திருத்துறைப்பூண்டி அருகில் ஆலத்தம்பாடி கரும்பியூரில் தோழர் பி. சீனிவாச ராவ் சிலை தரை மட்டமாக தகர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி தலைவர்களின் சிலைகளை மூடுவது வழக்கம். ஆனால் இங்கு அதிகாரிகளோ, தேர்தல் விதிமுறையைக் காரணம் காட்டி சிலையை அதன் பீடத்தோடு தகர்த்து வீசியிருக்கிறார்கள்.

டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடி, வாழ்ந்து மறைந்த தோழர் சீனிவாச ராவின் பெயர் தஞ்சை மண்ணில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடிமைப்பட்டுக் கிடந்த டெல்டா மக்களை தலைநிமிரச் செய்த தன்னிகரில்லாத தலைவர். தன் வாழ்நாளையே பொதுவுடைமைத் தத்துவத்திற்கும், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். இவரைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.

கர்நாடகாவில் உள்ள குடகு நாட்டில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்நிய துணி எரிப்புப் போராட்டத்தில் மக்களோடு சேர்ந்து பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். ஆங்கிலேயர்களால் தடியாலும், பூட்ஸ் காலாலும் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அத்தனை அடி உதைகளையும் அஞ்சாத நெஞ்சோடு எதிர்க்கொண்டார். பிறகு “நியூ ஏஜ் ” பத்திரிகையில் முழுநேரமாகப் பணிபுரிந்து பொதுவுடைமைக் கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை செய்தார்.

பிறகு டெல்டா மாவட்டத்தில் கம்யூனிசத்தையும், விவசாய சங்கத்தையும் உருவாக்க தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாகச் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்து அயராமல் உழைத்தார். அப்போதுதான், வயல்களில் கூலி விவசாயிகள், சிறு குறு விவசாயிகள், பண்ணையடிமைகளாய் குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பும், ரத்தமும் உறிஞ்சப்படுவதை கண்டு கொதித்தார்.

சூரியன் உதிக்குமுன் வயலுக்கு சென்று மறையும் வரை வேலை செய்யும் உழைப்புச் சுரண்டலை கடுமையாக எதிர்த்தார். தோளிலே போட வேண்டிய துண்டை இடுப்பிலே கட்டி கூனிக்குறுகிப் போவதைக் கண்டு அதிர்ந்து போனார். அதை மாற்ற மக்களிடமே தங்கி அவர்களில் ஒருவராக மாறவே பல்வேறு போரட்டங்களை நடத்தினார். முதலில் விவசாயிகள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.”வெள்ளை உருவம், அழுக்குப்படியாத சட்டை, மொழிப் பிரச்சனை, உயர்ந்த படிப்பறிவு, பார்ப்பனத் தோற்றம் ஆகியவை மக்களிடமிருந்து இவரை தனிமைப்படுத்தியது. அந்த எண்ணத்தை உடைக்க விவசாயிகளோடு சேர்ந்து வயலிலே வேட்டியை சுருட்டிக்கட்டி களை பறித்தார். அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் எப்போதும் கூடவே இருந்தார். “கூலி உயர்வு” கேட்டு முதன்முதலில் விவசாயிகளை பண்ணையார்களுக்கு எதிராகக் கேள்வி கேட்க வைத்தார்.

படிக்க:
நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை
♦ பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி

வயலில் நாள் முழுதும் நெளியும் புழுக்களாக இல்லாமல் உரிமைகளுக்காகப் போராட வைத்தார். கீழத்தஞ்சையில் மாடு மேய்க்கும் சிறுவன், மாதர் குல கூலியாட்கள், பண்ணையாள் வரை அடிமைத்தனத்தில் பணிபுரிந்தவர்க்கு “ஆண்டான் அடிமை” என்னும் நிலையை மாற்றி அவர்களை வென்றெடுத்தார். களப்பாள் குப்பு, இரணியன், மணலி கந்தசாமி போன்ற தோழர்களை வீறுகொண்டு எழச் செய்தார். திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் இருந்த சாணிப்பால், சவுக்கடி போன்ற வன்முறைக்கு எதிராகக் கடுமையாக போராடினார்.

ஆதிக்க சாதி தெருக்களில் கூட நடக்க விடாத மக்களை “மாதர் சங்கம், கூலி விவசாய தொழிலாளர் சங்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை உணர்வுப்பூர்வமாக தட்டியெழச் செய்து மக்களுக்கு புத்துயிர் ஊட்டினார். ஆரம்ப காலக்கட்டத்தில் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் மத்தியில் அமாவாசை ஒன்றுதான் எளிதாக புரிந்து கொள்ளும் நாள். அன்று இரவு நேரங்களில் சிவப்பு தலைப்பாகை, சிவப்பு வண்ண அடையாளங்களை அணிந்து தென் பறை என்ற இடத்தில் கூடுவதற்கு ஏற்பாடு செய்தார். கிராமப்புறங்களில் தங்கிய இடங்களில் எல்லாம் ஏழ்மை நிலையறிந்து அவர்கள் உண்ணும் உணவான நண்டு, நத்தை, குளத்து மீன், நீராகாரம் போன்றவற்றை மக்களோடு மக்களாக உண்டு உணர்வுப்பூர்வமாக அவர்களுக்கு வழிகாட்டி அமைப்புக்களை ஏற்படுத்தினார்.

நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு அஞ்சி வாழ்ந்த மக்கள் மத்தியில் எண்ணற்ற சிரமங்களுக்கு நடுவில் எள்ளளவும் முகம் சுளிக்காமல் பொறுமையின் சிகரமாக மக்களுக்காவே வாழ்ந்தார். தன் குடும்பத்தை விட்டு, தான் யார் என்று கூட சொல்ல விரும்பாமல் டெல்டா மண்ணிலே உயிர் விட்டார்.

இத்தகைய தியாகத் தோழரின் சிலையை தேர்தல் விதிமுறை என்று கூறி இடித்துள்ளனர் காவிகளின் எடுபிடி அதிகாரிகள். தேர்தல் ஆணையம் சிலைகளை மூட உத்தரவிட்டால், கம்யூனிஸ்ட்டுகளின் சிலையை உடைப்பதற்கான கொழுப்பு காவி கொடுக்கும் தைரியத்தில்தானே வருகிறது ? இவ்வளவு நாளும் காவிக் கும்பலிடமும் கார்ப்பரேட் கும்பலிடமும் பொறுக்கித் தின்ன இந்த அதிகாரிகள்தான் இன்று ’நேர்மையான’ தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளாம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் நடவடிக்கை என்ற பெயரில் பார்ப்பனியத்தை எதிர்த்த பெரியார், கம்யூனிச உணர்வை ஊட்டிய சீனிவாச ராவ் போன்றோரை மக்களிடமிருந்து பிரிக்க நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ் காவிக் கும்பல். சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் வன்முறைகளைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக முற்போக்காளர்களின் சிலைகளை சேதப்படுத்தியும் அகற்றியும் வருகிறது. இதற்கான முதல் முன்னோட்டம்தான் திரிபுராவில் லெனின் சிலை உடைப்பும், தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு.

தோழர் சீனிவாச ராவ் சிலை உடைப்பைக் கண்டித்து கரம்பியம் பகுதி மக்கள் தன்னெழுச்சியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று கூறி நழுவப் பார்த்துள்ளனர். ஆனால் மக்கள் விடாப்பிடியாக போராடியதால் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் அதனை மீண்டும் கட்டித் தருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இத்தகவல் மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு தாமதமாகத்தான் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்று இது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தோழர் சீனிவாச ராவ் சிலை உடைப்பை கண்டிக்கும் விதமாகவும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்யும் வகையிலும், போராட்ட முன்னெடுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமையில் உள்ள தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தோழர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஜனநாயக சக்திகள் ஆகியோருடன் இது குறித்து பேசப்பட்டு வருகிறது.

கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் ஹட்ரோகார்பன் எடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டும், காவி பாசிசமும் மக்களை துரத்திக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் காவி சுரண்டலுக்கு எதிராகப் போராடிய முன்னோடிகளின் சிலைகளைக் கூட அவர்கள் விட்டுவைக்க விரும்பவில்லை. மீண்டும் ஆதிக்க சாதியும், பார்ப்பனியமும் துளிர் விட்டு தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது. அதை எதிர்க்கொள்ள தோழர் சீனிவாச ராவ் சென்ற புரட்சிப் பாதையில் நம் பணியைத் தொடர்வோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 82207 16242

2 மறுமொழிகள்

  1. தந்தை பெரியார் சிலையை RSS, BJP பார்ப்பனீய பாசிச பயங்கரவாதிகள் அவர்களின் கிரிமினல் கைக்கூலிகளைக்கொண்டு சேதப்படுத்தினர்.மாபெரும் கம்யூனிச தோழர்.சீனிவாசராவின் சிலையை சேதப்படுத்த பாசிச அடிமை சர்க்கார் எடப்பாடியின் அரசு அதிகாரிகளை ஏவுகிறது. இந்த மாதிரி கேவலமான கீழ்த்தரமான !கயமையான
    செயல்களை உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக இடதுசாரி பெரியாரிய அமைப்புக்கள் அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்…
    சிலைகளை சேதப்படுத்தினால் சித்தாந்தம் ஒழிந்து விடுமா?!

  2. பார்ப்பன சாதிப் பெயரான ‘ராவ்’ என்ற பெயராலேயே தோழர் சீனிவாசராவை உச்சிமோர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.
    உயிருடன் இருக்கும் போதும் உழைக்கும் மக்களை ஒன்றிணைத்தார். தற்போது சிலை வடிவிலும் உடைபட்டு நம்மை ஒன்றிணைக்கிறார்.
    மீண்டும் நிறுவுவோம் தோழரின் சிலையை…..!

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க