விதை உற்பத்தி நிறுவனமான மஹைகோ (Mahyco), தன் பி.டி. கத்திரிக்காய் விதைகளுக்காக விதை கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் கடந்த 2010-ம் ஆண்டு அனுமதி கேட்டது. அப்போது பி.டி. கத்திரி பயிரிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல இந்திய மற்றும் வெளிநாட்டு  உயிரியல் விஞ்ஞானிகள், உயிரியல் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய எச்சரிக்கை விடுத்தனர். அப்போது இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நான்கு மாதங்கள் அறிவியல் விசாரணை, மக்கள் கருத்துக் கேட்பு என்று பல தகிடுத் தத்தங்களுக்கு பிறகு தற்காலிகமாக , பி.டி. கத்திரி பயிரிடப்படுவதை இந்தியாவில் நிறுத்தி வைத்தார்.

இந்த நிறுத்தி வைப்புக்கு, பல்வேறு சர்வதேச விஞ்ஞானிகளின் அறிவுரை ஒரு காரணமாக இருந்தது. இந்த பி.டி. கத்திரியானது உயிரியல் பாதுகாப்பு அம்சத்தில் ஏற்படுத்தும் குறைபாடு மற்றும் பி.டி. கத்திரியின் நச்சுத்தன்மை, மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் தீங்கு ஆகியவையே ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பில் இருந்தும் பி.டி. கத்திரிக்கு வந்த எதிர்ப்பாக இருந்தது. அதனால் பி.டி. கத்திரி பயிரிடப்படுவதற்கான தடை இன்று வரை நீடிக்கிறது.

ஆனால் அரியானாவில் பி.டி. கத்திரி பயிரிடப்படுவது கடந்த ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் சட்டவிரோதமாக இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர் பயிரிடப்பட்டது எப்படி? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு இந்த பி.டி. பயிர்கள் எப்படி பரப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) என்ற அரசு நிறுவனம்தான் மரபணு தொழில்நுட்பத்திற்கான ஒரு கட்டுப்பாட்டு ஆணையமாக ( Regulatory Body ) செயல்படுகிறது. இந்த ஆணையமானது மரபணு தொழில்நுட்பத்தின் அபாயங்களிலிருந்து சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் மனித உடல் நலத்தை காப்பது ஆகும்.

ஆனால் 2017 -ல்  குஜராத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட சோயாவிற்காக, GEAC-யிடம் அளித்த புகாரில் மெத்தனமே மேலோங்கி இருந்ததாக குஜராத்தில்  ஜட்டன் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் கபில் ஷா கூறுகிறார்.

படிக்க:
மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !
♦ பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிரான பி.டி. பருத்தி இப்போது சட்டப்பூர்வ முறையில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பி.டி. பருத்தியானது, 2001-ம் ஆண்டு, குஜராத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மறைமுகமாக சட்ட விரோதமான முறையில் உயிர் தொழில்நுட்ப நிறுவனங்களால் பயிரடப்பட்டதுதான்.  இப்படி பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரடப்பட்ட பிறகு தான் அது பி.டி. பருத்தி என்று வெளிஉலகுக்கு தெரிய வந்தது. அப்போது பி.டி. பருத்தியானது மரபணு பரிசோதனை கட்டத்தில்தான் இருந்தது. ஆனால் மார்ச் 2002-ம் ஆண்டு பி.டி. பருத்தி பயிரடப்படுவதற்கு GEAC ஒப்புதல் வழங்கியது.

உயிரியல் துறையைச் சேர்ந்த (உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட GEAC -யின் பார்வையாளர் ) புஷ்பா பார்கவ் 2015-ல் விவசாயிகளுக்கு , ஒப்புதல் வழங்காத மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்கப்பட்டன என்று கூறுகிறார். 2008-ம் ஆண்டு மரபணு மாற்றப்பட்ட வெண்டை பயிரிடப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்.

பங்களாதேஷில் 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்கு எதிராக விஞ்ஞானிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தினர்.

சட்டவிரோதமாக மரபணு மாற்றப்பட்ட HT சோயாபீன்ஸ் குஜராத்தில் 2017-ம் ஆண்டு விளைவதாக தகவல் வெளியானது. 2018-ம் ஆண்டு சட்டவிரோதமாக மரபணு மாற்றப்பட்ட HT பருத்தி  இந்தியாவில் வளர்வதாக தகவல் வெளியானது.

இந்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரமே மரபணு மாற்றப்பட்ட பூசணி, கடுகு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பப்பாளி, சோளம் போன்ற பயிர்களின் விதைகளை அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு GEAC -ன் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமின்மை என்பதன்படி இறக்குமதி செய்து வருகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், கடந்த 2018-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 65 உணவு மாதிரியில் நடத்திய பரிசோதனையில் 32 சதவீதம் மரபணு மாற்றப்பட்டது என்று உறுதியானது. சில  நிறுவனத்தின் உணவு மாதிரிகள் மரபணு  மாற்றப்பட்ட உணவு வகைகள் சார்ந்தவை அல்ல என்று அச்சிடப்பட்டு இருந்தாலும் அவைகள் மரபணு மாற்றப்பட்டவை என்பது தெரியவந்தது.

இப்படி மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்காக எந்த ஒரு அறிவியியல்பூர்வ ஆய்வும் இல்லாமல், இந்தியாவில் இந்த GM பயிர்கள் விளைவிக்கபடுகின்றன.

GEAC ஆனது  மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்காக  எப்படி பரிசோதனை செய்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை :

  • அதன் விதைகளைத் திரும்பப் பயன்படுத்த முடியுமா?
  • மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து வரும் உணவை அது எந்த உயிரினத்தின் மீது பரிசோதனை நடத்தும்?
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களால், பக்கத்து பயிர்களில் மகரந்தச் சேர்க்கை மூலம் நடக்கும் வேதியியல் உயிரியியல்  மாற்றங்கள் என்ன? பக்கத்து நிலத்துப் பயிர்கள் தன் தன்மை இழக்காமல் இருக்குமா?
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான உள்ளீடுகள் என்னென்ன? அவை மண்ணில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன?

இது போன்ற கேள்விகளுக்கான ஆய்வுகள் எல்லாம் இல்லை.

மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனத்தின்  விண்ணப்பங்களை பாரதூரமாக சீர் தூக்கி, அறிவியல் வழியில் முடிவெடுக்கும் ஒரு அமைப்பாக GEAC இல்லை. அப்படி அறிவியல்பூர்வமான ஆய்வு முறைகளும், பரிசோதனை வழிகளும் இந்தியாவில் இல்லை.

GEAC ஆனது  உயிரியல் தொழில்நுட்பத்தின் அபாயகரமான விளைவுகளிலிருந்து மக்களையும், மண்ணையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்று சொல்லிக் கொள்கிறது. ஆனால் அது செயல்படும்விதமானது, மரபணு விதைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கட்டற்ற வசதிகளும், அனுமதியும் அளிப்பதாகவே உள்ளது!

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
♦ சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !

ஜெய்ராம் ரமேசின் பி.டி. கத்திரி நிறுத்தி வைப்புக்குப் பிறகு, GEAC, பி.டி. கத்திரி விதையை உருவாக்கிய மஹைகோவின் பி.டி. கத்திரி விதைகள், இதே போல மரபணு மாற்றப்பட்ட விதை ஆராய்ச்சி செய்யும் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் விதைகள், தார்வார்ட் வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் விதைகள் அனைத்தும் , மொத்தமாக மரபணு மாற்ற விதைகளை சேமித்து வைக்கும் NBPGR என்ற மரபணு விதைகளை சேமித்து வைக்கும் அரசு நிறுவன சேமிப்புக்  கிடங்கில் சேமித்து வைத்திருக்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்து இருக்க வேண்டும்.

2010  பிப்ரவரி மற்றும் மே மாதம் நடைப்பெற்ற GEAC மாதக் கூட்டக் குறிப்பில் மஹைகோ நிறுவனம் மற்றும் மேற்கூறிய பல்கலைக் கழகங்களிடமிருந்து விதைகளை NBPGR -ல் சேமித்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால் அப்படி சேமித்து வைக்கவில்லை.

ஆனால் NBPGR -ன் இயக்குநர் குல்தீப் சிங், “மஹைகோ மற்றும் யாரும் அப்படி எந்த ஒரு விதையையும் சேமித்து வைக்கவில்லை” என்று மாங்கோபே என்ற சுற்றுச்சூழல் பத்திரிகை  நடத்திய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

பிரதி மாதம் ஒவ்வொரு  இரண்டாவது புதன்கிழமை கூடும் என்ற அறிவிப்போடு இருக்கிறது GEAC இணையம். அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப் படவில்லை. மார்ச் மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு கூட்டம் நடந்தாக பதிவு ஏதும் இல்லை. காண்ட்ராக்ட் விடுவதற்கு எதற்கு மாதக் கூட்டம் ? என்று நினைத்திருப்பார்கள் போலும்.

இந்தியா தன்னகத்தே சுமார் 2,500 கத்திரி ரகங்களை கொண்டுள்ளது. இப்போது கத்திரி விளைச்சலில் எந்த ஒரு பற்றாக்குறையும் இல்லை. உணவுச் சங்கிலியில் ஒரு ஏகபோகத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த பி.டி ரக கத்திரி விதைகளை, மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனங்கள் திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுகின்றன.

மரபணு மாற்றப்பட்ட விதைகள், திருட்டுத்தனமாக சந்தையில் நுழைக்கப்படுவதை பி.டி. பருத்தி காலத்தில் இருந்தே இந்தியா பார்த்து வந்துள்ளது. பி.டி. பருத்தி பரவலுக்குப் பின்தான் இந்திய விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாகின.

நமது விதைகளை மட்டுமில்லை. ஒவ்வொரு பிடி மண்ணையும் மரபணு மாற்றம் செய்யப் பார்க்கிறார்கள். இந்த பூமி நம் குழந்தை! அது நம்முடையது!

பரணிதரன்


நன்றி: Scroll,  Couter Punch

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க