பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 17

டோக்ளியாட்டி

ழைய அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டு பாசிஸ்டுக் கட்சியால் ஜீரணிக்கப்பட்ட விவரங்களை ஏற்கெனவே பார்த்தோம். 1920-ம் ஆண்டிலும் 1922-ம் ஆண்டிலும் ரொமாக்னாவையும் எமிலியாவையும் சேர்ந்த பெரும்பாலான குடியரசுவாதிகளும், மாஜினியின் குழுக்களும் குடியரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டன. 1923 மே மாதம் தேசியக் கட்சி இணைக்கப்பட்டதைப் பார்த்தோம். இந்த இணைப்பு இரு வகையில் பலன் தந்தது.

ஒருபுறம் ஸ்தாபனக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டதை இது குறித்தது. அதே சமயம் பாசிஸ்டுக் கட்சியின் வளர்ச்சிப் பாதையை இது மாற்றமடையவும் செய்தது. இச்சமயத்தில் பாசிஸ்டுக் கட்சி மிக ஆழமான மாறுதல்களுக்கு உள்ளாகி வந்ததையும் காணலாம். கிரேக்கத்தையும் ரோமாபுரியையும் பற்றிக் கூறுப்படுவதை இந்த இரு கட்சிகளுக்கும் கூறலாம். இணைவுக்கு முன்னர் தேசியக் கட்சி மிக சாதாரணமானதாகவே இருந்தது. சில இடங்களில் பாசிஸ்டுகள் தேசியவாதிகளை முரட்டுத்தனமாக நடத்தினர். இவ்வாறு அவர்கள் வெற்றி கொள்ளப்பட்டனர். ஆனால் பிறகோ இதே தேசியவாதிகள் வெற்றியாளர்களாகி விட்டனர்.

பொட்டாய் (giuseppe bottai)

பாசிச சர்வாதிகாரத்தின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கு இது மிக முக்கியமானதாகும். தேசியவாதியான ரோக்கோ இந்த சர்வாதிகார ஆட்சியில் சட்ட அமைச்சரானது தற்செயல் நிகழ்ச்சி அல்ல; இதே போன்று மற்றொரு தேசியவாதியான பொட்டாய் 3 பாசிஸ்டு சர்வாதிகார ஆட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராக மாறியதும் தற்செயல் நிகழ்ச்சி அல்ல. அரசு மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் பாசிஸ்டுகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையே ஒரு போராட்டமே நடைபெற்று வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வின் அடிப்படை சாரம் எப்போதும் தேசியக் கட்சியிடமிருந்தே வந்திருக்கிறது. இவ்வாறே அவர்களது தீர்வின் சாராம்சம் எப்போதுமே பிற்போக்கானதாகவும் பூர்ஷுவாக்களுக்குச் சாதகமானதாகவுமே இருந்து வந்திருக்கிறது.

பெனடூஸ் (Beneduce)

நிட்டியின் ஜனநாயகம், லிபரல் ஜனநாயகம், ரேடிக்கல் ஜனநாயகம், சமூக ஜனநாயகம், ஸ்காட்லந்து வினைமுறைகளைப் பின்பற்றும் கூட்டுரிமைக் கழக ஜனநாயகம் முதலான எல்லா வகையான இத்தாலிய ஜனநாயக அமைப்புகளையும் கலைத்தது மூன்றாவது கட்டமாகும். இடித்துத் தகர்த்துத் தூள் தூளாக்கப்பட்ட இந்த இத்தாலிய ஜனநாயகங்களின், யுத்தத்துக்கு முற்பட்ட ஆண்டுகளில் ஜீவித்திருந்த இந்த ஜனநாயகங்களின் பிரதிநிதிகள் இன்று இத்தாலியப் பொருளாதாரத்தின் கேந்திர இடங்களில் அமர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம். இப்போது இத்தாலியப் பொருளாதாரத்தில் மிகவும் அதிகாரம் பெற்ற பெயராக விளங்குவது பெனடூஸ் 4 என்பது. இவர் இக்கட்சிகளில் ஒன்றின் தலைவர். அவரைப் போன்ற மற்றவர்களும் இத்தாலியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

செசரே அலெஸாண்டிரி (cesare alessandri)

1923-ல் கிரோண்டே மாக்சிமலிஸ்டுகள் பாசிஸ்டுக் கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டனர். இவர்களின் தலைவர் செசரே அலெஸாண்டிரி 5. 1924-ல் பாப்புலர் கட்சியின் முறை வந்தது. அது பாசிஸ்டுக் கட்சியை ஆதரித்தது மட்டுமன்றி, அதன் ஜோதியில் முற்றிலுமாகக் கலந்து, முழுக்க முழுக்க பாசிஸ்டாகிவிட்டது. 1922 கோடை காலத்திலும், 1925 அக்டோபரிலும் வலதுசாரி லிபரல்களின் முறை வந்தது. சலாண்ட்ரா 6 முதல் கியோலிட்டி கட்சியின் வலதுசாரிப் பிரிவினர் வரை பலரும் பாசிஸ்டுக் கட்சியில் ஐக்கியமாயினர். முடிவாக, 1927-ல் ரிகோலாவும் அவருடைய பரிவாரத்தினரும் 7 வருகிறார்கள். அவர்கள் பாசிஸ்டுக் கட்சியில் நேரடியாகச் சேராவிட்டாலும் ஒரு வகையில் அதனுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டனர்.

இதுவரை நாம் கூறிவந்ததிலிருந்து பழைய அமைப்புகள் உடைத்து நொறுக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களும் ஏனையோரும் எவ்வாறு பாசிஸ்டுக் கட்சியில் இணைக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இத்தகைய நிலைமையில்தான் பிரச்சினை கூர்மை அடைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கட்சிக்கு நெருக்கடிகள் ஆரம்பமாயின. இது ஏன்?

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

3. கியூசெப்பி பொட்டாய் (1895-1959) : ஆட்சிக்கு உள்ளார்ந்த தத்துவத்தை ஏற்படுத்துவதில் மிகவும் ஈடுபாடு கொண்ட அறிவாளிகளில் ஒருவர். 1926 முதல் 1929 வரை கார்ப்பரேஷன்களின் துணைச் செயலாளராகவும் கார்ப்பரேஷன்களின் அமைச்சராக 1929-32 வரையிலும் இருந்த இவர், சோஷலிசத்திலிருந்தும் முதலாளித்துவத்திலிருந்தும் குணாம்சத்தில் வேறுபட்ட கதம்ப உருவான பொருளாதார அமைப்பைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆரம்பத்தில் புதிய பொருளாதார ஏற்பாட்டை வியந்து பாராட்டுபவராக இருந்த பொட்டாய், அரசாங்க பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட பொருளாதார ஜனநாயகத்திற்கும் பாசிசத்தின் கீழ் பூர்ஷுவாக்களின் அரசியல் பொருளாதார சர்வாதிகாரத்தின் இரக்கமற்ற யதார்த்தத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டை அவரால் தீர்க்க முடியவில்லை. உற்பத்தியை ஒருவாறு கட்டுப்படுத்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்க அதிகப்படியான “அவசரநிலை” ஏற்படுத்தியபோது அதனை பொட்டாய் எதிர்த்தபோது 1932-ல் முசோலினி, சர்க்காரிலிருந்து அவரை நீக்கினார். பின்பு 1936 முதல் 1943 வரை பொட்டாய் கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பாசிசத்தின் உயர் கவுன்சில் கூட்டத்தில் – 1943 ஜூலை 25-ல் – முசோலினிக்கு எதிராக வாக்களித்தார். அந்தக் கூட்டத்தில் ஆட்சி தன்னைத் தானே கலைத்துக் கொண்டது.

4. வால்டர் பெனடூஸ் (1877-1944) பிஸ்ஸோலட்டியின் சமூக சீர்திருத்தவாதக் கட்சியின் உறுப்பினரான இவர் 1921-22-ல் தொழிலாளர் இலாகா அமைச்சராக இருந்தார்; 1925 பாசிஸ்டு ஆட்சியோடு பகிரங்க ஒத்துழைப்பு அளிப்பதென்ற நிலைக்குச் சென்றார். நடைமுறையில் பயனுள்ளவற்றிற்கும் பொதுப் பணிகளுக்கும் நிதி வழங்குவதற்காக பகுதிப் பொதுக் கடன் வழங்கும் நிறுவனங்களை முதலில் இவர் ஏற்படுத்தியிருந்தார். 1933-ல் தொழில் புனரமைப்புக் கழகம் அமைக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்தார்.

5. அலெஸாண்டிரியின் குழு ஆட்சியுடன் இணங்கிப் போக விரும்பியதால் “கிரோண்டே” என்ற பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டது. விரைவில் (1863—?) அலெஸாண்டிரி பெயர் தெரியாமல் போனார்.

அன்டோனியோ சலாண்ட்ரா (Antonio Salandra)

6. அன்டோனியோ சலாண்ட்ரா (1853-1931) தீவிர பழைமை விரும்பும் அரசியல்வாதி; அபுலியனின் நிலவுடமை வர்க்கத்தின் பிரதிநிதி, 1914-16-ல் பிரதம மந்திரியாக இருந்தார். இவரும் இவரது அரசியல் ஆலோசகர், வெளியுறவு அமைச்சர் சிட்னி சொன்னிகோவும், இத்தாலி முதல் உலக யுத்தத்தில் தலையிட ரகசியமாக ஏற்பாடு செய்தனர். இந்தத் தலையீட்டிற்கு பலமான மக்கள் எதிர்ப்பு இருந்தது. ஆனால், புத்தகால நிலைமைகளில் அரசின் அடக்குமுறை அதிகாரங்களுக்கு ஆக்கம் கொடுக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று சலாண்ட்ராவும் சொன்னினோவும் பார்த்தனர். 1922 செப்டம்பரில் தன்னை ஒரு “கெளரவ பாசிஸ்டாக” சலாண்ட்ரா பிரகடனப்படுத்திக் கொண்டார்.

7. தொழிலாளர் பிரச்சினைகள் ஆய்வு செய்யும் தேசியக் கழகமும் பிராப்ளமி டெல் லவோரோ என்னும் அதன் இதழும் பொதுத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் முன்னாள் செயலாளர் ரினால்டோ ரிகோலாவால் 1927-ல் ஸ்தாபிக்கப்பட்டது. அவ்வாண்டு ஜனவரி 4-ம் தேதி ரிகோலாவும் ஏனைய சீர்திருத்தவாதச் சங்கத் தலைவர்களும் பொது தொழிலாளர் சம்மேளனத்தை கலைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ரினால்டோ ரிகோலா (Rinaldo rigola)

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னால் ரிகோலாவும் அவருடன் சேர்ந்த சில சீர்திருத்தவாதிகளும் மிலானில் சந்தித்து, கார்ப்பரேட்டில் ”சோதனை” வெற்றி பெறுவதற்குத் தங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் ஒரு செயல்திட்டத்தையும் அளிப்பதாகக் கூறும் ஒரு தஸ்தாவேஜில் கையொப்பமிட்டனர். வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தையும் சோஷலிசத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் தாங்கள் மறுக்கவில்லை என்று அந்தக் குழு கூறிற்று; ஆனால் அதே சமயம் ஆட்சியின் சீர்திருத்தங்களுக்கும் 1926, ஏப்ரல் 3 சட்டம், அப்போது தயாரிக்கப்பட்டு வந்த தொழிலாளர் சாசனம், வேலைத்திட்டத்திற்கும் சாதகமான கணிப்பை அது அளித்தது.

மேலும், சாராம்சத்தில் ஒத்துழைக்கும் தனது நிலையை யதார்த்தம் என்ற பாசாங்குத் தனத்தின் மூலம் நியாயப்படுத்துவதற்கு, கார்ப்பரேட்டிவிசத்திற்கு தாங்கள் இதற்கு முன்னர் காட்டி வந்த எதிர்ப்பு தொழிலாளர் நலன்களுக்கு உகந்ததல்ல என்று இப்போது உணர்வதாக அந்தக்குழு தனது அறிக்கையில் கூறிற்று. சமூக, பொருளாதாரக் கொள்கையின்பால் பாசிசம் கடைப்பிடிக்கும் கண்ணோட்டம்தான் தொழிலாளர்களின் நலன்களை சிறப்பாகப் பாதுகாக்கும் என்று அது மேலும் கூறியது.

படிக்க:
இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

முதல் 10 ஆண்டுக் காலம் இவர்களது ஆய்வு வெளியீட்டை ஆட்சி சகித்துக்கொண்டது. ஏனெனில் அதிதீவிரவாதிகளின் தீங்கற்ற ஆக்கபூர்வமான விமர்சனத்தைவிட அவர்களது ஒத்துழைப்புதான் மிகவும் அனுகூலமானது என்பதை ஆட்சி தெரிந்து கொண்டிருந்தது. 1914லிருந்து 1920 வரை மிலானின் சோஷலிஸ்டு மேயராக இருந்த எமிலி கல்டாரா பிராப்ளமி டெல்லவோரோவுக்கு கட்டுரைகள் அளித்து வந்தார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க