தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி

சட்டங்களாலும், கலாச்சார ரீதியாகவும் RSS இந்துத்துவ கும்பல் மூலம் தொடரும் சைவ உணவு திணிப்பு. அறிவியலின் படி மனிதனின் பரிணாமத்திற்கு உதவியது சைவமா ? அசைவமா ?

மு.வி.நந்தினி

ரு தனிமனிதன் என்ன உண்ண வேண்டும் என தீர்மானிக்க நினைக்கிறது ஓர் அரசு. உலகின் எந்த ஒரு அரசும் செய்யாத திணிப்பை இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் அரசு ஊக்கப்படுத்தி வளர்க்கும் கும்பல் குண்டர்கள், அம்மக்கள் எதை உண்டுகொண்டிருக்கிறார்கள் என சதா கண்காணித்தபடியே இருக்கிறார்கள்.  மக்கள் உண்டது மாட்டிறைச்சியா, ஆட்டிறைச்சியா என குடலைக் கிழித்து பார்க்கவும் இந்த குண்டர்கள் தயங்குவதில்லை.

முன்பொரு காலத்தில் பசுக்களை இவர்களுக்கு கட்டளையிடும் கும்பல் தலைவர்கள் விரும்பி உண்டார்கள் என்கிற வரலாற்றை இவர்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. தினம் தினம் மனித உயிர்களை ‘அடித்துக்கொல், அடித்துக்கொல்’ என கிளம்பும் இவர்களுக்கு மட்டுமல்ல, அசைவம் உண்பதை வெளியே சொல்வது கூட கவுரவக் குறைச்சலை ஏற்படுத்தும் என நம்பிக்கொண்டிருக்கும் இந்தியாவின் 70 சதவீதம் பேருக்கும் வரலாற்று-அறிவியல் உண்மைகளை சொல்ல விரும்புகிறோம்.

சைவமா ? அசைவமா ?

சுமார் 2.6 மில்லியன் வருடங்களுக்கு முன், அதாவது மனிதர்களாக பரிணாமம் அடைவதற்கு முன் குரங்குகளாக திரிந்தபோது நம் மூதாதையரின் முக்கியமான உணவு, பூமிக்கடியிருந்து கிடைக்கும் கிழங்கு வகைகள். இந்த கிழங்கு வகைகளை (சமைக்கும் பழக்கமெல்லாம் பின்னாளில் வந்தது) மெல்லுவதற்கு அதிக நேரம் எடுத்தது. ஒரு நாளின் பெரும்பகுதியை மெல்லுவதற்காகவே இவர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவற்றை ஜீரணிக்கும் குடல் பகுதி பெரிதாக (தாவர உண்ணிகளின் குடல்பகுதி, விலங்கு உண்ணிகளின் குடல் பகுதியைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். தாவரங்களை எளிதில் ஜீரணிக்க முடியாது என்பதே காரணம்) இருந்தது. சிந்திப்பதற்கோ, செயலாற்றுவதற்கோ பெரும் வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவர்களின் மூளையும் சிறியதாகவே இருந்தது.

உணவு பற்றாக்குறையின் காரணமாக இறைச்சி உண்ணும் பழக்கம் அவர்களிடம் உண்டாகியிருக்கிறது. மனித பரிணாமத்தின் பாய்ச்சலை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. விலங்குகளின் இறைச்சியை வெட்டி உண்ண கற்றுக்கொள்கிறார்கள். வெட்டி உண்பதால் மெல்லும் நேரம் குறைகிறது. கிழங்கு, பழங்களைக் காட்டிலும் இறைச்சியின் மூலம் அவர்களுக்கு கூடுதல் சத்து கிடைக்கிறது. குறைந்தபட்ச இறைச்சிகூட ஒரு நாளுக்கு தேவையான கலோரிகளை தந்துவிடும் என்பதால் அவர்களுக்கு செயலாற்ற நேரம் அதிகம் கிடைத்தது. மெல்லுவது குறைந்ததால் தாடையின் அளவு சிறுத்தது. பேசுவதற்கான உறுப்புகள் உருவாக அது உதவியது.  2 மில்லியன் வருடங்களுக்கு முன், ஹோமோஏரக்டஸ் என்ற நம் மூதாதையரின் மூளை பெரிதாக வளர்ச்சியடைய கலோரிகள் மிக்க இறைச்சியும் எலும்பு மஜ்ஜையுமே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மற்ற உறுப்புகளைக் காட்டிலும் மூளையின் வளர்ச்சிக்கு கலோரிகள் நிறைந்த உணவு தேவை. அதை அமினோ அமிலங்களும் நுண் சத்துக்களும் நிறைந்த இறைச்சி கொடுத்ததாலேயே ஹோமோஎரக்டஸின் மூளை சிறப்பான, முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியை எட்டியது என்கிறார்கள்.

Homo erectus
ஹோமோஎரக்டஸ்

அப்படியேனில் நாம் மனிதர்களாக பரிமாணம் அடைந்தது முதல், இறைச்சியை மட்டும்தான் உண்டோமா என்றால் இல்லை. எல்லா நேரங்களிலும் வேட்டையாடுதல் சாத்தியமில்லை. இறைச்சி கிடைக்காதபோது, பழங்களும் கொட்டைகளும் கிழங்குகளும் உணவாகின.  வேட்டையாடிகளாகவும் உணவுகளை சேகரிப்பவர்களாகவும் இருந்த மனிதர்கள் மிக சமீபத்தில்தான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வேளாண்மையை தொடங்கினார்கள். தானியங்களை இனம்கண்டு பயிரிட்டு உண்ண கற்றுக்கொண்டார்கள். மனிதர்களின் வாழ்வியலை மாற்றியமைக்க இவை அனைத்துமே உதவியிருக்கின்றன.

பின், ஏன் நாம் பொதுவெளியில் நான் அசைவம் உண்பேன் என்பதை சொல்லிக்கொள்ளக்கூட கூச்சப்படுகிறோம்? உலகின் மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் ஏன் உணவின் மூலமாக தாழ்ந்தவர் – உயர்வானவர் என கருதும் பழக்கம் இருக்கிறது? மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விரும்பி உண்ணும், சமைக்கும்  டேவிட் ராக்கோ போன்ற உலகப் புகழ் பெற்ற சமையல் கலைஞர்கள் தென்னிந்தியர்களின் உணவு இட்லியும் சாம்பாரும்தான் என ஏன் சொல்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் முன், டேவிட் ராக்கோவுக்கு நடிகர் மோகன்ராமின் மகள் விதுலேகா சொல்லிக்கொடுத்த தென்னிந்திய சமையல் பற்றி பார்ப்போம்.

பல ஆங்கில லைஃப் ஸ்டைல் சேனல்கள் தமிழ் பேசுகின்றன. சதா சாம்பாரும் காரக்குழம்பும் வைக்கக் கற்றுத்தரும் தமிழ் சேனல்கள் போல் அல்லாமல் உவ்வே என ஒதுக்கித்தள்ளும் இறைச்சி ரெசிபிகளை நாள்முழுவதும் இந்தச் சேனல்களில் காண முடியும். மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொல்லும் இந்த நாட்டில் எப்படி மாட்டிறைச்சி சமையல் குறிப்புகள் வீடு தேடி வர அனுமதிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமூட்டுகிறது. விஷயத்துக்கு வருவோம்.

இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற செஃப்பான டேவிட் ராக்கோ இந்தியாவின் சமையல் வரலாற்றை உலகுக்கு தெரியப்படுத்தும் ஒரு தொடர் நிகழ்ச்சியை செய்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, சென்னை மயிலாப்பூர் மார்க்கெட்டில் வந்து இறங்குகிறார். டேவிட்டை வரவேற்கும் விதுலேகாவிடம் எனக்காக என்ன இறைச்சி சமைக்கப் போகிறீர்கள் என கேட்கிறார். பதற்றத்தோடு விதுலேகா, நாங்களேல்லாம் ப்யூர் வெஜிடேரியன்ஸ், இங்கே வெஜிடேரியன் உணவு மட்டும்தான் கிடைக்கும் என்கிறார்.

இட்லி-தோசை-சாம்பார் ஆகியவைதான் ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் உணவாக உலகின் முன் கட்டமைக்கப்பட்டு விடுகிறது. டேவிட் ராக்கோவுக்கு விதுலேகா தென்னிந்தியர்களின் உணவு கலாச்சாரத்தை சொல்லும் பிரதிநிதியாக உள்ளார். ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன பனியாக்களின் கலாச்சாரமே ஒட்டுமொத்த கலாச்சாரம்; அவர்களின் உணவே இந்தியர்களின் உணவு. ஆக, அனைத்தையும் பார்ப்பனியமே தீர்மானிக்கிறது.

சைவ உணவு திணிப்பு
உலகின் முன் கட்டமைக்கப்படும் தென்னிந்திய மக்களின் உணவு கலாச்சாரம் இட்லி-தோசை-சாம்பார்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியர்களின் உணவு பழக்கத்தில் பார்ப்பன பனியா கூட்டம் தன்னுடைய ஊடக-அரசியல்-ஆட்சி பலத்தின் காரணமாக தாக்கம் செலுத்தி வருகிறது. ஊடகங்களில் சைவ உணவு குறிப்புடன், அசைவ உணவுக் குறிப்பு வந்துவிட்டால் கடிதம் எழுதி சண்டை போடும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி சமையல் குறிப்பு எந்தவொரு தமிழ் வெகுஜன ஊடகத்திலும் இதுவரையிலும் வந்ததில்லை.  இதுவும் ஒருவகை தீண்டாமைதான். நம்மால் கண்டுகொள்ளப்படாத தீண்டாமை.

பெரும்பான்மை சமூகத்தில் சைவமே சிறந்தது என்கிற கருத்தை விதைக்க பார்ப்பன-பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் பெரும்பாங்காற்றுகின்றன.  சிறு தெய்வ வழிபாட்டில் ஆடு, கோழி, பன்றியை பலியிடுதல் முக்கியமான சடங்கு. அதை ஒழிக்க சிறு தெய்வங்களை பார்ப்பனமயப்படுத்தினார்கள். கடந்த இருபதாண்டுகளில் வெகுமக்களிடம் பக்தி என்கிற பெயரில் இந்துத்துவத்தை இந்த ஊடகங்கள் பரப்பின; பரப்பிவருகின்றன. பள்ளிக்கு அசைவ உணவு எடுத்துச் செல்வது தடை செய்யப்படும் அளவுக்கு சமூகத்தில் அசைவத்தின் மீதான அசூயை பரப்பப்பட்டுவிட்டது.

ஊட்டச்சத்து குறைபாடு
விட்டமின் பி12 நிறைந்த இறைச்சியை அந்நியமாக்கும் பார்ப்பனியம்

உணவு மீதான தீண்டாமை என நாம் எதிர்க்க காரணமிருந்தாலும், ஒரு சமூகத்தையே நோஞ்சாண் ஆக்கும் உணவின் மூலம் செலுத்தும் வன்முறையை நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும். வாரத்தின் ஒரு நாள் அல்லது இரு நாள் இறைச்சி உண்பது வளரும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்குமேகூட போதுமான சத்தை வழங்காது.

இந்தியர்களின் சத்து குறைபாடு தொடர்பாக வெளிவரும் அத்தனை ஆய்வுகளிலும் விட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைபாடு பிரதானமாக உள்ளதை பார்க்க முடிகிறது. விட்டமின் பி12 இறைச்சியில் மட்டுமே உள்ளது. இரத்த சோகையை தடுக்கவும் நரம்பு மற்றும் இரத்த அணுக்களின் செயல்பாட்டுக்கும் இது முக்கியமானது. சத்து மாத்திரைகள் பின் விளைவுகளை தருமே தவிர, சத்தை தராது. சத்து தரும் இறைச்சி ஒதுக்கப்பட்டுவிடுகிறது.

மாட்டிறைச்சி தடை
மாட்டிறைச்சி

ஹீமோகுளோபின் மற்றும் மைலோகுளோபின் என்ற இரண்டு அத்தியாவசிய புரதங்களை உடலில் உற்பத்தி செய்ய இரும்பு சத்து உதவுகிறது. காய்கறிகளில் உள்ள இரும்பு சத்து, ஹீமோகுளோபின் புரதத்தை உற்பத்தி செய்ய உதவுவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீனில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது என பரிந்துரைக்கிறார்கள். மாதவிடாய் காரணமாக அதிக ரத்த இழப்பை சந்திக்கும் பெண்கள் இரும்பு சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆடி, ஆமாவாசை, புரட்டாசி, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை  என காரணம் சொல்லும் விரதம் என்னும் பெயரில் பெண்களை நோஞ்சான் ஆக்குகிறது பார்ப்பன மதம்.

சமணர்களிடமிருந்து சுவீகரித்துக்கொண்ட புலால் உண்ணாமையை பார்ப்பன இந்துமதம், அதை ஒற்றை உணவு பழக்கமாக பெரும்பான்மை சமூகத்தின் மீது திணித்துக்கொண்டிருக்கிறது. இறைச்சி மீதான சுயதடையை செய்துகொள்ள சமூகத்தை அது பழக்கிக்கொண்டிருக்கிறது. சக மனிதர்கள் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்படும்போது இதே மனத் தடையுடன் சமூகம் தள்ளி நின்று பார்க்கிறது.  விலங்கிலிருந்து பகுத்தறிவு பெற்ற மனிதன் மீண்டும் விலங்காக மாறுவது இங்கிருந்து தொடங்குகிறது. உண்மையில் இது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்று

– மு.வி.நந்தினி.

கட்டுரை ஆதாரங்கள்:
Sorry Vegans: Here’s How Meat-Eating Made Us Human
The Evolution of Diet
Evidence for Meat-Eating by Early Humans

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.