சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டோபிகானா பகுதி, சலவைத் தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். மூன்று தலைமுறைகளாக சென்னை மக்களின் துணிகளின் அழுக்கை நீக்கி வருபவர்கள், இப்போது வீசி எறியப்பட்ட கந்தல் துணியைப் போன்ற அவல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கனகசபை

கனகசபை, சலவைத் தொழிலாளி :
புத்தி தெரிஞ்ச காலத்துல இருந்தே இந்த சலவைத் தொழில்தான் செய்யுறேன். இந்த துணி துவைக்கிற வண்ணாந்துரை ஐம்பது வருசத்துக்கு முன்ன ரொம்ப பேமஸ். கவர்மென்ட் ஆபிசருங்க துணியை இங்கதான் துவைப்போம். திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, ஐஸ்ஹவுஸ் மொத்த லாண்டரி கடையில இருக்க அழுக்கும் இங்கதான் வரும்.

இப்போ வெள்ள சொக்காய எல்லோரும் போடுறாங்க. கேடி, முள்ளமாரி, முடிச்சவிக்கி, பிக்பாக்கெட், இவங்கெல்லாந்தான் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கானுங்க. செயின் அருக்கிறவனுக்குன்னு தனியா ட்ரெஸ் இருக்கான்ன? வெள்ள சட்ட போடுறவன் எல்லாம் விஐபி இல்ல. காக்கி சட்டை போடுறவன் போலீசும் இல்ல. பெருசா பட்டை அடிக்கிறவனுங்க எல்லாம் பக்திமானும் இல்ல.  ஆனா இந்த வெள்ள சட்டைதான் அதிகம் வருது.

இந்த தொழில நம்பிதான் இங்க இருநூறு குடும்பம் இருக்கு. தண்ணிதான் எங்க தொழிலுக்கு ஆதாரமே. கவர்மென்ட் குடிக்கிற தண்ணியே இல்லன்னு கைய விரிச்சிட்டான். பெரிய போராட்டத்துக்கு அப்புறம் ஒரு நாளைக்கு இரண்டு லாரி தண்ணி கொடுக்கிறேன்னு சொன்னானுங்க. அதுவும் ஒழுங்கா வர்றது இல்ல. இப்ப நாங்க அழுக்குத்துணியே எடுக்கிறது இல்ல. தெரிஞ்ச ஒன்னு ரெண்டு கஸ்டமருக்கு தான் தொவச்சி தரேன். பொழப்பு கொறஞ்சி போச்சி. கார்த்திகை ஐப்பசி மழைக்காலத்துல வேலை இருக்காது. வயித்துல ஈரத்துணியதான் சுத்திக்கணும்.

சாப்பாடுன்னா நமக்கென்ன ஆட்டுக்கறியா சாப்பிடமுடியும்? அந்த காலத்துல ஒரு தூக்கு ஆட்டுக்கறி (ஒன்னரை கிலோ) ரெண்டு ரூபா. முழு ஆடு இருபத்தி அஞ்சி ரூபாதான். இப்ப ஒருகிலோ ஆட்டுக்கறி ஆறுநூறு ரூபா விக்கிது. எங்க கறி சாப்பிடறது? ரசம் சோறு தான் நமக்கு நிரந்தரம். அதுவுமில்லனா பட்டினிதான்.

சாந்தா

சாந்தா, சலவைத் தொழிலாளி :
நான் பொறந்த ஊரு ராமநாதபுரம். மெட்ராசுல வாக்கப்பட்டேன் வீட்டுக்காரு பேரு பூமிநாதன். அப்பவே எட்டாவது படிச்சவரு. தண்ணி கஷ்டத்துல இப்ப நாங்க அதிகமா துணி எடுக்கிறது இல்ல. சில பேரு நிரந்தரமா நம்ம விட்டு போக மாட்டாங்க. விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் தி.நகர்ல இருக்காரு. அவரமாதிரி ஒரு பத்து, இருபது பேருதான் இப்ப எங்களுக்கு கஸ்டமரு. வெள்ள துணியை மட்டும் புதுசு மாதிரி தோச்சி, தேச்சி கொடுப்போம்.

தேவி

தேவி, சலவைத் தொழிலாளி:
வீட்டுக்காரரு மணி. அவரு வேலையா வெளிய போயிருக்காரு. சொந்த ஊரு  மதுரை பக்கம். நாங்க மொத்தமா வெளியாளுங்க கிட்ட இருந்து துணி எடுத்து குறைஞ்ச கூலிக்கு செய்யுறோம். ஆஸ்பிட்டல், லாட்ஜ் இவங்க எல்லாம் மொத்தமா போடுவாங்க. பெட்சிட், போர்வை, தலையணையுறை, மிதியடி, இப்படி எல்லாமே தூக்க முடியாத கனத்துல இருக்கும். அதை தூக்கி அடிக்கணும். அடிவயிறு நோவும்.

துணிக்கு போடுற மருந்து, ஈரத்துணி உடம்புல ஊறும். ஆசிட், வெங்காரம், காஸ்டிக் சோடா, கரை எடுக்கிற மருந்து இப்படி எட்டுக்கு மேல பொருள் போட்டுதான் அழுக்கு துணியை துவைப்போம். நாள் முழுக்க ஈரத்துல நிக்கிறதால உடம்பே சல்லாத்துணி மாதிரி ஆகும். நைட்டுல தூக்கம் வராது. உடம்பே அரிக்கும்.

பொழப்பா இது? எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம்.

ராஜவேணி

ராஜவேணி, சலவைத் தொழிலாளி :
தோ….. பாருங்க… கை….. மொத்த உடம்பும் இப்படித்தான் வெந்து கெடக்கு. உடம்ப துணியால மறச்சிகினு இருக்கதால எங்க நோவு உங்களுக்கு தெரியாது. துணிய அடிச்சி துவைக்கும்போது ஆசிட் தண்ணி உடம்பு மேல பாயும். அந்த எரிச்சலும் மொட்ட வெயிலும் சேர்ந்து உடம்பு தீயும். படுத்தா சட்டுன்னு தூக்கம் வராது. என்னத்த சொல்லுறது.

உடம்புல தெம்பு இருந்து வயசு இருந்தா ஒரு குடும்பத்துல ரெண்டு பேர் துணி துவச்சா நூத்தியம்பது உருப்படி துவைப்போம். வயசானவங்க அம்பது உருப்படி துவைக்கிறதே கஷ்டம். கலர் துணி, வெள்ள துணி, உறைப்பு துணி, லேசு துணி இப்படி ரகவாரியா துணிய துவச்சி ஊற வக்கணும். அதுஅதுக்கு தேவையான காரம், சோப்பு, அளவா போடணும். பிறகு ரகத்துக்கு ஏத்த மாதிரி கும்மனும், அடிக்கணும், தொவைக்கணும். வாசனைக்கு கம்போர்ட் போடணும். விரைப்புக்கு ஜவ்வரிசி கஞ்சி காச்சி நனைக்கணும். கடைசியில காத்துக்கயிருல காய வக்கணும்.

நூறு உருப்படிக்கு அழுக்கு எடுக்கிறதுக்கு மேல் செலவே இருநூறு ரூபாய் ஆகும். எங்க உழைப்புக்கு கணக்கு போட்டா எதுவும் இருக்காது. இப்படி உழைச்சாலும், நாங்க பலநாள் நல்ல சோறு சாப்பிட முடியாது.

குப்பன், சலவைத் தொழிலாளி:
என் வாய கெளராதிங்க. கொடுங்கோல் ஆட்சி இது. இங்கதான் பொறந்தேன். இங்கதான் வளந்தேன். நாங்க வாழறதுக்கு வீடு கேட்டா, எங்கள ஒதுக்கி வச்சி ஓய்வறைன்னு ஒன்னு கட்டி அதுல தள்ளிட்டானுங்க.

தோபிகானா வாழ்க்கைபத்துக்கு பத்து ரூமுல மொத்த குடும்பமும் தூங்கனும். அங்கேயே சமைக்கணும். அங்கேயே துணி மாத்திக்கணும். வயசு பசங்க பொம்பள ஆம்பளைன்னு எப்படி பொழங்கறது? துணி துவைக்கிற அழுக்கு தண்ணி அப்படியே நிக்குது. சாக்கடை போறதுக்கு கால்வாய் கட்டல. கொசு புடுங்குது. துணி வெளுக்கும்போது வெயிலுக்கு கூரை கேட்டோம். எவனுக்கும் காது கேட்கல. டோபிகானா என்கிற இந்த நூறு வருசத்து இந்த வண்ணாந்துரையை எப்படி இடிக்கிறதுன்னு இப்ப பிளான் பண்ணுறானுங்க மொள்ளமாரிங்க.

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க