ம்ப்யூட்டருக்குப் பொட்டு, கல்லாப் பெட்டிக்கும் பொட்டு; டீக்கடை பாய்லருக்குப் பொட்டு, ஹெவி பாய்லருக்கும் பொட்டு; வில்வண்டிக்குப் பொட்டு, விமான‌த்துக்கும் பொட்டு.. புரிந்திருக்குமே ஆயுத பூசைதான். அவல், பொறி, கடலை, வாழைப்பழ‌ம், வெல்லச் சர்க்கரையுடன் ஆயுதபூசை பட்டியலில் தொழிலாளியும் சேர்ந்து விட்டதனால்தான் இதை எழுத வேண்டியிருக்கிறது.

 

விவசாயிக்குப் பொங்கலைப் போல, தொழிலாளிக்கு ஆயுதபூசையா? அப்படியானால் மே தினம்?

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை.

விண்ணில் உயர்ந்து பறக்கும் செங்கொடி, முதலாளிகளைக் கிலி கொள்ள வைக்கும் போர்க்குணம், அடிவயிற்றிலிருந்து வெடித்துக் கிளம்பும் முழக்கங்கள், நெருப்புத் துண்டுகளாய் சொலிக்கும் கண்கள், கண்ணுக்கு எட்டியவரை கடல் போல விரிந்து அலைபோல ஆர்த்தெழும் அணிவகுப்பு – மே தினம். யதார்த்தம் இல்லையென்றாலும் எதிர்பார்ப்பு. ஏன் ஈடேறவில்லை இந்த எதிர்பார்ப்பு?

ஒவ்வொருவராகத் தேடிச்சென்று காகிதத்தில் கையெழுத்து வாங்கும் அக்கறை, பின்னர் கையெழுத்துப் போட்டவர்களைக் காசு போட வைப்பதில் உள்ள திறமை – மே தினத்தில் இல்லையே. பூசை போட்டு பூசணிக்காய் உடைப்பதில் இருக்கும் நம்பிக்கை ஊர்வலத்தில் இல்லையே. பொரி, கடலை விநியோகத்தில் இருக்கும் பொறுப்புணர்வு பிரசுர விநியோகத்தில் இல்லையே, தோரணம் கட்டுவதில் உள்ள ஆர்வம் கொடி கட்டுவதில் இல்லையே. ஏன்?

இதுதான் நமது முதுகில் ஏற்றப்பட்டிருக்கும் ஆயிரமாண்டு கலாச்சாரச் சுமையோ!

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி இவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் இவர்களது கருவிகள் இவர்களது உடலின் உறுப்புகள்.

சங்கு ஊதினால் உள்ளே போக வேண்டும். அடுத்த சங்கிற்கு வெளியே போக வேண்டும்.

ஆனால் தொழிலாளிக்கு? சங்கு ஊதினால் உள்ளே போக வேண்டும். அடுத்த சங்கிற்கு வெளியே போக வேண்டும். ஆலையின் தூசு எதுவும் சட்டையில் ஒட்டி யிருந்தால் கூட அதைத் தட்டிப்பார்த்து, தடவிப் பார்த்து வெறும் ஆளாக வெளியே அனுப்புவதற்கென்றே வாயிற்காவலர்கள்.

துருத்தியும் சம்மட்டியும் கொல்லனுக்கு சொந்தம்; வெல்டருக்கு? ”உனக்குச் சொந்தமில்லாததை உடைத்தெறி” என்று சொல்லவில்லை. ”போய்த் தொலையட்டும் – மூடநம்பிக்கை” என்று வைத்துக் கொண்டாலும் தனக்குச் சொந்தமானதை ஒருவர் பூசிப்பதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் கல்யாண சடங்குகளில் ‘அதிகாரம்’ செலுத்தும் பெண்களைப் போல ஆயுத பூசை ஏற்பாடுகளை கவனித்து நடத்த ‘அதிகாரமளிக்கப்பட்ட’ தொழிலாளிகள் தலை கால் புரியாமல் போகிறார்களே, அதுதான் விநோதம்.

ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ‘இது என்னுடைய ஆலை’ ‘இது என்னுடைய எந்திரம்’ என்று மண்டையில் அடிக்காத குறையாக முதலாளி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் போது கூட, தலைவாரி, பூச்சூடி, பொட்டிட்டு பிள்ளையை அழகு பார்க்கும் தாயைப்போல – எந்திரத்திற்கு எண்ணெய் முழுக்காட்டி, பொட்டு வைத்து, சாம்பிராணிப் புகை போட்டு அழகு பார்க்கும் ‘பாசம்’ தொழிலாளிக்கு எப்படி வந்தது ? பாசமா, பெருந்தன்மையா, மூடநம்பிக்கையா? வெறும் மூடநம்பிக்கை மட்டும்தானா?

போனசுக்கும், கூலி உயர்வுக்கும் போராடும் போது முதலாளியின் பிரதிநிதியாகத் தொழிலாளியின் கண்ணுக்குத் தென்படும் எந்திரம் ஆயுத பூசையன்று மட்டும் தன்னுடைய அவதாரமாகத் தெரிவது ஏன்? சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவைதான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள்தான்.

அதனால் தான் ஆத்திரம் கரை புரண்டாலும் கூட தான் வேலை செய்யும் எந்திரத்தை நொறுக்கவோ நாசம் செய்யவோ தயங்குகிறான் தொழிலாளி [மாறாக அதை மதித்து கொண்டாடி பூசை செய்கிறான்].

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவை தான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள் தான்

இன்சூரன்சு பண‌த்தை ஏமாற்றி வாங்க நினைக்கும் முதலாளியோ ஆயுத பூசையன்றே கூட ஆலைக்குத் தீ வைக்கத் தயங்குவதில்லை. விலை சரிந்து விட்டால் உற்பத்தியாகிக் கிடங்கில் குவிந்துள்ள பொருட்களைக் கடலில் கொட்டவும் தயங்குவதில்லை. முதலாளி நேசிக்கும் ஒரே எந்திரம் அவனுடைய பணப்பெட்டிதான். அதற்கு மட்டும் ஆயுதபூசையன்று மட்டுமல்ல; அன்றாடம் பொட்டு வைத்துப் பூசை போட அவன் தவறுவதில்லை.

ஆனால் தொழிலாளியால் அது முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்க வேலைக்காரர்கள், அழிக்க மறுக்கிறார்கள். அவசியம் நேரும்போது கூட அழிக்க தயங்குகிறார்கள்; அவர்களது கரங்களும், அவற்றின் உள்ளேயிருந்து ஊற்றெடுக்கும் உழைப்பும் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. உழைப்புதான் அவர்களது ஒரே ஆயுதம்.

இந்த ஆயுதத்துக்கு சந்தனப் பொட்டும் வைக்க முடியாது; சாம்பிராணி புகையும் போட முடியாது. பூசை போடவேண்டியவற்றின் பட்டியலில் முதலாளி இதைச் சேர்க்கவும் மாட்டான். ஏனென்றால் அது அவனுடைய ஆயுதமல்ல; அவனுடைய எதிரிகளின் ஆயுதம் – தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதம்.

அந்த ஆயுதத்தை – உழைப்பைப் போற்றும் நாள்தான் மே நாள். ஆலையையும் தொழிலையும் உழைப்பாளியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக்கக் குரல் கொடுக்கும் நாள், அதுதான் தொழிலாளிகளின் திருநாள்.

எனவே, சாம்பிராணிப் புகை மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

உண்டியல் சாவி தருமகர்த்தாவின் கையில் இருக்கும் போது, பூசாரியாய் இருப்பதில் என்ன பெருமை?

புதிய கலாச்சாரம் இதழ் ஒன்றிலிருந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க