தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றவாளிகளான போலீசே விசாரிப்பது எவ்விதத்தில் சரியானதாக இருக்கும் எனக் கேள்வி கேட்டு பத்திரிகையாளர் கவின்மலர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ, துப்பாக்கிச்சூட்டில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் கொலைகார அதிகாரிகளைக் காப்பாற்ற தமிழக அரசு, சிபிஐ விசாரணை கூடாது என்றும் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று (07-12-2018) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. அதில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி போலீசு தரப்பிற்காக வாதாடினார். எதிர் மனுதாரரான பத்திரிகையாளர் கவின்மலர் அவர்களின் சார்பில் வழக்கு நடத்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் மூத்த வழக்கறிஞர் காலின் கான்சால்வேஸ் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழக அரசு ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடாமல், ஆலையை மீண்டும் திறக்க திரைமறைவு வேலைகளை செய்துவருவது போலவே சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோருவதன் மூலம் கொலையாளிகளை காக்கத் துடிக்கிறது தமிழக அரசு. இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் காலின் கான்சால்வேஸ் அவர்களுக்கும், வழக்குநிதி தந்த மக்கள் அதிகாரம் அமைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களை படுகொலை செய்த விசயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்வதும், இவ்விவகாரத்தில் தமிழக அரசின் தலையீட்டை நிராகரிப்பதும் அவசரத் தேவையாக உள்ளது.
தகவல் :
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
****
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய தூத்துக்குடி மக்கள்:
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த விசாரணைக்குழு, ஸ்டெர்லைட்டை தமிழக அரசு மூடியது தவறு என்று கூறி தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கை இன்று (7-12-2018) விசாரிக்கிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
இச்சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தொடர்ந்து அறவழியில் போராடி வந்த தூத்துக்குடி மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். நீதிபதி தருண் அகர்வாலின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருகின்றனர்.
பண்டாரம்பட்டி மக்கள் போராட்டம்:
இந்நிலையில், ”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து சட்டமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்து நேற்று (06-12-2018) முதல் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி மக்கள் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டி கிராமத்தில் போலீசைக் குவித்துள்ளது தமிழக அரசு. இப்போராட்டம் குறித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் வழக்கறிஞர் அரிராகவன் கூறுகையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில், இறுதி விசாரணையின் அடிப்படையில் ஆலைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், கிராம மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். ஆலைக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்துவோம், ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.