தொலைக்காட்சி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 722 மணி நேரம் திரையில் காட்டியிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் ஏப்ரல் 28, 2019 வரையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இவ்விவரங்களை வெளிப்படுத்தியிருக்கிறது ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வு நிறுவனம் (Broadcast Audience Research Council (BARC).)

akshay with modi
மோடியிடம் ‘அரசியல் அல்லாத பேட்டி’ எடுக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்

இந்தக் காலகட்டத்தில்தான் அதாவது இந்த 28 நாட்களுக்குள்ளாகத்தான் 722 மணிநேரம் தொலைக்காட்சி நிறுவனங்களால் மோடி காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் இதே தொலைக்காட்சி நிறுவனங்கள், இதே காலகட்டத்தில் ராகுல்காந்தியை வெறுமனே 252 மணிநேரத்திற்கும் குறைவாக மட்டுமே காட்டியுள்ளனர். அதாவது ராகுல்காந்தியை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமான நேரத்திற்கு இத்தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடியைக் காட்டியிருக்கின்றன. இத்தகவலை கடந்த திங்கள் அன்று டைனிக் பாஸ்கர் எனும் பத்திரிகை வெளியிட்டது.

இத்தனைக்கும் ராகுல்காந்தியும் மோடியும் இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட சம அளவிலான பேரணிகளில் கலந்து கொண்டுள்ளனர். அதாவது ராகுல் காந்தி 65 பேரணிகளிலும், மோடி 64 பேரணிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

படிக்க:
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !
கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சுமார் 124 மணிநேரங்கள் காட்டியுள்ள தொலைக்காட்சிகள், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை 84 மணிநேரம் மட்டுமே காட்டியிருக்கின்றன.

NaMo Tv
” நமோ டிவி ” மோடியின் விளம்பர சேனல்

முன்பெல்லாம் தேர்தல் காலம் ஆரம்பித்துவிட்டாலே வீதியில் போஸ்டர்களும் நோட்டீசுகளும் களைகட்ட ஆரம்பித்துவிடும். பல்வேறு விதமான சின்னங்கள், பல்வேறு வாக்குறுதிகள் என சுயேட்சை முதல் தேசியக் கட்சிகள் வரை அனைவரின் தேர்தல் பிரச்சாரமும் மக்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் அகலத் திறந்திருந்தன.

ஆனால் தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் முதலில் சுவரெழுத்துக்களும், நோட்டீஸ்களும், சுவரொட்டிகளும் தடை செய்யப்பட்டன. ஆனால் இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என்றன தேர்தல் விதிமுறைகள். அதாவது அச்சு மற்றும் தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து பிரச்சாரம் செய்ய வசதியுள்ளவர்கள் மட்டும் போட்டியிடலாம் என்பதுதான் அதன் உள் அர்த்தம்.

தேர்தல் பிரச்சார முறை என்ற பெயரில் பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டன. இவை அனைத்துமே பணம் இல்லாதவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வண்ணமே அமைந்திருந்தன.

மக்களிடம் யாருடைய பிரச்சாரத்தைச் சேர்க்க வேண்டும் என்பதை இன்று கார்ப்பரேட் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. இணையதளம், தொலைக்காட்சி என மக்களை சென்றடையும் அனைத்து ஊடகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது பாஜக.

இதற்காகவே சமூக வலைத்தளங்களில், திட்டமிட்டுச் செயல்படும் ட்ரோல் கும்பல்கள், பொய்ச் செய்தி பரப்புக் கும்பல்கள், பொதுக் கருத்தை உருவாக்கும் கும்பல்கள் என இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது பாஜக கும்பல். தொலைக்காட்சி நிறுவனங்களோ, தமது கார்ப்பரேட் நலனுக்காக மோடியை அதிக நேரம் ஒளிபரப்புவது போன்றவற்றின் மூலம் மக்களின் மனதில் மோடி என்ற பாசிஸ்ட்டின் படையெடுப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதற்கான சிறந்த சாட்சிதான் இந்தப் புள்ளிவிவரங்கள்.

– நந்தன்

செய்தி ஆதாரம் :
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் : TV channels showed Modi for over 722 hours in April


தவறாமல் பாருங்க …

புருடா மன்னன் – Cloudy மோடி | கலாய் காணொளி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க