பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் |  பாகம் – 5

டோக்ளியாட்டி

கையால், பாசிஸ்டு சர்வாதிகாரமானது பூர்ஷுவா மற்றும் குட்டி பூர்ஷுவாக்களை அணி திரட்டுவதன் மூலம் ஒரு வெகுஜன இயக்கத்தைப் பெற்றிட முயற்சிக்கிறது.

இந்த இரு இயக்கங்களையும் இணைப்பது மிகவும் சிரமமானது. ஒன்றிற்கு பாதகம் ஏற்படும் விதத்தில் மற்றொன்றை வலியுறுத்தாமலிருப்பது மிகவும் சிரமமானது. உதாரணத்திற்குச் சொல்வதென்றால் ரோம் படையெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் இத்தாலிய பாசிசம் வளர்ந்து வந்தபொழுது, கட்சி இந்த முக்கியமான பிரச்சினையை அலட்சியம் செய்தது. அதாவது அதிருப்தி அடைந்துள்ள குட்டி பூர்ஷுவா பகுதியினரை பெரும் பூர்ஷுவா வர்க்கத்தினர் தம் பக்கம் ஈர்க்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் முக்கியமான பிரச்சினையை உதாசீனம் செய்தது. அச்சமயத்தில் இந்தக் குட்டி பூர்ஷுவாப் பகுதியினரில் முன்னாள் இராணுவத்தினர், பணக்காரர்களாக முயற்சித்துக் கொண்டிருந்த ஏழை விவசாயிகளின் பல பிரிவுகள் மற்றும் யுத்தத்தினால் சீர்குலைந்துபோன ஏராளமான தறுதலைகள் அடங்கியிருந்தனர்.

இவையனைத்துக்கும் அடிப்படையாக ஒரு இத்தாலிய சமூக அம்சம் இருந்து வருவதை நாம் புரிந்துகொள்ளவில்லை. அதைத் தீர்மானிக்கக் கூடிய ஆழமான சமூகக் காரணங்களை நாம் காணவில்லை. முன்னாள் இராணுவத்தினர், தறுதலைகள் ஆகியோர் யாரோ தனி நபர்கள் அல்ல என்பதையும், மாறாக அவர்கள் ஒரு வெகுஜனப் பகுதியினர் என்பதையும் வர்க்க அம்சங்கள் கொண்டுள்ள ஒரு நிகழ்வுப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவில்லை. எப்படியேனும் போய்த் தொலையுங்கள் என்று நாம் அவர்களிடம் சொல்ல முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவில்லை. உதாரணமாக யுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டுவிட்டு வீடு திரும்பியவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். யுத்தத்தின்போது அதிகாரம் செலுத்திவந்தது போன்றே இப்போதும் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்க இவர்கள் விரும்பினர். நடப்பிலுள்ள அமைப்பை விமர்சனம் செய்தனர். நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளை எழுப்பினர்.

இந்த வெகுஜனங்களில் ஒரு பகுதியை நம் பக்கம் ஈர்ப்பதும் மற்றொரு பகுதியை செயலற்றதாக்குவதும் இதன்மூலம் பூர்ஷுவாக்களின் சூழ்ச்சி வலையில் அவர்கள் வீழ்ந்து விடாதபடி தடுப்பதும் நமது கடமையாக இருந்தது. ஆனால் இந்தக் கடமைகளை நாம் புறக்கணித்தோம்.

இது நமது தவறுகளில் ஒன்றாகும். இந்தத் தவறு இதர இடங்களிலும் நடைபெற்றது. மத்தியதரப் பகுதி மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தையும், பூர்ஷுவா வர்க்கத்தினர் தொழிலாளி வர்க்கத்திற்கெதிராக பயன்படுத்தக் கூடிய போக்குகள் குட்டி பூர்ஷுவாக்களிடம் உருவாகி இருப்பதையும் கவனியாது விட்டுவிட்டோம்.

போர்டிகா (Amadeo Bordiga)

நம்முடைய தவறுகளில் மற்றொன்றானது பாசிச சர்வாதிகாரத்தின் வர்க்கத் தன்மையை போதுமான அளவுக்கு எப்பொழுதும் வலியுறுத்திக் கூறாததாகும். முதலாளித்துவத்தினுடைய பலவீனம்தான் பாசிச சர்வாதிகாரம் தோன்றுவதற்கான காரணம் என்று நாம் சுட்டிக் காட்டினோம். போர்டிகாவினுடைய ஓர் உரையானது பாசிசத்தை உருவாக்குவதில் முதலாளித்துவத்தின் மிகப் பலவீனமான சக்திகளின் – கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினரின் – பங்கை வன்மையாக வலியுறுத்தியது. இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பாசிசம் என்பது ஒரு பலவீனமான முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்குரிய ஒரு ஆட்சிமுறை என்ற அனுமானத்திற்கு வந்தோம். நாம்தான் முதலில் பாசிசத்தை எதிர்கொண்டவர்கள் என்ற முறையில் இந்தத் தவற்றின் ஒரு பகுதி நமக்குத் தெரிய வந்தது. ஜெர்மனியில் பாசிசம் எவ்வாறு உருவெடுத்தது என்பது போன்றவற்றை நாம் பின்னால் கண்டோம்.

அதே நேரத்தில் மற்றொரு தவறையும் செய்தோம். இத்தாலியப் பொருளாதாரத்தின் தன்மையை நிர்ணயிக்கும் பொழுது நாம் கிராமப்புறத்தில் உற்பத்தியானது எவ்வளவு, நகரங்களில் உற்பத்தியானது எவ்வளவு என்பதைக் காண்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டோம்.

இத்தாலி என்பது தொழிலும், மூலதனமும் மிக அதிகளவில் குவிந்துள்ள நாடுகளில் ஒன்று என்ற அம்சத்தை நாம் காணத்தவறினோம். விவசாயத்தின் பங்கைக் கவனித்தால் மட்டும் போதாது. மாறாக இத்தாலிய மூலதனத்தின் மிக வளர்ச்சியடைந்த உள்ளார்ந்த இயைபையும் நாம் கவனித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் காணத்தவறி விட்டோம். இத்தாலிய முதலாளித்துவம் என்பது ஒரு பலவீனமான முதலாளித்துவம் அல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு மூலதனக் குவிப்பு, ஏகபோகங்கள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டாலே போதுமானதாயிருந்திருக்கும்.

இந்தத் தவறைச் செய்தவர்கள் நாம் மட்டுமே அல்ல. இந்தத் தவறை பொதுப்படையானது என்று கூறலாம்.

உதாரணத்திற்குச் சொல்வதென்றால் 1931-ம் ஆண்டில் பாசிச இயக்கத்தினுடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஜெர்மனியில் இதேபோன்று ஒரு தவறு செய்யப்பட்டது. பாசிசம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும், ஜெர்மனியைப் போன்ற ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில், தொழிலாளி வர்க்க சக்திகள் நன்றாக ஸ்தாபன ரீதியாக அணி திரண்டிருக்கும் ஒரு நாட்டில் அத்தகைய ஆபத்து ஏதும் இல்லை என்பதால் பாசிச சர்வாதிகார அச்சுறுத்தல் கிடையாது என்றும் சில தோழர்கள் கூறினார்கள். பாசிசத்திற்கான பாதையை நாங்கள் தடுத்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள். விரிவடைந்த நிர்வாகக் குழுவின் 11-வது கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பல உரைகளிலும் இதே சாயல் காணப்பட்டது. இதே தவறைத்தான் நாமும் செய்தோம். பாசிச வெகுஜன இயக்கம் வளர்ச்சியுறுவதற்கு அதற்குள்ள உள்ளார்ந்த ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டோம். 1932-ம் ஆண்டில் இதே தோழர்கள் புரூனிங் அரசாங்கத்தின் தலைமையின்கீழ் பாசிச சர்வாதிகாரம் ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டதென்றும், எனவே பாசிச இயக்கத்திற்கெதிராக மேலும் போராட வேண்டிய தேவை இல்லையென்றும் கருதினார்கள்.

இதுவும்கூட ஒரு தவறுதான். பாசிசம் என்பது பூர்ஷுவா அமைப்புகளின் பிற்போக்குத்தனமான ஓர் உருமாற்றம் என்றுதான் அவர்கள் பாசிசத்தைக் கண்டனர். ஆனால் புரூனிங் அரசாங்கமானது இன்னும் பாசிச சர்வாதிகாரமாக ஆகிவிடவில்லை. அவ்வாறு ஆவதற்கான ஒரு முக்கியமான ஆக்கக்கூறு அதனிடம் இல்லை. அதாவது தொழிலாளி வர்க்கத்தை வெற்றிகரமாக முழுக்க முழுக்க முறியடித்து அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்திற்குப் பாதை செப்பனிட்டுத் தரக்கூடிய ஒரு பிற்போக்கான வெகுஜன அடித்தளம் அதற்கு இல்லை

பகுத்தாய்வு தவறாக இருக்குமானால் அரசியல் திசைவழியும் தவறாகவே இருக்கும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முசோலினியின் இத்தாலி பாசிசக் கட்சியின் தலைமை அலுவலகம்.

இது சம்பந்தமாக மற்றொரு பிரச்சினையும் எழுகிறது. பாசிச சர்வாதிகாரம் உருவாக்கப்படுவது பூர்ஷுவா வர்க்கம் பலப்படுவதைக் குறிக்கிறதா அல்லது பலவீனமாவதைக் குறிக்கிறதா என்பதுதான் அந்தப் பிரச்சினை.

இது குறித்து அதிக அளவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜெர்மனியில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. பாசிச சர்வாதிகாரம் என்பது பூர்ஷுவா வர்க்கத்தின் பலவீனத்தின் அறிகுறியே என்று சில தோழர்கள் தவறாக வாதிட்டார்கள். அவர்கள் இவ்வாறு கூறினார்கள்; பூர்ஷுவா வர்க்கத்தினர் பழைய முறைகளில் ஆள முடியாததால் பாசிசத்தை கடைப்பிடிக்கிறார்கள். எனவே இது இவர்களது பலவீனத்தைத்தான் காட்டுகிறது.

உள் முரண்பாடுகள் தீவிரமடைந்து ஜனநாயக வடிவங்களைப் பூர்ஷுவா வர்க்கத்தினர் கலைக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுவதன் விளைவாகவே பாசிசம் வளர்கிறது என்பது உண்மையே. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து காணும் பொழுது, நாம் ஒரு ஆழமான நெருக்கடியை எதிர்நோக்குகிறோம் என்பதும், ஒரு புரட்சிகர நெருக்கடி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும், அதை பூர்ஷுவா வர்க்கத்தினர் சந்திக்க விரும்புகிறார்களென்பதும் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் இந்த அம்சத்தை மட்டும் காண்பது பின்வரும் தவறான முடிவை எடுப்பதற்கு இட்டுச் செல்லும்: பாசிச இயக்கம் எந்த அளவுக்கு அதிகமாக வளர்கிறதோ அந்த அளவுக்குப் புரட்சிகர நெருக்கடி மிகவும் கூர்மையடையும்.

இவ்வாறு வாதிடும் தோழர்கள் குட்டி பூர்ஷுவாக்களைத் திரட்டுவது என்ற இரண்டாவது அம்சத்தைக் காணத் தவறி விடுகிறார்கள். இவ்வாறு திரட்டுவது பூர்ஷுவா வர்க்கத்தினர் ஜனநாயக முறையினின்று மாறுபட்ட வெவ்வேறு முறைகளில் ஆட்சி புரிய அனுமதிக்குமளவுக்கு அந்த வர்க்கத்தினரைப் பலப்படுத்தும் ஓர் அம்சமாக உள்ளது என்பதையும் அவர்கள் காணத் தவறி விடுகிறார்கள்.

ராடெக் (Karl Radek)

மற்றொரு தவறு எதுவென்றால் எல்லாம் நடக்கிறபடிதான் நடக்கும் என்ற போக்கில் போவதாகும். ராடெக் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்; அவர் கூறுவதாவது: இந்தத் தோழர்கள், முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு மாற்றமடையும் காலகட்டம் இருக்கும்; அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகத்தான் இருக்கும் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். இதற்கிடையில் ஒரு விஷயத்தை சேர்க்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். அதாவது முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பாசிச சர்வாதிகாரக் காலகட்டம் இருக்குமென்பதைச் சேர்க்க வேண்டும் என்று இந்தத் தோழர்கள் கருதுகிறார்கள்.

இந்தத் தவறானது, தொலைநோக்குப் பார்வையை இழக்கச் செய்து, பாசிசம் ஒருமுறை அதிகாரத்தைக் கைப்பற்றினால் அனைத்தும் முடிந்துவிட்டது என்ற கருத்தில் போய்த்தான் முடியும். அதற்குப் பதிலாக பிரான்சில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். பூர்ஷுவா வர்க்கத்தினர் தங்கள் சக்திகளைத் திரட்டியது போன்றே பாட்டாளி வர்க்கத்தினரும் தங்கள் சக்திகளைத் திரட்டி அதற்குத் தக்க பதிலடி கொடுத்தனர். கம்யூனிஸ்டுக் கட்சியானது பாசிசத்தை முன்னேற விடாமல் மிகத் திறமையாக அதன் பாதையில் தடைக்கற்களை ஏற்படுத்தியது.

புகாரின் (Nikolai Bukharin)

இன்று பிரான்சில் பாசிசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை பிப்ரவரி 6-ம் தேதியிலிருந்ததைப் போன்று இல்லை 4 : சக்திகளின் பரஸ்பர பலம் இப்போது மாறியுள்ளது. பாசிச அபாயம் கடந்துவிடவில்லை; ஆனால் அதற்கெதிராகப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதுவே முதலாளித்துவ வர்க்கத்தின் நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது. பாசிசம் எதிர்த்தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதை முறியடிக்க நாம் தயாராக வேண்டும். இவ்வாறு நோக்கவில்லை என்றால் இந்தப் பிரச்சினையை நாம் புரிந்து கொள்ள முடியாது. வர்க்கப் போராட்டமாக இதைக் காண வேண்டும்.

பூர்ஷுவா வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்குமிடையே நடக்கும் போராட்டமாக இதைக் காண வேண்டும். இதில் பூர்ஷுவா வர்க்கம் மிக அப்பட்டமான வடிவத்தில் தன்னுடைய சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டுமென்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கமோ தன்னுடைய அனைத்து ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதன் மூலம் தன்னுடைய சொந்த சர்வாதிகாரத்தை நிறுவுவதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது.

பியாதகோ (Georgy Pyatakov)

இதனால்தான், ஜனநாயக உரிமைகளுக்காக நாம் ஏன் போராட வேண்டும் என்று போர்டிகா ஏளனமாகக் கேட்டதன் மூலம் மிகப் பெரிய தவறிழைத்தார். சொல்லப் போனால் நடப்பு காலகட்டத்தில் நிலைமை மிக மோசமாகக் கூடும். கட்சியின் வேலைத் திட்டம் குறித்து புகாரினுடனும், பியாதகோவுடனும் நடத்திய வாதப் பிரதிவாதங்களின்போது சில கேள்விகளுக்கான விடையை 1919-ம் ஆண்டிலேயே லெனின் அளித்துள்ளார்.

ஏகாதிபத்தியக் கட்டம் என்பது வந்து விட்டதால் முந்தைய கட்டங்களை கணக்கிலெடுக்க வேண்டிய தேவை கட்சியின் வேலைத் திட்டத்திற்கு இனியும் அவசியமில்லை என்று புகாரினும் பியாதகோவும் கூறினர். ஆனால் லெனின் இதற்கு இவ்வாறு பதில் கூறினார்: இல்லை, இத்தகைய கட்டங்களை நாம் கடந்து விட்டோம்; ஆனால் இக்கட்டங்களில் தொழிலாளி வர்க்கம் பெற்ற ஆதாயங்கள் மதிப்பில்லாமல் போய்விடவில்லை. இத்தகைய ஆதாயங்களைப் பாதுகாக்க பாட்டாளி வர்க்கம் போராடியாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு ஒரு போர்முனை இப்போராட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்:

4. 1934 பிப்ரவரி 6-ம் தேதி பிரான்ஸில் நடந்த வலதுசாரிக் கலகங்கள், காவல்படையால் ஒடுக்கப்பட்டன. பாசிஸ்டு ஆட்சி அமைப்புகள் மேலும் பரவுவதற்கான அபாயம் பற்றி பிரான்சின் இடதுசாரிகளையும் அகிலத்தையும் விழிப்படையச் செய்ய உதவின. எனவே பொதுஜன அணிக் கொள்கைக்கு இந்த சம்பவம் வழிவகுத்தது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க