”சபரிமலையில் பெண்கள் நுழையலாம்” எனும் தீர்ப்பைக் கொடுத்து விட்டு ஓய்வு பெற்றுவிட்டார் தீபக் மிஸ்ரா. பக்தி சார்ந்து என்ன தீர்ப்பு வந்தாலும் அதை பயன்படுத்தும் திட்டம் சங்க பரிவாரத்திற்கு இருந்திருக்கும். அதுவும் நுழையலாம் என்று தீர்ப்பு வந்தது ‘இந்து தர்மத்திற்கு’ ஆபத்து என்று பிரச்சாரம் செய்து மதவெறியை ஊட்டும் வாய்ப்பாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். “இந்துக்களின் மீதான தாக்குதல்” என இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் குழும இயக்கங்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டன.

இந்துத்துவக் கும்பலின் தூண்டுதலில் நடைபெறும் பேரணி

சபரிமலை பக்தியில் செல்வாக்காக விளங்கும் கேரளத்திலும் தமிழகத்திலும் ஊர்வலங்கள் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, உண்ணாவிரதம் நடத்துவது என இந்துக்களின் காவலனாக தம்மை காட்டிக் கொள்கிறார்கள். கேரளாவைப் பொறுத்த வரையில் நாயர் சேவா சங்கம் என்ற நாயர் ஆதிக்கசாதி அமைப்பினர், இந்துத்துவக் கும்பல்களோடு இணைந்து கொண்டு இந்த தீர்ப்புக்கு எதிராக கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலின், முன்னாள் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் வரத் தொடங்கினால், சபரிமலை தாய்லாந்து (விபச்சார சுற்றுலா) போன்று ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார். பாஜக ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்தில் மலையாள நடிகர் கொல்லம் துளசி பேசுகையில், சபரி மலையில் நுழையும் பெண்களை இரண்டாகக் கிழித்தெறிய வேண்டும்; ஒரு பாதி டெல்லியிலும், மற்றொரு பாதி இங்கிருக்கும் முதலமைச்சர் வீட்டிலும் போய் விழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு புறத்தில், கவிஞர் சச்சிதானந்தம், வரலாற்றாளர் எம்.ஜி.எஸ். நாராயணன், எழுத்தாளர் சாரா ஜோசப் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட அறிவுத் துறையினர் இந்த தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “நம்பிக்கை என்ற பெயரில் மதவாத சக்திகள் மற்றும் உயர்சாதிப் பிரிவினரின் இந்த மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு பணிந்து விடக் கூடாது. கடந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் வரை பக்தர்களில் பெரும்பான்மையானவர்களாகிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை கோவிலுக்குள்ளே அனுமதித்ததில்லை. இன்று அனைவரும் செல்வதைப் போன்று, ஆண், பெண் பாலின வேறுபாட்டை போக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

போலீசு பாதுகாப்போடு…

“நாங்கள் நாயர்களல்ல, ஈழவர்கள் அல்ல, புலையர்கள் அல்ல.. நாங்கள் இந்துக்கள்” என்ற வாசகத்தை சங்க பரிவாரக் கும்பல்கள்  இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கையில் கேரளத்தின் ஈழவர் சமூகத்தினரும், புலையர் சமூகத்தினரும் இந்துத்துவாக்களின் இந்தப் போராட்டத்தை கடுமையாக சாடுகின்றனர். “அவர்கள் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே இத்தகைய எதிர்ப்பை காட்டுகின்றனர். உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

கேரளத்தின் நிலை இதுவென்றால், தமிழகத்தில் என்ன நிலைமை என்பதைப் பார்ப்போம்.  சேலம், திருச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் பெண்கள் ஊர்வலம், உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருவேளை இது எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் செட்டப்தான் இது என்பதில் ஐயமில்லை.

ஆனால் சபரிமலைக்கு மிகப்பெரும் பக்தர் கூட்டத்தை ஈந்துவரும் தமிழகத்தின், பக்தர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஒரு கருத்துக் கணிப்பை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தினோம்.

சென்னை நுங்கம்பாக்கம் அருகிலுள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில், கே.கே.நகர் ஐயப்பன் கோவில், சென்னை வடபழனி முருகன் கோவில் மற்றும் திருத்தணியில் இருக்கும் முருகன் கோவில் ஆகிய கோவில் வளாகங்களிலும், சென்னை மெரினா கடற்கரை மற்றும் “சென்னை – அரக்கோணம்” தொடர் வண்டியிலும் இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

மொத்தம் 1815 பேரிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. பங்கேற்பவர்களின் பாலினம் மற்றும் வயது போன்ற விவரங்களுடன், சபரிமலை தீர்ப்பு தொடர்பான 5 கேள்விகள் கேட்கப்பட்டன. அவை,

1 சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையலாம் என்ற கோர்ட்டு உத்தரவு சரியா தவறா ?
பதில் வாய்ப்புகள் : அ) சரி ஆ) தவறு இ) கருத்து இல்லை

2 மாதவிலக்கு நிற்கும் வரை சுவாமி ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என்ற வழக்கத்தை ஆதரிக்கிறீர்களா ?
பதில் வாய்ப்புகள் : அ) ஆதரிக்கிறேன் ஆ) எதிர்க்கிறேன் இ) கருத்து இல்லை

3 வாய்ப்பு இருந்தால் குடும்பத்தோடு சென்று ஐயப்பனை தரிசிப்பீர்களா ?
பதில் வாய்ப்புகள் : அ) செல்வேன் ஆ) செல்ல மாட்டேன் இ) கருத்து இல்லை

4 சுவாமி ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என சில கட்சிகள் எதிர்ப்பதற்கு என்ன காரணம் ?
பதில் வாய்ப்புகள் : அ) இந்து தர்மத்தைக் காக்க ஆ) ஆன்மீகத்தின் பெயரில் அரசியல் இ) கருத்து இல்லை

5 எந்த மதம் ஆணுக்கு இணையான சமத்துவத்தை பெண்ணுக்கு வழங்குகிறது?
பதில் வாய்ப்புகள் : அ) இந்து ஆ)முசுலீம் இ) கிறித்தவம் ஈ) இதர மதங்கள் உ) எந்த மதமும் இல்லை ஊ) அனைத்து மதங்களும்

இந்த கேள்விகள் அனைத்தும் சபரிமலையில் பெண்கள் நுழையலாமா என்ற ஒரே கேள்வியை பல முறைகளில் கேட்பதாகவும் கொள்ளலாம். ஏனெனில் பக்தி என்று வரும் போது எது சரி, தவறு என்பதற்கு அப்பால் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் என்ற கேள்விக்கிடமற்ற நம்பிக்கையும் மக்களிடம் இருக்கிறது. அதனாலும், அதை தாண்டியும் மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதறியவே இந்த ஐந்து கேள்விகள்.

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு குறித்து கருத்துக் கணிப்பு எனச் சொன்னவுடனேயே சிலர் முகத்தில் ஒரு ஆவேசம் வந்தது. பெண்கள் நுழைவதை ஆதரித்தவர்கள் அதிகம் பேசவில்லை. எதிர்த்தவர்களே அதிகம் பேசினர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 1813 பேரில் ஆண்கள் 1261 பேர், பெண்கள் 551 பேர் மற்றும் திருநங்கை ஒருவர். பெண்களின் சதவீதம் பாதி வரவில்லை என்றாலும் இதுவும் ஒரு பெரிய எண்ணிக்கைதான்.

வயதுவாரியாக பார்த்தோமானால், 18 – 25 வயது வரையிலானோர் 493 பேர், 26 – 35 வயதிலானோர் 555 பேர், 36 – 49 வயதிலானோர் 419 பேர், 50 வயதைக் கடந்தவர்கள் 346 பேர். அவ்வகையில் இளைய வயதினர் அதிகம் இருக்கின்றனர். நம்பிக்கையூட்டும் இளைய சமூகம் இதில் எப்படி பார்க்கும் என்பது ஒரு ஆர்வமூட்டும் விசயம்.

சபரி மலையில் பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து கேட்கப்பட்ட போது, ஆண்களில்  29.03 % பேர் அதனை சரி என்று ஏற்றுக் கொண்டனர். சுமார் 63.28% அத்தீர்ப்பு தவறானது என்று கூறியுள்ளனர். 7.69% பேர் கருத்து ஏதும் இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவவரையில், சுமார் 27% பேர் இத்தீர்ப்பு சரி என்றும், 65.75% பேர் இத்தீர்ப்பு தவறு என்றும் 7.25% பேர் கருத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதில் ஆண் – பெண் பெரிய வேறுபாடில்லை.


பொதுவான இந்துக்கள் என்பதைத் தாண்டி, பக்தர்கள் என்ற வகையில் அன்றாடம் கோவிலுக்குச் செல்லக் கூடிய மக்களில் சுமார் 28.41 % பேர் இத்தீர்ப்பை வரவேற்றிருப்பது கவனிக்கத்தக்கது. சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பழக்கம் என்ற முறையில் திணிக்கப்பட்டிருந்த ஒரு விதியை மறுக்கிறார்கள் என்பது சமூக மாற்றம் குறித்து நினைப்போர் குறித்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயம்.

ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சபரிமலை ஐயப்பனை குடும்பத்தோடு (பெண்கள் உட்பட) தரிசிப்பீர்களா என்ற கேள்விக்கு, இதே பக்தர்கள் வேறுமாதிரி பதிலளித்தனர்.

இக்கேள்விக்கு 40.93% பேர் செல்வேன் என்றும் சுமார் 42.42% பேர் செல்ல மாட்டேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து இல்லை என சுமார் 16.65% பேர் தெரிவித்துள்ளனர். ஏன் முதல் கேள்விக்கு நுழைவதை வேண்டாம் என்று சொன்ன சதவீதம் இதில் குறைந்திருக்கிறது?

காரணம், முதல் கேள்வி ஒரு பழக்க வழக்கம் என்ற முறையிலும், இந்த கேள்வி இப்போது யார் வேண்டுமானாலும் செல்லலாமே என்ற மாற்றத்திலும் பதிலளிக்கப்படுகிறது. இதிலிருந்து ஆன்மீக பழக்க வழக்கங்களின் இருக்கும் பேதங்களைப் பொறுத்தவரை அது  பகுத்தறவு அற்ற முறையில் மக்களிடம் இருப்பதையும் அதை சட்டத்தாலும், சமூக மாற்றத்தாலும் எளிதில் கடந்து போக முடியும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என சில கட்சிகள் எதிர்ப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, ஆன்மீகத்தின் பேரில் அரசியல் என 38.61% பேரும், இந்து தர்மம் காக்க என 32.32% பேரும் வாக்களித்துள்ளனர்.

சங்கிகளின் நாடகத்தைப் புரிந்து கொண்டவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. ஆகவே ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு இருப்பதாக ஒரு பிரம்மாண்டம் காட்டப்பட்டாலும் அந்த போராட்டத்தை அரசியல் ஆதாயம் என்று மறுக்கும் பெரும்பான்மை இங்கே மவுனமாக இருக்கிறது.

எந்த மதம் ஆண்களுக்கு இணையான சமத்துவத்தை பெண்களுக்கு வழங்குகிறது என்ற கேள்வுக்கு , ஆண்களில் 41.56% பேர் எந்த மதமும் இல்லை என்றும், 41.55% பேர் இந்து மதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 9.44% பேர் கிறிஸ்தவ மதம் என்று குறிப்பிட்டுள்ளனர். 4.83% பேர் முசுலீம் உள்ளிட்ட இதர மதங்களை குறிப்பிட்டுள்ளனர். 2.62% பேர் அனைத்து மதங்களும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பெண்களைப் பொறுத்தவரையில், எந்த மதமும் இல்லை என 51.09% பேர் தெரிவித்துள்ளனர். இந்து மதம் என்று 32.25% பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். கிறித்தவ மதம் என்று 10.87% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 4.35% பேர் முசுலீம் உள்ளிட்ட இதர மதங்களை குறிப்பிட்டுள்ளனர். 1.44% பேர் அனைத்து மதங்களும் சமத்துவத்தை வழங்குகின்றன எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதிலும் நாம் கவனிக்கத்தக்க சமூக யதார்த்தங்கள் நிறைய இருக்கின்றன. கடவுளும் ஆணும் இணைந்து வைத்த ஒடுக்குமுறைக் கூட்டணியில் மதவேறுபாடே இல்லை என்பதை பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் கருதுகிறார்கள்.

ஆண்களை விட பெண்களில் பெரும்பான்மையினர் மதங்களின் பெண்ணடிமைத்தனத்தை ஒத்துக் கொள்வதற்கு காரணம் அது அவர்களது யதார்த்த வாழ்க்கையோடு தொடர்புடையது. இந்த சர்வேயில் கிறித்தவ மதத்தை 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவு செய்ததும் குறிப்பிடத் தக்கது. கருத்துக் கணிப்பில் இந்துக்களே மிக அதிகம் என்றாலும் கிறித்தவ மதத்தில் பாலின சமத்துவம் இருப்பதாக கணிசமான பெண்கள் நம்புகிறார்கள்.

முதல் இரண்டு கேள்விகளைப் பொறுத்தமட்டில், 18-25 வயதுடையவர்களில் சராசரியாக சுமார் 40% பேர் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 50% பேர் மட்டுமே தீர்ப்பை எதிர்த்துள்ளனர். இவ்வயதினர், மூன்றாம் கேள்விக்கு வாய்ப்பிருந்தால் சபரிமலைக்கு குடும்பத்தோடு செல்வேன் என சுமார் 53% பேர் தெரிவித்துள்ளனர். செல்ல மாட்டேன் என 31.2% பேர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு 18-25 வயதினர் 26–50 + வயதினர்
சரி 40% 25%
தவறு 50% 70%
கருத்து இல்லை 10% 5%

26 முதல் 50+ வரையிலான வயதினரில் சுமார் 70% பேர் தீர்ப்பு தவறு என்றும், 25% பேர் மட்டுமே தீர்ப்பு சரி என்றும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதிலிருந்து இளைய சமூகம் மாற்றத்தை எளிதில் ஏற்பதை அறியலாம்.

அதே போன்று பெண்கள் நுழைவை சில கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் ஆன்மீகத்தின் பெயரில் அரசியல் என்பதை 18 வயது முதல் 49 வயது பிரிவினர் கிட்டத்தட்ட 40% பேர் ஏற்கிறார்கள். இந்து தர்மத்தைக் காக்க என்ற பதிலை முப்பது சதவீதம் பேரே சொல்கிறார்கள். இதே கேள்விக்கு 50 வயதிற்கு மேற்பட்டோரை எடுத்துக் கொண்டால் 45 சதவீதம் பேர் இந்து தர்மத்திற்காகவும், அரசியல் காரணத்தை 33 சதவீதம் பேரும் தெரிவு செய்திருக்கிறார்கள்.

பெண்கள் நுழைவை சில கட்சிகள் எதிர்க்கும் காரணம் 18-49 வயதினர் 50 + வயதினர்
ஆன்மிகத்தின் பெயரில் அரசியல் 40% 33%
இந்து தர்மம் காக்க 30% 45%
கருத்து இல்லை 30% 22%

எந்த மதம் பாலின சமத்துவத்தை வழங்குகிறது என்ற கேள்விக்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களில் எந்த மதமும் இல்லை என்பதை கிட்டத்தட்ட 50% பேர் தெரிவு செய்திருக்கிறார்கள். இது இந்து மதத்தை தெரிவு செய்த 33% பேரை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இதே கேள்விக்கு 36 வயது முதல் 50 + வயதுப் பிரிவனரில் இந்து மதம் 46%மாகவும், எந்த மதமும் இல்லை என்போர் 37%மாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வயது ஆக ஆக மதத்தில் சரணடைவோர் சற்று அதிகரிக்கின்றனர்.

பெண்களுக்கு சமத்துவம் வழங்கும்
மதம்
18-35 வயதினர் 36-50 + வயதினர்
எந்த மதமும் இல்லை 50% 37%
இந்து 33% 46%
இதர மதங்கள் 17% 17%

ஆக இந்துத்துவத்தின் சமூக அடிப்படை என்பது வயதானவர்கள் என்பதும் இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் இளையோர் என்பதும் வெள்ளிடை மலை.

மொத்தத்தில் 30 சதவீதம் பேர் பெண்கள் நுழைவை ஏற்கிறார்கள். மாத விலக்கு நிற்கும் வரை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என்ற வழக்கத்தை ஆதரிப்போரும் கிட்டத்தட்ட மேற்கண்ட சதவீதம்தான். 40 சதவீதம் பேர் குடும்பத்துடன் ஐயப்பன் கோவிலுக்கு செல்வோம் என்கிறார்கள்.  பெண்கள் நுழைவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் நோக்கம் மதம் சார்ந்த அரசியல் என்பதை 40%த்திற்கும் மேற்பட்டோர் ஏற்கின்றனர். அதே எண்ணிக்கையில் எந்த மதமும் சமத்துவத்தை வழங்கவில்லை என்கின்றனர்.

தமிழகம் இந்துமதவெறியில் அவ்வளவு எளிதில் சிக்கிவிடாது என்பதற்கு இந்த சர்வே முடிவுகள் நம்பிக்கையூட்டுகின்றன. அதனால்தான் என்னவோ எச்.ராஜா முதல் அர்ஜுன் சம்பத் வரை ஆர்.எஸ்.எஸ் கூடாரம் இங்கே சதி வேலைகள் பலவற்றை தொடர்ந்து செய்கின்றன. முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் வேலையை செய்வதற்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.

மக்கள் கருத்துகள்:

தீர்ப்புக்கு எதிரான கருத்துகள்:

“இந்துன்னா என்ன இளிச்சவாயங்களா சார் ? இதே மாதிரி மசூதிக்குள்ள முசுலீம் பொண்ணுங்களை அனுமதிக்கனும்னு சொல்லுவாங்களா? என்று சீறினார் ஒருவர்.

பட்டையும் கொட்டையுமாக அமர்ந்திருந்த ஒரு 45 வயதுக்காரரிடம் கருத்துக் கணிப்பு சீட்டைக் கொடுத்த போது ஆவேசத்தோடு “இந்த தீர்ப்பு கொடுத்த நீதிபதி ரொம்ப முட்டாள். அவனுக்கு பக்தியை பத்தி ஒன்னும் தெரியாது. காலங்காலமா பெண்கள் போகக் கூடாதுங்கிறதுதான் வழக்கம். அந்த வழக்கத்த மாத்த முடியுமா? ”என்றார்.

வயதான நடுத்தர வர்க்க பாட்டி ஒருவர் “பெண்களை கோவிலுக்குள்ள விட்டதால்தான் கேரளாவுல வெள்ளமே வந்துச்சு. இது போதாதா ?” என்று ஆவேசமாகக் கூறினார்.

“இந்து தர்மம் என்பதே சயின்ஸ்-தான். மாதவிலக்கு நேரத்துல கோயிலுக்குள்ள போனா அங்கிருக்குற பாசிட்டிவ் எனர்ஜியினால நமக்கு அதிகமா விலக்கு போகும். அதுனாலதான் நம்மள அங்க போக கூடாதுன்னு சொல்றாங்க.” என்று புதியதொரு ‘அறிவியல்’ விளக்கத்தை அளித்தார் கல்லூரி ஆசிரியை ருக்மணி.

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் சுமார் 40 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க இரண்டு பார்ப்பனப் பெண்கள், “I oppose this order. இத நோட் பண்ணிக்கோங்கோ. ஃபார்ம் எல்லாம் ஃபில்-அப் பண்ணி தரமுடியாது. ஒரே பதில்தான்” என்று ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட்’ஆக பதிலளித்தனர்.

நடேசன் பார்க்கில் இருந்த இளைஞர் ஒருவர், கருத்துக் கணிப்பு படிவத்தை நீட்டியதும், “கொடுங்க சார். இதைத்தான் எதிர்பாத்துகிட்டிருக்கேன். நான்கூட வக்கீல்தான். இந்து முன்னணியில் இருக்கேன். ஊரப்பாக்கத்துல ஆலோசனைக் கூட்டம் போட்டோம். உடனடியா பெரிய அளவில எதிர்ப்பக் காட்டியே ஆகணும்” என்றார் பரபரப்பாக.

“கோர்ட் தீர்ப்புக்கு எதிரா தமிழ்நாட்டுல எதிர்ப்பு இருக்குன்னு எழுதுங்க சார். மசூதியில பெண்கள் நுழையமுடியுமா? அது ஏன் இந்துக்களுக்கு மட்டும் இப்படியொரு சட்டம்? பெண்கள் கோவிலுக்குள் போகணுமுன்னா எவ்வளவோ கோயில் இருக்கு, அது ஏன் ஐயப்பன் கோவிலுக்குத்தான் போகணுமா?” என்று வினவினார் சுமார் 45 வயது ஆண் ஒருவர்.

அய்யப்பன் கோயிலுக்கு வருடந்தோறும் மாலை போடும் வழக்கமுடைய 30 -35 வயது கூலித் தொழிலாளி, கடுமையாக பேச ஆரம்பித்தார். “வடநாட்டுல ஒக்காந்துகிட்டு என்ன வேணாலும் தீர்ப்பு கொடுக்கலாமா? நாங்கள்லாம் 41 நாள் கடுமையா விரதம் இருந்து சுத்தபத்தமா கோயிலுக்கு போறோம். பொம்பளன்னாலே ஐயப்பனுக்கு ஆகாது. தப்பு சார்.” என்று படபடப்பாகவே பொரிந்துத் தள்ளினார்.

மற்றொரு புறத்தில் பொறுமையாக சிலர் விளக்கவும் செய்தனர்.

55 வயது பெரியவர் ஒருவர் பேசுகையில், “தம்பி… எல்லாக் கோவிலுக்கும் பெண்கள் போகும்போது அதுக்கு மட்டும் போகக் கூடாதுன்னு சொல்லுறதுல ஒரு அர்த்தம் இருக்கு… நம்ம ஆட்கள் 41 நாள் விரதம் இருந்து போறாங்க. அந்த இடத்துல பொம்பளங்கள விட்டா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாதுப்பா… மனிசனுக்கு இருக்கிறது மிருக குணம். அது எப்ப வெளிப்படும்னு யாருக்கும் தெரியாது. அந்த நேரத்துல கடவுள் சிந்தனையும் வராது… பக்தி எல்லாம் காணாமப் போயிடும், என பக்தர்களின் ஒழுக்கத்திற்கு சான்றளித்து சேம் சைடு கோல் அடித்தார்.

தீர்ப்புக்கு ஆதரவுக் குரல்கள்:

எதிர்ப்புக் குரல்களைப் போல் இத்தீர்ப்புக்கு ஆதரவுக் குரல்களும் கேட்டன. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தாம் ஏன் செல்லக் கூடாது என்ற கேள்வியையே முன் வைத்தனர்.

மெரினா கடற்கரை.

இராட்டினம் சுற்றும் பெண் ஒருவர் ”நான் கண்டிப்பா போய் பார்ப்பேன். பொம்பளைதான் சக்தி அவ போகக்கூடாது, தீட்டுன்னா எப்படி?” என்று வினவினார்

முப்பத்தைந்து வயது துப்புரவுத் தொழிலாளி ஒருவர், “போகலான்னுதான் ஆசை. எங்க நேரமிருக்கு? வேலையே சரியா இருக்கு. போறதுக்கு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா போவேன். சாமிய பார்க்கிறதில என்ன குத்தம் இருக்கு” என்றார்.

“ஏன் பொம்பளைங்க கோயிலுக்கு போக கூடாது?. 41  நாள் விரதம் இருந்து ஆம்பள கோயிலுக்கு போயிட்டு திரும்ப வர வரைக்கும் வீட்ட சுத்தபத்தமா வச்சிக்கிறது பொம்பளைங்கதான். ஆம்பளைங்க சரியா விரதம் இருக்குரதுக்கே பொம்பளைங்க தான் கரணம். எவ்ளோ வழக்கம் மாறிடுச்சு. இதும் மாறிடும்” என்றார் சென்னை சின்ன திருப்பதி கோவிலில் பூ விற்கும் அம்மா ஒருவர்.

“நான் ஐயப்பன் சாமி பக்தை. சின்ன வயசுல மூணு வாட்டி போய் வந்திருக்கேன். நான் கேட்டு இதுவரைக்கும் ஐயப்பன் இல்லைன்னு சொன்னதில்ல. இப்பவும் கண்டிப்பா போவேன். எங்களை ஐயப்பன்சாமி காப்பாத்துவார். முதல்ல போகணும்ன்னாதான் 48 நாள் விரதம் இருக்கணும் அப்புறம் 20 நாள்ல கூட போகலாம். பொண்ணுங்க போறது தப்பில்ல” என்கிறார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 24 வயதுப் பெண் பிரியா.

“நான் கண்டிப்பா போவேன். சின்ன வயசுலேர்ந்து மாதவிலக்கை தீட்டுன்னு சொல்லி நம்ம வளர்த்துட்டாங்க. அந்த நேரத்துல மட்டுந்தான் போக மாட்டேன். பொம்பளைங்க போக கூடாதுன்னு போராட்டம் பண்றாங்களே.. சாமி வந்து இவங்ககிட்ட சொல்லுச்சா, இந்து தர்மத்தை காக்க சொல்லி ?” என்று பளீரெனக் கேட்டார் 25 வயது பி.ஈ.பட்டதாரி சவுந்தர்யா

தி.நகரிலுள்ள சின்ன திருப்பதி கோவில்.

சின்ன திருப்பதி கோவிலுக்கு வந்து சென்ற பெண் பக்தர் ஒருவரோ, “கண்டிப்பா ஐயப்பன் கோயிலுக்கு போறதுக்கு பெண்களுக்கும் உரிமை இருக்குங்க. இந்தியாவுல சராசரி வயது 60-ன்னு சொல்றாங்க.  இவுங்க சொல்றபடி 50 வயசுக்கு அப்புறம்தான் போகணும்னா என்னைக்குமே பொம்பளைங்களுக்கு வாய்ப்பே இல்ல. ஆனா உண்மையில ஆணும் பெண்ணும் இங்க சமமா இல்லையே சார்” என்றார்.

நடேசன் பூங்காவில் அமர்ந்திருந்த 70 வயது மிக்க பெரியவர் ஒருவர் பேசுகையில், “பெண்களுக்குத் தெரியும் சார் எப்போ சாமி கோவிலுக்கு போகணும், போகக்கூடாதுன்னு ! ஆம்பளைங்க சுத்தமா இருக்கிறதா சொல்றாங்க. உள்ள மொத்தமுமே நாத்தம்தான். கொலை, கொள்ளையடிக்கிறவன் கூட மாலை போடுறான். பெண்கள் பெரும்பாலும் உண்மையாத்தான் இருப்பாங்க. ஐயப்பன் கன்னி சாமிங்கிறதனால பொம்பளைங்க போனா ஆவாதுனு சொல்றாங்க. விநாயகருக்கு கூடதான் கல்யாணம் ஆகல. ஆனால் எல்லா பெண்களும் விநாயகர் கோயிலுக்கு தவறாம போயிட்டுதான இருக்காங்க ?” என்றார்.

”கோயில் பொதுவானது… யார் வேணாலும் போகலாம்.” இது வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் கோகுலின் கருத்து.

குடும்பமாக வந்தவர்களிடையே நடந்த உரையாடல்கள்:

தனி நபர்களின் கருத்துக்கள் இவ்வாறிருக்க, குடும்பமாக, நண்பர்களோடு வந்திருந்தவர்கள் கருத்துக் கணிப்பு படிவத்தை நிரப்புவதற்குள்ளே தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.

திருத்தணி செல்லும் இரயிலில் படிவத்தை பூர்த்தி செய்யும் தாயும் மகனும்.

திருத்தணிக்குச் செல்லும் இரயிலில், அப்பாவும், அம்மாவும் படிவத்தை பூர்த்தி செய்கையில் 7வது படிக்கும் அவர்களது மகள், தன் தாயிடம் “கோர்ட் உத்தரவு சரின்னு போடும்மா” என்றார். “அதல்லாம் உனக்கு புரியாது. சும்மா இரு” என்றார். ஆனால் அந்த சிறுமியோ, “அதெல்லாம் அப்போ… இப்போ எல்லாம் போகலாம். ஏன் போகக்கூடாது? போ., நான் போவேன். சரினு எழுதி கொடும்மா” என்று அடம்பிடித்து நச்சரித்தாள்.

தாய், தந்தை, 15 – 16 வயது மதிக்கத்தக்க இரண்டு மகள்களோடு பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு குடும்பத்தில் ”கோர்ட் உத்தரவு தப்பு. அவ்ளோ கூட்டத்துல பெண்கள் போக முடியுமா? என்று மகள்களிடம் கூறினார். அதற்கு அவர்கள் இருவரும் ”அதெல்லாம் போகலாம். கூட்டத்த கட்டுப்படுத்த ஏதாவது அரேஞ்ச் பண்ணுவாங்க” என்றனர். தாயோ விடாமல், “அவ்ளோ கூட்டத்துல ஆம்பளையும் பொம்பளையும் ஒன்னா சேர்ந்து எப்படி நிப்பாங்க? ஆம்பள போலீசு கைய வச்சி தள்ளி விடுவான், பரவாயில்லையா?” என்றார். மகள்கள் இருவரும் “ஏன் பொம்பள போலீசு இருப்பாங்கதானே” என்றனர்.

திருத்தணி மலைக் கோயில்.

“பெண்கள் கோவிலுக்கு வந்தாங்கன்னா, அவங்களுக்கு எப்போ வேணும்னாலும் எதுவும் நடக்கலாம் (மாதவிலக்கு). அது கட்டுப்படுத்த முடியாது. இந்த உத்தரவு தப்பு” என்றார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர். அவருடனிருந்த அவரது நண்பரோ உடனடியாக அதனை மறுத்தார். “அது இயற்கையானது. தீட்டுன்னு ஒதுக்குறது தப்பு. அவங்க கோவிலுக்கு போறதை நான் ஆதரிக்கிறேன்” என்றார்.  “இந்து மதத்தில அதெல்லாம் தப்புடா. தப்புன்னு டிக் பண்ணுடா” என நண்பரை வலியுறுத்தினார் அந்த இளைஞர். ஆனால் நண்பரோ, “நானும் இந்துதான். என்ன பொறுத்தவரைக்கும் போகலாம்னுதான் செலக்ட் பண்ணுவேன்” என்றார்.

திருத்தணி கோயில்.

ஆணாதிக்க சிந்தனை கொண்ட கணவனை, அவரது மனைவி மூக்குடைபடச் செய்த சம்பவமும் திருத்தணி கோவிலில் நடந்தது. குடும்பத்தில் இருவருக்கும் 30 – 35 வயதிற்குள் இருக்கும். தனித்தனியே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.“கடைசி கேள்விக்கு என்னங்க போடுறது” எனக் கேட்டார் மனைவி.

“இந்து மதம்னு போடுடி… கிறிஸ்டினும், முஸ்லிமும்தான் சம உரிமை கொடுக்குறானா?” என அதிகாரத்தோடு உத்தரவிட்டார் கணவர்.

“தெரியும் நீங்க இததான் சொல்வீங்கன்னு..  பட், திஸ் இஸ் மை ரைட்ஸ்.. நான் கிறிஸ்டியன்தான் ’சூஸ்’ பண்ணுவேன்” என்று நக்கலாக கணவருக்கு பதிலளித்தவாறே பூர்த்தி செய்து கொடுத்தார் அந்த ‘இந்துப்’பெண்.