பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலேய சாகுபடியாளர்கள் இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியும், கடனுக்கு அடிமையாக்கியும் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கேற்ப அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தினார்கள்.

இன்று அரியானாவில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தி விட்டு சோளத்தைப் பயிரிடச் சொல்கிறது அம்மாநில பா.ஜ.க அரசு.

அரியானாவின் மொத்த விவசாய விளைநிலமான 35 லட்சம் ஹெக்டரில் 13.5 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.

அரியானா விவசாயிகள் கரீப் பருவத்திற்காக நெல் விதைப்பிற்கு தயாராகி வருகிறார்கள். அரியானா அரசு,  ஏழு மாவட்டங்களில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தச் சொல்லி அறிவித்திருக்கிறது. இதற்கு அம்மாநில அரசு கூறும் காரணம் நிலத்தடி நீர் குறைந்து வருகிறதாம்.

நெல் சாகுபடியில் அதிக நீர் செலவாகிறதாம். சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிரிடுவதனால் அதிக அளவு நீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் இது மண்வளப் பாதுகாப்புக்கு அவசியமானது என்றும் கூறி வரும் கரிஃப் பருவத்தில்  சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிர்செய்ய, ஒரு சோதனைத் திட்டத்தை அறிவித்திருத்திருக்கிறார் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ 4,500 மதிப்பிலான சோள – பருப்பு விதைகள் இலவசம், ஹெக்டருக்கு ரூ 766 பயிர்க் காப்பீட்டு திட்டம், விளைச்சலை அரசே குறைந்தப் பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும்  என்றும் கூறியிருக்கிறது.

படிக்க:
விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை
♦ அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

விவசாயிகளுக்கு  உள்ளீடு விலைகள் நெல் சாகுபடிக்கு அதிகமாக இருந்தாலும், ஏக்கருக்கு ரூ 50,000 முதல் 55, 000 வரை வருவாய் கிடைக்கும். ஆனால் சோளத்தில் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ 25,000 முதல் ரூ 30,000 தான் கிடைக்கும் என்று முன்னாள் வேளாண்மை விரிவாக்க அதிகாரி ரஜ்ஜித் சிங் கூறுகிறார்.

தானேசர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்தப் சிங், அரசே கொள்முதல் செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது ஒரு வாய்மொழி வாக்குமூலமாகவே இருக்கிறது என்கிறார்.

அரியானா முதலமைச்சர் தெளிவாகக் கூறுவது இதைத்தான் :

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே 50,000 ஹெக்டரில் நெல் விவசாயத்தை இல்லாமல் செய்துவிட்டு சோளத்தையும் பயிர்வகைகளையும் பயிர் செய்வதுதான். இதுதான் இந்தியாவின் பயிர்கள் மாற்றி பயிரிடுவதற்கான முதல் சோதனைத்திட்டம்.

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

நிலத்தடி நீர் உயர்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்க லாயக்கற்ற அரியானா அரசு, விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு அதிக நீர் செலவாவதாக வகுப்பு எடுக்கிறது.  பயிரின் குறைந்தப் பட்ச ஆதரவு விலையே அரசு அறிவிக்கும் திட்டத்தில்தான் சாத்தியம் என்பதும் இத்திட்டத்தில் அம்பலமாகிறது. மேலும், விவசாயிகளை கட்டாயமாக பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

விவசாயிகள் எதை சாகுபடி செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தில் காலனிய பிரிட்டிஷ் அரசும், மறுகாலனியாக்கத்தை தீவிரமாக  அமுல்படுத்தும் பா.ஜ.க அரசும் வேறு வேறல்ல!

வினவு செய்திப் பிரிவு பரணிதரன்

செய்தி ஆதாரம் :
Haryana’s plan to wean farmers away from paddy comes a cropper
Haryana to discourage paddy crop
Haryana offers paddy farmers incentive to grow maize, pulses

2 மறுமொழிகள்

  1. நெல் விவசாயத்தில் ஏக்கருக்கு 55,000 ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பது மிகவும் மிகையான மதிப்பீடு. நடைமுறைக்குப் பொருத்தமில்லாதது. நெல் விவசாயத்தில் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்றால், வயல்வெளிகளில் வாழை, கரும்பு போன்ற பணப்பயிர்களை ஏன் விவசாயிகள் பயிரிடுகின்றனர்? மேலும் வேளாண்மைத்துறையின் மதிப்பீட்டு வழிகாட்டுதலே ஏக்கருக்கு சராசரி நிகர வருவாய் 25,000 ரூபாய்க்கும் கீழ்தான் குறிப்பிடுகிறது. அதேபோல நெல்விவசாயம் பிற பயறுவகைப் பயிர்களைவிட அதிக தண்ணீர் செலவாளிப் பயிர்தான் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கபட்ட உண்மையாகும். இந்தியாவில் ஒரு டன் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தும் நீரின் அளவில் மூன்றில் ஒரு பங்கு நீரே பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் கையாளப்படுகிறது. இங்கு போடப்படும் பல்வேறு தொழிநுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்கள் இதுபோன்று நம்நாட்டின் சூழலுக்கு உகந்த நுட்பங்களைப் பெறும் வகையில் இல்லாது, கார்ப்பரேட்டுகளின் லாபத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்திற்கே போடப்படுகிறது.

  2. இந்தியாவில் ஒரு டன் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தும் நீரின் அளவில் மூன்றில் ஒரு பங்கு நீரே பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் சீனாவில் கையாளப்படுகிறது.

Leave a Reply to maran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க