வன்முறையைத் தாங்களே அரங்கேற்றிவிட்டு பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது என்பது நாஜிகள் காலம் தொட்டு பாசிஸ்டுகள் கடைபிடித்து வரும் அணுகுமுறை. இந்த விசயத்தில் பார்ப்பன பாசிஸ்டுகள் நாஜிகளை விடவும் கைதேர்ந்தவர்கள். தூத்துக்குடியில் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, அதையே காரணம் காட்டி 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, பிறகு போராடிய மக்கள் மீதும் முன்னணியாளர்கள் மீதும் சரம் சரமாகப் பொய்வழக்குகள் போடுகிறார்கள். இது மாநில உளவுத்துறையை கைப்பாவையாக வைத்துக் கொண்டு மத்திய உளவுத்துறை அரங்கேற்றிவரும் நாடகம்.
மே – 22 பின் தூத்துக்குடி பிரச்சினையில் என்ன நடக்கிறதோ அதுவேதான் கடந்த ஜுன் – 7 ஆம் தேதியன்று மகாராட்டிரத்திலும் நடந்தது. 2018 ஜனவரி – 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டதால், ஆத்திரம் கொண்ட இந்துவெறி அமைப்புகள் அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன.

நினைவு தின நிகழ்ச்சியில் திரண்ட இலட்சக்கணக்கான தலித் மக்கள்.
தற்போது வன்முறைக்குக் காரணம் மாவோயிஸ்டுகள்தான் என்று பொய்க்குற்றம் சாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முன்னணியாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் வேட்டையாடி வருகிறது மகாராட்டிர அரசு. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர்களே மாவோயிஸ்டுகள்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததைப் போல மோடியைக் கொலை செய்வதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி, ஜுன் 7 ஆம் தேதியன்று 5 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்திருக்கிறது மகாராட்டிர போலீஸ்.

கைது செய்யப்பட்ட சுரேந்திர காட்லிங் (வயது 47) வழக்கறிஞர். நாக்பூரில் பிறந்தவர். 1990 ஆவ்கான் நாட்டிய மஞ்ச் என்ற புரட்சிகர பண்பாட்டு அமைப்பில் செயல்பட்டவர். பிறகு சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் வழக்கறிஞர். முக்கியமாக பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர். எளிய வாழ்க்கை வாழ்பவர். சி.பி.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் செயல்வீரர். பீமா கோரேகான் நிகழ்வு நடைபெற்ற ஜனவரி 1 ஆம் தேதியன்று, கல்கத்தா நீதிமன்றம் ஒன்றில் வழக்கு நடத்திக் கொண்டிருந்த அவரை இவ்வழக்கில் தொடர்புபடுத்தியிருக்கிறது, மராத்திய பா.ஜ.க. அரசு.
சுதிர் தவாலே (54) நாக்பூர் குடிசைப்பகுதி ஒன்றில் தலித் சமூகத்தில் பிறந்த இவர், 2011 இல் மாவோயிஸ்டு தொடர்புக்காக கைது செய்யப்பட்டு 40 மாதங்களுக்குப் பின் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். வெளியே வந்தவுடன் ஏற்கனவே தான் நடத்திவந்த வித்ரோகி என்ற பத்திரிகையை தொடர்ந்து தீவிரமாக நடத்தினார். முக்கியமாக சுமார் 200 தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து பீமா கோரேகான் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்தியதுதான் இவர் செய்த மிகப்பெரிய குற்றம்.
மகேஷ் ராவத் (30) மராத்திய மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009 இல் படிப்பதற்காக மும்பையில் உள்ள டாடா சமூகவியல் ஆய்வுக் கழகத்தில் சேர்ந்த பிறகுதான் இவர் சமூக கண்ணோட்டம் பெறத் தொடங்கினார் என்கிறார் இவரது சகோதரி. கட்சிரோலி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இவர் ஆற்றிய பணியின் காரணமாக, பிரதமரின் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வாளராக அங்கீகரிக்கப்பட்டவர். சூரஜ்கர் இரும்புக் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக பழங்குடி மக்களை திரட்டி பல போராட்டங்களை நடத்தியவர்.
ஷோமா சென் (60) நாக்பூர் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறைத் தலைவர். ஒருசில நாட்களில் பணி ஓய்வு பெறவிருந்தவர். பெண் விடுதலை இயக்கங்களிலும் மனித உரிமை அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டவர். அவரது கணவர் துஷார்காந்த் பட்டாசார்யா, 2007 ஆம் ஆண்டில் மாவோயிஸ்டு தொடர்புக்காக நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து 2011 இல் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டவர்.
ரோனா வில்சன் (47) கேரளத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் வசிப்பவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவராக இருந்தவர். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானியுடன் இணைந்து அரசியல் கைதிகளுக்கான விடுதலை இயக்கத்தை நடத்தி வருபவர். இவர் பீமா கோரேகான் நிகழ்வுக்கு செல்லவில்லை என்பதும், அதனை ஏற்பாடு செய்தவர்களுடன் இவருக்கு எந்தவிதத் தொடர்பும்இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோடியைக் கொல்லச் சதி செய்ததாக குற்றம் சாட்டி, இந்த ஐந்து பேரையும் கைது செய்வதற்கு அரசு தரப்பு கொடுத்த ஆதாரம் ஒரு மொட்டைக் கடிதம். மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்த எம் என்பவரால் பிரகாஷ் என்பவருக்கு, ஏப்ரல், 18, 2017 இல் எழுதப்பட்ட ஒரு கடிதம். ரோனா வில்சனின் வீட்டை ஏப்ரல் 2018 இல் சோதனை செய்தபோது இந்த கடிதத்தின் நகலை அவருடைய கணினியிலிருந்து கைப்பற்றியதாக போலீஸ் கூறுகிறது. இதற்குமேல் அந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மைக்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது.
“பிரதமரை கொலை செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் அடங்கிய கடிதம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில், அக்கடிதத்தினை ஏப்ரல் மாதத்தில் கைப்பற்றிய போலீஸ், ஜுன் மாதம் வரையில் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் அந்தக் கடிதத்தின் நகலைக் காட்டுகிறாரே, அவர் கைக்கு அது வந்தது எப்படி?” என்று பல கேள்விகளை எழுப்புகிறார் மார்க்சிஸ்டு கட்சியின் புனே நகரத் தலைவர் சுபோத் மோரே.
இது மட்டுமல்ல, ஒரு மாபெரும் கொலைச் சதிக்கு ஆதாரமாகக் காட்டப்படும் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கமே நகைக்கத்தக்க கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் எம் என்று கையொப்பமிட்டுள்ளவர் மாவோயிஸ்டு கட்சியின் மராட்டிய மாநிலச் செயலர் மிலிந்த் தெல்தும்டெ என்று கூறுகிறது போலீஸ்.
பீமா கோரேகான் நிகழ்வின் செலவுகளுக்குப் பொறுப்பு சுதிர் தவாலே என்றும், எதிர்கால நிதி தேவைகளுக்கு ஷோமா சென், சுரேந்திர காட்லிங் ஆகியோரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாடெங்கும் தலித் போராட்டங்களை கிளப்பி விடுவதற்கு தோழர்கள் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் உதவுவார்கள் என்றும், இது விசயமாக மாவோயிஸ்டு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடனும் தொடர்பில் இருப்பதாகவும் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியை அகற்றியே தீரவேண்டும் என்றும், ராஜீவ் காந்தி சம்பவத்தை போல ஒன்றை நடத்துவதுதான் அதற்கு வழி என்றும் கடிதம் கூறுகிறது. இது மட்டுமல்ல, நான்கு கோடி ரூபாய் பணம், ஒரு எம்-4 ரக துப்பாக்கி, சில இலட்சம் ரவுண்டு தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது பற்றியும் அதே கடிதம் குறிப்பிடுகிறது.

அதாவது, போலீஸ் கைது செய்ய விரும்பும் எல்லோருடைய பெயரும் இடம்பெறுகின்ற வகையிலும், ஜிக்னேஷ் மேவானி முதல் காங்கிரசு வரையிலான பா.ஜ.க. அரசியல் எதிரிகள் அனைவரின் பெயரும் இருக்கும் வகையிலும், ஊபா சட்டத்தின் எல்லா குற்றப் பிரிவுகளும் வரும் வகையிலும் தயாரிக்கப்பட்டிருக்கும் கடிதம்தான் இது.
இதன் நம்பகத்தன்மையை முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகளே ஏற்றுக்கொள்ளவில்லை. ‘‘தமது கடிதங்களில் சம்மந்தப்பட்ட நபர்களின் உண்மையான பெயர்களை மாவோயிஸ்டுகள் எப்போதுமே பயன்படுத்த மாட்டார்கள்” என்கிறார் முன்னாள் ஜார்கண்ட் டி.ஜி.பி. ஜி.எஸ்.ராத்.
“இப்படித்தான் குஜராத்திலும் இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 22 பேர் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு போலி மோதலில் கொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு வழக்கிலும் இவ்வாறு கொல்லப்படுபவர்கள் லஷ்கர் இ தொய்பா அல்லது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் மோடியைக் சொல்லச் சதி செய்ததாகவும்தான் சொன்னார்கள். ஆனால் டி.ஐ.ஜி. வன்சாரா கைது செய்யப்பட்டவுடனே இத்தகைய கொலைகள் நின்றுவிட்டன” என்கிறார் குஜராத்தின் முன்னாள் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார்.
“மோடியைக் சொல்லச் சதி என்ற நாடகம் ஏற்கனவே அரங்கேறிய பழைய நாடகம்தான். இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலையில் என்ன நடந்ததோ அதுதான் இதிலும் நடக்கிறது. மோடி கொலைச் சதியில் வழக்கறிஞர் காட்லிங்கை தொடர்புபடுத்துவதென்பது, தலித் மக்களின் போராட்டத்தை மாவோயிஸ்டு சதி என்று திசைதிருப்புவதற்கான திட்டமிட்ட முயற்சி” என்கிறார் ஆனந்த் தெல்தும்ப்டெ.
_________________________________________________________________
ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆத்திரம் வருவது ஏன்?
இலட்சக்கணக்கில் மக்கள் திரண்ட பீமா கோரேகான் வெற்றியின் 200 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் ஆத்திரத்தைக் கிளறியதில் வியப்பில்லை. ஆர்.எஸ்.எஸ் இன் மூதாதைகளான பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சியின் கீழ் தாங்கொணா சாதிய ஒடுக்குமுறையை சந்தித்து வந்த மகாராட்டிரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மகர் சாதியினர், கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின் சிப்பாய்களாக நின்று போரிட்டு, 1818 இல் பீமா கோரேகானில் பேஷ்வா படையினை முறியடித்தனர். அந்த வெற்றி கிழக்கிந்தியக் கம்பெனியின் வெற்றியாக இருந்த போதிலும், தங்களைக் கொடூரமாக ஒடுக்கி வந்த பேஷ்வாக்களுக்கு எதிரான அந்தப் போரை தமது சொந்தப் போராகவே கருதிப் போரிட்டனர், மகர் சிப்பாய்கள்.
அந்த வெற்றியின் நினைவாக ஆண்டுதோறும் நினைவுநாள் நடத்தப்படுவதும், அந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவதும் வழமையாக நடப்பதுதான். 2018 என்பது 200 ஆம் ஆண்டு என்பதால், எல்லா தலித் அமைப்பினரையும் ஒன்றுபடுத்தி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று அது நடத்தப்பட்டது. ஜிக்னேஷ் மேவானி போன்றோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியால் ஆத்திரமூட்டப்பட்ட இந்து வெறி அமைப்புகள், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். சரத் பவார் உள்ளிட்ட எல்லா கட்சியினரும் இதனைக் கண்டித்தனர்.

சமஸ்த இந்து அகாதி என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடே, சிவ் பிரதிஷ்டான் இந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான சம்பாஜி பிடே ஆகிய இருவர்தான் இந்த வன்முறையின் சூத்திரதாரிகள் என்று அம்பலமான பின்னரும், ஏக்போடேயை மட்டும் கைது செய்து உடனே பிணையில் விடுவித்தது மராத்திய அரசு. குற்றவாளிகளைக் கைது செய்ய மறுக்கும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் அமைப்புகள் அறைகூவலின் கீழ், ஜனவரி 4 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட மாநில பந்த் பெரும் வெற்றி பெற்றது.
இந்த அரசியல் எதிர்ப்புகளால் ஆத்திரம் கொண்ட பா.ஜ.க. அரசு, சுதிர் தவாலே மற்றும் பலர் மீது 153-ஏ (இரு வகுப்பினரிடையே மோதலைத் தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் மற்ற நான்கு பேரையும் இந்த வழக்கில் சேர்த்தது. ஏப்ரல் மாதம் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்த சோதனையில்தான், ரோனா வில்சனின் கணினியில் மாவோயிஸ்டு கட்சியினரின் கடிதத்தையும், அதில் மோடியைக் கொலை செய்வதற்கான சதியையும் ‘கண்டுபிடித்தது மகாராட்டிர போலீஸ்.
__________________________________________________________________
அது மட்டுமல்ல, போராடும் மக்கள் மற்றும் இயக்கங்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அறிவுத்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொலை செய்து அத்தகையவர்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்புவது அல்லது அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறை வைப்பது என்பதுதான் இந்துத்துவ பாசிஸ்டுகளின் முதன்மையான திட்டம்.
வழக்கறிஞர் காட்லிங்கின் கைதை எதிர்த்து நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறது. ஐ.ஏ.பி.எல். அமைப்பின் சார்பில் காட்லிங்கின் கைதைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் பல முன்னணி வழக்கறிஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இத்தகைய எதிர்ப்புகளும்கூட எழும்பாமல் நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனது ஊடகத்துறை வேட்டைநாயான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி.யை ஏவி விட்டிருக்கிறது பா.ஜ.க.
கடந்த ஜூலை 4 ஆம் தேதி ‘‘சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் பிரேக்கிங் நியூஸ்” என்ற பெயரில் ஒரு பொய்ச்செய்தியை பரப்பியது ரிபப்ளிக் டிவி. பி.யு.சி.எல். அமைப்பின் தேசியச் செயலர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு எழுதிய கடிதம் சிக்கி விட்டதாகவும், அதில் காஷ்மீரைப் போன்ற நிலையை உருவாக்க வேண்டுமென்று அவர் எழுதியிருப்பதாகவும், அவருக்கு மாவோயிஸ்டுகளிடமிருந்து பணம் வந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அச்செய்தி கூறியது.
சுதா பரத்வாஜைப் பற்றி மட்டுமல்ல, பி.யு.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் நிறுவனரான கவுதம் நவ்லகாவுக்கும் மாவோயிஸ்டு கட்சியுடன் தொடர்பு இருக்கிறது என்று அடுத்த புரளியை ரிபப்ளிக் டிவி கிளப்பியது. இவை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது பி.யு.சி.எல். அமைப்பு. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் மான நட்ட வழக்கு தொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார், சுதா பரத்வாஜ்.
எல்லா முனைகளிலும் தோற்று, மக்களின் வெறுப்பை மென்மேலும் ஈட்டி வரும் மோடி அரசு, கார்ப்பரேட் கொள்ளையையும் இந்துத்துவ பாசிசத்தையும் எதிர்க்கின்ற முன்னணியாளர்களைக் கொலை செய்வதன் மூலமும், பொய் வழக்குகளில் சிறை வைப்பதன் மூலமும், மக்களின் எதிர்ப்பை நீர்த்துப் போகவைக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. அதன் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை.
- சூரியன்
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com