வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 8

கேரளாவின் கனமழை அம்மாநிலத்தையே உருக்குலைக்கும் என்பதை நாம் யாரும் எதிர்பார்த்திருக்க  மாட்டோம். ஏன்..! அம்மக்களே அதனை எதிர்பார்க்கவில்லை. மழை எப்பொழுதும் அவர்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், கடந்த 8 -ஆம் தேதி முதல் 15 -ம் தேதி வரை பெய்த மழை அவர்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெரும் துயரம்.

கடந்த ஒரு நுற்றாண்டாக இது போன்றதொரு கனமழை பெருவெள்ளத்தை கண்டதில்லை என்கிறார்கள் கேரள மக்கள். எதிர்காலத்தில் மழை என்றால் அச்சப்படவும் வாய்ப்புள்ளது என்கிற அளவிற்கு கடும்பாதிப்பு.

பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதும் கடுமையான பாதிப்பு. கேரளாவில் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா முழுவதும் சேதாரம். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட படகுகளுக்கு அப்பகுதியில் இருந்த வீடுகள் தான் தடுப்புச் சுவராக இருந்தது என்றால் அந்த கோரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அப்பகுதிக்கு அருகே உள்ள ஒரு சிறிய நகரம் கொழஞ்சேரி. இதையொட்டிய பம்பை ஆறு.  அதன் கீழ் பகுதியில் நெடும்பிரையார் என்கிற சிறிய ஊர். அதில் அப்பகுதியில் பிரபலமான ஒரு டென்டல் கிளினிக்.

ஒரு வட மாநில இளைஞர் மட்டும் கிளினிக்கின் முன் வாசலில் இருந்த சேற்றை சிரமப்பட்டு அள்ளிக் கொண்டிருந்தார். உள்ளே இருந்து வாளிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தெருவில் ஊற்றிக் கொண்டிருந்தார் மற்றொருவர்.

உள்ளே ஜெனரேட்டர் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சற்று எட்டிப்  பார்த்ததும் மூன்று பேர் பி.வி.சி. பைப்பில் தண்ணிரை பீய்ச்சி சுவர், தரை எங்கிலும் அடித்துக் கொண்டிருக்க, ஒருவர் கிளினிங் வைப்பரைக் கொண்டு தரையை அழுக்குப் போக அழுத்தி தேய்த்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கருகே தன்னால் முடிந்த வரை சிறு சிறு உதவிகளை செய்துகொண்டிருந்தார் கிளினிக்கின் உரிமையாளர் மருத்துவர் ஜான் ஜோஜி.

மருத்துவர் ஜான் ஜோஜி

சாதாரண நாட்களில் அந்த கைகள் சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே கத்தியை பிடித்திருக்கும் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விட்டது. இருப்பினும் தற்போது வேறு வழியில்லாமல் சகதியை அள்ளிக்கொண்டிருந்தது. அவரிடம் கேட்டதும் சொல்ல ஆரம்பித்தார்.

“1988 -இல் ஆரம்பிக்கப்பட்டது இந்த மருத்துவமனை. தொடக்கத்தில் ஒரு சிறிய ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட கட்டிடத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதன்  மூலம் அவர்களின் நம்பிக்கையையும் பெற்று… டூ வீலர் பார்கிங், கார் பார்கிங் என்று நோயாளிகளின் வாகனங்களுக்கு இடம் விட்டு இந்த மருத்துவமனையை உருவாக்கினேன்.

படிப்படியாக முன்னேறி  இந்த உயர்ந்த கட்டிடத்திற்கு வந்தேன்.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் சில புதிய தொழில்நுட்ப கருவிகளையும்  வாங்கி போட்டிருந்தேன். இதுபோன்ற காட்டாற்று வெள்ளம் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய இத்தனை ஆண்டுகள் உழைப்பையும் இந்த மழை வாரி சுருட்டிக் கொண்டு சென்று விட்டது.

மழை வரும் என்று எச்சரித்தவுடன் வீட்டிற்கு முன்னுரிமை கொடுத்து எல்லா பொருட்களையும் எடுத்து பத்திரப்படுத்தினோம். அதே சமயம் இந்த இடத்தில் இவ்வளவு தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் பெரிய அளவில் மருத்துவமனை மீது கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவு எல்லா பொருட்களும் நாசமாகி விட்டது. குறைந்தது பத்தடி உயரத்திற்கு இப்பகுதியில் வெள்ள நீர் ஓடியது.

எனக்கு ஏற்பட்ட இழப்பை நான் கணக்கிட விரும்பவில்லை… அப்படியே விரும்பினாலும் என்னால் கணிக்க இயலாது….. இனி நான் திரும்ப பின்னோக்கி செல்ல வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்த பட்ச உபகரணங்களைக் கொண்டு சிறிய அளவில் மருத்துவ மனையை மீண்டும் நடத்த உள்ளேன்.” என்று சொல்லிக் கொண்டே அடுத்த வேலையைப் பார்க்க செல்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

தே பகுதியில் சற்று தொலைவில் இருக்கும் ஆட்டிங்கரா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வாசலில் குப்பை கிடந்குபோல் கொட்டி கிடந்த சேறு படிந்த பொருட்களில் துழாவிக் கொண்டிருந்தனர் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்.

அனைத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில் , பீரோ, மெத்தை போன்ற பர்னிச்சர் மற்றும்  எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள். அதில் எதானும் தேறாதா? சேதமடையாமல் இருக்கும் பொருட்களை எடுத்து மீண்டும் உபயோகிக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தனர். அதில் நல்ல பொருட்கள் எவ்வளவு உள்ளது என்று ஒருவர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

உள்ளே பளிங்குக் கல் பதிக்கப்பட்ட தரையை இரண்டு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளேயும் வெளியேயும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆபர்கள் அறிவித்து தொங்க விடப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் நுகர்வோரை சுண்டி இழுக்கும் விதமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது. அவர்களை எல்லாம் வேலை வாங்கியபடி அதன் உரிமையாளர் ஸ்ரீகுமார்  நின்றிருந்தார்.

ஸ்ரீகுமார்

அவரிடம் கேட்டபோது “ என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதனை எல்லாம் எப்படி ஈடுகட்டுவது என்றும் தெரியவில்லை. எல்லா பொருட்களுக்கும் இன்சுரன்ஸ் கட்டி இருந்தாலும் கம்பனியில் இருந்து வந்து பார்த்து விட்டு கணக்கெடுத்து மட்டும் சென்றுள்ளனர்.

அவர்களோ… இந்த எல்லா பொருட்களுக்கும் எவ்வாறு இன்சுரன்ஸ் கிளியர் செய்வது என்று தெரியவில்லை. நாங்களும் இதுபோல் பாதிப்பை எதிர்கொண்டது இல்லை என்று சொல்லி விட்டு சென்றார்கள். அவர்கள் சொல்வதைப் பார்த்தல் பாதி பணம் கூட கிடைக்காது என்றுதான் தோன்றுகிறது.

வெள்ளத்தால் நான் தற்போது இழந்துள்ள பொருட்களின் மதிப்பு மட்டும்  ஒரு கோடி இருக்கும். அரசாங்கம் வீடுகளுக்கு மட்டும்தான் இழப்பீடு கொடுப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். தொழில் நிறுவனங்களுக்கு அப்படி எதுவும் சொல்லவில்லை. இது ஒரு பெரும் வருத்தமாக இருக்கிறது” என்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கிட்டத்தட்ட கொழஞ்சேரியில் உள்ள சிறு கடை முதல் பெரிய கடைகள் வரை இதே பாதிப்புக்கு உள்ளாகித்தான் இருந்தன. இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் கடைகளுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. வீட்டில் இருந்த பொருட்களையும் இழந்துள்ளார்கள் என்பது  கூடுதல் துயரம்!

  • வினவு களச்செய்தியாளர்கள் கொழஞ்சேரி, பத்தினம் திட்டா மாவட்டம், கேரளா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க