இந்தாண்டு தீபாவளியை குழந்தை சுஜித்-ஐக் (2 வயது) காப்பாற்ற வேண்டி பிரார்த்தனைகளுடன் கழித்தனர் பெரும்பாலான தமிழக மக்கள். சுஜித்-ன் தந்தை பிரிட்டோ திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர். சுஜித்தின் தாய் கலாமேரி. மூத்த அண்ணன் புனித் ரோஷன் (வயது 4). தனது வீட்டின் அருகே விவசாயம் செய்து வந்த பிரிட்டோ விவசாயம் இல்லாத நாட்களில் கட்டிடத் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் சொந்த தேவைகாக போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு கடந்த ஆண்டு தூர்ந்து போனதை அடுத்து அதனை மூடுவதற்காக மேல்மட்டம் வரை மண்ணை கொட்டி வைத்துள்ளார். அந்த இடத்தில் தற்போது சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையை அடுத்து கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியுள்ளது. இந்நிலையில், 25-ம் தேதி மாலை 5:30 மணி அளவில் சுஜித் அந்த கிணற்றின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தவன் எதிர்பாராத வகையில் அதில் தவறி விழுந்துள்ளான்.
அப்போது பிரிட்டோ கூலி வேலைக்கு சென்றிருந்தார். சுஜித் விழுந்ததைக் கண்ட கலாமேரி அலறிச் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பகுதி மக்கள் அளித்த புகாரை அடுத்து மணப்பாறை தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையே தகவல் கிடைத்து பிரிட்டோவும் வந்துள்ளார். தீயணைப்புத் துறை குழந்தையை மீட்பதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் சுஜித்தின் நிலைமை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் துவங்கியது. #savesujith மற்றும் #savesurjith ஆகிய ஹேஷ்டேகுகளில் சுஜித் ஆழ்குழாய்க் கிணற்றில் மாட்டிக் கொண்டிருப்பது குறித்த தகவல்கள் தீயாய்ப் பரவத் துவங்கியது.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசு சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஒரு படை என அதிகார வர்க்கமும், பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சம்பவ இடத்திற்கு வந்து குவிந்தனர். ரஜினி கமல் துவங்கி அனைத்து நடிகர்களும், ஹர்பஜன் சிங் போன்ற விளையாட்டுத் துறை பிரபலங்களும் சுஜித் காப்பாற்றப்பட வேண்டி பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரும் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளனர். அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையின் அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
கிணறு இருக்கும் பகுதியில் நிலத்தின் கீழே பாறைகள் இருப்பதால் 26-ம் தேதி இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை மட்டுமே குழி தோண்ட முடிந்தது. எனவே மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித்-ஐ மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.
படிக்க :
♦ திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….
♦ கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !
எனினும் குழந்தையின் கைகளில் கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. 27ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் வந்தனர். இவர்கள் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.
இரண்டு நாட்களாக பல்வேறு குழுக்கள் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தும் இதுவரை பலன் ஏதும் ஏற்படவில்லை. திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினரும், திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினரும் மீட்புப் பணிகளில் பங்களிக்க முன் வந்தனர்.
இதனிடையே 27-ம் தேதி மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
*****
கிசோர் கே ஸ்வாமி போன்ற ஒருசில பார்ப்பனிய விசப்பூச்சிகள் தவிர்த்து விசயம் அறிந்த அனைவரும் குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பதைத்துக் கொண்டுள்ளனர். நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நாட்டில் எண்பது அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை என்பதே இந்தியாவின் எதார்த்தம். இந்தியாவில் “உள்ளவர்களுக்கும்”- “இல்லாததவர்களுக்கும்” இடையே சில பல ஒளியாண்டுகள் அளவுக்கான இடைவெளி நிலவிக் கொண்டிருக்கும் எதார்த்தத்தை சுஜித் உணர்த்துகிறான்.
படிக்க :
♦ திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !
♦ கீழடி அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! கோவை அரங்கக் கூட்டம் !
அடுத்து இது போன்ற ஒரு சம்பவம் நடந்த உடனேயே அதைக் குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கையாள்வதற்கான ஒரு முறைமையும் இல்லை. சுஜித் விசயத்திலேயே இரண்டு நாட்கள் இடைவெளியில் பல்வேறு குழுவினர் பல்வேறு வகைகளில் வெவ்வேறு கருவிகளைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட குழுவினரில் எத்தனை பேருக்கு தொழில்முறை நிபுணத்துவம் இருக்கும் என்பதைக் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
பல்வேறு துறைகள், பல்வேறு துறைசார் நிபுணத்துவம் கொண்ட குழுக்கள் ஒருங்கிணைந்த முறையில் செயலாற்றும் வகையிலான ஒரு மீட்புப் படை அரசிடம் இல்லை – இருக்கும் குழுவிடம் போதிய கருவிகளும் இல்லை என்பதே இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகின்றது.
ஒரு திட்டத்தை முயற்சிக்கும் போதே அதன் பின் விளைவுகள், அதன் அதிகபட்ச திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றை முன்னேற்பாடு செய்து கொள்ளும் எந்த வழிமுறையும் அங்கு பின்பற்றப்படவில்லை. ஒரு திட்டம் தோல்வியடைந்த பின்னர்தான் அடுத்த திட்டம் குறித்து யோசிக்கிறது அதிகாரவர்க்கம். அதன் காரணமாகவே அடுத்த திட்டத்திற்கான கருவிகள் வரவழைப்பதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தப் பதிவு வெளியாகும் நேரம் வரையில் சுமார் 71 மணிநேரம் ஒரு இரண்டு வயதுச் சிறுவன் குறைவான ஆக்சிஜனோடு, தண்ணீர் இன்றி, உணவு இன்றி அந்தக் குழியில் சிக்கியிருக்கிறான்.
ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுவது என்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் புதியதாக நடைபெறும் சம்பவம் அல்ல. ஆண்டுக்கு ஒரு குழந்தையையாவது இது போன்ற சம்பவங்களில் நாம் இழந்து விடுகிறோம். இதே போல மலக்குழியில் மனிதனே இறங்கி சுத்தம் செய்யும் அவலமும், அதில் விபத்து ஏற்பட்டு ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான தாழ்த்தப்பட்டவர்கள் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர்.
தொழில்நுட்பத்தில் அமெரிக்காவையும் சீனாவையும் எட்டும் வகையில் நிலவுக்கும், செவ்வாய்க்கும் சேட்டிலைட் விடுவது தொடங்கி, ஆகஸ்ட் 15-க்கு போஸ் கொடுக்க போர் விமானங்களை வாங்கிக் குவிப்பது வரை சில லட்சம் கோடிகளை செலவு செய்யும் அரசுக்கு இத்தகைய மனித இழப்பைத் தடுக்கும் கருவிகளையும் கட்டமைப்பையும் உருவாக்கும் எண்ணம் துளியும் இல்லை. மாறாக பழைய நிலைமையே நீடிப்பது உறுதி செய்யப்படுகிறது.
குடிமக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசால் மட்டுமே இச்சமூக அவலங்களைப் போக்க முடியும். மறுகாலனியாக்க – பார்ப்பனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்திருக்கும் ஒரு அரசுக் கட்டமைப்பிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா ?
– சாக்கியன்
சுஜித் படுகொலை
செய்யப்பட்டுள்ளான்.அதற்கு இந்த ஆளும் கும்பலின், ஆளும் வர்க்கத்தின் முட்டாள் தனமும் ,மக்கள் மேல் பயமில்லாமையுமே காரணம்.
மேலும் மருத்துவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு ஒரு வாய்ப்பாகவே சுஜித்யை மீட்பதாக நாடகம் ஆடினார்கள்.
நிலவில் என்ன வகையான தனிமம் உள்ளது என ஆராய அனுப்பப்படுகிறது விக்ரம் லேண்டர். ஆனால், 72 ஆண்டுகால சுதந்திர நாடு என்று பெருமை பீற்றிக் கொள்ளப்படும் நாட்டில் சரியான புவியியல் தகவல்கள்கூட இல்லை. களத்தில்தான் தெரிகிறதாம் கடினமான பாறைகள் என்று… இதை சொல்ல அவர்களுக்கு துளியும் வெட்கம் இல்லை…