அமனஷ்வீலி
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 03

தூக்கம் மற்றும் சோர்வின் கடவுளாகிய மோர்பேயை வகுப்பறையிலிருந்து விரட்டும் பொருட்டு மோமூஸ் எனும் சிரிப்பு, மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும். குழந்தைகள் பாடவேளைகளில் எப்போது மகிழ்ச்சி யடைகின்றனர்?

என்னிடம் கால்பந்து உள்ளது. “நான்கையும் ஐந்தையும் கூட்டினால் எவ்வளவு வரும்?” கால்பந்து அறையின் வலது மூலைக்குச் செல்கிறது. யார் இதைப் பிடிக்கின்றார்களோ அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

“ஒன்பது!” என்று அதைப் பிடித்த சிறுவன் பதில் கூறிவிட்டு பந்தைத் திரும்பி எறிந்தான்.

“ஒன்பதிற்கும் மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் எட்டு. சரியா?” பந்து நடு பெஞ்சுகளை நோக்கிச் செல்கிறது.

“தப்பு! ஒன்பதிற்கும் மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் ஆறு.” பந்து திரும்ப என்னிடம் வருகிறது.

“எந்த மூன்று எண்களைச் சேர்த்தால் பத்து வரும்?”

“ஏன் பந்து?” என்று எனக்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடும். “இக்கணக்குகளை பந்து இன்றித் தீர்க்க முடியாதா?”

நிச்சயமாக பந்தின்றியே பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் உற்சாகம் இருந்திருக்காது.

“தலையைத் தொங்கப் போடுங்கள். கண்களை மூடுங்கள்… நான் உங்களுக்குக் கணக்குகளைச் சொல்வேன். நீங்கள் தலையை உயர்த்தாமல் விடையைக் கை விரல்களால் காட்டுங்கள்.”

குழந்தைகள் தலைகளைத் தொங்கப் போட்டனர், கண்களை மூடிக் கொண்டனர். நான் மெதுவான குரலில் சொல்கிறேன்:

“நான் ஒரு எண்ணை மனதில் வைத்திருக்கிறேன். இதனுடன் 3 ஐச் சேர்த்தால் 8 வரும். என் மனதில் உள்ள எண் எது?”

ஐந்து விரல்களுடன் பலர் கைகளை உயர்த்துகின்றனர். கையை உயர்த்திய ஒவ்வொருவரையும் நான் அணுகி, விரல்களைத் தொட்டபடியே மெதுவாகக் கூறுகிறேன்: “சரி! தவறு! சரி! நன்கு யோசி!”

“நான் ஒரு எண்ணை நினைத்துள்ளேன். இதிலிருந்து 4 ஐக் கழித்தால் 3 எஞ்சும். நான் நினைத்துள்ள எண் எது?”

இப்போது குழந்தைகள் இரு கரங்களையும் உயர்த்தி நான் நினைத்த எண்ணை விரல்களால் காட்டுகின்றனர். “சரி! சரி! தவறு! சரி!” மீண்டும் நான் அவர்களின் விரல்களைத் தடவியபடியே காதுகளில் கூறுகிறேன்.

தலைகளைத் தொங்கப்போடுமாறு ஏன் நான் குழந்தைகளிடம் கூறுகிறேன்? சாதாரணமாக உட்கார்ந்த நிலையில் இவர்களால் கணக்குகளைப் போட முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். ஆனால் இந்த உற்சாகம் இருக்காது.

“இதே போன்ற கணக்குகளை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள்” என்று நான் குழந்தைகளிடம் கூறுகிறேன்.

“2 + 8 ன் கூட்டுத் தொகையையும் 6 + 4 ன் கூட்டுத் தொகையையும் ஒப்பிடுங்கள்” என்று ஒரு சிறுவன் கூறுவான்.

“வெகு சுலபம்!” என்று கரும்பலகையில் கணக்கை எழுதியபடியே உச்சரிக்கிறேன்: “2+8 > 6+4. யாராவது இதை விடக் கடினமான கணக்கைச் சொல்லுங்கள்.”

ஆனால் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “என்ன விஷயம்?.. ஓ, மன்னியுங்கள், ‘குறைவானது’ என குறியிட வேண்டுமல்லவா…” வகுப்பறையில் மீண்டும் அதிருப்தி.

“என்ன நடந்தது?… தவறா?” என்று கரும்பலகையில் எழுதியதைக் கவனமாகப் பார்ப்பது போல் பாவனை செய்கிறேன். “ஆமாம்… 2 ஐயும் 8 ஐயும் கூட்டினால் 11 வரும், 6 ஐயும் 4 ஐயும் கூட்டினால் 10 வரும்.” எனவே, “பெரியது” என்ற குறிக்குப் பதில் “’சிறியது” என்ற குறியை இடுகிறேன்.

“இரண்டும் சமமானவை…. சமம் என்ற குறியிட வேண்டும். சமக்குறி… பத்தும் பத்தும் சமம்!” என்று குழந்தைகள் கத்துகின்றனர்.

படிக்க:
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

குழந்தைகளுடைய “கலகத்தின்” காரணம் எனக்கு ஒரு வழியாகப் புரிகிறது .

“மன்னியுங்கள்! இங்கே சமக்குறி அல்லவா இருக்க வேண்டும். பத்தும் பத்தும் சமம்…”

இது என்ன சொந்த செல்வாக்கைக் குறைத்துக் கொள்ளும் முறை என்று நீங்கள் கேட்கக்கூடும். எதற்கு இந்த நடிப்பு? “2 +8-ன் கூட்டுத் தொகைக்கும் 6+4-ன் கூட்டுத் தொகைக்கும் இடையில் என்ன குறியிட வேண்டும்?” என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் அவர்கள் எவ்விதக் குழப்பமும் இன்றி சமக்குறி இட வேண்டுமெனக் கூறியிருப்பார்கள். விஷயம் அத்துடன் முடிந்திருக்கும். இங்கோ குழந்தைகள் பொங்கியெழுகின்றனர், வகுப்பறையில் ஒரே சத்தம்! இதெல்லாம் எதற்கு?

ஆம், மற்ற ஆசிரியர்கள் பல சமயங்களில் இன்னமும் பின்பற்றும் சடத்துவம் பலமானது. இதைப் பற்றி மாபெரும் ருஷ்ய எழுத்தாளரும் ஆசிரியருமான லேவ் டால்ஸ்டாய் பின்வருமாறு கூறினார்: குழந்தைகள் படிக்க வசதியான வகையில் பள்ளிகள் அமைக்கப்படுவதில்லை , மாறாக, ஆசிரியர்களுக்குச் சொல்லித் தர வசதியாகப் பள்ளி அமைக்கப்படுகிறது.

ஒரு ஆசிரியரைப் பொறுத்தமட்டில், திட்டவட்டமான கேள்விகளைக் குழந்தைகளிடம் கேட்டு அதற்கு சரியான, தெளிவான, முழு பதில்களைப் பெறுவது எளிது. குழந்தைகள் படித்தாக வேண்டும், அவர்களுக்கு வேறு வழியில்லை. எனவே, கேள்வி கேள், அவர்கள் மண்டைகளைப் பிய்த்துக் கொள்ளட்டும். பின் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் குறுகிய, நீண்ட நேரங்களுக்கு அவர்கள் எதைப் படித்துள்ளார்கள் என்று கேள்விகள் கேள். எவ்வித தந்திரங்களும் தேவையில்லை. “சொல்லித் தருவது ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு” எல்லாவற்றையும் சுலபமாக முடித்து விடலாம்.

விஞ்ஞான அறிவை கிரகிப்பது, பன்முகத் திறமைகளை வளர்ப்பதன் அவசியம் பற்றி ஏதாவது அவசரமாகக் கூற அஞ்சுகிறேன். ஞானம், திறமைகள், பழக்கங்கள்! மனிதன் வாழ்விலும் வேலையிலும் ஆக்கப் பணியிலும் இவை எவ்வளவு முக்கியமானவை! பல பொருட்களையுடைய எண்களில் வெளிப்படும் இவை எல்லாம் மிகுந்திருந்த போதிலும் இவை மட்டுமே தனிநபரை உருவாக்கப் போதாதவை. குறிப்பிட்ட அளவு ஞானம் இல்லாவிடில் தனிநபர் நிலவ முடியாது, ஆனால் வளமிகு ஞானம் மட்டுமே தனிநபரை உருவாக்கி விடுவதில்லை. ஏனெனில், யதார்த்தத்தின் பால், மனிதர்களின் பால், சுற்றியுள்ளவர்களின் பால், ஞானத்தின் பால் மனிதனுக்கு உள்ள உறவுதான் இவனைத் தனி நபராக்குகிறது. தன் செயல் முனைப்பு மற்றும் உலகக் கண்ணோட்டத்தால்தான் அவன் தனிநபராகிறான். தனிநபர் என்பது போராடும் மனிதனைக் குறிக்குமே தவிர சற்றும் பிறழாது கண் மூடித்தனமாகத் தன் கடமைகளை நிறைவேற்றுபவனைக் குறிக்காது. போராளியாக விளங்க நவீன, பன்முக ஞானமும், மாறி வரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இவற்றைப் பயன்படுத்தும் திறமைகளும் பழக்கங்களும் தேவை.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க