
மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியான ரிவ்யாணி ரஹங்டேல் 2018, ஏப்ரல், 18-ல் சாலையோர விபத்தொன்றில் சிக்கி மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாக்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். தலையில் பலத்த அடிபட்டதால் அவள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆயினும் அவளது இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தது. கல்லீரலும், சிறுநீரகமும் இயங்கிக் கொண்டிருந்தன.
அத்துயரத்திலும் அவளது உறுப்புக்களைக் கொடையாக கொடுக்க அவளது பெற்றோர்கள் முன்வந்தனர். தன்னுடைய மகள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதும் இயங்கிக் கொண்டிருக்கும் அவளது மற்ற உறுப்புகளை கொடையாக கொடுத்து விடலாம் என்று தனக்குத் தோன்றியதாக சிறுமியின் தந்தை இராதேஷ்யாம் கூறினார். அவர் காவல் துறையில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.
ஏப்ரல் 28–ம் தேதி போராடிக் கொண்டிருந்த மற்ற நான்கு உயிர்களையும் அச்சிறுமி காப்பாற்றினாள். இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் என்று அவளது நான்கு உறுப்புகளும் அவரகளுக்கு பயன்பட்டன. ஆனால் துயரத்தின் மையத்திலும் தமது நேசத்திற்குரியவர்களின் உடலுறுப்புகளை கொடையாக கொடுத்தாலும் அதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் அவர்கள் வைப்பதில்லை. மேலும் யாருடைய உயிர்களை அந்த உறுப்பு கொடைகள் காப்பாற்ற போகின்றன என்றும் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை.
போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்தி “பச்சை சாலைகள்” வழியாக குறித்த நேரத்திற்கு உறுப்புகள் எடுத்துச் செல்லப்பட்டு பல உயிர்கள் இன்று காப்பற்றப்படுகின்றன. பால், சாதி, மத அடையாளங்கள் கடந்து இப்படி கொடையாக கொடுக்கப்பட்ட உறுப்புகள் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒற்றுமையின் அடையாளமான இதை நாம் கொண்டாட வேண்டாமா?
கேட்பதற்கே உற்சாகமளிக்கும் இந்த செய்தியில் மோசமான ஒரு விசயமும் அடங்கியுள்ளது. மிகுந்த செலவு பிடிக்கும் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் மிக சொற்பமான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கிறது. 95 விழுக்காட்டிற்கும் அதிகமாக இச்சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. இதற்கு ஆகும் செலவு குறைந்தது 20-25 இலட்சங்கள். ஒப்பீட்டளவில் சிக்கல் குறைந்த சிறுநீரக உறுப்பு மாற்ற சிகிச்சைக்கே குறைந்தது 8-10 இலட்சங்கள் தேவை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான முன்னுரிமைகள் குறித்த சமூக விதிமுறைகள் ஒவ்வொரு மாநிலங்களில் இருப்பினும் இந்திய சமூக அமைப்பின் பாரிய ஏற்றத்தாழ்வு காரணமாக வர்க்க பேதமற்ற இந்த உறுப்பு கொடைகள் முடிவில் பணக்கார வர்க்கத்திற்கே கிடைக்கிறது. இந்நிலையில் வர்க்க பேதமற்று “உறுப்பு தானம் செய்வீர்” என்று அறைகூவல் விடுக்கப்படுவது ஒரு நகைமுரண்.
ஏற்றத்தாழ்வான வாய்ப்புகள்
உயிர்காக்கும் உறுப்பு மாற்று சிகிச்சை இந்தியாவில் ஏனைய துறைகளை போலவே அரிதினும் அரிதாகவே ஏழைகளுக்கு கிடைக்கிறது.
தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் இந்திய மருத்துவத்துறையின் சிக்கலை மிகவும் தீவிரப்படுத்தி விட்டது. ஒரு சில மாநகரங்களில் உள்ள அற்பசொற்பமான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. சான்றாக 1-2 விழுக்காடு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. உலகளாவிய மருத்துவ சேவை கட்டமைப்பின் கீழ் நோயின் தன்மையைப் பொருத்தும் சமூக நீதியின் அடிப்படையிலுமே பெரும்பான்மையான நாடுகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. சமூக நீதியின் அடிப்படையிலேயே உறுப்பு கொடைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்பது உலக சுகாதார மையத்தின் அடிப்படை விதிமுறையாகும்.
சிலப்பத்தாண்டுகளுக்கு முன்போலல்லாமல் உறுப்புக் கொடையாலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாலும் பல இந்தியர்கள் இன்று பயன் பெறுகின்றனர். இந்திய அரசும் உறுப்பு கொடையை ஒரு தேசிய இயக்கமாக பரப்புரை செய்கிறது. பணம் படைத்த சிலருக்கு மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கிடைக்கும் சமூக ஏற்றத்தாழ்வு கோலோச்சும் போது அனைவரையும் உறுப்பு கொடை கொடுக்குமாறு அரசு அறைகூவல் விடுப்பது ஒரு குரூரமான நகைச்சுவை.
நடக்காததை நடக்கும் என்கிறார்கள்
முதலாளித்துவ பொருளாதார மேதைகள் டிரிக்கில்-டவுன் விதி என்று சொல்வது போல பணக்காரர்களுக்கு கிடைத்தது போக மிச்ச சொச்ச உறுப்புகள் மேலிருந்து கீழாக வழிந்து ஏழைகளுக்கு கிடைக்கக்கூடும் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் உறுப்புக்கொடை கொடுப்பவர்களின் எண்ணிக்கையை விட பணக்கரார்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதால் இந்த நம்பிக்கையும் கேலிக்கூத்தாகிவிட்டது.
இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க ஏதேனும் சரியான வழியிருக்கிறதா? உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இதை சரி செய்ய முடியுமா? சரிபாதி உறுப்புகளை அரசு மருத்துவமனைகளுக்கு கொடுக்க வழிவகை செய்யலாம். அல்லது தனியார் மருத்துவமனைகளில் மானியம் கொடுப்பதன் மூலமும் செய்யலாம். ஏனெனில் பொதுமக்களின் நலனிற்காக உறுப்புகளை பிரித்து கொடுக்கும் தார்மீக உரிமையும் கடமையும் இந்த அரசிற்கு இருக்கிறது.
ஆனால் இதற்கு அரசு மருத்துவ கட்டமைப்பை சரி செய்யாமல் வழியில்லை. உண்மையில் முதன்முதலாக செய்யப்பட்ட வெற்றிகரமான உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒவ்வொன்றும் அரசு மருத்துவமனைகளில் தான் செய்யப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சைக்காகும் செலவை தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் போன்ற அரசு காப்பீடு திட்டங்களில் மூலமாக அரசு ஏற்கலாம். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பை (National Organ & Tissue Transplant Organisation) உருவாக்கியதன் மூலம் இந்திய அளவில் உறுப்பு மாற்றுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது செய்து வரும் வெறும் பரப்புரை போலல்லாமல் உறுப்புகளை சமூக நீதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக யாருக்கு உடனடியாக தேவையோ அவர்களுக்கு தான் உறுப்பு கொடையை இந்த அமைப்பு பயன்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் தங்களது அப்பா, அம்மா, குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தவர்களது உறுப்புகளை மக்கள் கொடையாக கொடுக்கிறார்கள்.
ரிவ்யாணி உயிருடன் இருந்திருந்தால் அவளுக்கு இப்பொழுது ஏழு வயதாகியிருக்கும். ரிவானியின் இதயம் தற்போது துடித்துக் கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தையொன்றின் பெற்றோருக்காக, ரிவ்யாணியின் தந்தை ரதேஷ்யாமிடம் ஒரு செய்தி இருந்தது. அந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவது போலவே என்னுடைய மகளின் பிறந்த நாளான மே-5 யையும் கொண்டாட வேண்டும் என்ற செய்தியை அவர்களிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள் என்பது தான் அது. அந்த செய்தி அவர்களிடம் சேர்ந்துவிடும் என்று ஒருவர் நம்பலாம். ஆனால் ரஹாங்டலஸ் போன்றவர்களின் கொடைகளை கொண்டாடும் அதே நேரத்தில் அதே கொடையை அவர்களை போன்ற ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க முயற்சி செய்வோமா?
-வினவுச் செய்திப் பிரிவு
நன்றி: scroll.in. Sanjay Nagral எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
மேலும் படிக்க:
Who gives, who lives? India’s organ transplant system continues to favour the rich