கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரு வேறு விபத்துகளில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் ஒருபோதும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை மீண்டும் மெய்ப்பிக்கின்றன இந்த மரணங்கள்.
மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 13 பேர் பலியானார்கள். 72 பேர் காயமடைந்தார்கள். இராசாயனம் நிரம்பிய பேரலில் உண்டான கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டது. இது, நைட்ரஜன் அடங்கிய சிலிண்டர்களையும் மற்ற பேரல்களையும் வெடிக்கச் செய்தது.
இறந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமிருந்தனர். இந்த சம்பவம் நிகழ்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், உள்ளூர்வாசிகள் சிலர் ஏதோ கெட்ட வாடை தொழிற்சாலையிலிருந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதைப் பொருட்படுத்தவில்லை.
இரண்டாவது சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மும்பை ஓ.என்.ஜி.சி. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் கொல்லப்பட்டனர்; மூவருக்கு காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்டவர்களில் மூவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. இந்த தீ விபத்து முதலில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்டதாகச் சொன்னது.
இதுபோன்ற ஆலை விபத்துகள் நடப்பது இந்தியாவில் பொதுவான சம்பவங்களாகிவிட்டன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி 3,562 தொழிலாளர்கள் 2014-2016 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த தொழிற்சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். 51,000 பேர் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று பேர் மரணமடைகிறார்கள்; 47 பேர் காயமடைகிறார்கள்.
படிக்க:
♦ ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?
♦ பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?
2017-ம் ஆண்டு பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட ஒரு ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் 48,000 தொழிலாளர்கள் பணிநிமித்தமான விபத்துகளில் மரணமடைகிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலைச் சொன்னது. இதில் 24% பேர், கட்டுமானத்துறையை சேர்ந்தவர்கள்.
தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல் நலன், பணிபுரியும் இடத்தின் தன்மை ஆகியவற்றுக்காக 13 தொழிலாளர் சட்டங்கள் இருந்தபோது, இந்தியாவில் மோசமான விபத்துகள் மட்டும் குறைந்தபாடில்லை.
2018-ம் ஆண்டு பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம், பணிபுரியும் தன்மை ஆகியவற்றின் 13 சட்டங்களையும் ஒரே சட்டமாக்கும் மசோதாவை மத்திய அரசாங்கம் முன்மொழிந்தது.
ஆனால், காகித அளவில் உருவாக்கப்படும் சட்டங்கள் மட்டும் தொழில்துறை விபத்துக்களை குறைத்து விடாது. அவற்றை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துக்கள் குறைய வாய்ப்பிருக்கும். ஆனால், இந்திய தொழிற்சாலைகள் அவற்றைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை.
உதாரணத்துக்கு, 2017-ம் ஆண்டு ரே பரேலி தேசிய அனல்மின் கழக ஆலையில் ஏற்பட்ட விபத்தை பாய்லர்களை வழக்கமாக கழுவியிருந்தாலே தவிர்த்திருக்க முடியும் என உத்தர பிரதேசத்தின் தொழிலாளர் துறை அறிக்கை கூறியது.
கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லி பாவனா தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானார்கள். இந்த ஆலையில் இரண்டு தீயணைப்பான்கள் மட்டுமே இருந்ததும், ஒரே ஒரு வெளியேறும் வழி இருந்ததும் போதிய தீ தடுப்பு நடவடிக்கை திட்டம் இல்லாததும் இந்த விபத்துக்குக் காரணமென தெரியவந்தது. அனைத்தும் மோசமாக, இந்த கட்டிடம் சட்டவிரோதமாக பட்டாசுகளை தேக்கி வைக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக அனைத்து தொழிற்சாலை பகுதிகளிலும் போதிய பாதுகாப்பு மேற்பார்வைகளை செய்யாமலேயே ஆலை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. போதிய மேற்பார்வை அலுவலர்கள் இல்லை என காரணம் சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கை இந்தியாவில் 506 தொழிற்சாலைகளுக்கு ஒரே ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே இருப்பதாகக் கூறுகிறது.
நெடுங்காலமாகவே இந்திய தொழில்துறை பாதுகாப்பு விதிகளை புறம் தள்ளிவிட்டபடியே உள்ளது. அரசாங்கங்களோ, தொழிற்சாலை நடத்துபவர்களோ ஆயிரக்கணக்கான உயிர்கள் போயிருப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘உங்களுடைய உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை’ என்கிற செய்தியையே இது தொழிற்துறை பணியாளர்களுக்கு சொல்கிறது!
கட்டுரையாளர்: Aarefa Johari
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: ஸ்க்ரால்