தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் தி.மு.க. சார்பாக வருகிற 30-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அ.தி.மு.க. தவிர்த்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது தி.மு.க. முக்கியமாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா வரலாம் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.தி.மு.க.வின் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்தது. தற்போது அமித்ஷாவிற்கு பதில் நிதின் கட்காரி வருவார் எனத் தெரிகிறது.இந்த சூழலில் தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 28.08.2018 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க.வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலின், “மாநில உரிமைகளை பறிக்கும், மதவாதத்தை பரப்பும் காவி அரசையும், சுயமரியாதை என்னும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும் தூக்கி எறிய வேண்டும்”  என்று பேசினார்.ஒரு பக்கம் எதிர்ப்பு… மற்றொரு பக்கம் அழைப்பு…. இதனை எப்படி எடுத்துகொள்வது? புகழஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்குமோ என்ற விமர்சனத்திற்கான எதிர்வினைதான் அவ்வாறு பேச வைத்ததா? இல்லை… திராவிட இயக்கக் கொள்கை கோட்பாடுதான் பேச வைக்கிறதா?

அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களிடமே கேட்டோம்!

கரும்பாயிரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முன்னாள் செயலர், தஞ்சாவூர்.

பதினைந்து வயசுல இருந்து தி.மு.க.வுல இருக்கேன். தமிழ் மேல இருந்த பற்று தான் தி.மு.க. மீதான பற்றானது. நான் கட்சிக்கு வரும்போது மதுரை முத்து தான் மேயரா இருந்தாரு. கர்நாடகா – தமிழ்நாடு பிரச்சனை அப்போ பெரிசா இருந்தது. இப்ப அறுபத்தி ஐந்து வயசாவுது. இன்னும் தி.மு.க. மேல இருக்க பற்று போகல. அதுக்கு காரணம் கொள்கை. பி.ஜே.பி.காரனுங்க மதவெறி, ஜாதிவெறி புடிச்சவனுங்க. அவங்கள நாம நம்ப முடியாது. அவங்க மொழிப்பற்றுக்கு எதிரானவங்க. இந்தி வெறிய திணிக்கிறாங்க. இருந்தாலும் அவங்கள நினைவேந்தலுக்கு கூப்பிட்டதுக்கு காரணம் கலைஞர் சாவுக்கு பிரதமர் வந்தார் என்ற அடிப்படையில தான். அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் எங்களை கூப்பிடவில்லைன்னு சொல்லுறது சரியில்லை. அவர்களை கூப்ப்பிடக் கூடாது. அவர்கள் தமிழக விரோதிகள். கலைஞர் இறப்பு நிகழ்வுக்கு முதலைமைச்சர் எங்கே போயிருந்தார்? இப்ப மட்டும் எதுக்கு கூப்பிடலன்னு சொல்லுறாங்க? நாங்க எதுக்கு கூப்பிடனும்?

மணிசேகர், பூத் கமிட்டி உறுப்பினர், திருவாரூர் ஒன்றியம்.

கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரா இருக்கும் போது எங்க அப்பா எனக்கு கலைஞர் கருணாநிதிய அடையாளம் காமிச்சார். அப்ப நான் சின்ன பையன். அதுல இருந்து நான் தி.மு.க. தான். நான் கலப்பு திருமணம் பண்ணினேன். கட்சி கொள்கைப் படிதான் அப்படி செஞ்சேன்.  என் பையனுக்கும், பொண்ணுக்கும் கலைஞர் தான் கரிகாலன், கண்ணகின்னு பேரு வச்சார்.

இப்ப தளபதி ஸ்டாலின் வாரிசு அரசியல்ல தலைவரா வந்தது சரிதான். அதுக்கான தகுதி அவருக்கு உண்டு. அதேபோல இப்ப நினைவேந்தலுக்கு அமித்சாவ கூப்பிட்டது சரிதான். ஆனா இதை வைத்தே கூட்டணி வச்சா நான் ஏத்துக்க மாட்டேன். அது தேவை இல்லாத வேலை. தளபதி ஸ்டாலின் கலைஞர் வழியில வந்த புடம் போட்ட தங்கம். அவர் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க மாட்டார். அப்படி கூட்டணி வச்சா நான் கட்சிய விட்டே வெளியேறுவேன். தி.மு.க.வினுடைய உண்மையான தொண்டர்களோட உணர்வுகள் இதுதான்.

அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர், மானாமதுரை.

ஒரு விஷயம் பார்க்கணும். திதிக்கு கூப்பிடுறது எல்லாம் கூட்டணியில இருக்கணும்னு கணக்கு கிடையாது. தேர்தல் வேற… நினைவேந்தல் வேற… அமித்சாவை கூப்பிடுறாங்கன்னா அவர் பொறுப்புல இருக்காரு. அதனால கூப்பிடுறோம். அதுக்காக கூட்டணிக்கு கூப்பிடறதா நினைக்க கூடாது. பா.ஜ.க. மத நல்லிணக்கத்துக்கு ஒத்து வராது. இங்க அவங்க எடுபட மாட்டாங்க. அதே போல அ.தி.மு.க.வ புகழஞ்சலி நிகழ்வுக்கு கூப்பிடாததுக்கு காரணம், அவர்கள் நேரடியா எங்களுக்கு எதிரி. தலைவர் கலைஞருக்கு மெரினாவுல இடம் கொடுக்க மாட்டேன்னு சொன்னது அவங்க தான். பி.ஜே.பி. எல்லாம் பின்னணியில இருக்கிறது என்பதெல்லாம் வேற. ஆனா அ.தி.மு.க. அதிகார பூர்வமா நீதிமன்றத்துலயும் எதிர்த்தாங்க. அவனுங்கள மன்னிக்க முடியாது. அதே மாதிரி, அழகிரிக்கு பயந்துகிட்டு நாங்க பி.ஜே.பி.க்கு இன்விடேசன் கொடுப்பதாக ஒரு செய்தி வந்தது. அது தவறானது. அழகிரி எல்லாம் எங்களுக்கு தலைவர் இல்ல. அவரும் கலைஞர் புள்ள. அந்த அளவுக்கு தான் அவர் மேல மதிப்பு. கட்சின்னு வந்துட்டா அவர் எங்களுக்கு தேவை இல்லை.  தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க. கட்சிக்கு தான் கட்டுப்படுவாங்க. அழகிரிக்கு இல்ல. பி.ஜே.பி. தமிழநாட்டுக்கு எவ்வளவு மோசம் செஞ்சாங்கன்னு தெரியும். நீட் தேர்வுல இருந்து ரேசன் வரைக்கும் அவன் தமிழ்நாட்டுக்கு எதிரா தான் இருந்தான். பி.ஜே.பி.யிடம், தமிழகம் இழந்த உரிமைய தளபதி மீட்டெடுப்பாரு. கூட்டணி எல்லாம் இருக்காது.

முனியாண்டி, ஆதிதிராவிடர் மாவட்ட அமைப்பாளர், தேனி.

தி.மு.க., தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்படுவார்கள். தளபதி இப்ப தலைவர். கலைஞர் இடத்துல அவர நாங்க வச்சிருக்கோம். அவர் ஈரோட்டு பெரியார் வழியில, காஞ்சிபுரம் அண்ணா வழியில, கலைஞர் வழியில வந்தவரு. அவங்களுக்கு எதிரா தளபதி போக மாட்டாரு. இருந்தாலும் தலைமை எடுக்கிற முடிவுக்கு கட்சி கட்டுப்படும். நாங்களும் அமைப்பு என்ன சொல்லுதோ அதைத்தான் கேட்போம். பி.ஜே.பி. கூட்டணி இருக்காது.

ஆலன், விவசாய தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர், நீலகிரி.

நான் 1986-ல இருந்து தி.மு.க.வுல இருக்கேன்.  பி.ஜே.பி.யோட உறவு இப்ப முடிச்சி  போட்டு பேச முடியாது.  அமித்சாவை கூப்பிட்டும், அவர் அழைப்பை ஏத்துக்கல. அவர்கள் எப்பவுமே அப்படி தான். அவங்க ஜாதித் திமிர் பிடிச்சவங்க.  அ.தி.மு.க.வ ஏன் கூப்பிடலன்னு ஜெயக்குமார் சொல்லுறதுக்கு காரணம், நாங்க எங்க பி.ஜே.பி.யோட கூட்டணி வச்சிக்க போறோம்னு பயம். மெரினாவுல இட ஒதுக்கீடு செய்ய எதிர்த்தவனுக்கு இன்விடேசன் ஒரு கேடா? பி.ஜே.பி.கூட கூட்டு என்பது தலைமை எடுக்கிற முடிவுதான். ஆனா எங்க கொள்கைய விட்டு கொடுக்க மாட்டோம். கொள்கை தான் முக்கியம். பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒன்னு இல்ல. அதனால தளபதி சரியான முடிவு எடுப்பார். அதுக்கு நாங்க கட்டுப்படுவோம்.

நீலகண்டன், தி.மு.க. இளைஞரணி, திருவள்ளூர்.

வலதுபுறம் இருப்பவர்.

அமித்சா வரல. அதுக்கு முட்டுக்கட்ட போட்டுட்டாங்க. என்பதை எல்லாம் இப்ப சொல்ல முடியாது. இது இணைப்பு, கூட்டு பத்தி பேசுற நேரம் இல்ல. தேர்தலின் போது கூட்டணி பத்தி தலைமை தான் முடிவெடுக்கும். நாம் தொண்டர் தான். பி.ஜே.பி. எதிரி. அதுங்கூட எப்படி கூட்டணி வக்கலாம்? அமித்சாவை எப்படி கூப்பிடலாம்னு நாம கேக்க முடியாது. அதுபற்றி தலைமை தான் முடிவெடுக்கும். தொண்டர்கள் அதை கேட்டுக்கணும்.

சேகர், ஆதிதிராவிடர் நகர அமைப்பாளர்,  திருவாரூர்.

பி.ஜே.பி. கூட ஒருபோதும் தி.மு.க. உறவு வச்சிக்கிறது இல்ல. மதவாத கட்சி அது. நூற்றுக்கு தொண்ணூறு சதவிதம் கூட்டணி இருக்காது. இங்க ஏற்கனவே பலமான கூட்டணி எங்க கிட்ட இருக்கு. கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க.ன்னு. பி.ஜே.பி. கிட்ட திடீர்னு கூட்டணி வச்சிகினா இவர்கள் எல்லாம். வெளியே போயிடுவாங்க. அதால கட்சி என்கிற ரீதியில கூட பி.ஜே.பி. சரியில்ல. அதனால் கூட்டணி இருக்காது.

கருப்பசாமி,  திருப்பூர்.

கம்யூனிஸ்ட் கட்சியில தொழிற்சங்க பணியில இடுந்தேன். 2009-ல தி.மு.க. கட்சிக்கு வந்துட்டேன். அப்ப தி.மு.க. ஆட்சியில இருந்தது. நான் நாற்பது ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சியில ஒழச்சேன். தி.மு.க. கொள்கை, மொழிப்பற்று இதை வைத்து தான் தி.மு.க.வுக்கு வந்தேன். அமித்சாவை கூப்பிடுறது கருணாநிதி இரங்கல் கூட்டம், கூட்டணி இதெல்லாம் வேற வேற… கண்டிப்பா பி.ஜே.பி. கூட இதை வைத்து கூட்டணி வைக்க மாட்டாங்க. தி.மு.க. கட்சிகாரங்க இதை விரும்ப மாட்டாங்க.

கோவிந்தராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம்.

இப்பொழுது வெளிப்படையா மொழி அச்சுறுத்தல் எதுவும் நேரடியா இல்ல. பி.ஜே.பி. என்பது எதிர் கட்சி தான். தேசிய தலைவரா இருந்த கலைஞர் கருணாநிதி இரங்கலுக்கு அவர்களை கூப்பிடுவது தப்பு இல்ல. மறைமுகமா கூட்டணி வச்சிக்கணும்னு தி.மு.க.வுக்கு எண்ணம் இல்ல. அதை முடிச்சி போடுறது தவறு. நாம் மதவாத கருத்தை தான் எதிர்க்கிறோம். மதத்தை பின்பற்றுபவர்களை இல்ல. அப்படி தான் எல்லா விஷயத்தையும் பார்க்கணும். எப்படி இருந்தாலும் பி.ஜே.பி.யோட கூட்டு 99 சதவீதம் இருக்காது. அ.தி.மு.க.வ கூப்பிடாதற்குகாரணம் எந்த ஒரு கொள்கையும் இல்லாத கொள்ளையடிக்கிற கட்சி. இன்று தளபதி ஸ்டாலின் கட்சிக்கு தலைமை பதவிக்கு வந்துட்டார். அவர் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரா போக மாட்டார், அந்த வகையில் தான் கூட்டணி பற்றியும் சிந்திப்பார்.

மாடசாமி,  வாழும் கலைஞர், நெல்லை மாவட்டம், கருங்குளம்.

நான் எந்த கட்சியும் இல்ல. எனக்கு நாடகம் தான் மூச்சி. பிரம்மன் நாடகக்குழு நடத்துறேன். எங்க அப்பா பேர். நான் எம்.ஜி.யாரு மாதிரியும் வேஷம் போட்டிருக்கேன். கருணாநிதி மாதிரி அச்சு அசலா இருக்குன்னு எல்லோரும் சொல்லுறாங்க. பார்க்கறவங்க என்னோடபோட்டோ எடுக்காம போக மாட்டாங்க.

ராஜேஸ்வரி, தருமபுரி மாவட்ட மகளிர் துணை அமைப்பாளர்.

உண்மைய சொல்லனும்னா, நான் 1972- ல பொறந்ததுல இருந்தே தி.மு.க.வில இருக்கேன். 89-ல தான் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட ஆரம்பிச்சேன். எங்க வீட்டுல குழந்த குட்டி எப்பவுமே தி.மு.க. தான். இப்ப கலைஞர் இறப்பின் போது என் ஆறு வயசு பேரன், இரங்கல் பாடி வாட்சப்புல அனுப்பினான். அது பெரிசா போச்சி. அந்த அளவுக்கு தி.மு.க. மீது பற்று.

பி.ஜே.பி.யோட, வாஜ்பாயோட தலைவர் கலைஞர் அப்பவே கூட்டு வச்சிக்கினாரு. அப்போ பல மந்திரிங்க பதவி வாங்கி தமிழ்நாட்டுக்கு பல நல்லது செஞ்சாரு. கொள்கைய விட்டுக்கொடுக்காத கூட்டணி வக்கிறது கட்சி முடிவு. அதை நாங்க ஏத்து தான் ஆகனும். கலைஞர் இந்தியாவுக்கு ஒரு பொது சொத்து. அதனால அமித்சாவ இப்ப கூப்பிட்டது தப்பு இல்ல. அவர் எதுக்கு வரலன்னு தெரியல. எதிர்காலத்துல கூட்டணி பத்தி எங்க தலைவர் முடிவு எடுப்பார். எங்க கொள்கைக்கு எதிரா… எங்க தலைவர் போக மாட்டார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு!

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்