ஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே பதவி விலகியிருக்கிறார். அதாவது நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆதார் தரவுகள் இரகசியமானவை, அவற்றை யாரும் திருட முடியாது என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தும் கட்டுரையை டிரிப்யூன் நாளேட்டில் எழுதியதே அவருடைய வெளியேற்றத்துக்கு காரணம்.

“ஐநூறு ரூபாய் கொடுங்கள், பத்து நிமிடம் பொறுங்கள், நூறு கோடி மக்களின் ஆதார் தரவுகள் கிடைக்கும்”  என்று தலைப்பிட்டு ஜனவரி 3 ஆம் தேதி ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது டிரிப்யூன் நாளேடு. ஒரு ஆதார் முகவருக்கு பே டிஎம் வழியாக 500 ரூபாய் செலுத்தி அடுத்த பத்தே நிமிடத்தில் ஆதார் தளத்தில் நுழைவதற்கான பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் பெற்றார் அப்பத்திரிகையின் செய்தியாளர் ரச்னா கெய்ரா. யாருடைய ஆதார் எண்ணைக் கொடுத்தாலும் அதற்குரிய ஆதார் அட்டையை அச்சிடுவதற்கான மென்பொருளையும் 300 ரூபாய்க்கு ஆன்லைனிலேயே வாங்கினார் கைரா. இந்த செய்தி வெளிவந்தவுடன், ஆள் மாறாட்டம், போர்ஜரி போன்ற குற்றங்களுக்காக அந்த பெண் பத்திரிகையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்தது மோடி அரசு.

தன்னுடைய பத்திரிகையாளர் மீது வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தார் ஆசிரியர் ஹரிஷ் கரே. வழக்கை டிரிப்யூன் நாளேடு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று அறிவித்தார். எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகளும் கண்டித்தன. ஸ்னோடன் கண்டித்தார். சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இத்தனைக்கும் பிறகு, ஹரிஷ் கரேயின் வெளியேற்றம்.

இதில் நாம் கவனிக்கத்தக்க விசயம் ஒன்றிருக்கிறது. இந்த புலனாய்வுக் கட்டுரைக்காக அந்த பத்திரிகையாளர் மீது மட்டும்தான் வழக்கு பதிவு செய்திருக்கிறது. வழக்கை டிரிப்யூன் நாளேடு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என அறிவிக்காமல், வழக்கை எதிர்கொள்ளும் பொறுப்பை அந்தப் பெண்ணின் தலையிலேயே தள்ளிவிட்டிருந்தால் ஹரிஷ்கரே தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.

பாபிகோஷ்

முதலில் பத்திரிகையாளர்களைத் தனிமைப்படுத்தித் தாக்குவது, அந்த பத்திரிகை நிர்வாகம், பத்திரிகையாளருக்கு ஆதரவாக நின்றால் பிறகு அந்த பத்திரிகையின் மீதும் தாக்குதல் தொடுப்பது என்பதுதான் மோடி – அமித் ஷா கும்பல் கையாண்டு வரும் உத்தி.

நாடு முழுவதும் நடைபெறும் மதவெறி, சாதி வெறி தாக்குதல் குற்றங்கள் குறித்த செய்திகளை, வாசகர்களையே தொகுக்கச் செய்து இணையத்தில் வெளியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் பாபி கோஷ், மோடியின் நேரடித் தலையீட்டின் பேரில் அந்த பத்திரிகையின் முதலாளியால் சென்ற ஆண்டு தூக்கியெறியப்பட்டார்.

ஜே.என்.யு. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டதற்காக, இராஜஸ்தான் பத்ரிகா நிறுவனத்துக்கு சொந்தமான கேட்ச் நியூஸ் என்ற இணையப்பத்திரிகையிலிருந்து அதன் ஆசிரியர் ஷோமா சவுத்ரி முன் அறிவிப்பின்றி வெளியேற்றப்பட்டார்.

இந்தியா டுடே தொலைக்காட்சியில் டு தி பாயின்ட் என்ற பேட்டி நிகழ்ச்சியை நடத்தி வந்த முன்னணி பத்திரிகையாளர் கரன் தபாருக்கு இன்று எந்த தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி இல்லை. மோடியை கரன் தபார் எடுத்த பேட்டி பிரபலமானது. குஜராத் படுகொலை பற்றி கேள்வி எழுப்பி பேட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே மோடியை எழுந்து ஓடவைத்தவர்.

கரன்தபார்

அவுட்லுக் வார இதழின் ஆசிரியர் கிருஷ்ணபிரசாத்தும்  வெளியேற்றப்பட்டார். அசாமின் பழங்குடிச் சிறுமிகளை குஜராத்துக்கும் பஞ்சாபுக்கும் கடத்திச் சென்று ஆர்.எஸ்.எஸ். வெறியர்களாக வளர்த்து மீண்டும் அவர்களை அசாமிற்கு கொண்டு வந்து பழங்குடி மக்களை தன் பிடிக்குள் வைத்துக்கொள்வது என்ற வக்கிரமான திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமல்படுத்தி வருவதை ஆதாரங்களுடன் வெளியிட்டது அவுட்லுக் வார இதழ். இக்கட்டுரையை எழுதிய நேகா தீட்சித் என்ற பத்திரிகையாளர், ஆசிரியர் கிருஷ்ணபிரசாத், அவுட்லுக் வார இதழின் வெளியீட்டாளர் இந்திரநீல் ராய் ஆகியோர் மீது மதக்கலவரத்தை தூண்டுவதாக அசாமில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்கட்டுரை வெளிவந்த சில நாட்களிலேயே கிருஷ்ணபிரசாத்தை ஆசிரியர் பதவியிலிருந்து வெளியேற்றியது அவுட்லுக் நிர்வாகம்.

அதானிக்கு மோடி வழங்கிய 500 கோடி பம்பர் பரிசு, அதானி குழுமத்தின் 1000 கோடி வரி ஏய்ப்பு? என்ற தலைப்புகளில் ஜூன் 2017 இல் கட்டுரைகள் வெளியிட்டார் எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லியின் ஆசிரியர் பரஞ்சோய் குஹா தாகுர்த்தா. உடனே அக்கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்டு இணையத்திலிருந்தும் அகற்றப்படவில்லையெனில் மானநட்ட வழக்கு தொடுப்போமென அதானி குழுமத்தின் சார்பில் விடப்பட்ட மிரட்டலுக்கு அஞ்சியது நிர்வாகம். ஜூலை மாதமே தாகுர்த்தா பதவி விலக நேரிட்டது.

கிருஷ்ணபிரசாத்

இதே கட்டுரையை வயர் இணையப் பத்திரிகை பிரசுரித்தது. அதன் மீதும் 6 பத்திரிகையாளர்கள் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்தது  அதானி நிர்வாகம். வயர் இணைய தளம் அதனை எதிர்த்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடத்த வேண்டி வந்தது.

அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் ஊழல் குறித்து வயர் இணையப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தவுடன் அதன் மீது 100 கோடி ரூபாய்க்கு மானநட்ட வழக்கு தொடுத்தார் அமித் ஷாவின் மகன். அது மட்டுமல்ல ஜெய் ஷாவை பற்றி எந்த கட்டுரையும் வெளியிடக்கூடாது என்று வயர் பத்திரிகைக்கு குஜராத் உயர் நீதிமன்றத்திம் வாய்ப்பூட்டு உத்தரவும் போட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது வயர் இணையதளம்.

இவை சமீபத்திய சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவற்றில் மோடி அரசால் குறிவைக்கப்பட்டவர்கள் அனைவரும் பிரபல பத்திரிகையாளர்கள். இருந்த போதிலும், தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக்கூட தனது பத்திரிகை ஆசிரியர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் இறங்கவில்லை. அவர்களைக் கை கழுவிவிட்டது. மோடி கும்பலிடம் விலை போகாதவர்களும் கூட, வழக்குக்கும் அடக்குமுறைகளுக்கும் தாக்குதலுக்கும் அஞ்சிப் பின்வாங்குவதைப் பார்க்கிறோம்.

தாகுர்த்தா

பாரதிய ஜனதாக் கட்சியாகட்டும், மோடி  அமித்ஷா கும்பலாகட்டும், இவர்கள் அனைவரும் பார்ப்பன பாசிஸ்டுகள் என்பதையும் தம் இயல்பிலேயே ஜனநாயக விரோதிகள் என்பதையும் நாமறிவோம். இருப்பினும் தற்போது மோடி கும்பல் வெளிப்படுத்தும் வெறி என்பது அடிபட்ட மிருகத்தின் வெறி. வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாய்ச்சவடால்களே என்று மக்கள் மத்தியில் மென்மேலும் அம்பலமாகி வருவதால், குற்றங்களை மறைக்கும் முயற்சியிலும், உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்களை ஒழித்துக் கட்டும் முயற்சியிலும் வெறித்தனமாக இறங்கியிருக்கிறது இந்தப் பாசிசக் கும்பல்.

சமூக ஊடகங்களைக் கண்காணிக்கிறோம் என்ற ஸ்மிருதி இரானியின் மிரட்டல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்திருப்பது, நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், மர்ம மரணம், எதிர்க்கட்சியினர் மீது ஏவப்படும் வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சி.பி.ஐ. ரெய்டுகள்…  ஆகிய அனைத்தும் காட்டுவதென்ன?

பாசிசக் கும்பல் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மதிப்பிழக்கிறதோ அந்த அளவுக்கு அதன் வெறித்தனமும் அதன் விளைவான பாசிச அபாயமும் அதிகரிக்கிறது. பதுங்குவதற்கும் ஒதுங்குவதற்குமான இடம் ஜனநாயக சக்திகளுக்கு குறைந்து கொண்டே வருகிறது.

 

  • கதிர்

புதிய ஜனநாயகம் – ஜூலை 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com