குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 10

அமனஷ்வீலி

முதல் நாளின் கடைசிப் பாடவேளை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகள் தாங்கள் விருப்பப்பட்டதை வரைந்த தாள்களைத் தருகின்றனர். தங்கள் பெயர், குடும்பப் பெயர், ஏதாவது தெரிந்த வார்த்தைகள், எழுத்துகள், எண்கள் முதலியவற்றையும் எழுதும்படி நான் கேட்டுக் கொண்டேன். இவற்றை எல்லாம் நான் பின்னால் பார்ப்பேன்.

முதல் பள்ளி நாளைப் பற்றிய கருத்துக்கள் இப்பொழுது கிடைத்த பின், நான் மிக முக்கியமானதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது, அவர்களின் வாழ்க்கையில் முழு மாற்றம் ஏற்பட்டுள்ளது. “குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் என்ன முக்கிய நிகழ்ச்சி நடந்துள்ளது” என்ற கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? ”நாங்கள் பள்ளிக்குச் சென்றோம்!” “நாங்கள் பள்ளி மாணவர்களானோம்!” “நாங்கள் படிக்க ஆரம்பித்தோம்!” என்று அனேகமாக அவர்கள் பதில் சொல்வார்கள்.

நான் இந்தக் கேள்வியைப் பற்றி, சரியாகச் சொன்னால், குழந்தைகளிடமிருந்து எப்படிப்பட்ட பதில் கிடைத்தால், அதை ஆதாரமாகக் கொண்டு அவர்களை உலகை அறியும் போக்கினுள் மேன்மேலும் ஆழமாக இட்டுச் செல்லமுடியும் என்று நிறைய சிந்தித்தேன்.

முதல் கேள்விக்குப் பின், இன்னொரு முடிவான கேள்வியைக் கேட்பேன்: “பள்ளியில் எப்படிப்பட்ட விஷயங்கள் உங்களை எதிர்நோக்கியுள்ளன?”

இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றோடொன்று தர்க்க ரீதியாகத் தொடர்புடையவை என்று எனக்குப்பட்டது. இரண்டாவது கேள்வியைக் கேட்பதற்கான அடித்தளத்தை முதல் கேள்வி தயார்படுத்துகிறது.

வரையப்பட்ட தாள்கள் ஒன்றுதிரட்டப்பட்டு விட்டன. குழந்தைகள் என் கண்களைப் பார்க்கின்றனர்.

”குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்று என்ன முக்கிய சம்பவம் நடந்தது?”

பதில்கள் என்னை பிரமிக்க வைத்தன. “எங்கள் வீட்டை இடித்தார்கள்!” “எங்கள் வீட்டின் பின் கார் எரிந்தது!” “எங்கள் தெருவில் விபத்து நடந்தது!” “கார் ஒரு ஆள் மீது மோதியது!” “என் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை!” “எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இறந்தார்!” “கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன!” “எங்கள் தண்ணீர்க் குழாய் உடைந்தது!”

“என் தாத்தாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள்!..”

”என்ன இது? குழந்தைகள் என்னை ஏமாற்றியிருக்க முடியாது.” நான் கேள்வியை சரியாகக் கேட்கவில்லையா என்ன? அல்லது, தன் வீட்டை இடித்ததாக முதலில் பதில் சொன்னவனை அடுத்து கண் மூடித்தனமாக, ஆட்டு மந்தையைப் போல் நடந்து கொண்டார்களா? எரிந்தது, மோதியது, சாவு போன்ற சோக நிகழ்ச்சிகள் மட்டும் ஏன் எல்லோர் கவனத்திலும் முன்வந்தன?

நான் எதிர்பார்த்தபடி பதில்கள் வரவில்லை என்று தெரிந்ததுமே ஒரு வேளை நான் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமோ? “என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்? நாங்களனைவரும் பள்ளிக்கு வந்தது அல்லவா எங்கள் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சி” என்று யாராவது ஒருவன் எழுந்து சொல்லுவான் என்று நான் நம்பினேன்.

ஓ, கேள்வியே! நீ ஆசிரியருக்கு ஒரு முட்டுக்கட்டை!“ இவையெல்லாம் வருத்தம் தரத்தக்கவைதான், குழந்தைகளே. ஆனால் நான் இதைப் பற்றிக் கேட்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் என்ன முக்கியமான, மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்தது? நன்றாக யோசித்துப் பாருங்கள்.”

குழந்தைகளுக்கோ யோசிக்கவே விருப்பமில்லை. அவர்கள் பதில் சொல்லத் தயார். நான் காத்துக் கொண்டிருப்பதைச் சொல்ல மாட்டார்களோ! அப்படியேதான் நடந்தது.

“எங்களுக்குப் புது வீடு கிடைத்துள்ளது!”

“என்னை ஞாயிற்றுக்கிழமை சர்க்கசிற்குக் கூட்டிச் செல்வதாக அம்மா சொன்னாள்!”

“நாங்கள் பியானோ வாங்கினோம்!”

“நேற்று என் அப்பா வேலைப் பயணத்திலிருந்து திரும்பினார்!”

“கிராமத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துள்ளனர்!”

“என் நாய் திரும்பி வந்தது!”

“என் தாத்தா நேற்று மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தார்!”

“இன்று எனக்கு சைக்கிள் வாங்கித் தருவார்கள்!”

”என் அம்மாவின் தலையிலிருந்து கட்டைப் பிரித்து விட்டனர், காயம் தெரியவில்லை!”

”என்ன இது? குழந்தைகள் என்னை ஏமாற்றியிருக்க முடியாது.” நான் கேள்வியை சரியாகக் கேட்கவில்லையா என்ன? … எரிந்தது, மோதியது, சாவு போன்ற சோக நிகழ்ச்சிகள் மட்டும் ஏன் எல்லோர் கவனத்திலும் முன்வந்தன?

என்ன செய்வது! இவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் எனக்குத் தம் பாடத்தைச் சொல்லித் தந்தனர், நானும் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சி தருகிறது, எது வருத்தம் தருகிறது என்று எனக்கு ஓரளவு தெரியும். ஆசிரியரின் கேள்விகளுக்கான குழந்தைகளுடைய பதில்களின் துல்லியம், விசயத்தின் தர்க்கத்தை விட குழந்தையின் அனுபவத்தின் தர்க்கத்தை அதிகமாகச் சார்ந்துள்ளது என்ற ஒரு முக்கியமான முடிவிற்கு நான் வருகிறேன். தம் வாழ்க்கையில் என்ன முக்கிய, மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றன என்று குழந்தைகள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கையில் நான் என் குறிப்பேட்டில் ஒரு ‘முதுமொழியை’ எழுதுகிறேன். இதை இனி மேல் பின்பற்றுவேன்:

குழந்தைகளை நோக்கி ஆசிரியர் கேட்கும் கேள்வி என்பது முறையியலுக்கு மட்டுமின்றி ஆசிரியரியல் முழுவதற்குமே ஒரு ஜீவ அணுவாகும். இதை நுண்ணோக்கி ஆடியின் கீழ் பார்த்தால் அதில் கல்வி போதிக்கும் முழு நிகழ்ச்சிப் போக்கு மற்றும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு முறைகளின் தன்மை ஆகியவற்றின் போக்கு முழுவதையும் அறிந்துணரலாம்; இதில் ஆசிரியரையே கூட அறிந்துணரலாம். ஏனெனில், கேள்வி என்பது அவருடைய ஆசிரியர் திறமையின் வெளிப்பாடாகும்.

“உங்களிடம் இவ்வளவு மகிழ்ச்சியான செய்திகள் உள்ளனவா! மிக்க நன்று! சரி, இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்?”

“பள்ளியில்.”

படிக்க:
பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி
மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

“நல்ல, கூட்டிசையான பதில்! நன்றி, குழந்தைகளே! பள்ளியில் உங்களை என்ன விஷயங்கள் எதிர்நோக்கியுள்ளன என்று சொல்லுங்களேன்.”

”சுவாரசியமான விஷயங்கள்!” “பெரிய, மிகப் பெரிய விஷயங்கள்!” “தயவு செய்து திரும்பச் சொல்லுங்கள்!”

“மிகப் பெரிய விஷயங்கள் எம்மை எதிர்நோக்கியுள்ளன!”

எளிய, தெளிவான பதில்! இதே போன்ற உற்சாகத்துடனும் காரிய முனைப்புடனும் ஒரு சில ஆண்டுகட்கு முன் எனது ஆறு வயது மாணவர்களில் ஒருவன் கூறிய அதே வார்த்தைகளை நான் மீண்டும் கேட்டேன்….

நாங்கள் படிகளின் வழியே மாடியிலிருந்து கீழே இறங்கி வருகின்றோம். பெற்றோர்கள் வாயிலருகே எங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

“நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள்!”

“புத்தகங்கள், மற்ற பொருட்கள் இல்லாமலா? வியப்பாயுள்ளது…. என்ன இருந்தாலும் பள்ளி அல்லவா!…” என்று அவர்கள் குழம்பினர்.

பெற்றோர்களின் ஆச்சரியக் குரல்களுக்கு நடுவே ஒரு சிறுவனின் உற்சாகமான குரல் மீண்டும் மீண்டும் கேட்கிறது:

“அம்மா, அம்மா! எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா! அம்மா, எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா!..”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க