குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 5

அமனஷ்வீலி

ஆசிரியர் வேலையில் நேர ஒதுக்கீடு

செப்டெம்பர் மாதம் பிறக்கும் தருவாயில், கல்வியாண்டு முழுவதற்கும், நான்காண்டு கால ஆரம்பக்கல்வி காலம் முழுவதற்குமான எனது எதிர்காலப் பள்ளி நாட்கள், பாடவேளைகளைக் கணக்கிடுவது, நான் குழந்தைகளுடன் நேரடியாக கலந்து பழகும் நிமிடங்களைக் கூட எண்ணிப் பார்ப்பது என் வழக்கம். இப்பழக்கம் எப்போது, ஏன் தோன்றியது என்று கூட எனக்கு நினைவில்லை. இதனால், நேரப் பற்றாக்குறைக் கவலை என்னை எப்போதுமே ஆட்கொண்டது, ஆசிரியர் வேலைக்கு அர்ப்பணிக்காமல் வெறுமனே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வு என்னிடம் எப்போதுமே நிறைந்திருக்கும்.

நான் சிறுவனாக இருந்த போது கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து அறுவடைக்குப் பிந்திய வயலில் எஞ்சியிருந்த கதிர்களைப் பொறுக்குவது வழக்கம். நாங்கள் ஒவ்வொரு கதிராகப் பொறுக்கினோம், ஆனால் அவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தபோது எவ்வளவு தானியத்தை இழக்க நேரிட்டிருக்கும் என்று பெரியவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

சரி, வீணாகும் நொடிகளையும் நிமிடங்களையும் எப்படி ஒன்று திரட்டுவது?

குழந்தைகள் நிறைந்துள்ள வகுப்பறைகளும் பள்ளித் தாழ்வாரங்களும் கல்வி கற்பிக்கும், அவர்களை வளர்த்து ஆளாக்கும் ஒரு வயல் போன்றும், ஆசிரியர் எனும் இயந்திரம் இடையறாது இவ்வயலில் பாடுபட்டு விதைகளை விதைத்தும் அறுவடை செய்தும் உழைப்பதாயும் சில சமயங்களில் எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் சுவடின்றி மறைந்து போன ஆயிரக்கணக்கான நொடிகளையும் நிமிடங்களையும் மட்டும் மீண்டும் சேகரிக்கவே முடியாது.

கவனக் குறைவான விவசாயி கோதுமையை விதைக்கும் போது விதைகளை கவனமின்றி இடப்புறமும் வலப்புறமும் வாரியிறைப்பதைப் போல், வயல்களுக்கு வெளியிலும் உழுது பண்படுத்தப்படாத நிலத்திலும் இவை விழுவதை கவனிக்காமலிருப்பது போல் கவனக்குறைவான ஆசிரியரும் திரும்பக் கிடைக்காத, விலை மதிப்பற்ற படிப்பு நேரத்தை வலப்புறமும் இடப்புறமுமாகவும் ஜன்னலுக்கு வெளியிலும் வாரியிறைக்கிறார். இந்த மதிப்புமிக்க நொடிகளை ஒன்று திரட்டி சிக்கனமாக, உட்பொருளோடு, கவனமாகச் செலவழித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எவ்வித கஷ்டமும் இன்றி நாம் பாடநேரத்தை குறைத்து இடைவேளையை அதிகப்படுத்தலாம். முக்கியமானது என்னவெனில் குழந்தைகளின் உரிய வளர்ச்சி பாதிக்கப்படாது. ஏனெனில் படிப்பு நேரத்தில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பள்ளிச் சிறுவனுக்கும் குறிப்பிட்ட தருணத்தில்தான் வேண்டுமே தவிர, முன்னரோ பின்னரோ அல்ல.

படிப்பு நேரத்தை வீணாக்கக் கூடாது, ஏனெனில் இந்நேரம் நமக்குப் போதாது, இதைப் பெருக்கவோ, தடுத்து நிறுத்தவோ யாராலும் முடியாது.

படிக்க:
மேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !
♦ கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !

இச்சிந்தனைகளுடன், நான் ஒரு தாளை எடுத்து அதில் செப்டெம்பர் முதல் மே மாதம் வரையிலான கல்வியாண்டின் காலண்டரை தீட்டுகிறேன். பின், ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு வேலை நாட்கள், எவ்வளவு பாடவேளைகள், எவ்வளவு சனி, ஞாயிற்றுக் கிழமைகள், எவ்வளவு பண்டிகைகள், மற்ற விடுமுறைகள் என்று நிமிடங்களில் கணக்கிடுகிறேன்.

என் நடைமுறையில் நான் நீண்ட நாட்களாக ஐந்து வேலைநாள் வாரத்தையும் 35 நிமிடப் பாடவேளை முறையையும் பின்பற்றி வருகிறேன். சனிக்கிழமைகளில் குழந்தைகள் வீட்டிலிருப்பார்கள், பெற்றோர்கள் விரும்பினால் இவர்களை பள்ளிக்குக் கூட்டிவரலாம். நான் அவர்களுக்காக விளையாட்டுக்களை ஏற்பாடு செய்வேன், உலாவக் கூட்டிச் செல்வேன், கலைக்காட்சி கூடங்களுக்கும் விலங்கியல் பூங்காவிற்கும் சர்க்கசிற்கும் திரைப்படங்களுக்கும் கூட்டிச் செல்வேன். இதனால் பின்வருமாறு நேரம் பங்கிடப்படுகிறது.

ஆசிரியர் வேலையில் நேர ஒதுக்கீடு
ஓராண்டில் பாடங்கள் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை

 

170

 

பூஜ்ஜிய வகுப்பில் பாடங்களின் எண்ணிக்கை

 

680 = 23,800 நிமிடங்கள்

 

1,2,3 வது வகுப்புகள் ஒவ்வொன்றிலும் பாடங்களின் எண்ணிக்கை

 

850 = 29,750 நிமிடங்கள்

 

முதல் நான்காண்டு கால ஆரம்பக் கல்வியில் பாடங்களின் எண்ணிக்கை

 

3,230 = 113,050 நிமிடங்கள்

 

குழந்தைகளுடன் ஆசிரியர் நெருங்கிக் கலந்து பழகும் நேரம் (பாடங்கள், இடைவேளைகள், பாடங்களுக்குப் பின்), பூஜ்ஜிய வகுப்பு

 

32,300 நிமிடங்கள்

 

1,2,3 வது வகுப்புகள் ஒவ்வொன்றிலும் குழந்தைகளுடன் ஆசிரியர் நெருங்கிக் கலந்து பழகும் நேரம் 39,950 நிமிடங்கள்
முதல் நான்காண்டுக் கால ஆரம்பக் கல்வியின் போது குழந்தைகளுடன் ஆசிரியர் நெருங்கிக் கலந்து பழகும் நேரம் 154,700 நிமிடங்கள்

 

கல்வியாண்டு எவ்வளவு பெரியது என்று தோன்றுகிறது அல்லவா! ஆனால் வளரும் மனிதனை மாற்றியமைக்கும் நிகழ்ச்சிப் போக்கு எவ்வளவு சிறு எண்களில் அடங்கி விடுகிறது! 3,230 பள்ளிப் பாடங்களில் குழந்தை உடல் வளர்ச்சியிலும் மூளை வளர்ச்சியிலும் அடையாளம் தெரியாதபடி வளர்ந்து விடுகிறான். இப்பாடங்கள் அதிகமா, குறைவா? இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா?

இங்கே இன்னொரு கணக்கையும் பார்ப்போம். முதல் நான்காண்டு காலக் கல்வியின் போது குழந்தைகளுடன் ஆசிரியர் கலந்து பழகும் நேரத்திற்கும் குழந்தைகளின் நான்காண்டுக் கால வாழ்நாட்களுக்கும் உள்ள விகிதம் என்ன? கணக்குப் போடும் சிறு இயந்திரத்தில் 154,700 என்று போட்டு, அதை நூறால் பெருக்கி, 2,103,380 ஆல் வகுக்கிறேன். … சுமார் 7% என்ற விடை வருகிறது. இவ்வளவு குறைவா? சிறு பள்ளி மாணவனின் வாழ்நாளில் 7% நேரம் மட்டுமே பள்ளிக் கல்விக்குச் செல்கிறது!

எனக்குக் கவலை உண்டாகிறது. ஒருவேளை ஐந்து நாள் பாடத்திற்குப் பதில் ஆறு நாள் பாடம் அவசியமோ! பாட வேளையை 10 நிமிடம் குறைக்க வேண்டாமோ! ஆனால் குழந்தைகளுக்கு வேலை செய்ய உதவ, நன்கு சிந்திக்க உதவ எனக்கு குறுகிய பாடவேளைகள் தேவை.

இப்படியாக, ஆசிரியர் வேலையில் எனக்கு நேரப் பற்றாக்குறை. என்ன செய்வது? வாழ்க்கையை நேசித்து, செய்யும் காரியத்தில் ஈடுபாடுள்ள ஒருவனுக்கு எப்போதுமே நேரம் போதாது. நாளை முதல் நான் கடைப்பிடிக்கப் போகும் உறுதி மொழியை எழுதிக் கொள்கிறேன்:

எனது ஆசிரியர் தொழிலில் நேரப் பற்றாக்குறை இருக்கும் போது, கல்வி மற்றும் வளர்ப்பு சம்பந்தமான மிக சிக்கலான பிரச்சினைகளை ஒரு சில நொடிகளில் தீர்க்கும் கட்டாயத்தை நான் அடிக்கடி சந்திக்க நேரிடும். இப்பிரச்சினைகள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை முழுவதையுமே மாற்றிவிடக் கூடியவை. எனவே நான் இதில் அவசரப்படக் கூடாது, குழந்தையின் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பானவன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க