privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !

ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !

குழந்தைகளின் முன் ரொட்டியையும் உப்பையும் விட்டெறிந்ததன் மூலம் உத்திர பிரதேச மாநில பாஜக அரசின் யோக்கியதை என்னவென்பது அம்பலமேறியது

-

த்திரபிரதேச மாநிலம் சியூர் அரசு துவக்க பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக காய்ந்த ரொட்டியும், தொட்டுக் கொள்ள வெறும் உப்பும் வழங்கப்பட்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அந்தக் காய்ந்த ரொட்டிக்காக ஏழைக் குழந்தைகள் வரிசையில் அமர்ந்திருந்த காட்சி மனதை உலுக்குவதாக இருக்கவே, டி.ஆர்.பி நோக்கத்திற்காக தேசிய தொலைக்காட்சிகள் ஓரிரு நாட்கள் அவற்றை ஓட்டிக் காட்டின.

அதைத் தொடர்ந்து அந்த பள்ளியின் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுப்பது போல் துவங்கிய உத்திரபிரதேச அரசு, பின்னர் மேற்படி வீடியோவைப் பதிவு செய்த பத்திரிகையாளரைக் கைது செய்ததும், அதற்கு மாநிலத்தின் கவுரவத்தைக் குலைக்க சதி செய்ததாக ஒரு காரணத்தை சொன்னதும் செய்திகளில் வெளியானது.

நடந்த சம்பவத்தில் பெரிதும் பேசப்படுவது சியூர் பள்ளியும், பாஜக ஆதித்யநாத் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுமே. எனினும், இவற்றைக் கடந்து கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் உள்ளன.

முதலில், சியூர் அரசுத் துவக்கப் பள்ளியில் இவ்வாறு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல. போலவே இது சியூர் பள்ளியில் மட்டுமே நடக்கும் அநீதியும் அல்ல. உத்திரபிரதேசத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் நடத்தப்படும் விதத்திற்கு ஒரு வகை மாதிரியாகவே இந்த சம்பவத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளை பள்ளிக் கூடங்களுக்கு அழைத்து வந்தது. பின்னர் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் இந்த திட்டம் படிப்படியாக சத்துணவுத் திட்டமாக வளர்த்தெடுக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. மதிய உணவுத் திட்டம் அதிகளவில் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பதை உணர்ந்த மத்திய அரசு இதே திட்டத்தை தனது நிதியுதவிடன் மற்ற பின் தங்கிய மாநிலங்களுக்கு விரிவுபடுத்தியது.

படிக்க:
உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி – உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !
♦ மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !

மதிய உணவுத் திட்டம் எந்தளவுக்கு அக்கறையுடன் செயல்படுத்தப்படுகின்றது என்பது அரசாங்கம் குழந்தைகளையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் எந்தளவுக்கு அக்கறையுடன் அணுகுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு அளவுகோள். சியூர் பள்ளிக் குழந்தைகளின் முன் ரொட்டியையும் உப்பையும் விட்டெறிந்ததன் மூலம் உத்திர பிரதேச மாநில பாஜக அரசு தனது யோக்கியதை என்னவென்பதை வெளிப்படுத்தி உள்ளது. அரசின் அக்கறையின்மையை அதே பள்ளிக் கூடம் எப்படி நடத்தப்படுகின்றது என்பதில் இருந்து மேலும் புரிந்து கொள்ள முடியும்.

ஐந்தாம் வகுப்பு வரை நடத்தப்படும் சியூர் அரசு ஆரம்பப் பள்ளியில் மொத்தம் 95 மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு விதிகளின் படியே இந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விதியும் கூட மொத்த மாணவர் எண்ணிக்கையைக் கணக்கில் எடுக்கிறதே தவிற வகுப்புகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. விதிகளின் படி மூன்று ஆசிரியர்கள், ஐந்து வகுப்புகளில் படிக்கும் 95 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் – ஆனால், 2017-ம் ஆண்டு வரை சியூர் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டிருந்தனர்.

1-Yogi-Adityanath-FIR-Against-Journalist

ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் நிரந்த ஊழியர் மற்றொருவர் ஒப்பந்தப் பணியாளர். மூன்றாவதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் முராரி லால் தான் மதிய உணவு விவகாரத்தில் தற்போது வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த முராரி லால், ராதா தேவி என்கிற நிரந்த ஆசிரியருக்கான மாற்று ஆசிரியர். அதாவது, நிரந்தர ஆசிரியர் ராதா தேவி பள்ளிக்கு வருவதில்லை என்பதால் நியமிக்கப்பட்டவர்தான் முராரி லால். இப்போது அவரும் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் சியூர் பள்ளி ஒரே ஒரு ஆசிரியரோடு நடந்து வருகின்றது.

ஒரே ஆசிரியர், வெவ்வேறு வகுப்புகளில், வெவ்வேறு வயதுகளில் படிக்கும் மாணவர்களுக்கு வெவ்வேறு பாடங்களை ஒரே நேரத்தில் கற்பிக்க வேண்டும். இந்த இடத்தில் சியூரின் கல்வியறிவு 32 சதவீதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சியூர் பள்ளியின் நிலைமை என்பது அதற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. நாடெங்கிலும் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமை இது தான். இந்தப் பகுதி மக்கள் பெரும் கட்டணம் கட்டி தனியார் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் வாய்ப்பு இல்லாதவர்கள் என்பதால் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் திறக்கப்படுவதும் இல்லை. படிக்க வேண்டும் என்றால் ஒரே வாய்ப்பு அரசு பள்ளிகள் மட்டும்தான்.

நாடெங்கிலும் ஏழைகள் படிப்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பான அரசுப் பள்ளிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றது என்பதற்கான ஒரு வகை மாதிரியாக இருக்கிறது சியூர் அரசு ஆரம்ப பள்ளி. உண்மையில் நமது அக்கறை சில நிமிடங்களில் முடிந்து விட்ட அந்தக் காணொளியைத் தாண்டி அதன் பின் எதார்த்தமாய் உறைந்து கிடக்கும் அரசின் அலட்சியத்தையும் தடித்தனத்தையும் பிடித்து உலுக்குவதில் இருக்க வேண்டும்.


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : ஸ்க்ரால்