பொன்பரப்பி சாதி வன்முறையை கண்டிக்கும் எழுத்தாளர்கள் கூட்டத்தில் ஜெயமோகன் தன்னால் ஒழுங்காக பேச முடியாததற்கு காரணம் திருமாவளவனின் திடீர் வருகை என்று குற்றஞ்சாட்டும் தொனியில் எழுதியுள்ளார்.

திருமாவளவன் அங்கு வந்த உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் உடனே பேச்சை நிறுத்திக் கொண்டதாகவும் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால் திருமாவளவன் சிதறி அமர்ந்திருந்த மக்களை முன்னே சென்று அமருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது நாற்காலிகளை எடுத்துக் கொண்டு முன்னே சென்று சிலர் அமர முற்பட்டதையே சலசலப்பு என்று கூறியிருக்கிறார்.

ஒரு நிமிட அளவுக்கு மட்டுமே அந்த இடையீடு அமைந்திருந்தது. பின்னர் திருமாவளவன் நேராக மேடைக்குச் சென்றார். பேசி முடித்துவிட்டு உடனே செல்லவிருப்பதாக அவசரம் காட்டிய ஜெமோ, கூறியபடி செல்லாமல் திருமாவளவனுடன் இணைந்து எதையோ தீவிரமாக சிந்திக்கும் பாவனையில் கப்பல் கவிழ்ந்து விட்ட சோக முகத்துடன் அமர்ந்திருந்தார்.ப் அந்த படங்களை அவரது எடுபிடிகள் அதிகமாக இப்போது பகிர்கிறார்கள்.

தனது வலைப்பதிவில் வன்னியர்களை கண்டித்திருக்கும் ஜெயமோகன், அந்த கூட்டத்தில் மூச்சு விடவில்லை. அது போல் பிரச்சினையின் சூத்திரதாரியான இந்து முன்னணியின் பங்களிப்பையும் தணிக்கை செய்துள்ளார். சென்னைக்கு வந்து சென்றதை ஒரு பயண அனுபவக் கட்டுரை போன்று தனது வலைப்பதிவில் விவரித்துள்ளார். தனது அத்தையின் மரணம், அதற்குச் செல்ல நேர்ந்தது, பின்னர் தாமதமாக விமான நிலையம் சென்றது, அங்கு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட சந்திப்பு, சென்னை வந்த பிறகு விசிக அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால் தனக்கு ஏற்பட்ட சிக்கல், சாலை மதில் ஏறிக் குதித்தது என்று தடைகள் பல கடந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை ஆரவாரமாக எழுதி உள்ளார்.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்
♦ பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

ஒரு வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கும் பாவனை கொண்ட இவ்வளவு கேடுகெட்ட உரையை ஜெயமோகனைத் தவிர வேறு யாரும் ஆற்ற முடியாது. எந்த அரசியல்வாதியுடனும் மேடையேறியதில்லை; இவர் (திருமா) மட்டும் விதிவிலக்கு என்று சொன்னதில் வெளிப்பட்ட உயர் சாதி பெரிய மனம் நவீனத்தை கடந்து சிந்திப்பதாக காட்டிக் கொள்ளும் ஒருவர் வாய்க்கப் பெற்றிருப்பது பேரவலம்.

ஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை. இந்தக் கூட்டம் தலித் அரசியலில் ஜெயமோகன் கைநனைக்க உதவ அவரது குமரி மாவட்ட எடுபிடி எழுத்தாளரால் ஒழுங்கு செய்யப்பட்ட போலியானதொரு தலித் ஆதரவு பாசாங்குக் கூட்டம் என்பதில் சந்தேகமில்லை.

அதில் கலந்து கொண்டு திருமாவளவன் அவ்வளவு ஈடுபாட்டுணர்வுடன் பேசியது சங்கடமாக இருந்தது என்றாலும் பேச்சில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை வெளியிட்டார். “ஒரு பிரச்சினை எழும்போது அதில் உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் பட்டும்படாமலும் கருத்து சொல்வது நீங்கள் ஜனநாயகவாதிகள் தானா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்றார்.

அவர் யாரையோ நோக்கி சொன்னதாக இருந்தாலும் மேடையில் அமர்ந்திருந்த ஜெயமோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற போலிகளின் முகத்தில் அது முதலில் கண்டிப்பாக அறைந்திருக்கக்கூடும்.

நன்றி : முகநூலில் – Raj Dev