Sunday, October 13, 2024
முகப்புசெய்திஉலகம்கொக்ககோலா - சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி !

கொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி !

நான்கு கண்டங்களில் 37 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கொக்ககோலா நிறுவனத்துடையது பிளாஸ்டிக் குப்பைகளே அதிகமாக உள்ளன. இதை மறைக்க மறுசுழற்சி என வேசம் போடுகிறது கோக்.

-

சுற்றுச்சூழலை மாசாக்குவதில் கொக்ககோலா நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளதாக “பிளாஸ்டிக்கிலிருந்து விடுபடுவோம்” – பிரேக் பிரீ ஃப்ரம் பிளாஸ்டிக் – இயக்கத்தின் உலகளாவிய ஆய்வு கூறுகிறது. அடுத்த மூன்று இடங்கள் பிடித்த நிறுவனங்கள மொத்தமாக ஏற்படுத்திய மாசை விட கொக்ககோலா நிறுவனம் அதிக மாசுபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என உலகம் முழுவதிலும் 72,000 ஆர்வலர்கள் இந்த மிகப்பெரிய ஆய்வில் பங்கேற்றிருக்கின்றனர். நடைபாதைகள், கடற்கரைகள், அலுவலக தெருக்கள் மற்றும் வீடுகளிலிருந்து போடப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்ததில் மொத்தமாக 50 வகையான நெகிழிகள் மற்றும் 8000 வகையான ப்ராண்டுகள் அதில் கண்டறியப்பட்டன.

நான்கு கண்டங்களில் 37 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கொக்ககோலா நிறுவனத்துடையது மட்டுமே 11,732 பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தன. அடுத்த நிலையில், நெஸ்லே மற்றும் பெப்ஸிகோ நிறுவனங்கள் இருந்தன. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிக பிளாஸ்டிக் குப்பைகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கும் அதே வேளையில் ஆசிய மற்றும் தென்னமெரிக்க கண்டங்களில் இரண்டாவது இடத்திலும் வட அமெரிக்காவில் ஐந்தாவது இடத்திலும் கொக்ககோலா நிறுவனம் இருக்கிறது.

“எப்பொழுதுமே எங்களது பொருள்கள் குப்பைகளாக நம்முடைய கடல்களில் கொட்டப்படுவதோ அல்லது எந்த இடத்திலும் கொட்டப்படுவதோ எங்களுக்கு ஏற்புடையது கிடையாது. புதிதாக பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுவது அல்லது ஏற்கெனவே உள்ள குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட உலகளாவிய சிக்கலைத் தீர்க்க நாங்கள் மற்றவர்களுடன் கூட்டாக பணியாற்றி வருகிறோம்” என்று இந்த ஆய்வு குறித்து கேட்டதற்கு கொக்ககோலா நிறுவனம் பதிலளித்துள்ளது. மேலும் பிலிப்பைன்ஸில் சுமார் 19 மில்லியன் டாலரை பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

படிக்க:
குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !
♦ நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு

ஆனால் தொடர்ந்து இரண்டாவதாக முறையாக உலகின் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யும் முதல் பெரிய நிறுவனமாக வந்துள்ளது சுற்றுசூழலுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்கின்ற கொக்ககோலாவின் முகத்திரையை கிழித்துள்ளது.

2019, ஜனவரி மாதத்தில் அட்லாண்டாவில் “அட்லாண்டா ரீசைக்கில்ஸ்” என்ற பெயரில் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்வது குறித்த ஒரு கூட்டம் நடைபெற்றது. பல பத்தாண்டுகளாக தனியார் நிறுவனங்கள் “பசுமை கொடையாளார்” என்ற பெயரை பயன்படுத்தி பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பொறுப்புகளிலிருந்து எப்படி தப்பி வருகின்றன என்பது அந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு இரகசிய ஆடியோ பதிவின் மூலம் தெரிய வந்தது. தி இண்டெர்செப்ட் என்ற இணையதளம் அதை வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

ஆனால் பலனளிக்க கூடிய மறுசுழற்சி மசோதா போன்ற திட்டம் கொக்ககோலா போன்ற நிறுவனங்களுக்கு சற்று செலவை ஏற்படுத்துவதால் அந்த நிறுவனங்கள் அதற்கெதிராக கடுமையாக சண்டையிடுகின்றன.

அதனால் மறுசுழற்சி மசோதா அந்த கூட்டத்தில் முன் வைக்கப்படவில்லை. மாறாக, ”மறுசுழற்சியை ஊக்குவித்தல், வேர்மட்ட இயக்கங்களுக்கு உதவி செய்தல்” என்ற மேலோட்டமான முழக்கத்தையே கொக்ககோலா முன் வைத்தது. உண்மையில் மறுசுழற்சியை இந்த நிறுவனங்கள் விரும்பினால் வாடிக்கையாளார்கள் திருப்பி அளிக்கும் வெற்று பாட்டிலுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும்.

மறுசுழற்சி மசோதாவை நடைமுறைப்படுத்தியிருக்கும் மாநிலங்களில் 60 விழுக்காடு மறுசுழற்சி நடக்கிறது மற்ற மாநிலங்களில் வெறுமனே 24 விழுக்காடு மட்டுமே நடக்கிறது. அதே போல மசோதாவை நடைமுறைப்படுத்தியிருக்கும் மாநில கடற்கரைகளில் 40 விழுக்காடு பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்துள்ளதாக கடற்சார் கொள்கை (Marine Policy) எனும் சஞ்சிகையில் 2018-ல் வெளி வந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மறுசுழற்சி மசோதா ஒரு நிரூபிக்கப்பட்ட முறை என்று ”அட்லாண்டா ரீசைக்கில்ஸ்”-ன் நிறுவனரான சீடல் மற்றும் சிலர் அந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்

ஜார்ஜியா மறுசுழற்சி கூட்டணி (Georgia Recycling Coalition) எனும் நிறுவனம் கொக்ககோலாவிடம் இருந்து நன்கொடை பெறுவதால் மறுசுழற்சி மசோதாவை ஆதரிக்க முடியாது என அதன் நிர்வாக இயக்குனர் குளோரியா ஹார்டிக்ரீ கூறினார். பாட்டில் மசோதாவை ஆதரிக்க முடிவு செய்தால், கொக்ககோலா கொடுக்கும் நிதியை இழக்கக்கூடும் என்று “கீப் அட்லாண்டா பியூட்டிஃபுல்” அமைப்பின் நிர்வாக இயக்குநரும், ”கீப் அமெரிக்கா பியூட்டிஃபுல்”-ன் துணைத் தலைவருமான கனிகா கிரீன்லீ ஒப்புக் கொண்டுள்ளார். அட்லாண்டா நகரத்தின் சுற்றுச்சூழல் திட்டங்களின் இயக்குநராகவும் இவர் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் பில்லியன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்களை தயரித்து உலகிலேயே மோசமான அளவில் பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தும் நிறுவனம் என்று பெயரெடுத்த கொக்ககோலா தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க போவதாக கூறிக் கொண்டு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு ஏழை நாடுகளுக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதற்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்து வருகிறது. ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்ட ஓநாய் கதைதான் இது !!


கட்டுரையாளர் :  Sharon Lerner
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி  இண்டெர்செப்ட் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க