கேள்வி : //விலங்குகளை கொல்வது குற்றமா?அப்படி குற்றம் எனில் ஏன் அதை சாப்பிடுகிறார்கள்? வள்ளலார் ஏன் இதை முன்வைத்தார்? அதே போல் வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்? அசைவம்! சைவம்? இதற்கான விளக்கம்?//

– கொடுக்கு

ன்புள்ள கொடுக்கு,

வினவு கேள்வி பதில் கேள்விகளை உங்களது சொந்தப் பெயரிலேயே கேட்கலாம். பொதுவில் விலங்குகளை கொல்வது குற்றமா என்று கேட்பது பொருத்தமற்றது. விலங்குகளை காட்டு விலங்குகள், வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்று இரு பிரிவாக பார்க்க வேண்டும். காட்டு விலங்குகள் சுற்றுச் சூழலின் சமநிலையை பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே அவற்றினை கொல்லக்கூடாது. இது உலகெங்கும் உள்ள நடைமுறை.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை காட்டு விலங்குகளைக் கொல்வது ஒரு பொழுதுபோக்காக மன்னர்கள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் காலத்தில் உலகெங்கும் இருந்தது. தற்போது அப்படிக் கொல்லக் கூடாது என்று பல நாடுகளில் சட்டமே இருக்கிறது.

வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்பவை நமது தேவைக்காக நம்மால் வளர்க்கப்படுபவை. அவற்றை இறைச்சிக்காக கொன்று உண்பதில் பிழையில்லை. ஏனெனில் வீட்டு விலங்குகள் எவையும் பாரம்பரியமாக இயற்கையாக வீட்டு விலங்காகத் தோன்றி வளரவில்லை. நாய், ஆடு, மாடு, கோழிகள், வாத்துகள் அத்தனையும் காட்டு விலங்குகளில் இருந்து மனிதனால் கைப்பற்றப்பட்டு பின்னர் புதிதாக பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்குகளாக தோற்றுவிக்கப்பட்டவை. குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்தே மனிதன் தனது உணவுத் தேவைக்காக இந்த விலங்குகளை வளர்த்து வந்தான். சமீபத்தில் வந்த ஆல்பா என்ற ஹாலிவுட் திரைப்படம் ஓநாய் எப்படி மனித குலத்தின் வீட்டு நாயாக மாற்றப்பட்டது என்பதை சுவாரசியமாக விளக்குகிறது.

இன்று மக்களின் புரதச்சத்து தேவையை வீட்டு விலங்குகளே பூர்த்தி செய்கின்றன. மேலும் கால்நடைகளின் வளர்ப்பை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதால் அவற்றை எவ்வளவு எண்ணிக்கையிலும் உருவாக்கிக் கொள்ளலாம். இவற்றைக்  கொன்று தின்பதால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதில்லை.

அடுத்து வள்ளலார் ஏன் அசைவ உணவை சாப்பிடக் கூடாது என்றார், எனக் கேட்டிருக்கிறீர்கள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்யம் பேசியவர். சத்திய ஞான சபையை நிறுவியவர். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம், தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். ஆகவே இவர் அன்றைய பார்ப்பன மற்றும் உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார்.

எனவே இராமலிங்க அடிகளாரை ஏதோ அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று மட்டும் சொன்ன சாமியாராகச் சுருக்கிப் பார்ப்பது தவறு. அவருடைய பிரதான வாழ்க்கைப் பணி இந்த சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்தான். சைவ உணவுப் பழக்கம் கொண்ட சைவ மதத்தாரும் வள்ளலாரை ஏற்கவில்லை. அவர் எழுதிய திருவருட்பா மீது வழக்கே போட்டிருக்கிறார்கள். எனவே நாம் வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பை வரித்துக் கொள்வோம். அசைவம் சாப்பிடக்கூடாது என்ற அவரது கொள்கையை ஏற்க வேண்டியதில்லை.

♦ ♦ ♦

கேள்வி : //சீமான் முன்னெடுக்கும் இன தூய்மைவாதத்தை முன்னிலைபடுத்தும் தமிழ்தேசியம் சரியா ? வர்க்க (வர்க்கமே இங்கு சாதியாய் உள்ள போது) முரண்பாடுகளை களையாத தமிழ்தேசியம் சாத்தியமா?//

அருள் செல்வன்

ன்புள்ள அருள்செல்வன்,

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. சீமான் முன்னெடுக்கும் இனத்தூய்மை வாதம் என்பது தமிழகத்தில் தமிழோடு தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருப்போரை தமிழர்கள் என்று ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களைத்தான் தமிழ் தேசியத்தின் எதிரிகளாக அவர் கட்டியமைக்கிறார்.

சாதிகளை வைத்தே யார் தமிழர் என்று பிரிப்பதும் உள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இங்கே ஒடுக்கும் தேசிய இனம் எதுவும் இல்லை. இந்து – இந்தி – இந்தியா எனப்படும் அரசியல்ரீதியான அமைப்பே நம்மை ஒடுக்குகிறது. அதை எதிர்த்துப் போராடும்போது நம்மை ஒத்த பிற தேசிய இன மக்களையும் கூட்டாக சேர்த்துக் கொண்டு போராட வேண்டுமே ஒழிய அவர்களை எதிராக நிறுத்த வேண்டியதில்லை.

இன்று தமிழகத்தில் இருக்கும் சிறு நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநில மக்களே பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு உரிமையாளர்களாக உள்ள தமிழர்களே, இக்கடைகளில் தமிழர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் குறைந்த கூலிக்கு நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது அவர்கள் மட்டுமே. இந்தப் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ளது. விவசாயத்தின் அழிவு காரணமாகவே இத்தகைய இடப்பெயர்வுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன.

சாதிகளே வர்க்கமாகப் பிரிந்து கிடக்கும்போது தமிழ் தேசியம் பேசுவோர் அதை கணக்கில் கொள்வதில்லை. அவர்கள் முன்வைக்கும் தமிழ் தேசியம் என்பது எல்லா வர்க்கங்களையும் உள்ளடக்கியதுதான். இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்று பார்ப்பதை விட சரியா, தவறா என்று பார்த்தால் நிச்சயம் தவறுதான்.

வர்க்க விடுதலையைப் பேசாமல் நம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க இயலாது. இன்று கல்வியிலும், மருத்துவமனைகளிலும் தனியார்மயம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான தமிழ் முதலாளிகள் கல்வியை – சுகாதாரத்தை வணிகச் சரக்காக்கியிருக்கின்றனர். அவர்களது நிறுவனங்களை அரசுடைமையாக்காமல் நம் மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தை இலவச உரிமையாக வழங்குவது எங்கனம்?

சீமான் போன்றோர் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போடும் வகையில் அரசு கல்வி நிறுவனங்களை மாற்றுவோம் என்று கூறுகின்றனரே அன்றி தனியார்மயமாக்கத்தை ஒழிப்போம் என்று பேசுவதில்லை.

வாழ்க்கைச் சிக்கல்கள் பெருகிவரும் நேரத்தில் வர்க்கரீதியான அரசியல் பலவீனமாய் இருக்கும்போது சீமான் போன்றோரின் ‘தூய்மைவாத’ அரசியல் கொஞ்சம் எடுபடலாம். அரசியல்ரீதியாக அதைத் தவறு என்பதோடு, உண்மையில் மக்களின் விடுதலைக்கு என்ன வழி என்று மொழி, இனம் பார்க்காமல் போராடுவதே சரியாகும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க