ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருந்த நிலையில் சனிக்கிழமை கேதார்நாத் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார் மோடி. தேர்தல் நடத்தை விதிகளை ‘பிரதமர்’ மோடியும் மதிக்கவில்லை; ‘பிரதமர்’ மோடியை தேர்தல் ஆணையமும் கண்டிக்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் மக்கள் ஒரு பிரதமர் என்றும் பார்க்காமல், மோடியை கீழிறங்கி கேலி செய்துவருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக மோடியின் குகை ‘தியானம்’ ட்ரெண்டிலேயே இருக்கிறது!

விளம்பர மோகியான மோடி, குகைக்குள் தியானம் செல்லும்போதும் கேமராவுடன் சென்றிருக்கிறார். தியானம் என்றால் கட்டாந்தரையில் செய்வார்கள். மோடி என்னும் யோகி, பஞ்சு மெத்தை மேல் அமர்ந்து தியானம் செய்கிறார்.  குகை என சொல்லப்படும் அந்த இடமும் குகை அல்ல; குகை போன்று வடிவமைக்கப்பட்ட தங்கும் அறை! உல்லாச தங்கும் அறைகளில் என்னென்ன வசதிகள் உண்டோ, அவை அத்தனையும் அந்த குகை போன்ற அறையில் உண்டு. நாள் வாடகை ரூ.990 லிருந்து ரூ. 3000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய குகையின் உரிமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

படிக்க:
மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !
♦ ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !

முன்னதாக மோடியின் குகை தியானப் படங்கள் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. கேதார்நாத் குகையில் ‘கர்ம யோகி’ என்ற தலைப்பிட்டு படங்கள் பகிரப்பட்டிருந்தன.

பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர்வாசிகள் பிரதமர் என்றும் பாராமல் கேலி செய்யத் தொடங்கினர்.

சஞ்சய் ஜா, ‘கேமராவுடன் தியானம் சாத்தியமே’ என்கிறார்.

“ட்ரஸ் மாட்ட ஆங்கர், பஞ்சு மெத்தை, பின்னாடி தலையணை, இதை படம் புடிக்க கேமிரா.. கேட்டா குகையில் தியானம். மொத்தத்துல இத இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது!! ” என்கிறார் நிரஞ்சன்.

“உணர்ச்சிபூர்வமாக இருக்கிறேன், சிவாஜி தாத்தா நியாபகம் வருது” என்கிறார் பிரமோத்.

“என் மனைவி நடு இரவில் தண்ணீர் கேட்கும்போது, இப்படித்தான் இருப்பேன்” என்கிறார் கனோனி, மோடி தியானப் படத்தைப் பகிர்ந்து…

மோடியிடம் அரசியல் அல்லாத பேட்டி எடுத்த நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா, “நண்பர்களே, கடந்த சில நாட்களாக ஏராளமான ஆன்மீக படங்களைப் பார்த்து வருவதால், தியானப் படங்கள் குறித்த ஒர்க்‌ஷாப் ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறேன். திருமண புகைப்படங்களுக்குப் பிறகு, இது மிகப்பெரிய வெற்றி வாய்ப்புள்ள விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்” என கேலியுடன் ட்விட்டியுள்ளார்.

“யாராவது இந்த பேரரசரிடம் நேற்றைய கேதார்நாத் படத்தைப் பார்த்து உலகமே சிரிக்கிறது என சொல்லி இருக்கிறார்களா? அல்லது அவருடைய முட்டாள்தனமான அமைச்சர்களிடமிருந்து வரும் புகழ்ச்சியான கருத்துக்களை மட்டும்தான் அவருக்கு அனுப்புவார்களா?” என கேட்கிறார் ப்ரீத்தி.

“கேதார்நாத்திலிருந்து வாத் நகருக்கு” தேர்தல் முடிவு வந்தால் மோடி தனது ஊரான வாத்நகருக்கு செல்வார் என்கிறார் ஆஸி.

“3.17 மணிக்கு மோடி தியானம் செய்கிறார். க்ளிக்.

4.10க்கு மோடி இன்னும் சில மணி நேரத்தில் தியானத்தைத் தொடங்குவார். ஏ.என்.ஐ-இன் வேண்டுகோளுக்கு இணங்க மோடி சில படங்களுக்கு போஸ் கொடுத்தார்.” பிரதிக் சின்ஹாவின் ட்விட் இது.

கேதார்நாத் சென்ற மோடிக்கு வேறு எந்த பக்தருக்கும் இல்லாத சிறப்பு ‘சிவப்பு கம்பள’ மரியாதை அளிக்கப்பட்டது. இது குறித்தும் பலர் கேலி செய்தனர்.

“சரியான உடை, சிவப்பு கம்பளம் மற்றும் ஜோடிக்கப்பட்ட புகைப்பட வாய்ப்பு இல்லாமல் எந்தவொரு தியானமும் முழுமையடையாது அல்லது பொருளற்றதாக இருக்காது.”

மோடியின் தியான குகையில் இருக்கும் “அந்த கொக்கிகள் ஒளிவட்டங்களை தொங்கவிடவா?” எனக் கேட்கிறார் மனு ஜோசப்.

“ஒளிப்பதிவாளர் பார்த்துக்கொண்டிருக்க மோடி தியானம் செய்கிறாரா?” என வினவுகிறார் ஸ்வாதி சதுர்வேதி.

கலைமதி
நன்றி: ஸ்க்ரால்


தவறாமல் பாருங்கள் …

புருடா மன்னன் – Cloudy மோடி | கலாய் காணொளி