ரவுண்ட் அப் (Round Up) எனப்படும் களைக்கொல்லி மருந்து பிரபல அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு மருந்து எனும் பட்சத்தில் அதிலுள்ள வேதிப்பொருட்களின் கலவையைப் பட்டியலிட்டு அதன் பக்கவிளைவுகள் குறித்தும் எச்சரிக்க வேண்டும் என்பது நடைமுறை.
அப்படி கலக்கப்பட்ட கிளைஃபோசேட் எனும் கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருள் குறித்து எந்த எச்சரிக்கையையும் தராமல் திட்டமிட்டு மறைத்து விற்பனை செய்துள்ளது மான்சாண்டோ நிறுவனம். இதை வாங்கிப் பயன்படுத்திய ஆல்வா & ஆல்பெர்டா தம்பதியினருக்கு அதன் பின்விளைவாக புற்று நோய் உண்டாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஆதாரங்களுடன் கலிஃபோர்னியா நீதிமன்றத்தை நாடினர்.
இப்போது மான்சாண்டோவைக் கையகப்படுத்தியுள்ள பேயர் நிறுவனம் இத்தம்பதிக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 14,000 கோடி இந்திய ரூபாய்) இழப்பீடாகத் தரவேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த மார்ச் 28 இதே போன்று மான்சாண்டோவின் களைக் கொல்லியை பயன்படுத்தியதன் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்வின் ஹார்டமேன் என்ற 70 வயது முதியவருக்கு, 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை, பேயர் நிறுவனம் இழப்பீடாகத் தரவேண்டும் என்று சான் ஃபிரான்சிஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட ஆல்பெர்டா கூறுகையில் “மான்சாண்டோ நிறுவனம் எங்களை உரிய நேரத்தில் எச்சரித்திருக்க வேண்டும்; அதாவது இந்த களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் கேன்சர் வர நேரிடும் என்று எச்சரித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாங்கள் இக்கட்டான சூழலிலிருந்து தப்பித்திருப்போம்.”
இத்தம்பதியினரின் வழக்குரைஞர் மைக்கேல் மில்லர் கூறும்போது ‘1982-ல் தங்களுடைய கனவு இல்லத்தை வாங்கினர். வீட்டைச் சுற்றிலும் முளைத்திருந்த களைகளை அகற்றும் வண்ணம், தாங்கள் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்த களைக்கொல்லி மருந்தான ரவுண்ட் அப்-ஐ வாங்க முடிவு செய்தனர். மான்சாண்டோ நிறுவனத்தின் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அதை வாங்கினர். ஆனால் மான்சாண்டோ அவர்களின் நம்பிக்கையைத் தகர்த்து விட்டது’ என்றார்.
படிக்க :
♦ ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ !
♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !
மான்சாண்டோ நிறுவனம் இதுபோன்று ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்துதான் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் 2015-ல் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி கிளைஃபோசேட் என்ற வேதிப்பொருள்தான் ரவுண்ட அப் என்ற களைக்கொல்லி மருந்தில் பிரதானமாகக் கலக்கப்படுகிறது. மான்சாண்டோ-வைக் கையகப்படுத்தியுள்ள பேயர் நிறுவனம் அபராதத் தொகை மிகவும் அதிகம் என்று கவலை தெரிவித்துள்ளது. மேலும் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. கிளைஃபோசேட் வேதிப்பொருள் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே பயன்பாட்டுக்கு வந்தது என்றும் அதில் கேன்சரை உருவாக்கும் எந்தக் கூறுகளும் இல்லை என்றும், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் தங்களது தயாரிப்பை அங்கீகரித்துள்ளது என்றும் கூறுகிறது பேயர்.
பாதிக்கப்பட்ட தம்பதியினரிடம் பெயரளவுக்குக் கூட வருத்தம் தெரிவிக்காமல் திமிர்த்தனமாக அறிக்கை வெளியிட்டு வரும் மான்சாண்டோ நிறுவனம் இது போன்ற பல தயாரிப்புக்களை உலகெங்கும் விற்பனை செய்துவருகிறது. ஒரு அமெரிக்கத் தம்பதிக்கே நீதி கிடைப்பதில் இத்தனை சிரமங்கள் இருக்கும் போது மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி கேட்கவா வேண்டும்?
-வரதன்
நன்றி : ஆர்.டி