privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைகண்ணாடி பாக்க நல்லாருக்கும் தூக்குற வேலைக்கு யாரும் வர மாட்டாங்க !

கண்ணாடி பாக்க நல்லாருக்கும் தூக்குற வேலைக்கு யாரும் வர மாட்டாங்க !

இந்த செயின்ட் கோபைன் கம்பெனி வந்த பிறகு ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு கடையைத் தொறந்துட்டான். எங்க தொழிலே அழிஞ்சி போச்சு. - கண்ணாடி தூக்கும் தொழிலாளிகள் படக்கட்டுரை!

-

விடிந்ததும் ஒவ்வொருவரும் எதைப் பார்க்கிறோமோ இல்லையோ, கண்ணாடியை பார்க்கத் தவறுவதில்லை. முகம் பார்க்க மட்டுமல்லாமல், வீடு, ஆபரணப் பொருட்கள், கட்டிடங்கள், மருத்துவம், உடல்நலம், ஆட்டோமொபைல் என கண்ணாடி நமது வாழ்க்கையோடு கலந்து விட்ட ஒன்று. இந்தியாவில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கண்ணாடி ஆபரணங்கள் புழக்கத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி, மூக்கு கண்ணாடி, அறிவியல் சோதனைகளில் பயன்படும் கண்ணாடிப் பாத்திரங்கள் – குடுவைகள், மின்விளக்குகள் போன்ற பயன்பாட்டிற்கு அப்பால், இன்றைய முதலாளித்துவ கட்டத்தில் மிகப்பெரிய ஆடம்பரப் பொருளாகவும் கண்ணாடி மாறியிருக்கிறது.

படிக்க :
ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?
தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !

முதலாளிகள், வணிகர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மீது மோகத்தை உண்டாக்கி சந்தைப்படுத்த கண்ணாடிச் சுவர்களினாலான காட்சி அறைகளை (showroom) உருவாக்கி வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கிறார்கள். தங்களது சொகுசு மாளிகைகளின் முகப்பை கண்ணாடிப் பொருட்களால் அலங்கரித்து தற்பெருமை கொள்கிறார்கள்.

சென்னை போன்ற நகரங்களில் முளைத்திருக்கும் மால்களில் உள்ள ஒவ்வொரு ஷோரூமும், நுகர்வு போதையில் மயங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினரை ஈர்த்துக் கொள்ள முழுவதும் கண்ணாடிகளாலேயே இழைக்கப்படுகின்றன.

இத்தகைய கவர்ச்சி பிரம்மாண்டங்களில் பின்னிப் பிணைந்திருக்கும் கண்ணாடியின் பின்னே உள்ள மனித உழைப்பை  என்ன? கண்ணாடிகளை ஏற்றுவது இறக்குவது, அவற்றைத் தேவையான இடங்களில் பொருத்தி நிறுத்துவது போன்ற செயல்கள் சாதாரணமாக நம்மை கடந்து போகலாம். 5 அடிக்கு 12 அடி உள்ள ஒரு கண்ணாடியைத் தூக்கும் 4 தொழிலாளர்களும் ஒத்த இசைவோடு வேலை செய்ய வேண்டும். ஒருவர் கொஞ்சம் கவனம் தவறினால்கூட மொத்தமும் சிதறிவிடும். முதலாளிகளின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தும் இந்தத் தொழிலாளர்களின் வாழ்வும் நொறுங்கிப் போன கண்ணாடித் துண்டுகளாய் இறைந்து கிடக்கிறது!

சென்னை, பாரிமுனை கந்தசாமி கோயில் தெருவில், கண்ணாடி ஏற்றி இறக்கும் தொழிலாளி ராமகிருஷ்ணனை சந்தித்தோம்.
கண்ணாடி ஏற்றி இறக்கும் தொழிலாளி ராமகிருஷ்ணன்.

”பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி, கண்ணாடி ஏத்தி எறக்குற வேலைக்கெல்லாம் யாரும் வரமாட்டாங்க. ஏன்னா நிதானமா வேலை செய்யணும். இல்லேன்னா கை கால கிழிச்சிடும், சில நேரம் உயிருக்கே ஆபத்தாயிடும்.

ஒருமுறை மாடிக்கு கண்ணாடியை ஏத்தும்போது, கயிறு அறுந்து விழுந்ததுல கால்ல அடிபட்டுருச்சு. ஓரம் பாலிஷ் போடலன்னா ரொம்பவே நிதானமா தூக்கணும். இல்லேன்னா இந்த மாதிரிதான் (தனது உடம்பில் உள்ள காயங்களைக் காண்பிக்கிறார்) அங்கங்கே கிழிச்சிடும். அதனால இந்த வேலைக்கு வர்றத யாரும் விரும்ப மாட்டாங்க.

முன்னெல்லாம் ஜன்னல், கதவுக்கு கண்ணாடி தேவைன்னா வடபழனி, விருகம்பாக்கம்… ஏன், எந்தெந்த ஊருலேருந்தோ பாரிசுக்குதான் வருவாங்க. இந்த செயின்ட் கோபைன் கம்பெனி வந்த பிறகு ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு கடையைத் தொறந்துட்டான். எங்க தொழிலே அழிஞ்சி போச்சு.

அப்பல்லாம் ஒரு நாளைக்கு 700, 800, 1000 ரூபாயின்னு சம்பாதிச்சோம். இன்னிக்கு 300 ரூபா கெடைக்கிறதே பெரும்பாடாயிருக்கு.

கண்ணாடியை சுமந்து செல்லும் உழைப்பாளிகள்.

பையன் படிச்சிட்டு மருந்து கம்பெனியில வேலை செய்யிறான். ஏதோ அவன் குடும்பத்த பாத்துகிட்டிருக்கான், அதுவே போதும்’ – என வேதனை தொண்டையை அடைக்க, மேலும் தொடர்ந்தார்.

‘‘நாம மத்தவங்க கைய எதிர்பார்க்க முடியுமா? பெத்த புள்ளன்னாலும் வயிறும் வாயும் வேறதானே. வேல இல்லாத நாள்ல பெட்டி (பேக்கிங்) அடிக்கப் போவேன். இப்ப எலக்ட்ரிகல் வேலை கூட கத்துகிட்டேன். இது இல்லேன்னா அது, இப்படியே எங்க பொழப்பு ஓடிகிட்டிருக்கு.”

கண்ணாடியை ஏற்றி இறக்க தொழிலாளர்கள் பயண்படுத்தும் அதிகபட்ச பாதுகாப்பு கருவி இந்த சிறு இரப்பர் துண்டு மட்டும்தான்.