ந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக 55 லட்சம் கி.மீ. சாலைகள் ஓடுகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 1 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தற்போதைய கணக்குப்படி நாளொன்றுக்கு 24 கி.மீ நீளமுள்ள சாலைகள் புதிதாக போடப்படுகின்றன. இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்து, பெரும் தொகையை விழுங்கும் துறை இதுதான். இப்படி இருந்தும் இந்தியா முழுக்க உள்ள 531 சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டொன்றுக்கு 73 ஆயிரம் கோடி டோல்கேட் கட்டணமாக அரசு வசூலிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை, நீளத்தில் 7-வது இடத்திலும் டோல்கேட் வசூல் தொகையில் 4-வது இடத்திலும் உள்ளது. உதாரணம் மகாராட்டிர மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 15,456 கி.மீ. ஆனால் அதன் டோல்கேட் எண்ணிக்கை 45. வருமானம் 2,700 கோடி. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை நீளம் 5,381 கி.மீ. அதன் டோல்கேட் எண்ணிக்கை 46. வருமானம் 2,400 கோடி. இது தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்.

போரூர் சுங்கச்சாவடி

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் பகற்கொள்ளை, நாற்புறத்தையும் சுற்றி தொழிற்முறைத் திருடர்களினால் நடக்கும் செயின் பறிப்புக்கு நிகரானது. 21 கி.மீ இடைவெளியில் 3 டோல்கேட்டுக்கு கப்பம் கட்டும் மதுரை – ஊத்தங்குடி – கப்பலூர் ஒரு உதாரணம்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறையின்படி, டோல்கேட் மையங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 60 – 75 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். டோல் அமைந்துள்ள 6 கி.மீ சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு கட்டண விதிவிலக்கு அளிக்க வேண்டும். இன்னும் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு பல்வேறு பாதுகாப்பு மேம்பாட்டு வசதிகளைச் செய்து தரவேண்டும். இந்த விதியெல்லாம் அதன் கட்டண ஒப்புகை ரசீது பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது. இதன் எல்லா விதிகளும் அந்த டோல்கேட் வாசலிலேயே அகால மரணமடைந்து பல மாமாங்கம் ஆகிவிட்டது.

பேப்பரில் மட்டும் இருக்கும் சலுகைகள்.

52 கி.மீ பயணத்திற்கு இலகுரக வாகனங்களுக்கு ரூ.60, இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளுக்கு ரூ.95, கனரக வாகனங்களுக்கு ரூ.195, பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 என்று கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் அரசு புள்ளிவிவரப்படி ஆண்டுக்கு வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 10 சதவீதம் கூடிக்கொண்டே போகின்றது. இதன்படி டோல்கேட் வருமானமும் பொங்கி வழிகிறது.

படிக்க:
♦ வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை
♦ பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

இந்தியா முழுவதும் 70% டோல்கேட் மையங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமாகிவிட்டன. L&T, ரிலையன்ஸ், பி.வி.ஆர் நிறுவனங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்துகின்றன. இவர்கள் காட்டும் ‘வருமானமான காந்தி கணக்குதான்’ இந்திய புள்ளிவிவரங்களாக ஆண்டுதோறும் பட்ஜெட்டை அலங்கரிக்கின்றது.

தற்போதைய கணக்குப்படி இந்திய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இருக்கும் கடன் 1.88 லட்சம் கோடி ரூபாய். இதற்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 14,000 கோடி. ஆக, மக்களிடம் சாலையில் வசூலிக்கும் கட்டணக்கொள்ளையை உலக வங்கி மொத்தமாக சந்துமுனையில் இருந்து பறித்துக்கொள்கிறது. மறுபுறம், தேசிய நெடுஞ்சாலைகளோ எவ்வித பராமரிப்பும் வசதியுமின்றி பயணிக்கும் சாலை, மரணிக்கும் சாலையாக வாய்பிளந்து கிடக்கிறது.

ஃபாஸ்டேக் அட்டை வாங்க காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.

மாட்டை இரண்டு முறை தோலுரிப்பதுபோல சாலைகளில் எவ்வித வசதிகளும் செய்யாமலே மீண்டுமொருமுறை பகற்கொள்ளையை அரங்கேற்றி நெடுஞ்சாலை ஆணையத்தைக் கட்டுப்படுத்துகிறது பி.ஜே.பி அரசு.

ஃபாஸ்டேக் அதிவிரைவு பயணம், அதிக பாதுகாப்பு என்ற பெயரில் மக்களது மேல் பாக்கெட், கீழ்பாக்கெட் என்று அனைத்தையும் கைவிட்டு துழாவுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் 4 சக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவரும் டிசம்பர் 15-க்குள் ஃபாஸ்டேக் டோல்கேட் அனுமதி அட்டையை வாங்கி தங்கள் வங்கிக் கணக்குடன் அதை இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வட்டையுடன் வரும் வண்டிகள் மட்டுமே இனி, ஃபாஸ்டேக் ட்ராக்குகளில் அனுமதிக்கப்படும். இல்லையானால் அபராதமாக 2 மடங்குக் கட்டணத்துடன் ஒதுக்கப்பட்ட சாதாரண கட்டண ட்ராக்கில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற உத்தரவும் அமுலுக்கு வந்துவிட்டது.

இந்த அறிவிப்பின் கெடுபிடி நெருங்க நெருங்க சென்னையின் எல்லா டோல்கேட்டுகளிலும் ஃபாஸ்டேக் அட்டை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. சென்னை – போரூர் சாலையில் இருக்கும் டோல்கேட்டை நாம் கடந்த போது, அங்குக் காத்திருந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை அனுகினோம். அவர்களது மனக்குமுறலை கேளுங்கள்.

***

ஷியாம், IT ஊழியர்

இருக்குற ஓட்ட ஒடசலான பழைய ரோட்டத்தான் புதுசா ஃபாஸ்டேக்குன்னு பேர மாத்துறாங்க. – ஷியாம், ஐடி ஊழியர்.

“என் வீடு தாம்பரம்; ஆபீஸ் அம்பத்தூர். டெய்லி இந்த டோல்கேட்டை கிராஸ்பண்ணிதான் போகணும். என் டிராவல் டைம், அப் அன்ட் டவுன் 2 மணி நேரம். பீக் அவர்ஸ்ல பல தடவ டோல்கேட்டிலேயே டைம் வேஸ்ட்டாயிடும். இனிமேல் அது குறையுமுன்னு சொல்றாங்க. அத நம்ப முடியல. நம்மல ஏமாத்துறாங்கன்னு தெரியுது. இருக்குற ஓட்ட ஒடசலான பழைய ரோட்டத்தான் புதுசா ஃபாஸ்டேக்குன்னு பேர மாத்துறாங்க.

இந்த ரூட்டுல 15 வருசமா வண்டி ஓட்டுறேன். இதுவரைக்கும் டோல்கேட்டுல வசூலித்த பணத்த வெள்ளை அறிக்கையா அரசு வெளியிடுமா? கொள்ளை அடிக்கிறாங்க. ஒரே வழி இந்த டோல்கேட்டை மொத்தமா இடிச்சுத் தள்ளுறதுதான்.

இப்ப இவங்களோட PAY-TM காரனும் சேர்ந்துட்டான். இனி அவன்தான் நமக்கு பணம் கட்டுவான். அவனுக்கு நாம முன்கூட்டியே ஒரு பஃபர் அமவுண்ட் (நிரந்தர வைப்பு) ரூ.150-ம் ப்ராசசிங்க் சார்ஜ் ரூ.50-ம்னு மொத்தம் ரூ. 200 கட்டணம். இது பேங்க் அக்கவுன்ட்ல இருக்குற மினிமம் பேலன்ஸ் மாதிரி. அத உபயோகப்படுத்த முடியாது. நாம போகவர தனியா ரிசார்ஜ் பன்னணும். இது கொடுமை” என்றார்.

“தெரிந்தே ஏன் இப்படி ஏமாறுகிறீர்கள்?” என்றோம்.

அவர் எரிச்சலுடன், “வேறு வழி? இனி தினமும் டிராஃபிக் ஜாம் ஆகி சண்ட சச்சரவு இருக்காது. பணம் கொடுத்து ரசீது வாங்குற தொல்லை இல்லை” என்றார்.

படிக்க:
♦ தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

***

திலீப், ஓட்டுநர் ( புகைப்படம் தவிர்த்தார் )

நான் லோக்கல்லதான் வண்டி ஓட்டுறேன். இருந்தாலும் மாதம் 1 அல்லது 2 தடவ காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற சொந்த ஊருக்குப் போவேன். அதுக்குத்தான் இப்ப க்யூவில நிக்கிறேன்.

எப்போதோ ஒருமுறை ஊருக்குப் போக, இந்தச் தண்டச்செலவு தேவையான்னு கேப்பீங்க. இந்த அட்டய வாங்கலன்னா அபராதம் கட்டணும்பாங்க. அப்புறம் ஆர்டினரி டிராக்குனு அலக்கழிப்பாங்க. குடும்பத்தோட செல்லும்போது எரிச்சல் சண்டை வரும். அது தேவையா? என்றார்.

***

பாலு, வியாபாரம் ( புகைப்படம் தவிர்த்தார் )

நான் செங்கல்பட்டு தாண்டி அச்சிறுப்பாக்கத்தில் இருக்கேன். எனக்கு சென்னையில்தான் வேலை. ஒவ்வொரு முறையும் எல்லா டோல்கேட்டையும் தாண்டி வர்ற வரைக்கும் ஒரே சண்டை சச்சரவுதான். டோல்கேட்ட கடக்கும்போது, நான் முன்னே, நீ முன்னேன்னு சண்டை வரும். வேணுமுன்னே பக்கத்துல வண்டிய கொண்டுவந்து முட்டுவானுங்க. நெரிசலில் வண்டிய இன்ஞ் இன்சா நகர்த்த வேண்டியிருக்கும். இந்த அட்டை வாங்கின பிறகு இந்த அரிபரி இருக்காது, ஹாயா போகலாமுன்னு சொல்றாங்க என்றார்.

***

கிருஷ்ணமூர்த்தி, தனியார் நிறுவன இயக்குநர்

ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார், எனது நண்பர். – கிருஷ்ணமூர்த்தி

எனக்கு அம்பத்தூர்ல கம்பெனி. வேலூர், வாலாஜா, ஆம்பூர்னு அடிக்கடி போக வேண்டி வரும். இந்த கார்டை இப்ப அவசியமாக்கிட்டாங்க. இதனால எந்த மாற்றமும் வராதுன்னு தெரியுது. இருக்குற ரோட்ட சீர்பண்ண மாட்டேங்குறாங்க. கேட்டா போலீச வரவழைச்சு உதைப்பாங்க. ஏற்கெனவே 2 தடவை வேலூர் டோல்கேட்டுல ஸ்ட்ரைக் பண்ணி போலீசுகிட்டே அடிவாங்குனோம். இவங்கல்லாம் கூட்டுக்களவாணிங்க. இந்த கார்டுனால எவ்வளவு ப்ராடு நடக்குமுன்னு தெரியல.

என்னோட ஃபிரெண்ட் லாரி ஓனர். செங்கல்பட்டுக்காரர். 6 மாதம் முன்னாடியே அவரது சரக்கு லாரிக்கு ஃபாஸ்டேக் கார்ட வாங்கி அக்கவுண்ட்ல இணைச்சிட்டாரு. திடீர்னு அவரது போனுக்கு ஒரு மெஸ்சேஜ். ஆந்திரா தடா டோல்கேட்ட அவரது சரக்கு லாரி சில நிமிடங்களுக்கு முன் கடந்ததாகவும் அதற்கான கட்டணமாக ரூ.350 – அக்கவுண்ட்டிலிருந்து கழிக்கப்பட்டதாகவும் இருந்தது. அந்த மெஸ்சேஜை பார்த்து பதறிப் போயிருக்கிறார். காரணம் அவரது கண் முன்னே அவரது வீட்டிலேயே அந்த லாரி நின்றுகொண்டிருந்தது. இந்தக் கட்டணத் திருட்டை கையும் களவுமாக நிரூபிக்க வேண்டும் என்று அவர் உசாரானார். உடனே தன் வீட்டின் பக்கத்தில் இருக்கும் டோல்கேட்டில், தானே லாரியை ஓட்டிச் சென்று உள்நுழைந்து ரசீது வாங்கிக் கொண்டார். இதே நேரத்தில் தடாவில் எப்படி எனது வண்டி கடக்க முடியும்? என்று அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து ஒரு வழி பண்ணினார். இது மாதிரி ஆயிரம் கூத்துக்கள் இனி நடக்கும் என்றார்.

படிக்க:
♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
♦ சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

***

சபரி, டிராவல்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்

டோல்கேட் கட்டணம் என்ற பெயரில் கூட்டுக் கொள்ளை அடிக்கிறாங்க. டோல்கேட் எடுத்து நடத்துற முதலாளிங்க, ஏலம் விட்ட அதிகாரிங்க, அரசியல்வாதிங்க இவங்களோட இங்கிருக்கிற போலீசும் இதுல கூட்டு. கலெக்சன்ல கவர்ன்மென்டுக்கு பாதிதான் கணக்கு காட்டுறாங்க. இன்னும் 4 டிராக் ரோட்டுல 6 டிராக் கட்டணத்த வசூல் பண்றாங்க. திடீர்னு வேல்முருகன், சீமான் போன்றவங்க டோல்கேட்டுக்கு எதிரா சவுண்ட் விட்டு இப்ப கப்சிப்னு அடங்கிட்டாங்க. ஏன்னா, இந்த கூட்டுதான்.

டோல்கேட்ட ஏலம் எடுத்தவன், எல்லாருக்கும் சகட்டுமேனிக்கு இறைக்கிறான். எங்கள மாதிரி அன்றாடங்காய்ச்சிங்கதான் கடைசி வரைக்கும் சாலை வரி, சும்மா இருக்குற வரின்னு கட்டிட்டு வண்டி ஓட்டியே சாகுறோம் என்றார்.

***

டோல்கேட்டிற்கு கப்பம் கட்டிய நிலையிலும் போலீசாரால் மடக்கப்படும் சரக்கு வண்டிகள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

தமிழ் தெரியாத வட இந்தியர்களால் நிரப்பப்பட்ட டோல்கேட் பூத்துகள். கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இதுதான் நிலைமை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க