முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால்  சரி செய்ய முடியுமா? ஒரு தனிப்பட்ட முதலாளி புதிய புராஜக்டில் முதலீடு செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை அதில் லாபம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்துதான் முடிவு செய்வார். வேலை வாய்ப்பை உருவாக்கவோ, பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்கவோ ஏற்ற வகையில் முதலீட்டை லாப நோக்கமில்லாத அரசு/பொதுத்துறைதான் செய்ய முடியும் என்பது சீன முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை என்கிறது இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையின் பின்னூட்டங்களில் சீன பொருளாதாரம் பற்றியும், சீன அரசின் தன்மை பற்றியும் பல விபரங்கள், கருத்துக்கள் பேசப்படுகின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை சமாளிக்க சீனா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியா போன்ற நாடுகளில் செல்லுபடியாகுமா என்பதை பார்ப்பதற்கு மேலே சொன்ன பின்னூட்டங்களில் கிடைக்கும்  ஒரு சில தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள  வேண்டும்.

  1. சீனாவில் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம். தனிநபர்கள், நிறுவனங்கள் 70 ஆண்டு குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். எனவே, நிலத்தை வைத்து சூதாட்டம் ஆடுவது, வங்கியில் கடன் வாங்கி ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துவது போன்றவற்றுக்கான சாத்தியங்கள் குறைவு.
  2. சீனாவில் தனியார், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு அனுமதிக்கப்பட்டு விட்ட பிறகும் இன்னும் அரசுத் துறை (பொதுத்துறை நிறுவனங்கள்) பெரும்பான்மையாக உள்ளன. எனவே, வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும், பொருளாதாரத்தை தூண்டி விடுவதற்கும் சாதகமாக பொருளாதாரத்தை நிர்வகிப்பது சீன அரசுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக உள்ளது. இருப்பினும், இந்த நிலைமை வெகு வேகமாக மாறி வருகிறது.

இனிமேல், கட்டுரையை படியுங்கள்.

சீனாவின், “கீனிசிய” கொள்கைகள் (China’s ‘Keynesian’ policies – ஆகஸ்ட் 6, 2018)

டொனால்ட் டிரம்ப் சீன ஏற்றுமதிகள் மீது வரி விதித்து தொடுத்த வர்த்தகப் போருக்கு பதிலடியாக சீனா அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மீன், சோயாபீன் போன்ற உணவு பொருட்கள் மீது இறக்குமதி வரி விதித்துள்ளது.

மேலும் சீன அரசு சீன நாணயமான யுவானின் டாலருக்கு எதிரான மதிப்பை குறைய அனுமதித்தது. இதன் மூலம் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் டாலர் விலை டாலர் விலை குறைந்து அவற்றின் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பை கணிசமான அளவு சரி செய்து விடுகிறது. மேலும், இது சீனாவுக்குள் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களின் சீன விலையையும் அதிகரித்து விடுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து வர்த்தக போரில் டிரம்பின் தாக்குதலை முனை மழுங்கச் செய்து, தனக்கு சாதகமான வர்த்த சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது, சீனா.

மேலே சொன்ன இரண்டு நடவடிக்கைகளுக்கும் மேலாக மூன்றாவது ஒரு திட்டத்தையும் சீன அரசு மேற்கொண்டிருக்கிறது. மேலே சொன்ன பதிலடிகளையும் தாண்டி ஏற்றுமதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிக் கட்டுவதற்காக உள்நாட்டு வேண்டலை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கட்டுமான திட்டங்களில் பொதுத்துறை முதலீட்டை திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது.

2008-09-ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பெரும் தேக்கத்தின் தாக்கத்திலிருந்து சீன பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சீன அரசு இது போன்று உள்கட்டுமானங்கள் மூதான முதலீடுகளை அதிகரித்தது எதிர்பார்த்த பலனை அளித்தது. அதாவது, அனைத்து முக்கியமான முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், முதலீடும் குறைந்து போன காலகட்டத்தில், சீன பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. 2009-ல் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4% வீழ்ச்சியடைந்த போது, சீனாவின் வளர்ச்சி 9.1% ஆக இருந்தது. அந்த ஆண்டில் வளர்ச்சி கண்ட ஒரே முதலாளித்துவ நாடு ஆஸ்திரேலியா. வேகமான வளர்ச்சி வீதத்தை பராமரித்த சீனாவுக்கு கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம்தான்அந்நாடு தனது வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது .

இதன் அடிப்படையில், முன்னணி பிரிட்டிஷ் கீனிசிய பொருளாதார அறிஞரும், வலைப்பதிவருமான சைமன் ரென்-லூயிஸ் பொருளாதார பெரும் தேக்கத்தில் சீனப் பொருளாதாரம் சிக்காமல் தப்பித்ததற்குக் காரணமாக இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறார்.

  1. பெரிய முதலாளித்துவ நாடுகளில் பெரும் தேக்கத்துக்கும், அதைத் தொடர்ந்த பலவீனமான பொருளாதார மீட்சிக்கும் காரணமாக இருந்தது அரசுகளின் செலவுகளை வெட்டும் சிக்கன நடவடிக்கைகள்தான்.
  2. மாறாக, சீன அரசு செலவுகளை அதிகரித்து பற்றாக்குறை பட்ஜெட் போட்டது சீன பொருளாதாரம் தேக்கமடையாமல் தவிர்ப்பதை சாத்தியமாக்கியது.

இது எந்த அளவு உண்மை என்று பார்க்கலாம். 2008—09ல் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனியார் முதலீடும், உற்பத்தியும் பெருமளவு வீழ்ச்சியடைந்த நிலையில் அரசு செலவினங்களை வெட்டியது நிலைமையை மேலும் மோசமாக்கியது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட ‘சிக்கன நடவடிக்கை’ ஒரு தவறான கொள்கைதான்.

ஆனால், நான் முந்தைய பல கட்டுரைகளில் விளக்கியது போன்று கீனிசியர்கள் கருதுவது போல ‘சிக்கன நடவடிக்கை’ என்பது ஏதோ  முதலாளித்துக்கு கிறுக்கு பிடித்ததால்  நடப்பது இல்லை. அதற்கு ஒரு தர்க்க அடிப்படை உள்ளது : தனியார் லாபவீதம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு செலவுகளை குறைக்க வேண்டும். அதற்கு தனியார் நிறுவனங்கள் மீது வரிவிதிப்பை குறைப்பது ஒரு நடவடிக்கையாகும். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட பொது செலவினங்களையும் அரசு முதலீட்டையும் வெட்ட வேண்டும். இப்படி செய்வது  வரி விதிப்பை அதிகரித்தோ, துண்டு  பட்ஜெட் அடிப்படையிலோ செலவினங்களை அதிகரிப்பதை விட மூலதனத்துக்கு மிக உகந்தது. வரியை வெட்டி விட்டு செலவுகளை குறைக்கா விட்டால், அதை ஈடு கட்ட வாங்கும் கடனை பிற்காலத்தில் சமாளிக்க  வேண்டியிருக்கும்.

அரசு செலவுகளை அதிகரிப்பதன் மூலம் மூலம் பொருளாதாரத்தை தேக்கத்திலிருந்து மீட்க முடியுமா, முடியாதா?

இது பற்றி ரென் லூயிஸ் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

“இந்த கீனீசிய கோட்பாட்டு சரியானது என்பதற்கு சீனா ஒரு சிறந்த நடைமுறை உதாரணம். இதனால் நிதி பேரழிவு நடக்கும் என்று சாபம் விட்ட புலவர்கள் எங்கே போனார்கள்? ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் ஒரு சிறிய அளவு நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், இந்த நெருக்கடிக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு செய்த செலவுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்ல முடியாது. மேலும், இந்த இப்போதைய இந்த நெருக்கடி சீன பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அத்தகைய பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசு செலவுகள், எதிர்கால தலைமுறை மீது மிகப்பெரிய சுமையைப் ஏற்றி விடுமே என்று கேட்கலாம். சீனாவின் அத்தகைய திட்டதிதன் பலனாக உயர் வேக ரயில் வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாடு ரயில்வே கட்டுமானத்தில் உலக அளவில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.”

அதாவது, எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்க்கும் போது சீனா கீனீசிய கொள்கைகளை நடைமுறையில் நிரூபித்து காட்டியிருக்கிறது என்கிறார் ரென் லூயிஸ்.

ஆனால், சீனா பின்பற்றியது உண்மையிலேயே கீனீசிய கொள்கைகள்தானா? கறாராக சொல்வதென்றால், ஒரு கீனீசிய அரசு, பள்ளம் தோண்டி மீண்டும் நிரப்புவது போன்ற அபத்தமான செயல்பாடுகள் உள்ளிட்டு [100 நாள் வேலைத் திட்டம் நினைவுக்கு வருகிறதா] ஏதாவது ஒரு வகையில் தனது செலவினங்களை அதிகரிக்க வேண்டும். அதனால் தூண்டி விடப்படும் சந்தை வேண்டல் அதிகரிப்பின் மூலம் தனியார் முதலீட்டையும்  குடும்பங்களின் நுகர்வையும் தூண்டி விட வேண்டும்.  [அதாவது மயிரைக் கட்டி மலையை இழுக்க வேண்டும், இதற்கு மேல் அரசு எதையும் செய்வது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைக்கு நேர் விரோதமானது]

இதற்கு மேலும் பொருளாதாரம் பிக் அப் ஆகவில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் கடைசி தீர்வாக ‘முதலீட்டை சமூக மயமாக்க வேண்டும்‘ என்று கீன்ஸ் சொன்னது என்பது உண்மைதான்.

ஆனால், கீனீசிய கோட்பாட்டை கடைப்பிடித்த எந்த அரசும் முதலீட்டை சமூக மயமாக்குவதை ஒருபோதும் அமல்படுத்தியதில்லை [அதன் பெயர் சோசலிசம்]. அதன் பொருள் தனியார் முதலீட்டை தேசிய மயமாக்குவது ஆகும். உண்மையில், ரென் லூயிஸ் போன்றவர்கள் முதலீட்டை தேசியமயமாக்குவது, அல்லது சமூகமயமாக்குவது பற்றி தப்பித்தவறிக் கூட பேசுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கீனீசிய கொள்கை என்பது சந்தை ‘தேவையை தூண்டுவதற்கான’ அரசு செலவின அதிகரிப்புதான். [அதன் மூலம் தனியார் முதலீட்டை தூண்டி விட வேண்டும்].

ஆனால், பொருளாதார பெரும் தேக்கத்தின் போது சீனா பின்பற்றிய கொள்கை வெறும் கீனீசிய ‘நிதித் தூண்டுதல்’ இல்லை.  சீன அரசு பொருளாதாரத்தில் நேரடியாக முதலீடு செய்து உள்கட்டுமானத்தை உருவாக்கியது. அதாவது, அது ‘சமூகமயமாக்கப்பட்ட முதலீடு’.  சீனாவின் பொருளாதார மீட்பு கொள்கை நுகர்வை அதிகரிப்பதையோ, ஏதோ ஒரு வகையில் அரசு செலவை அதிகரிப்பதையோ அடிப்படையாகக் கொண்டது கிடையாது. அது ஒரு நிலையான சொத்துக்களை உருவாக்கும் முதலீடு ஆகும்.

உண்மையில் பார்க்கப் போனால் அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் குடும்பங்களின் நுகர்வு குறைபாட்டாலோ, அரசின் ‘சிக்கன நடவடிக்கைகளாலோ’ ஏற்படவில்லை, தனியார் முதலீட்டின் வீழ்ச்சியால் ஆரம்பித்தது; அதன் தேக்கத்தால் தொடர்ந்தது. ஐரோப்பாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு முழுவதும் நிலை முதலீட்டு வீழ்ச்சியினால் ஏற்பட்டது.

ஜான் ராஸ் அந்த நேரத்தில் தனது வலைப்பதிவில் சொன்னது போல, “சீனா உண்மையில் அமெரிக்காவின் நேரெதிர் உதாரணமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பெரும் தேக்கம் நிலை முதலீட்டின் வேகமான சரிவால் ஏற்பட்டது என்றால், சீனா தேக்கத்தை தவிர்த்ததும் அதன் வேகமான பொருளாதார வளர்ச்சியும் நிலை மூலதன வளர்ச்சியால் சாத்தியமானது. இந்த  வெளிப்படையான வேறுபாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க பொருளாதாரமும், சீன பொருளாதாரமும் எப்படி வெவ்வேறு திசையில் பயணித்தன என்பதை  தெளிவாக புரிந்து கொள்ளலாம்”

கீனீசிய கொள்கைகளை பின்பற்றியிருந்தால் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்றும், பெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகளின் “சிந்தனை தேக்கம்தான்” கீனீசிய கொள்கைகளை புறக்கணித்து சிக்கன நடவடிக்கையில் கொண்டு போய் அவற்றை தள்ளியது என்றும் சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை?

பெரிய முதலாளித்துவ நாட்டு அரசுகள் சீனாவின் முன்னுதாரணத்தை பின்பற்றாமல் இருந்ததற்கு ஒரு காரணம் அவை சித்தாந்த ரீதியாக அரசு முதலீட்டை எதிர்க்கின்றன உண்மைதான். உண்மையில், ‘சிக்கன’ நடவடிக்கையின் முதல் இலக்காக அவர்கள் வெட்டியது பொதுத்துறை முதலீடுகளைத்தான். அதுதான் செலவுகளை குறைப்பதற்கான மிக விரைவான வழியாக கருதப்பட்டது.

ஆனால், முக்கியமான பிரச்சனை சித்தாந்த கண்ணோட்டமோ, “சிந்தனை தேக்கமோ” இல்லை. கீனீசிய மீட்பு கொள்கைகள் அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில் செல்லுபடியாவதில்லை என்பதுதான் விஷயம். தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும், ஏற்கனவே முதலீட்டிற்கான லாபவீதம் குறைவாக இருப்பதால் முதலீடுகள் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தில்  கீனீசிய கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகள்  எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.  ஏனென்றால், முன்னேறிய முதலாளித்துவ பொருளாதார நாடுகளில் அரசு முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற அளவிலும் தனியார் முதலாளித்துவ முதலீடு 15%+ ஆகவும் உள்ளது

இந்நிலையில், அரசு முதலீடு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் பொதுத்துறையின் பங்கு பெருமளவு அதிகரிக்கப்பட வேண்டும். குறைந்த வட்டி வீதங்கள் மூலமும், நலத்திட்ட செலவினங்கள் மூலமும் தனியார் முதலீட்டை ‘தூண்டி’ விடுவது மட்டும் போதாது. அதாவது தனியார் முதலீட்டுக்கு பதிலாக ‘சமூகமயமாக்கப்பட்ட’ முதலீடு செய்யப்பட வேண்டும்.

மேற்கத்திய நாடுகளின் வரலாற்றில் அது தற்காலிகமாகக் கூட நடந்தது 1940-45 போன்ற போர்க்காலங்களில் மட்டுமே. [அதாவது முதலாளித்துவ அரசுகள் நேரடி முதலீடு செய்வது கொலைத் தொழிலில் மட்டும்தான்].

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் முதலாளிகள்தான் முதலீடு தொடர்பானதும் வேலை வாய்ப்பு தொடர்பானதும் ஆன முடிவுகளை எடுத்தனர். அவர்கள் அந்த முடிவுகளை எடுத்தது, லாபத்தின் அடிப்படையில். பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் இல்லை. எனவே, அரசு பண அளவை அதிகரித்தாலும், நிதித்துறையை ஊதிப் பெருக்கினாலும் அது தனியார் முதலீட்டை குறிப்பிட்ட அளவுக்கு தூண்டி விட முடியவில்லை. [அத்தகைய நிதி ஊக வணிகத்திலும், ரியல் எஸ்டேட் சூதாட்டத்திலும் பாய்ந்தது, உண்மையான பொருளாதாரத்தில் சொத்துக்களை உருவாக்கவில்லை]

இதற்கு முற்றிலும் மாறாக, சீனாவில் அரசே நேரடியாக முதலீடு செய்வதன் மூலமும், பொதுத்துறை வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களை அதிகரிப்பதன் மூலமும் நிலை மூலதனம் வெகு வேகமாக அதிகரித்தது.

இது 2008-09 பொருளாதார பெரும் தேக்கத்தின் போது நடந்தது.

இப்போது தனியார் முதலாளித்துவ நாடுகளில் கீனீசிய நடவடிக்கைகளுக்கும், சீனாவின் அரசின் கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டுக்கும் இடையேயான வேறுபாடு மீண்டும் ஒருமுறை பரிசீலனைக்கு உள்ளாக போகிறது. பெரும்பாலான முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் டிரம்பின் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதன் பொருளாதார வளர்ச்சி வீதம் குறையப் போகிறது என்றும் கணித்திருக்கின்றனர். உண்மையில் சீனாவில்  கடன் மலையால் தூண்டப்படும் ஒரு மிகப்பெரிய நெருக்கடிக்கான அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சீன அரசு ஏற்கனவே இதை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. சாதாரண பற்றாக்குறை பட்ஜெட்டுடன் (நிதி ‘தூண்டுதல்’) கூடவே, அரசு நேரடியாக முதலீட்டு திட்டங்களுக்கு நிதி அளிப்பதன் மூலமும் முதலீடு தூண்டப்படுகிறது.

அரசு முதலீட்டுக்கான நிதியில் பெரும்பகுதி உள்ளூராட்சி அமைப்புகள் நிலத்தை விற்பதன் மூலம் திரட்டப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகள், நிதி பத்திரங்கள் மூலம் நிலத்தை கட்டுமான நிறுவனங்களுக்கு விற்று, சாலைகள், வீடுகள், நகரங்களை கட்ட வைக்கின்றன. மத்திய அரசின் நேரடி நிதியும் அளிக்கப்படுகிறது. (80%)

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் ஏற்றுமதிகள் குறைந்தால் இத்தகைய நிதி உதவியும், முதலீட்டு திட்டங்களும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். பெரிய முதலாளித்துவ பொருளாதாரங்கள் தத்தளிக்கும் நேரத்தில் அரசு முதலீடு சீன பொருளாதாரத்தை தொடர்ந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆங்கில மூலம் : (China’s ‘Keynesian’ policies – ஆகஸ்ட் 6, 2018), மைக்கேல் ராபர்ட்ஸ் நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

8 மறுமொழிகள்

  1. என் போன்ற எளியோருக்கும் புரியும் விதத்தில் எழுதப் பட்டு இருக்கிறது. சற்று தெளிவு கிடைக்கிறது. முக்கியமாக “இதற்கு மேலும் பொருளாதாரம் பிக் அப் ஆகவில்லை என்றால், வேறு வழியே இல்லாமல் கடைசி தீர்வாக ‘முதலீட்டை சமூக மயமாக்க வேண்டும்‘ என்று கீன்ஸ் சொன்னது என்பது உண்மைதான்.” என்னும் விவரம் கூடுதல் தெளிவைத் தருகிறது.

    சிறு முதலாளிகளை விட பெரு முதலாளிகள் தாக்குப் பிடிப்பதற்கான காரணம் ஒரு பக்கம் கிடைக்கும் லாபத்தால் மற்றொரு நஷ்டத்தை சமாளிக்க வாய்ப்பு உள்ளதாலும் அதுவும் முடியாவிட்டால் வங்கிப் பணத்தை அள்ளிக் கொள்வதாலும் தான். சமூதாய மூலதனம் என்பது பெருமுதலாளியை விடப் பெரும் மூலதனம் என்பதாலும் அதற்கு லாப நோக்கம் இல்லை என்பதாலும் எந்தச் சூழலிலும் தாக்குப் பிடிக்கும் என்பது சரிதானே.

    “அதாவது முதலாளித்துவ அரசுகள் நேரடி முதலீடு செய்வது கொலைத் தொழிலில் மட்டும்தான்” என்னும் உண்மையும் நன்றாக உறைக்கிறது.

  2. ”வினவு” வை நான் விரும்பி படிப்பவந்தான். ஆனால் உள் நாட்டு அரசியலில்தான் உங்கள் தெளிவு தெரிகிறது. மற்றபடி, ”வினவு” சீனாவின் கூஜா என்று இது போன்ற கட்டுரைகள் மூலம் தெரிகிறது. மேற்கத்திய மற்றும் ஜப்பான், கொரிய நாட்டு தொழில் நுட்பங்களையும், விஞ்ஞான ரகசியங்களை திருடியே முன்னுக்கு வந்த நாடு உங்களின் எஜமான நாடு சீனா.

    அமெரிக்காவை திட்டுவதே “வினவு” ன் தலையாய கொள்கை என்று தெரிகிறது. இனி வினவு படிப்பதை நிறுத்தி விடுகிறேன்

    • அது சரி மாமு,

      ஏற்கனவே வினவை எதுக்கு விரும்பி படிச்சேள்னு தெரிஞ்சுக்கலாமா ?

      நீ இந்தக் கட்டுரைய படிக்கல தலைப்ப மட்டும்தான் படிச்சிருக்கன்னு தெரியுது மாமு.. பட் மேல ஜெகதீசன் போட்டிருக்க கமெண்டையாவது படிச்சிருக்கலாமே , கமெண்ட் பண்ரதுக்கு முன்னாடி ..

      இப்படி வசமா சிக்கீட்டியே சிக்கந்தா ?

  3. வினவில் நிறைய பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வெகுமக்களை அரசியல்படுத்துவது போன்று சகலருக்கும் பொருளாதார அறிவு வளர வினவு எளிமையாக கற்பிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

    • நிச்சயம் செய்கிறோம். குறிப்பான கேள்விகள், சந்தேகங்கள் மடலில் அனுப்பவும். நன்றி

  4. வினவு கூட்டங்களின் சீனா பாசம் புல்லரிக்கிறது… பேசாமல் நீஙகள் எல்லாம் சீனாவிற்கே போய்விடலாம் குறைந்தபட்சம் சீனாவிற்காவுது நீஙகள் விசுவாசமாக இருப்பீர்கள்.

    • அம்பி காலையிலேயே ஷுப்ரபாதத்தை ஆரம்பிச்சிட்டேளா! அமெரிக்கா கிறிஸ்டீன் மதக்காரன், சீனா கம்யூனிஸ்ட்டுகாரன், ரெண்டு காரனும் அடிச்சுண்டதைப் பத்தி எழுறாள். இதுல நீர் சீனாவை எதித்தீர்னா கிரித்தவ கைக்கூலின்னு நாலுபேரு சொல்லமாட்டாள? என்ன காரியாலத்துல சிந்தன் பைடக்ல என்ன சொல்லிக் கொடுத்தாள்! வர வர பேட்டாவுல இருக்குற அட்டாச்மெண்ட், எழுதுற விசயத்துல இருக்கறதில்லே!

    • என்னாது புல்லு அரிக்கிதா ?

      மணிகொண்டா … கட்டுரையை படிச்சியா அம்பி ? இல்ல தலைப்பை மட்டும் பாத்தியா ?

Leave a Reply to ஜெகதீசன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க