குர்குரே, லேய்ஸ் என குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் தின்பண்டங்களுக்கு மத்தியில். குற்றுயிராக போட்டியிடும் தேன் மிட்டாயையும், கடலை மிட்டாய்களையும் உற்பத்தி செய்யும் குடிசைத் தொழில்களைக் கழுத்தறுக்கிறது மோடியின் ஜி.எஸ்.டி.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் தின்பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடும் குறு – தொழிலகங்களையும், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பற்றியது இந்த புகைப்படப் பதிவு.

***

ழைய வண்ணாரப் பேட்டை தெலுங்கு செட்டித் தெரு, குழந்தைகள் விரும்பும் நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்களின் கிடங்கு.

இங்கு சிகடை (சீடை), தேன்மிட்டாய், பால்பன், பர்பி, கடலை உருண்டை, அல்வா, மைசூர் பாகு, பல்லி மிட்டாய் என்று முப்பதுக்கும் மேற்பட்ட தின்பண்டங்களை வீட்டுக்கு வீடு தயாரிக்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் ஐந்து முதல் ஐம்பது தொழிலாளர்கள் என, 600-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிலகங்கள் இங்கு உள்ளன.

பெண்களும், ஆண்களுமாக காலை 7:00 மணிக்கு வரும் தொழிலாளர்கள்  இரவு 7:00 மணி வரை வேலை செய்கிறார்கள். ஒருமணி நேர உணவு இடைவேளை தவிர மற்ற எல்லா நேரமும் குனிந்த தலை நிமிராமல் உருண்டை பிடிப்பதும், அடுப்படியில் நிற்பதுமாக உழைக்கிறார்கள்.

இவ்வாறு கடினமாக உழைக்கும் இவர்களுக்கு தினக்கூலியாக; பெண்களுக்கு ரூ.300-ம் ஆண்களுக்கு ரூ.500-ம் கிடைப்பதே அரிது.

கொதிக்கும் வெல்லப்பாகில் கிளறி, இறக்கப்பட்ட கடலைமிட்டாய் கலவையை அதே சூட்டில் உருண்டையாக பிடிக்கும் தமிழ்செல்வி, பத்மாவதி மற்றும் மகேஸ்வரி.

கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் கொப்பரை அருகில் அவர் செய்யும் வேலை,  நமக்கு அவர்களின் வாழ்நிலையை உணர்த்துகிறது.

எப்படி உங்களால் இந்த சூட்டில் வேலை செய்ய முடிகிறது என்று கேட்டதற்கு, “வயிறு ஒன்னு இருக்குதுல.. இல்லனா, நீங்க ஒக்கார வச்சி சோறு போடுறீங்களா” என்றார் இந்த இளம் தொழிலாளி.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு முதலாளிகள் விவசாயிகள் மாதிரியே தங்கள் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் உழைப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஐந்து ரூபாய் மதிப்பிலான அறுபது உருண்டைகள் அடங்கிய ஜாரை வெறும் 180 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். வாங்கி செல்பவர்கள் நூற்று இருபது லாபம் வைத்து ரூ.300-க்கு விற்கிறார்கள்.

“இந்த வியாபாரமும் பள்ளி விடுமுறை நாட்கள் வந்தால் இருக்காது. திரும்பவும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் தான் எங்களுக்கு வியாபாரம்” என்றனர்.

இம்மாதிரி 300-க்கும் மேற்பட்ட சிறு உற்பத்தியாளர்கள் இங்கு வசிக்கிறார்கள். இதில் தங்கக்கிளி, உதயம், ஆனந்தா, உமா என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள்தான் இத்தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக நின்று சவால் விடுகிறார்கள்.

அவர்களும் மோடி ஆட்சியில் சிறுதொழிலில் ஏற்பட்ட நலிவுகளை எரிச்சலுடன் பேசுகிறார்கள். “எங்களுக்கு இவர்கள் ( மைய, மாநில அரசுகள்) உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்” என்றனர்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க