மிழகம் முழுவதும் செங்கல் அறுக்கும் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. இந்த தொழிலில் இருக்கும் பலரும் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

சொந்த கிராமத்தில் விவசாயம் அழிந்து, பிழைக்க வேறு வழியின்றி குடும்பத்தோடு கிளம்பி விடுகிறார்கள். அதன் பிறகு சொந்த ஊருக்கு செல்வது அரிதினும் அரிதாகிறது.

இப்படி வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது ?

சென்னை தரப்பாக்கம் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளி பாலகிருஷ்ணன் சொல்கிறார். “விழுப்புரம்-அரசூர் சுத்துப்பட்டு கிராமத்திலிருந்து நாங்க இங்க மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வந்து தங்கி வேலை செய்யுறோம். கிராமத்துல விவசாயம் இல்லாதப்ப கல்லறுக்க வெளியூர்களுக்குப் போவோம். இப்ப வானம் சுத்தமா காஞ்சி போனதால விவசாயிங்களுக்கு இந்தத் தொழில் நிரந்தரம் ஆயிடுச்சு.

செங்கல் சூளை தொழிலாளி பாலகிருஷ்ணன்

குழந்தை குட்டிங்கள ஊர்லயே விட்டுட்டு இந்தத் தொழில் செஞ்சிகிட்டிருக்கோம். ஒவ்வொரு வேலையிலயும் ஒரு கஷ்டம் இருக்கும். அத செய்யும்போதுதான் அதோட வலி தெரியுது. பச்சை மண்ணை பதமா கூட்டி கல்லு அறுக்குறது ஒரு பெருஞ்சொமைய கொடுக்கிற வேலை.

களிமண்ணில் தண்ணியவிட்டு மண்ண மிதிச்சி, கெட்டிப்பதமா குழைச்சி அதை அச்சில் வார்த்து ஒவ்வொரு கல்லாக அறுக்கனும். அடுத்து காஞ்ச கல்லை ஓரம் சீவி காயவைத்து அடி போடுவது, பிறகு அதை ஜன்னல் கட்டி போட வேண்டும். இந்த வேலையை குடும்பமாத்தான் செய்ய முடியும். குறைஞ்சதது இரண்டு பேர் வேணும். மூன்று பேர் இருந்தால் கொஞ்சம் அலுப்பு தெரியாம வேலை செய்யலாம்.

செங்கல் சூளை தொழிலாளி பாலகிருஷ்ணனின் மனைவி.

கொளுத்தும் வெயிலில வேலைக்கு கிராக்கி இருக்கும். ஆனா வெயில் காலந்தான் கல்லறுக்க உகந்த காலம். வேலை செய்யும்போதே உடம்புக்கு மேலேயும் கீழேயும் கொதிக்கும். வேக்காடா இருக்கேன்னு கொஞ்ச நேரம் இளப்பாறினா பச்சைமண் இளகிடும். அச்சுல மண்ணை வார்த்தால் மாடு சாணி போட்ட மாதிரி வழியும். “கல்லா இது”ன்னு முதலாளிங்க திட்டுவாங்க.

பச்சை மண்ணை மிதிச்சி கூட்டி பதம் பார்க்கிறது லேசுப்பட்ட விஷயம் இல்ல. பல வருச அனுபவம் வேணும். இந்த வேலையை பெரும்பாலும் ஆம்பளைங்கதான் செய்ய முடியும். ஏன்..னா பல மணி நேரம் மூச்சு பிடிச்சு செய்யும் வேலை இது.

பொம்பளைங்க செய்யும் வேலை சேம்பர் களத்துமேட்டுல கொளுத்தும் வெய்யில்ல குத்துக்காலிட்டு குனிஞ்ச தலை நிமிராம செய்யும் வேலை. களத்தை சவுடு மண் தூவி பச்சை மண் தரையில ஒட்டிக் கொள்ளாம தயார் செய்யணும். அதற்குமேல் ஃபைபர் அச்சு வெச்சு அளவாக மண்ணை உருட்டி அழுத்தமாக அறையணும். பிறகு மண்ணை சமமாக நிறுவி அலுங்காமல் குலுங்காமல் அச்சை எடுக்கனும். இப்படி ஒவ்வொரு அச்சாக வைத்து பின்னாடியே கோடு கிழித்த மாதிரி ஒவ்வொரு கல்லாக வார்த்துக்கிட்டே போகணும்.

வெயில் காலமுங்குறதால இந்த வேலையை நைட்டு 10 மணிக்கு டியூப்லைட் வெளிச்சத்தில் குடும்பமா செய்வோம். இரவு முழுக்க கண்முழிச்சி காலைல 10 மணிக்கு இடைவேளை விடுவோம். அப்பவரைக்கும் சுமார் 2000, 2500 கல்லு விழுந்திருக்கும். (மூணு பேர் 12 மணி நேரம் இடைநிறுத்தம் இல்லாமல் செய்யும் இந்த வேலைக்கு, ஆயிரம் கல்லுக்கு 500 ரூபாய் கூலி.)

இந்த வேலை இதோடு முடியறது இல்லை. கல்லு பதமாக காய்ந்த பிறகு ஒழுங்கு செய்யணும். அந்த வேலையை பகல் 3 மணிக்கு செய்ய ஆரம்பிப்போம். இதுக்கிடையில காலை பத்து பதினோரு மணிக்கு குடிசைக்கு சென்று, கை, கால் கழுவி கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து உடம்பை ஆசுவாசப்படுத்திக்குவோம். மூணு மணிக்கு வந்தா வெயில் கொளுத்தும். கல்லை நான்கு பக்கமும் வடிவா சீவி திருப்பி போட்டுட்டு ஆறு-ஆறரை மணிக்கு குடிசைக்கு திரும்புவோம்.

உணவு சமைக்கும் பெண் தொழிலாளி.

வந்ததும் சுள்ளி கட்டை போட்டு அடுப்பு பத்த வைப்போம். வாங்கிய ரேஷன் அரிசியை வைச்சி அதுக்கு ஏத்தமாதிரி, காரமான கொழம்பு செய்து குழந்தைங்களுக்கு போட்டு நாங்களும் சாப்பிடுவோம். அதுக்குள்ள ஒடம்பு மேலெல்லாம் வலிக்கும் எப்ப தூங்கினோம்ன்னு எங்களுக்குத் தெரியாது.

இரவு 10 மணிக்கு திரும்பவும் எழுந்திருச்சி கல்லு சீவி போட வருவோம். தூக்கமில்லாமல் கண்ணு நெருப்பு மாதிரி கொதிக்கும். இதுதான் எங்க பொழப்பு. இப்படி ஆறு மாசம் தூக்கம் இருக்காது. மண்ணோடு மண்ணா, காயும் வெயிலில் தொடர்ந்து வேலை பார்த்து வாங்கிய கடனை அடைச்ச பிறகுதான் வீடு திரும்ப முடியும். சொந்த ஊர் திரும்பிய பிறகுதான் எங்களுக்கு தூக்கமும் ஓய்வும் நிம்மதியும் கிடைக்கும்.

இன்று இரவு வயிறு நிரம்புமா தெரியாது, ஆனால் வாய் நிறைய புன்னகை உதிர்க்கின்றன இச்செல்வங்கள்.

இப்படி கஷ்டப்பட்டாக்கூட குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வயிறார கஞ்சி ஊத்த முடியல. குழந்தைகளை பத்தாவதுக்கு மேல் படிக்க வைக்க முடியரதில்லை. வேற வழி இல்லாம பொம்பள பசங்கள சின்ன வயசிலேயே கட்டி கொடுத்துடுவோம். அதுங்க கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பல வருசம் ஒழைச்சி அடைப்போம்.

இந்த வேலையில 40 வயசுலேயே கண் பார்வை குறைஞ்சு போயிடுது. கழுத்து நரம்பு வலிக்கும். கால் முட்டி மடங்கி… நிமிர்ந்து நடக்க முடியாம இழுத்து இழுத்து குறை காலத்தை ஓட்டுவோம். ஒடம்பு முடியாதபோது எங்களுக்கு கஞ்சி ஊத்த யாருமிருக்க மாட்டங்க. எங்கள் குழந்தைகளை நெனைச்சி எங்களுக்கு கோபமும் வராது. அவங்களுக்குன்னு எதிர்காலம் ஒன்னுமே இல்லை. அவங்களை அவுங்க பாத்துக்கிட்டாலே போதும்’னு நெனச்சிக்குவோம்!

ஆண்டவனிடம் நாங்கள் வேண்டுறதெல்லாம் கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிக்கொண்டு போ…..! எங்களை பிச்சை எடுக்க வைக்காதே..!” என்பதுதான்.

மண்ணை மிதித்துக் குழைத்து பதமாக்கும் தொழிலாளி.

 

படித்து தன் வாழ்க்கை கனவை கட்டமைக்க வேண்டிய வயதில், யாரோ ஒருவரின் ‘கனவு இல்லத்தை’ கட்ட செங்கல் சூளையில் உழைக்கும் சிறுவன்.

 

கல் அறுக்கும் பணியில் ஒரு தொழிலாளி

 

உழைப்புக்கும் இங்கு வயது வரம்பில்லை, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடும்பமாக உழைக்கின்றனர்

 

குழந்தையில் இருந்தே வீட்டு உழைப்பும் சேர்ந்து விடுகிறது, இப்பிஞ்சுகளுக்கு.

 

முகப்பூச்சு வாழ்க்கைக்கு மத்தியில், செங்கல்லுக்கு மேற்பூச்சு வீசும் பெண்

 

அன்னாந்து பார்க்கும் கட்டிடங்களின் அஸ்திவாரமாய் இவர்களின் உழைப்பு, ஆனால் நிமிரவே முடியாத வாழ்க்கை.

 

தலை சுமையை இறக்கிவிடலாம், வாழ்க்கை சுமையை என்ன செய்வது !

 

குளியலறை தொட்டிககளில் வழியும் தண்ணீரில் மிதப்பவர்கள் வாழும் நாட்டில்தான், சேற்று நீரில் இவர்கள் துணி துவைக்கின்றனர்.

 

உழைப்பின் களைப்பைக் கலைக்க சற்று நேர ஆசுவாசம்.

 

இவர்களின் வாழ்வும் இப்போது சுட்ட கற்களாய் குவிந்து விட்டது, சரியான பொறியாளர்தான் கட்டமைக்க தேவைப்படுகிறார்.

 

அந்த பொறியாளர் வேறு யாரும் இல்லை, அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம்தான்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க