பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் |  விரிவுரை – 2 | பாகம் – 13

டோக்ளியாட்டி

ந்த நெருக்கடி எப்போது ஆரம்பமாயிற்று? 1929-ம் ஆண்டு இறுதியிலும் 1930-ம் ஆண்டு தொடக்கத்திலும் இது ஆரம்பமாயிற்று. ஆனால், நாம் எப்போதுமே வலியுறுத்தி வந்திருப்பதுபோல், இந்த நெருக்கடிக்கான அறிகுறிகள் 1927-ம் ஆண்டு வாக்கிலேயே தென்பட ஆரம்பித்துவிட்டன. உற்பத்தி எந்திரத்தின் வளர்ச்சி காரணமாகவும், தொழில்துறை வளங்கள் ஒரு சிலர் கைகளில் குவிந்ததன் காரணமாகவும், முதலாளித்துவத்தின் தொழில்நுட்ப, ஸ்தாபன வளர்ச்சியின் காரணமாகவும் தோன்றிய பொருளாதார முரண்பாடுகளின் சின்னங்களே இவை. இந்த வளர்ச்சிப் போக்கு முதலில் அளவுக்கு மீறிய பளுவை உண்டு பண்ணிற்று. பிறகு, 1926-ல் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் பிரச்சினை தீவிரமடைந்தது. இதன் காரணமாக ஊதிய வெட்டு அத்தியாவசியமானதாகிவிட்டது.

இதன் பிறகு பாசிசம் சர்வாதிபத்தியப் பாதையிலிருந்து ஒருபோதும் விலகிச் சென்றதில்லை. இது இன்றியமையாததாயிற்று. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் முழு உக்கிரமடைந்து இன்றுவரை தொடர்கிறது.

1929-ம் ஆண்டு இறுதியில் நெருக்கடி மிகவும் தீவிரமடைந்தபோது, பிரச்சினையின் போக்கு மாறியது. வெகுஜனங்களைப் பிளவுபடுத்துவது மட்டும் போதாது; இதற்கும் மேலாக ஏதேனும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆட்சியின் மீது வெகுஜனங்களுக்கு அதிருப்தி ஏற்படுவது பாசிசத்தின் வெகுஜன அடித்தளம் சுருங்குவதையே குறிக்கும். இந்தப் பிரச்சினை மிகவும் கூர்மையடைந்தது.

இவ்வாறு, பாசிஸ்டுக் கொள்கையின் இரண்டாவது அம்சம் – வெகுஜனக் கொள்கை – அரங்கேறியது. பொருளாதார நிலைமையை முன்னிட்டும், இத்தாலிய பூர்ஷுவாக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வர்க்க உறவுகளை முன்னிட்டும் வெகுஜனக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமாயிற்று. அப்போதுதான் வெகுஜன அடித்தளத்தில் ஏற்படக்கூடிய பிளவுகளைச் சமாளிக்க முடியும்; பாசிஸ்டு எதிர்ப்பு இயக்கங்கள் வளர்வதை எதிர்த்துப் போராட முடியும்.

1930-ம் ஆண்டு முதல் இன்றுவரை நிலைமை தேக்கமடைந்துள்ளது. ஆனால் பிரச்சினை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பிரச்சினையின் உக்கிரம் எண்ணற்ற மாற்றங்கள் செய்து வருவதிலும், அதிகாரத்திலுள்ளவர்கள் மாற்றப்படுவதிலும் பிரதிபலிக்கக் காணலாம்.

அதிகாரத்திலுள்ளவர்களை மாற்றுவதைப் பொறுத்தவரையில் ஒரு மாற்றம் மிக முக்கியமானது. 1932 மத்தியில் ரோக்கோ தீர்த்துக் கட்டப்பட்டதையே இங்கு குறிப்பிடுகிறோம். பாசிச சர்வாதிபத்தியத்தின் இயல்பில் ஏற்பட்ட மாற்றத்தையும், ஜனரஞ்சகக் கொள்கை எனப்படும் கொள்கையின் தொடக்கத்தையும் இது குறித்தது.

தற்போது, வெகுஜனங்களை தனது ஸ்தாபன அமைப்புகளுக்குள் கொண்டு வருவதற்கும், சர்வாதிகார அமைப்புடன் அவர்களைப் பிணைத்து வைத்திருப்பதற்கும் பாசிசம் பெருமுயற்சி செய்து வருகிறது. பாசிஸ்டுக் கட்சியையும் இளைஞர்களையும், தொழிற்சங்கங்களையும் ஒழுங்கமைப்பது சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைகள் யாவும் இன்னமும் சர்வாதிபத்தியக் கண்ணோட்டத்திலிருந்தே கையாளப்பட்டு வருகின்றன. எனினும் சற்று வேறுபட்ட முறையில் இது நடைபெற்று வருகிறது.

”பாசிசத்தை… ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ, திட்டமிடப்பட்ட ஒன்றாகவோ அல்லது முன்மாதிரி எடுத்துக்காட்டானதாகவோ பார்க்கக் கூடாது. மாறாக, பொருளாதார நிலைமையிலிருந்தும், வெகுஜனங்களின் போராட்டத்திலிருந்தும் தோன்றிய பொருளாதார, அரசியல் உறவுகளின் ஓர் ஒட்டுமொத்த விளைவாகவே அதனை நோக்க வேண்டும்.”

நேற்றைய விரிவுரையிலும் இன்றைய விரிவுரையிலும் ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறேன். அது இதுதான்: பாசிசத்தை ஒரு திட்டவட்டமான, தீர்மானமான இயல்பு கொண்டதாகப் பார்க்கக் கூடாது. அதன் வளர்ச்சிப் போக்கை அடிப்படையாக வைத்து அதனைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ, திட்டமிடப்பட்ட ஒன்றாகவோ அல்லது முன்மாதிரி எடுத்துக்காட்டானதாகவோ பார்க்கக் கூடாது. மாறாக, பொருளாதார நிலைமையிலிருந்தும், வெகுஜனங்களின் போராட்டத்திலிருந்தும் தோன்றிய பொருளாதார, அரசியல் உறவுகளின் ஓர் ஒட்டுமொத்த விளைவாகவே அதனை நோக்க வேண்டும்.

சர்வாதிபத்தியம் நமது போராட்டப் பாதையைத் தடுக்கிறது என்று நினைப்பது தவறு. வெகுஜனங்களுக்கு ஜனநாயகப் பலன்கள் கிட்டச் செய்யும் போராட்டத்தின் பாதையை சர்வாதிபத்தியம் மூடிவிடுகிறது என்று நினைப்பது தவறு. இது தவறு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு நினைக்கும்படி பாசிசம் நம்மைத் தூண்டி வருகிறது. எல்லாம் முடிந்து விட்டது. இனி அதற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற மாயத்தோற்றத்தை நமக்குக் காட்ட பாசிசம் முயல்கிறது.

இந்தக் கண்ணோட்டத்துக்கு அணுவளவும் இடம் தரக்கூடாது. அதனை எதிர்த்துக் கடுமையாகப் போராட வேண்டும், வெகுஜனப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கும் பாசிச சர்வாதிகாரப் பிரச்சினையைத் திரும்பவும் கிளப்புகிறது. வெகுஜன இயக்கங்கள் பல்கிப் பெருகுவது சர்வாதிகாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதைத் தூண்டுகிறது. வெகுஜனங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாசிசம் தனது செயல்முறையை மாற்றிக் கொள்ளச் செய்கிறது. இதனை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

பாசிசத்தைப் பற்றி நான் தெரிவித்திருக்கும் கருத்து நமது கொள்கை முழுவதுக்கும் ஆதார அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சரியான கொள்கை வழியை நிர்ணயிக்க முடியும்.

சர்வாதிபத்தியம் கட்சியின் போராட்டப் பாதையை மூடி விடுவதில்லை; மாறாக புதிய பாதைகளைத் திறந்து விடுகிறது.

பாசிசம் நமக்குத் திறந்துவிடும் புதிய பாதைகளை உடனடியாகக் காணுவதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தால் அது தவறு.

இந்தத் தவறு அரசியல் ரீதியில் நமது திறமையின்மையையே காட்டும். ஆனால் இதனை கட்சி உணர்ந்து கொள்ளும்போது பாசிச சர்வாதிகாரப் பிரச்சினையை மீண்டும் எழுப்புவதில் வெற்றி பெறும்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க