சென்னை கோயம்பேடு, பேருந்து நிலையம், பூ, பழம், காய்கறி மார்கெட்டுக்கு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் சரக்குப் பெட்டகமும் கூட. சிறு குறுந்தொழில்களின் நாடித்துடிப்பு சீராக இயங்க மக்களுக்குத் தேவையான உயிர்காக்கும் பண்டங்களை தன்னகத்தே கொண்டதுதான் கோயம்பேடு.

இங்கு இந்தியாவின் எல்லா எல்லைகளிலிருந்தும் வந்து குவியும் சரக்கு லாரிகள். இந்த லாரிகள் கொண்டுவரும் சரக்குகளை வாங்கி, மொத்த வியாபாரிகளிடம் ஒப்படைக்கும் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் ஏதோ விபத்தில் உயிர் தப்பியவர்கள் போல் மிரட்சியுடன் நம்முடன் உரையாடினார்கள்.

***

நவீன்குமார், மேலாளர், டெக்சிட்டீஸ் சர்வீஸ்

பகலில் டெக்சிட்டீஸ் மேனேஜர், இரவில் இட்லி கடை ஓனர். ரெண்டு வேல பார்க்குறதுனாலதான், ஒடம்பு முடியாத அம்மா அப்பாவ காப்பாத்த முடியுது.

இங்கு வெளி மாநிலங்களிலிருந்து லாரிகளில் வரும் சரக்குகளை தமிழ்நாட்டின் வெளி, உள் நகரங்களுக்கும் மாவட்டத் தலைநகரங்களுக்கும் பிரித்தனுப்பும் வேலைகளை நாங்கள் செய்கிறோம்.

அழுகும் பொருட்கள், அழுகா பொருட்கள் எனத் தரம் பிரிக்கப்படும் இந்த வணிகம் முழுவதுமாக பல மாதங்கள் கடனிலும் நம்பிக்கையிலும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.

ஜி.எஸ்.டி, டிமானிஸ்டேசன் இரண்டும் சரக்கு வர்த்தகத்தில் பெரும் இடிபோல் இறங்கி விட்டது. அதிலிருந்து மீளவே முடியவில்லை. அதனால் சரக்கு ஆங்காங்கே தேங்கி சுழற்சி இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. 10 லாரி சரக்கு வரும் இடத்தில் 3 லாரிகள் கூட வருவதில்லை. கடன் வர்த்தகமே செய்ய முடியாமல் போய்விட்டது. அப்படி கடன் கொடுத்தாலும் திரும்பி வருவதில்லை. நெருக்கடி முற்றி வியாபாரத்தில் சந்தேகம், நம்பிக்கையின்மை பெருகி விட்டது. பணச் சுழற்சி இல்லை என்கிறார்கள் எங்கள் முதலாளிகள்.

தரம் பிரித்து பல இடங்களுக்கு அனுப்ப காத்திருக்கும் சரக்கு பொருட்கள்.

சரக்கு இருப்பு வைக்கும் குடோன்களுக்கு வாடகை கொடுக்க முடியாமல் இப்போது மூடிக் கொண்டிருக்கிறார்கள். சொல்வதற்கே சங்கடமாக இருக்கிறது. டிரான்ஸ்போர்ட் சர்வீசில் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் ஒழுங்காகக்கூட கொடுப்பதில்லை. 4 மாதங்களுக்குப் பிறகு, 2 மாதங்களுக்கான சம்பளத்தைத் தருகிறார்கள். நெருக்கிக் கேட்டால், “வேறு வழியில்லை, வேலையிலிருந்து நின்று விடு” என்கிறார்கள்.

இந்த வியாபாரத்தில் இப்போது புதுத் தொல்லை வேறு. ஃபாஸ்டேக் அட்டையை நாங்கள் ஜி.எஸ்.டி கொண்டு வந்ததிலிருந்தே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படியும் சரக்கு உரிய நேரத்தில் போய்ச் சேர்வதில்லை. ஃபாஸ்டேக் அட்டையால் பயணத்தில் எந்த முன்னேற்றமும்  இல்லை. காரணம் லாரியில் இந்த அட்டையை ஒட்டி அனுப்பினால், அதை சென்சார் செய்ய டோல்கேட்டில் கேமராக்கள் இல்லை; பெயருக்கு 1, 2 டிராக்கில் சென்சார் கேமரா பொருத்திவிட்டு மற்றவற்றில் பணம் கையால் செலுத்தி ரசீது தருகிறார்கள்.

படிக்க:
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
♦ லாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்

இதனால், எந்த டிராக்கில் கேமரா இருக்கிறது எனத் தெரியாமல் டிரைவர்கள் தடுமாறுகிறார்கள். கடைசியில் ஹேன்ட் டிவைஸ் சென்சாரை எடுத்துக் கொண்டு இங்குமங்கும் ஓடி ஒட்டியுள்ள அட்டையை ஸ்கேன் செய்கிறார்கள். அதன் பிறகே லாரியை அனுப்புகிறார்கள். அந்த ஹேன்ட் டிவைஸ் கூட ஒன்றிரண்டுதான் வைத்துள்ளார்கள்; போதுமானதாக இல்லை. டோல்கேட் ஊழியர்கள், ஒரு ஹேன்ட் டிவைசை வைத்துக்கொண்டு இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் ஓடும் கொடுமையும் நடக்கிறது.

சலிப்படைந்த டிரைவர்கள் இதைத் தட்டிக் கேட்டால், ஊழியர்கள் சண்டைக்கு வருகிறார்கள்; போலீசை ஏவி மிரட்டுகிறார்கள். சமயத்தில்  அடிக்கவும் செய்கிறார்கள்.

சரக்கு வாகனங்களைப் பாதுகாக்க, பராமரிக்க ஏராளமான நடத்தை விதிகளை சுங்கச் சாவடிகள் பின்பற்ற வேண்டும். அதில் ஒரு சதவீதம் கூட அவர்கள் செய்வதில்லை. நெடுஞ்சாலைகளில் பழுதுபட்ட லாரிகளை நிறுத்த டிரைவர்கள் ஓய்வெடுக்க, தங்க வசதிகள் செய்து தரும் பொறுப்பு சுங்கச் சாவடிகளுக்கு உண்டு என்று ஏட்டில் மட்டுமே உள்ளது.

இதில் வரும் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் முதலாளிகள் சலிப்படைந்து சரக்கு வாகனத்தையே குறைத்து வருகிறார்கள். இதனால் சரக்குகளை ஒழுங்காக விநியோகிக்காமல் அந்தந்த இடத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. சரக்கு விற்று முதல் கைக்கு வராமல் தொழிலே முடங்கிப் போய்கிடக்கிறது. தற்காலிகமாக பேருந்துகளில் முடிந்தளவு சரக்குகளை அனுப்பும் மாற்று வழிகளை பின்பற்றுகிறார்கள்.

வாரநாட்களில் சரக்கு பொருட்களை நம்பி தான் பல ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. (சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகங்கள்.)

தனியார் ஆம்னி பஸ்களில் வாரத்துக்கு வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் மட்டுமே சீட்டுகள் ஃபுல் ஆகும். மற்ற நாட்களில் இம்மாதிரி சரக்குகளை ஏற்றித்தான் டீசல் செலவுகளைச் சமாளிக்கிறார்கள். இதற்காகவே இப்போது ஆம்னி பஸ் முதலாளிகள் வால்வா வண்டிகளைக் குறைத்துவிட்டு சீட் வண்டிகளை அதிகமாக்குகிறார்கள். பயணிகள் இருக்கைகளுக்கு இணையாக சரக்கு வைப்பதற்கு கீழே இடம் ஒதுக்கி பாடி கட்டுகிறார்கள் என்றார்.

அவரை இடைமறித்த நாம், “ஆம்னி பஸ் முதலாளிகளின் வருமானம் குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை. ஒவ்வொரு புது அரசாங்கத்திடம் முதலில் கப்பம் ஒப்படைப்பது இந்த ஆம்னி பஸ் முதலாளிகள்தான். குறுக்கு வழியில் ஆயிரம் கோடி சம்பாதிக்கத்தானே இப்படி செய்கிறார்கள்?” என்றோம்.

உடனே அவர், “எல்லா முதலாளிகளும் அவ்வாறு வசதியானவர்கள் இல்லை. 10 சதவீத முதலாளிகள்தான் இந்த கப்பம் கட்டும் வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் வேறொரு தொழிலை செய்துகொண்டு, கூடுதலாக பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, எஸ்.ஆர்.எம், பர்வீன், கே.பி.என்…” என்றார்.

படிக்க:
♦ மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி
♦ நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

நாம் அவரிடம் விடைபெறும்போது அவர் கூறியது நம்மை நெகிழ வைத்தது.

பி.இ படித்துவிட்டு, எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அழுக்குமூட்டைகளுக்கு மத்தியில் இருக்கிறீர்களே? என்றதற்கு…

இந்த வேலையை நான் விரும்பித்தான் செய்கிறேன். சொல்லப்போனா இது எனக்கு சவுகரியமாகவும் இருக்கு. என் அம்மா, அப்பா இருவரும் சுகர் பேசன்ட். அவர்களால் வேலை செய்ய முடியாது. அவர்களுக்கு மருத்துவமும் பார்க்க வேண்டும். அதனால், இந்த வேலை செய்துகொண்டே இரவில் தள்ளுவண்டி டிபன் கடை வியாபாரமும் செய்கிறேன். சொந்தக் காலில் நிற்பதால் சந்தோசமாக இருக்கிறேன் என்று சிரித்தார்.

***

ஆனந்த், கனரக வாகன ஓட்டுநர்

தொழில் வியாபாரம் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் டிரைவர் தொழில். இதுக்கு ஃபாரின்ல நல்ல மதிப்பு இருக்குறதா சொல்றாங்க. ஆனா, இங்கே யாரும் எங்கள மதிக்கிறதில்லை. டிராபிக்குல வண்டி ஓட்டுறதவிட டிராபிக் போலீசை சமாளிக்கிறதுதான் எங்களுக்கு பெரும் கஷ்டமா இருக்கு. நாங்க அடக்கமா பேசுனாகூட அசிங்க அசிங்கமாக திட்டி அனுப்புவாங்க.

இந்த லட்சணத்துல ஃபாஸ்டேக்குன்னு புது அட்டை வேற வண்டியில ஒட்டிட்டாணுங்க. அந்த அட்டையக்கூட ஒழுங்கா சென்சார் பண்ண முடியாம எங்கள டார்ச்சர் பண்றாங்க. கேமரா எங்கே இருக்குன்னு பார்த்து இன்ஞ் இன்ஞ்சா வண்டிய நகர்த்தணுமாம். பொம்பளங்க நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி, கேமரா முன்னாடி வண்டிய ஒட்ட வைக்கவா முடியும்?

இனிமே, நாங்க பூலோகத்தில் இல்ல, பரலோகத்தில்தான் வண்டி ஓட்ட முடியும் என்றார் விரக்தியுடன்.

சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகங்கள்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க