பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 14

டோக்ளியாட்டி

விரிவுரை 3

தேசிய பாசிஸ்டுக் கட்சி

பாசிசம் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் யுத்தத்திற்கு முன்னர் இருந்து வந்த பூர்ஷுவா சக்திகளின் அரசியல் நிறுவனம் பற்றி நான் ஏற்கெனவே கூறியதை தோழர்கள் நன்கு நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இத்தகைய நிலைமையில் பாசிஸ்டுக் கட்சி எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதையும், அதனால் இன்று ஏற்பட்டுள்ள விளைவுகளையும் அவர்களால் சரியாகப் புரிந்து கொள்வது கடினம்.

பூர்ஷுவா வர்க்கம் ஒரு வலுவான, ஒன்றுபட்ட அரசியல் நிறுவனத்தை என்றுமே பெற்றிருந்ததில்லை; கட்சி வடிவத்திலும் அதற்கு ஒரு நிறுவனம் இருந்ததில்லை. இதுதான் யுத்தத்திற்கு முன்னர் இத்தாலியில் இருந்த நிலைமை. யுத்தத்திற்கு முன்னர் ஓர் அரசியல் கட்சிக்குரிய இயல்பும், பெயரும் கொண்ட ஒரு பூர்ஷுவா அரசியல் நிறுவனத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்துடனும், செயல்முறையுடனும் நாடு முழுவதுக்குமான ஒரு மத்திய தேசிய நிறுவனத்தையே இங்கு குறிப்பிடுகிறேன். இத்தகைய ஒரு அமைப்பு இருந்ததா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள், உங்கள் முயற்சி வீண்தான். ஏனென்றால் அத்தகைய ஓர் அமைப்பு இருந்ததை உங்களால் காண முடியாது.

இத்தாலியப் பொருளாதாரக் கட்டமைப்பின் நேரடி விளைவிலிருந்து தோன்றியதே இத்தகைய அரசியல் நிலைமை. ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது நாட்டில் கனரகத் தொழில்துறை இருந்து வந்த போதிலும் தேசத்தின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் அதனால் ஒழுங்குபடுத்த முடியாததே இந்த அரசியல் பலவீனத்துக்குக் காரணம். விவசாயப் பொருளாதாரம் இத்தாலியப் பொருளாதாரத்தில் இன்னமும் பெரும் பங்காற்றி வந்தது. பெரும் எண்ணிக்கையில் இருந்த இடைப்பட்ட பிரிவினரும் ஒரு முக்கியப் பங்காற்றி வந்தனர்.

நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது. உதாரணமாக இங்கிலாந்தில் இரண்டு எடுத்துக்காட்டான கட்சிகள் இருக்கின்றன. லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி ஆகியவையே அவை. அக்கட்சிகள் தேசிய அளவில் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு திட்டத்தையும், கொள்கை வழியையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் கொண்டுள்ளன. ஒன்று மாற்றி ஒன்று அதிகாரத்துக்கு வருகின்றன. இத்தாலியில் இத்தகைய கட்சிகள் ஏதுமில்லை.

இதற்குப் பதிலாக, பூர்ஷுவாக்களின் கருத்தோட்டம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்த இயலாதவையும், தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை எய்த முடியாதவையுமான கட்சிகளும் கோஷ்டிகளும்தான் ஏராளமாக உள்ளன. யுத்தத்திற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் மிகப்பல கட்சிகளின் குழுக்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர்.

காஸ்டான்டினோ லஸ்ஸாரி (Lazzari Costantino)

ஆனால் இந்தக் கட்சிகள், குழுக்களின் அரசியல் மற்றும் ஸ்தாபன திட்ப நுட்பத்தைப் பார்ப்பீர்களேயானால் பின் கண்ட முடிவுகளுக்குத்தான் வருவீர்கள்: இக்கட்சிகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காட்டும் எல்லைக் கோடுகள் முனைப்பானவையாக, கூர்மையானவையாக இல்லை. அவை மங்கிப்போய் தெளிவின்றி அரைகுறையாகத்தான் காணப்படுகின்றன. நீங்கள் பெரிய குழுக்களை நெருங்கிச் சென்று பார்க்கும்போது அவற்றிடம் கட்சி இயல்பை நீங்கள் காணமுடியாது. பெரும் எண்ணிக்கையிலுள்ளவர்களைக் கொண்ட குழு கியோலிட்டி குழுதான். ஆனால் அதுவும் கூட ஓர் அரசியல் கட்சி அல்ல. ஒவ்வொரு பிரதிநிதியும் தமது சொந்தப் பகுதியில் ஒரு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்தக் குழு ஒரு ஸ்தாபனம் என்ற முறையில் அதன் சொந்தப் பிராந்தியத்துக்கு அப்பால் சென்றதில்லை. டூரினிலுள்ள லிபரல் முடியாட்சி யூனியனை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கொத்துக் கொத்தாக உள்ள இந்தக் குழுக்கள் ஓர் ஒருங்கிணைந்த கட்சியாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை.

ஆனால் அதே சமயம் இடதுசாரி அமைப்புகளை, உழைக்கும் வெகுஜனங்களது அமைப்புகளைப் பார்ப்பீர்களேயானால் முற்றிலும் வேறுபட்டதொரு காட்சியைக் காண்பீர்கள்.

யுத்த முற்கால பிரதிநிதிகள் சபையில் பெரிதும் ஒருங்கிணைந்த ஒரு பூர்ஷுவாக் கட்சியாக இருந்தது ரேடிக்கல் கட்சிதான். இது ஏன்? ஏனென்றால் வடபகுதியைச் சேர்ந்த உழைக்கும் வெகுஜனங்கள் அக்கட்சியின் ஆதார அடித்தளமாக அமைந்திருந்தனர். சோஷலிஸ்டுக் கட்சி உருவான அதே சூழ்நிலையில்தான் ரேடிக்கல் கட்சியும் தோன்றிற்று. ஆனால் அது பூர்ஷுவா ஜனநாயகப் பாதையில் விலகிச் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் உதயமானதால் இது ஒரு கட்சியின் வடிவத்தை எய்தியது.

படிக்க:
தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

யுத்த முற்காலத்தில் இருந்த ஒரே கட்சி, உண்மையான ஒரே கட்சி சோஷலிஸ்டுக் கட்சிதான், தேர்தல்களில் மிலானிலும் அதே சமயம் காக்லியரியிலும் ஒரே வேட்பாளரை நிறுத்தக்கூடிய ஒரே கட்சி சோஷலிஸ்டுக் கட்சிதான். இதேபோன்று டூரினிலும் பாரியிலும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஒரே வேட்பாளரை நிறுத்துவது என்பது எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும்.

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமரச நடவடிக்கைளின் விளைவாக பூர்ஷுவாக்களின் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டது. இது 1890-1898-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதனை கியோலிட்டியின் காலம் எனக் கூறலாம்.

கியாசின்டோ மெனோட்டி செர்ராட்டி (Giacinto Menotti Serrati)

மேலும், வடக்கிலுள்ள பூர்ஷுவா அரசியல் குழுக்களுக்கும் தெற்கிலுள்ள பூர்ஷுவா அரசியல் குழுக்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு நிலவுவதை நீங்கள் காணலாம். வடக்கில் உள்ள அரசியல் குழுக்கள் விரிந்து பரந்தவை. ஒரு லிபரல் கட்சியை உருவாக்கும் போக்கு கொண்டவை. இந்தச் சக்திகளை ஒன்றுபடுத்தும் பிரச்சினை அச்சமயம் முன்னணிக்கு வந்தது. பத்திரிகைகளிலும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அச்சமயம் இது முற்றுப் பெறவில்லை.

தெற்கே செல்வீர்களேயானால் இதைக்கூடப் பார்க்க முடியாது. அங்கு பூர்ஷுவாக்களின் அமைப்பு ஸ்தல நலன்களாலும், தனிப்பட்ட சொந்த நலன்களாலும் சிதறுண்டு கிடந்தது. ரேடிக்கல் கட்சி, சோஷலிஸ்டுக் கட்சி, குடியரசுக் கட்சி (கட்சி என்னும் சொல்லின் உண்மையான அர்த்தத்தில் இது தேசியத்தன்மை கொண்ட ஒரு கட்சியாக இருக்கவில்லை, ஒரு சில இடங்களில் மட்டுமே ஆதரவு பெற்ற ஓர் அமைப்பாக இருந்தது) ஆகிய கட்சிகள் எல்லாம் தெற்கில் ஸ்தல முத்திரைகளாகக் கொண்டவையாகவே இருந்தன. உதாரணமாக சோஷலிஸ்டுக் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நேப்பள்சில் சோஷலிஸ்டுக் கட்சியின் வரலாறும் இத்தாலியின் இதர பிராந்தியங்களில் சோஷலிஸ்டுக் கட்சியின் வரலாறும் ஒரே மாதிரியானதல்ல. சில அம்சங்களில் இது ஏனைய பூர்ஷுவாக் கட்சிகளை ஒத்திருந்தது. கட்சிக்குள் நடைபெறும் கோஷ்டி சண்டைகளிலும், சூழ்ச்சிகளிலும் இது பிரதிபலிக்கக் காணலாம். இதேதான் சிசிலியிலும் நடைபெற்றது. அங்கு இன்னொரு கட்சியைத் துவக்கும் அளவுக்கு உட்கட்சிப் பூசலும் சச்சரவும் கருத்து வேறுபாடும் மேலோங்கி இருந்தன. ரெக்கியோ எமிலியாவில் ¹ நடைபெற்ற சோஷலிஸ்டுக் கட்சியின் தேசிய காங்கிரசில் தேசியவாதிகள் பிளவுபட்டு “சிசிலி” சீர்திருத்தக் கட்சியை அமைத்தனர். வேறு சில குழுக்களும் தோன்றின. இவையாவும் தனியமைப்புகளாக மெஸ்ஸினாவிலும் கடானியாவிலும் சிறிதுகாலம் செயல்பட்டு மறைந்தன.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

1 லியோனிடா பிஸ்ஸோலாட்டியும் மற்ற தீவிர வலதுசாரி சீர்திருத்தவாதிகளும் கியோலிட்டியின் மேன்மேலும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட காலனிக் கொள்கையை, குறிப்பாக லிபியாவை ஆக்கிரமித்துக் கொண்டதை ஆதரித்தனர்: எமிலியாரெக்கியோவில் 1912 ஜூலையில் நடைபெற்ற சோஷலிஸ்டுக் கட்சியின் 12-வது தேசிய காங்கிரஸில் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். காஸ்டான்டினோ லஸ்ஸாரி, கியாசின்டோ மெனோட்டி செர்ராட்டி தலைமையில் கட்சியின் கட்டுப்பாடு மாக்சிமலிஸ்டுகள் கைக்குச் சென்றது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க