தேதி : 15.05.2019

பத்திரிக்கைச் செய்தி!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி – கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! ஆணவக்கொலையா? – காதல் கொலையா?

தீர்ப்பு வரட்டும்! அதற்கு முன் தீ மூட்ட வேண்டாம் !

ந்த குற்றமும் செய்யாத மாணவி திலகவதியின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது. இனிமேல் யாரும் இது போன்று சாகக் கூடாது என சாதிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவருமே விரும்புகிறோம். ஆனால், அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில் நாம் வாழ்கிறோம்.

எந்தவித திருமணமானாலும் அது இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்டது அல்லது இரு குடும்பத்தினர் சம்பந்தபட்டது மட்டுமே என்று பார்ப்பதற்கு நாம் பழக வேண்டும். நாடக காதல், ஒரு தலைகாதல், என்ற சாதிவெறிக்கு நாம் தூண்டில் இறையாகக் கூடாது.

மே மாதம் 8-ம் தேதி மாலை 5:00 மணியளவில் விருத்தாசலம் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வரும் திலகவதி என்ற மாணவி கருவேப்பிலங்குறிச்சியில் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவி திலகவதி

திலகவதியின் பெற்றோர் சுந்தரமூர்த்தி – கொளஞ்சி கூலி தொழில் செய்து வரும் அடித்தட்டு குடும்பத்தினர். இந்த கொலையைச் செய்ததாக, பள்ளியில் அவருடன் ஒன்றாக படித்து பழகி வந்த ஆகாஷ் என்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்து உள்ளனர். கொலை செய்யப்பட்டவர் வன்னியர், கொலை குற்றம் சாட்டபட்டவர் தலித் என்பதால் சாதி அரசியல் உள்ளே நுழைந்து இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது.

தலித் மக்கள் வாழும் பகுதியான (ஆகாஷ் ஊர்) பேரளையூர் கிராமத்தில் அச்சத்தின் காரணமாக ஆண்கள் – இளைஞர்கள் அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். பெண்களும் சிறுவர்களும் மட்டுமே உள்ளனர். இத்தகைய அச்சத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? அரசா? ஆதிக்கசாதி வெறியர்களா?

இது காதல் கொலையா அல்லது ஆணவக்கொலையா என்பது விசாரணைக்குப் பின்னர்தான் தெரியவரும். ஆனால், அதற்கு முன்னரே மருத்துவர் ராமதாஸ் அவர்கள் திலகவதியின் கொலைக்கு வழக்கம் போல் தலித் மக்கள் மீது குற்றஞ்சாட்ட முயல்வதுடன், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை இதற்காக களத்தில் முடுக்கி விட்டுள்ளார்.

படிக்க:
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
♦ சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

தன் சொந்த சாதியில் மணம் முடிக்க வேண்டும் என சராசரியாக சிந்திக்கும் பெற்றோரை சாதிவெறியர்களாக மாற்ற முயற்சிக்கிறார். முஸ்லீம்களை எதிரியாக காட்டி வளரும் பா.ஜ.கவின் மதவெறி அரசியல் போல தலித்துக்களை எதிரியாக காட்டி சாதிவெறி அரசியலை வளர்க்க முயல்கிறார் மருத்துவர் ராமதாஸ். இதற்காக தலித் அல்லாத அனைத்து சாதியினரையும் துணைக்கு அழைக்கிறார்.

திலகவதியின் கொலைக்கு காரணமான குற்றவாளி யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. கொலையை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆகாஷ்தான் உண்மைக் குற்றவாளியா அல்லது இது திலகவதியின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவக் கொலையா என்பது விசாரிக்கப்படவேண்டும்.

கொலை செய்ததை ஆகாஷே ஒப்புக்கொள்வதாக ஒரு வீடியோவை பதிவு செய்து போலீசார் அதனை வெளியில் பரவ விட்டிருக்கின்றனர். இத்தகைய சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்காது என்பது போலீசாருக்கு நன்கு தெரியும். இருந்த போதிலும் சட்டவிரோதமாக ஒரு தரப்பிற்கு ஆதரவாக வீடியோவை வெளியிட்டு, பதற்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நடவடிக்கை அனைவருக்கும் போலீசார் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூலம் சிறப்பு விசாரணைக்கு உத்திரவிட வேண்டியது அவசியமானதாகும்.

ஆகாஷ் திலகவதி இருவரும் பழகி வந்ததும், ஒன்றாகப் பள்ளியில் படித்து வந்ததும், அடிக்கடி திலகவதியின் வீட்டிற்கு ஆகாஷ் செல்வதும் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தெரியும். இவர்கள் பழகியது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். இரு குடும்பங்களுமே ஏழைகள். “திலகவதியை ஆகாஷ் கொலை செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆகாஷ் அத்தகைய சுபாவம் உடையவன் அல்ல. கொலை நடந்த நேரத்தில் ஆகாஷ் பேரளையூர் என்ற தனது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான்” என்று அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

கண்ணகி – முருகேசன்

நாடகக்காதல் என்ற பிரச்சாரத்தை நம்புகிறவர்கள் கண்ணகி முருகேசன் கொலையை நினைத்துப் பார்க்க வேண்டும். 2003 -ல் விருத்தாசலத்தில் தலித் இளைஞர் பொறியியல் பட்டதாரி முருகேசன். வன்னியர் வகுப்பை சேர்ந்த கண்ணகி  வணிகவியல் பட்டதாரி. இவர்களது காதலின் எதிர்வினையாக, இருவர் வாயிலும் விஷம் ஊற்றி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்னர்.

இருவரின் பெற்றோரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அவர்களையே குற்றவாளியாக்கி குற்றப்பத்திரிக்கையையும் தாக்கல் செய்து போலீசார் வழக்கை முடித்தனர். பிறகு சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. பெண்ணின் தந்தை சகோதரன் உள்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதனுடன் சாட்சியத்தை அழிக்க முயன்றதாக விருத்தாசலம் போலீசு ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரையும் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து உள்ளது சி.பி.ஐ. 16 ஆண்டுகள் ஆனபிறகும் கண்ணகி முருகேசன் வழக்கு நீதிக்காக காத்திருக்கிறது.

பருவம் வராத காதலும் பாலியல் சார்ந்த குற்றங்களும் இன்று மென்மேலும் அதிகரித்து வருகின்றன. ஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை.

உள்ளூர் மாஜிஸ்டிரேட் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  ஏட்டு முதல் தனக்கு கீழ் உள்ள எஸ்.பி-யை பாலியல் துன்புறுத்தல் செய்த ஐ.ஜி வரை, பாலியல் புகாரில் உள்ளனர். 3 வயது குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை வல்லுறவு – கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பாலியல் நுகர்வு வெறியாலும் பக்குவமின்மையாலும் பல கொலைகளும் தற்கொலைகளும் தினம்தோறும் நடக்கின்றன. இந்த சூழ்நிலை, பெண்களை மட்டுமல்ல நம் அனைவரையும் அச்சுறுத்துகிறது.

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் 250 -க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களை வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டு அதைக்காட்டி அவர்களை விலை மாதர்களாக விலைபேசியது என்பது கொலைக்குற்றத்தைக் காட்டிலும்  கொடிய குற்றம். ஆனால் பேருக்கு சிலரை கைது செய்து அந்தக் குற்றக்கும்பலை போலீசு பாதுகாக்கிறது. இந்தக் கிரிமினல்களின் சாதி என்ன என்ற கேள்வியையோ, பாதிக்கப்பட்ட பெண்களின் சாதி என்ன என்ற கேள்வியையோ யாரும் எழுப்பவில்லை.

இங்கே நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். நேர்மையான விசாரணை உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கட்டும். அதற்கு முன்னர் இத்தகைய சம்பவங்களை சாதியப் பார்வையில் பார்க்க சொல்லித் தூண்டிவிடும் சாதிவெறி அரசியலை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

எனவே;

  • திலகவதியின் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
  • தங்களது இரு மகள்களையும் இழந்து தவிக்கும் திலகவதியின் பெற்றோர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை வழங்குவதுடன், உரிய அரசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • அதிகரித்து வரும் பாலியல் ஆபாச நுகர்வு வெறி குற்றங்களுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அரசை நிர்பந்தித்து போராட வேண்டும்.
  • காதல் தற்கொலை, கொலை சம்பவங்களில் சாதி மத வெறி அரசியலை தூண்டி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சாதிக்கட்சிகள், சாதிசங்கங்களை அனைத்து தரப்பு மக்களும் புறக்கணிக்க வேண்டும்.

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க