ர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் 207 பேரில் மாரிச்சாமி என்ற மாணவர் மட்டுமே மதுரையில் உள்ள அய்யப்பன் கோயில் ஒன்றில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இந்தக் கோயில் ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட கோயில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சியுள்ள மாணவர்கள் அனைவரையும் ஆகம விதிப்படி அமைந்த கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்று அர்ச்சக மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க மறுக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு அதிர்ச்சியூட்டும் செய்தி டி.என்.ஏ இணைய நாளிதழில் இன்று(06-08-2018) வெளியாகியிருக்கிறது.

பயிற்சி பெற்ற “சூத்திர, தலித்” சாதிகளைச் சேர்ந்த அர்ச்சக மாணவர்கள் தெருவில் நின்று கொண்டிருக்க, பார்ப்பனர்களுக்கு மட்டும் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கும் 3 பாடசாலைகளை இந்து அறநிலையத்துறையே நடத்திக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட   அனைத்து சாதி மாணவர்களுக்குமான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை அப்படியே சீரழிய விட்டுவிட்டு, சென்ற ஆண்டு முதல் இந்த 3 பயிற்சிப்பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

மயிலை கபாலீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில் ஆகிய மூன்று கோயில்களில், இவை இயங்குகின்றன. மயிலையில் 13 பேர், திருவரங்கத்தில் 17 பேர், திருவல்லிக்கேணியில் 30 பேர் பயில்கின்றனர்.

கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து சாதியினருக்குமான பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் குருகுல முறையில் அங்கேயே தங்கிப் படிக்கவேண்டும் என்றும், மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு சென்று வரலாம் என்றும் விதிக்கப்பட்டிருந்தது. அது ஒரு ஆண்டு பயிற்சித் திட்டம்.

பேருந்து நிலைய கழிவறையைவிட மோசமான நிலையில் கலைஞர் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்

இந்த 3 பள்ளிகளிலும் நடப்பது 3 ஆண்டு பயிற்சித் திட்டம். இங்கே குருகுலக் கட்டுப்பாடு கிடையாது என்பது மட்டுமல்ல, இங்கே பயிலும் பார்ப்பன மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில்  படித்துக் கொண்டே, பகுதி நேரமாக இங்கே படிப்பதற்கும் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, 13 வயது முதல் 20 வயது வரை உள்ள, 8 ஆம் வகுப்பு தேறிய தகுதியான இந்துக்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று 2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பார்த்த சாரதி கோயில் பள்ளியில் படிக்கும் 45 மாணவர்களில் 30 பேர் ஏற்கனவே அர்ச்சகர்களாக பணி செய்பவர்கள். சுமார் 45 வயது வரை உள்ளவர்கள்.

“எல்லா மாணவர்களும் பார்ப்பனர்களாகவே இருப்பது எப்படி?” என்று பார்த்தசாரதி கோயிலின் துணை ஆணையர் ஜோதிலட்சுமியை டி.ஏன்.ஏ செய்தியாளர் ஜெகந்நாத் கேட்டிருக்கிறார். இது அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பள்ளி அல்ல என்றும் இது வேதாகம பாடசாலை என்றும் அவர் பதிலளித்திருக்கிறார்.

சங்கர மடமும் வேறு பல அறக்கட்டளைகளும் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டுமான வேதாகம பாடசாலைகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றன. அவற்றுக்கு மாற்றாகத்தான் அனைத்து சாதியினருக்கான அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்போது அதனை ஒழித்துக் கட்டிவிட்டு, சங்கர மடம் செய்யும் வேலையை தமிழக அரசே செய்யத் தொடங்கியுள்ளது.

பார்ப்பனர்களை மட்டும் அர்ச்சகர்களாக்கும் விதத்தில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இதற்கான அரசாணை இரகசியமாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான பார்ப்பன சதி என்பது மட்டுமல்ல, அர்ச்சகர் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகளுக்கும் கூட எதிரானது. இது வெளிப்படையான தீண்டாமைக் குற்றம்.

தகுதியான பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி நியமனம் கொடுக்க மறுப்பது மட்டுமின்றி, பார்ப்பனர்களை மட்டும் அர்ச்சகர்களாக்குவதற்காக அரசே தனிப்பள்ளி நடத்துவதைக் காட்டிலும் பெரியாரை இழிவு படுத்தும் செயல் வேறொன்று இல்லை.

இந்த 3 பள்ளிகளும் உடனே மூடப்படவேண்டும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 மாணவர்களை உடனே அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

மருதையன், பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.