதி மற்றும் அகிம்சையை வலியுறுத்தும் மதங்கள் உட்பட அனைத்து மதங்களும் வன்முறையின் கூறுகளைத் தமக்குள் கொண்டுள்ளன என்பதை இந்நூலின் ஒர் பகுதி எடுத்துக் காட்டுகிறது. அகிம்சையினை தழுவிக் கொண்டவர்களான புத்த பிட்சுகளின் வன்முறையை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுவோம். அவர்களின் வன்முறைப் பட்டியலில் உள்ள சமகாலத்திய நாடுகளில் இலங்கையும் பர்மாவும் உண்டு.

பண்டைய இந்தியாவிலும் கூட பௌத்தர்களும் சமணர்களும், பார்ப்பன நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் எதிராக பதிலடி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் “புத்தரும் கூட மூன்று வேதங்களையும், ’முட்டாள்தனமான பேச்சுகள்’ என்றும் ’நீரில்லாத பாலைவனம்’ என்றும் அவர்களது மெய்யறிவை ‘வழியற்ற வனம்’ என்றும் ‘நரகம்’ என்றும் விவரித்தார்” என்று டி.என்.ஜா குறிப்பிடுகிறார் .

மத மேலாதிக்கத்துக்கான உந்துதல் என்பது ஏதேனும் ஒரு மதத்திற்கு  மட்டும் குறிப்பான விசயமல்ல. டி.என்.ஜா-வின் இந்த நூல் அனைத்து மதங்களும் மேலாதிக்கத்துக்கான இந்தப் போரில் ஈடுபட்டிருந்தன என்பதை எடுத்துரைக்கிறது. குறிப்பான வரலாற்றுக் காலகட்டங்களில் குறிப்பான அமைப்புகளால் முன்வைக்கப்படும் சவால்களுக்கு ஒருவர் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் டி.என்.ஜா.

– தி வயர் இணையதளத்தில் அதன் மேலாண்மை ஆசிரியர் மொனொபினா குப்தா எழுதிய நூலறிமுகத்தின் தமிழாக்கம்.

வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876

1 மறுமொழி

  1. பார்பனீயர்களை இந்த நாட்டை விட்டு விரட்டிவிட்டு, முஸ்லிம்களிடம் ஆட்சியையும் , அதிகாரத்தையும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது …

Leave a Reply to tamiltk பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க