அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ஐ இழுத்து மூடும் அத்தனை சாத்தியங்களுடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. கடந்த மாதம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக செய்தி வெளியானது. ஒரேடியாக நிறுவனத்தையே மூடிவிடும் யோசனையில் அரசு இருப்பதாகவும்கூட செய்தி வந்தது. செய்தியை மறுத்த மத்திய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்றது.
ஆனால், அம்பானியின் ஜியோ-விற்கு விளம்பர தூதுவராக பிரதமரே இருக்கும் நாட்டில், ஆயிரக்கணக்கான அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருக்கும் செய்தியும் வெளியானது. ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு மார்ச் மாதம் முதல் தேதியில் தர வேண்டிய சம்பளம் இன்னமும் வழங்கப்படவில்லை.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடை நிலை ஊழியர்கள் அவலத்துக்குரியதாக மாறியிருக்கிறது. மார்ச் மாதம் முதல் தேதியில் சம்பளம் கிடைக்காத நிலையில் பி.எஸ்.என்.எல் ஊழியர் ஒருவர் கதறி அழும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
காசியாபாத், ராஜ்நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றும் பிந்து பாண்டே, இந்த மாதம் வரவேண்டிய சம்பளம் வழங்கப்படாத நிலையில் தன்னுடைய குழந்தைகளுக்கு சாப்பாடுகூட தரமுடியவில்லை என கதறுகிறார். இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் இவர், இந்த சம்பளத்தை மட்டுமே நம்பி தங்களுடைய குடும்பம் இருப்பதாகக் கூறுகிறார்.
“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் மகன் ஆறாம் வகுப்பும், மகள் பனிரெண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பால்காரருக்குக்கூட என்னால் பணம் தரமுடியவில்லை. பள்ளி தொலைவில் இருப்பதால், ஆட்டோவில் அனுப்ப பணம் இல்லை. என்னுடைய குழந்தைகளின் நண்பர்களிடம் அவர்களையும் சேர்த்து அழைத்துப் போகச் சொல்லியிருக்கிறேன். என்னுடைய மொபைல் போனைக்கூட ரீசார்ஜ் செய்யமுடியவில்லை. ஏனெனில் என்னுடைய சம்பளம் குறைவானது, அதை தேவையானதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நிமிடத்தில் எனக்கு அடிப்படை விசயமான உணவுதான் முக்கியம்” என க்விண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார் பிந்து.
படிக்க:
♦ முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !
♦ பொள்ளாச்சி கொடூரம் : ஜல்லிக்கட்டு மாதிரி இதுக்கும் விடாம போராடணும் | மக்கள் கருத்து !
தற்போது அக்கம்பக்கம் தெரிந்தவர்களிடம் 500, 1000 என கடன் வாங்கி, சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் பிந்து. “அலுவலகத்தில் எல்லோருடைய நிலைமையும் இதுதான். சீனியர்களுக்கும்கூட தவணை கடனை செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது” என்கிறார்.
“பொதுவாக ஒரு அலுவலக உதவியாளர் வாங்கும் சம்பளத்தின் அளவில்தான் என்னுடைய சம்பளம் வரும். மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் என்னுடைய சம்பளம் முழுமையும் காலியாகிவிடும். சம்பளம் வழங்கும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே சம்பளத்தை எதிர்நோக்கி காத்திருப்பேன்” என தன்னுடைய நிலைமையை விளக்குகிறார் பிந்து.

இந்த வீடியோவை எடுத்த நபர், ஊழியர்களுக்கு தரவேண்டிய சம்பளத்தை அரசு வழங்கவில்லை, அதனால்தான் நிறுவனத்தால் சம்பளம் தரமுடியவில்லை என்கிறார். டெல்லி அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார் பிந்து.
“எங்களால் முடிந்தவரையில் நாங்கள் எங்கள் பணிகளை சிறப்பாகச் செய்கிறோம். வருமானம் வரும் அளவுக்கு பணியாற்றுகிறோம். ஆனால், எங்களுடைய ஊதியம் வந்து சேரவில்லை என்றால், எவ்வளவு காலத்துக்கு இந்த வேலையை செய்து கொண்டிருக்க முடியும்?” என்கிற கேள்வி மூலம் மோடி அரசு, பிஎஸ்என்எல் ஊழியர்களை இத்தகைய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கி அந்நிறுவனத்தை மூட முயற்சிக்கும் சதித்திட்டம் அம்பலமாகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பிந்து பாண்டேவின் வீடியோவை முன்வைத்து பலர் மோடி அரசை கடுமையாக வசை பாடி வருகின்றனர்.
பத்திரிகையாளர் ரவி நாயர், ‘ஒரு பிஎஸ்என்எல் ஊழியர் பணம் இல்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை என கதறுகிறார். இதுதான் மோடியின் ஐந்தாண்டுகால வளர்ச்சியின் லட்சணம்’ என எழுதியுள்ளார்.
A BSNL employee says she doesn’t have money to feed children..
This is what we have after Modi’s five years of Development.
Ghar pe ghuske maara hai— Ravi Nair (@t_d_h_nair) March 14, 2019
“பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவரின் கதறலைக் கேளுங்கள். அவருடைய கண்ணீரைப் பாருங்கள். வரலாற்றில் முதல் முறையாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் போயிருக்கிறது. ஒரு பிரதமர் தனியார் நிறுவனங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இவர்களைப் பார்க்கக்கூட அவருக்கு நேரமில்லை. வெட்கம்!” என்கிறார் ரோஷன் ராய்.
Listen to a @BSNLCorporate employee. Look at her tears. BSNL has failed to pay salaries to its employees for the first time in its history.
The PM promotes a private company but he doesn't even have the time to look at this. What a shame.
#BSNL
pic.twitter.com/La2UYPBePw— Roshan Rai (@RoshanKrRai) March 13, 2019
ரஜத் சொல்கிறார், “பிஎஸ்என்எல் ஊழியரின் உண்மையான நிலைமை இதுதான். பிஎஸ்என்எல்-ஐ காப்பாற்றுங்கள்; நாட்டை காப்பாற்றுங்கள். பிஎஸ்என்எல் நிறுவனமே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கு!”
@PMOIndia @manojsinhabjp @ndtvfeed @RahulGandhi
The Real position of BSNL employee .
Save Bsnl save nation.#BSNLPAYSALARY pic.twitter.com/vyHQMC8f6C
— Rajat Tonk (@RajatTonk) March 11, 2019
கெவின் வடிவேல் : ‘இந்தியா உங்கள் கண்முன்னே சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கிறது… விழித்துக் கொள்ளுங்கள் மக்களே..1.7 லட்சம் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தங்களுடைய மாத சம்பளத்தை இன்னும் பெறவில்லை’
India is being turned into a gutter right before your eyes … WAKE UP PEOPLE…..1.7 lakh BSNL Employees haven't got their salary .. SHOCKING !#GoBackRahul #GoBackModi
— Kevin vadivel (@kevin_vadivel) March 14, 2019
மக்கள் வரிப்பணத்தை தன்னுடைய சொந்த இமேஜ் பில்டப் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தும் மோடி ஆட்சியின் மகா கேவலமான நிலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் பிந்து. இவரைப் போன்ற லட்சக்கணக்கான ஊழியர்களின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப்போகிறது கேடுகெட்ட சாடிஸ்ட் அரசு?
-கலைமதி
நன்றி: த க்விண்ட்