தேதி : 21.4.2019

பத்திரிகைச் செய்தி

 

பொன்பரப்பி வன்கொடுமைக் குற்றத்துக்கு மருத்துவர் ராமதாசே முழுப்பொறுப்பு!

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க-வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க-வின் இந்து மதவெறி அரசியலும் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை. இது காட்டுமிராண்டிதனத்திற்கும் நாகரீக சமூகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்.

நமது சமூகத்தின் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்துபவை சாதி-மதவெறி அமைப்புகள்தானே தவிர, இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல,  இது ஜனநாயகமும் அல்ல என்பதையே இந்த சாதிவெறித் தாக்குதல் தெளிவாக நிரூபிக்கிறது. தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்ட யாரும் இந்த தாக்குதலைத் தடுக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இவர்கள் அனைவருமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனை ஆதரிக்கக் கூடாது என பிள்ளை, வன்னியர், செட்டியார், பார்ப்பனர், நாயுடு என பிற ஆதிக்க சாதியினர் அனைவர் மத்தியிலும் பிரச்சாரம் நடந்திருக்கிறது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி உணர்வை மனதில் வைத்து பானை சின்னத்தை புறக்கணித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு தீண்டாமை வெறியைத் தூண்டியிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.

சிதம்பரம் நகரத்திலேயே நடைபெற்ற இந்த பிரச்சாரத்துக்கும், பொன்பரப்பி கிராமத்தில் பா.ம.க.-வினர் கையில் ஆயுங்களுடன் இந்து முன்னணி உடன் சேர்ந்து கொண்டு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இது வெறும் பொருட்சேதம் குறித்த  பிரச்சினை அல்ல, ஜனநாயகம் என்பது பெயரளவில் கூட இருக்கக் கூடாது என்பதுதான் இந்த தாக்குதல் மூலம் சாதி-மத வெறியர்கள் நமக்குக் கூறும் செய்தி. அனைத்து மக்களும் அமைதியாக வாழமுடியாமல் சாதி மத வெறி கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பாசிச அதிகாரத்தை அரசிலும் சமூகத்திலும் வேரூன்ற செய்வதுதான் இத்தகைய தாக்குதல்களின் நோக்கம்.

தீண்டாமை என்பது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல, சாதி இந்து சமூகம் இழைக்கின்ற குற்றச்செயல். இதில் தேர்தல் கட்சிகளும், பெரும்பான்மை சமூகத்தினரும் அமைதியாக இருப்பதும், பா.ம.க. – இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

இது பொன்பரப்பி தலித் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை. கொலை மிரட்டல் விடுத்து, கும்பலாக நமது வீட்டை அடித்து நொறுக்கினால், நாம் என்ன நீதியை அரசிடம், சமூகத்திடம் கோருவோமோ அந்த நீதி பொன்பரப்பி மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்.

தமிழக அரசே!

  • தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களையும், வெறியூட்டி தூண்டி விட்ட பா.ம.க தலைமையையும் கைது செய் !
  • சாதி-மத வெறிக் கருத்துகளைப் பரப்பி, கலவரங்களைத் தூண்டிவிடும் அமைப்புகளைத் தடை செய்!
  • பானைக்கு வாக்களித்த தலித் மக்களை பாதுகாக்கத் தவறிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • ஆளை மாற்றும் தேர்தலால் அகன்று விடாது சாதி வெறி!
  • அரசுக் கட்டமைப்பை மாற்றுவதொன்றே சாதி வெறியை வீழ்த்தும் வழி!

பொன்பரப்பி வன்கொடுமையை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டிகள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இவண்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் அதிகாரம்.


புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

பத்திரிகைச் செய்தி

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் வன்னிய சாதி வெறியர்கள் கும்பலாக தலித் மக்கள் குடியிருப்பில் புகுந்து, அவர்களை தாக்கியும், உடைமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புகள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சாதிவெறியர்களின் இந்த தாக்குதல்களை படம்பிடித்த நியுஸ் 18 நிருபர் கலைவாணன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

திட்டமிட்ட இந்த வன்னிய சாதிவெறித் தாக்குதலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கிடவும், தாக்குதல் நடத்திய வன்னிய சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

முன்னதாக, வாக்குச்சாவடி அருகிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையை உடைத்து அக்கட்சியினரை வெறியேற்றியுள்ளது சாதிவெறி பிடித்த கும்பல். தொடர்ந்து விசி கட்சியினர் பாமகவை சேர்ந்த ஒருவரைத் தாக்க, இதற்காகவே காத்திருந்த வன்னிய சாதிவெறி கும்பல் அருகில் இருந்த காலனிக்குள் புகுந்து தலித் மக்களையும் அவர்களின் உடைமைகளையும் வேட்டையாடியுள்ளது. நடந்த வன்முறை வெறியாட்டத்தை அரசியில் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டு பலரும் கண்டித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மருத்துவமனையில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தலித் மக்கள் மீதான இந்த வன்முறை, எதோ ஒரு கும்பலால் குடிபோதையில் எதேச்சையாக நிகத்தப்பட்டதல்ல. வன்னிய சாதி வெறியர்களால் நேரம் பார்த்துக் காத்திருந்து, அவர்களின் கோபத்தை தூண்டி, வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல். தேர்தல் அறிவித்த பின்னர் பாமக, அதிமுக, பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது முதலாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் மீது தீவிரமான அதிருப்தி நிலவத் துவங்கியது. சொந்த சாதி, கட்சித் தொண்டர்களே காறித்துப்பி, கட்சியிலிருந்தே வெளியேறும் நிகழ்வுகள் தொடர்ந்தது. ஒருபுறம் பணம் பதவி சுகம், மறுபுறம் சொந்தக் கட்சியிலேயே அம்பலப்பட்டு நிற்கும் தலைமை. இதிலிருந்தெல்லாம் தன்னை விடுவித்துக் கொண்டு இழந்த செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டுமெனில் சாதிவெறியைத் தூண்டுவதைத் தவிர்த்து பாமகவினருக்கு வேறு எதும் வழியில்லை என்பதை உணர்ந்ததன் பின்னணியில்தான், இந்தச் சாதிய வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இசுலாமிய, கிறுஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ‘இந்துக்களின்’ மதவெறியைத் தூண்டி அதை தனது அரசியல் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ, அதே சூத்திரத்தை பயன்படுத்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் மூலன் சாதிவெறியைத் தூண்டி பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆதாயமடைகிறது. தேசியக் கட்சியான மதவெறி பாஜகவும், மாநிலக் கட்சியான சாதிவெறி பாமகவும் இணையும் புள்ளி இதுவே! இந்த அடிப்படையில்தான் அந்த கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட இயற்கைக் கூட்டணி அது! சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேர்தல் அரசியல் பாதை நிச்சயம் தீர்வல்ல!

திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக முற்போக்குவாதிகள் குரல் கொடுக்க வேண்டும். வன்னிய சாதி வெறியை அம்பலப்படுத்த வேண்டும். இன்னும் குறிப்பாக ஆதிக்க சாதியில் உள்ள ஜனநாயகவாதிகள் தாங்களாகவே முன்வந்து இந்த வன்முறையை கண்டிக்க வேண்டும். இந்த வன்முறையை எதிர்த்து போராடுபவர்களுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி களத்தில் நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு : 9444442374

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க