வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 3

கேரள மழை வெள்ள பாதிப்பு குறித்தும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வினவு செய்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைசேர்ந்த புதனூர் மற்றும் பாண்டநாடு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இங்கே பதிவு செய்கின்றனர். #KeralaFloods #KeralaFloodReliefலூயிஸ் கே.ஆபிரகாம், டெல்லி காவல்துறை, ஓய்வு, பாண்டநாடு.

வெள்ளம் வந்தபோது மேல்தளத்தில் நான் மட்டும் தனியாக இருந்தேன். வீட்டில் வேற யாரும் இல்லை. சுமார் இருபது மணிநேரம் தவித்துகொண்டிருந்தேன். என்ன செய்வது என்று புரியவில்லை. உதவிக்கு யாரையும் கூப்பிடவும் முடியவில்லை. முதல் தளம் வரை வெள்ளம். வீட்டில் ஒரு பொருளும் மிஞ்சவில்லை. அந்த நேரம் மீனவர்கள் வந்தார்கள். அவர்கள் வரவில்லை என்றால் இந்நேரம் என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது. கடற்படை எல்லாம் அவர்களுக்கு பிறகு வந்தவர்கள்தான். அவர்கள் வந்திருந்தாலும் காப்பாத்தியிருக்க முடியாது.

சந்தோஷ், பெந்தெகொஸ்தே சர்ச், பாண்டநாடு.

வெள்ளம் வந்தபோது சர்ச் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் வீட்டின் மேல் தளத்தில்தான் இருந்தோம். எங்கு பார்த்தாலும் வெள்ளம். வெளியேறி செல்வதற்கு எந்த வழியும் இல்லை. வெள்ளத்தின்போது மேல்தளத்தில் போட்டிருந்த ஓடும் உடைந்து விட்டது. ஒன்றும் புரியவில்லை. ஹெலிகாப்டர் வருமா என்று எதிர்பார்த்தோம், வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் நிச்சயம் அவர்களால் எங்களை மீட்டிருக்க முடியாது. மேல்தளம் முழுவதும் ஓடுகள். அவர்கள் கீழே வந்திருக்க மாட்டார்கள். மீனவர்கள்தான் எங்களை மீட்டனர். தங்கள் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. எங்களை காப்பற்றுவது மட்டும்தான் மீனவர்களின் லட்சியமாக இருந்தது.

ராதிகா, புதனூர்.

கடந்த ஒரு வாரமா முகாமில் தங்கியிருக்கோம். கழிப்பிடம் முதற்கொண்டு எல்லாம் பிரச்சினையாகத்தான் இருந்தது. சுத்தமான தண்ணியும் உணவும் இல்லை.  இப்பதான் தண்ணி வடிய ஆரம்பிச்சிருக்கு. வீட்ட கிளின் பண்ணலாம்னு வந்திருக்கோம். நிவாரணம் கொடுக்குற வண்டியும் உள்ள வர ஆரம்பிச்சிருக்கு. வண்டி வரும்வரை காத்திருந்து வாங்கிட்டு போறோம்.

ராதாமணி, புதனூர்.

ஒன்பது ஆடு இறந்துடுச்சி… ஒரு மாடு ரொம்ப நோய் வாய்பட்டிருக்கு. என்னோட வருமானமே இந்த ஜீவன்களை நம்பிதான். இப்ப அதுவும் இல்லாததால.. கஞ்சிக்கு கூட வழி இல்லை… ரோட்டுல யாராவது உணவு பொட்டலம் கொடுப்பாங்களான்னு காத்துக்கிட்டிருக்கோம். இங்க இருந்து கேம்புக்கு போனபோது கட்டியிருந்த துணியோட போனோம். திரும்பி வந்தா உடுத்தக்கூட துணி இல்லை. அதுவும் ஏதாவது வண்டியில வந்து தருவாங்களான்னு பார்த்துட்டிருக்கோம்.

சுதி,  புதனுர்.

கேம்புல இருந்து இன்னைக்குதான் வந்தோம். வீட்டுல ஒரு சாதனமும் இல்ல. மொத்தமும் போயிடுச்சி. கட்டிக்க கூட துணி இல்ல. இப்ப இந்த துணி கொடுத்தாங்க…. ஏதோ.. பழசோ… புதுசோ. இதை விட்டா வேற வழி இல்ல.

கருணாகரன்- கனகாம்பாள், பாண்டநாடு.

சமீபத்துலதான் எனக்கு ஹார்ட் ஆபரேசன் பண்ணேன். மழை பெய்ய ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா வீடு மூழ்கிடுச்சி. அதனால பக்கத்து வீட்டு மாடியிலதான் தங்கியிருக்கோம். இங்க இருந்து மாடிக்கு நீந்தி தான் போனோம். அப்பவே நிறைய மழை தண்ணிய குடிச்சிட்டோம். அதுக்கு பிறகு மூணு நாள் சோறு தண்ணி இல்லாம கிடந்தோம். மழை தண்ணிய குடிச்சிட்டு இருந்தோம். எனக்கு கண்ணெல்லாம் சொருக ஆரம்பிச்சிடுச்சி. இப்ப கொஞ்சம் கொஞ்சம் தண்ணி வடிய ஆரம்பிச்ச பிறகு சில வண்டிகள்ல வந்து பிரட் கொடுத்தாங்க. அதைத்தான் சாப்பிட்டோம். அதுவும் சிலது கிடைக்கும்.. கிடைக்காது…. ஒரு வாரமா மாத்திரை மருந்து எதுவும் சாப்பிடல… எல்லாம் வெள்ளத்துல போயிடுச்சி… அஞ்சி லட்ச ரூபா வரைக்கும் நஷ்டம்.

சுதா ராஜேந்திரன், பாண்டநாடு.

இப்ப வரைக்கும் வீட்டுக்கு தேவையான அடிப்படையான எந்த பொருளும் இல்ல.   அரிசி, பருப்பு எதுவும் இல்ல… நிவாரண பொருட்கள் எல்லாம் வருது. ஆனா மெயின் ரோட்டில இருப்பவங்களுக்கு மட்டுந்தான் கிடைக்குது. உள்ளே 52 குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கு எதுவும் கிடைக்கலை. எனக்கு கிடைச்சது இந்த டார்ச் லைட் மட்டும்தான்.

ராஜலட்சுமி, புதனூர்.

கேம்பா இருந்தாலும், வீடா இருந்தாலும் பெரும் பிரச்சனையாத்தான் இருக்கு. பாத்ரூம் எங்கயும் போக முடியல. வெளியில தண்ணியா இருக்கு. வீட்டுல இருக்க பாத்ரூமும் மூழ்கிடுச்சி. பெண்களுக்கு தான் நிறைய பிரச்சனையே. முக்கியமா மாத்து துணி இல்ல.  ஒரே துணிய போட்டுட்டு இருக்கோம். வீடுகள் எல்லாம் மூழ்கி இருக்கிறதால, என்ன நிலைமையில இருக்குன்னு பார்த்துட்டு நிவாரணப் பொருட்களை எல்லாம் சேகரிச்சி மாடி வீட்டுல வச்சிட்டு எல்லாரும் திரும்ப முகாமுக்கு போறாங்க. எல்லா இடத்துலயும் தண்ணியா இருக்கிறதால நிவாரணப் பொருட்களை வாங்க திரும்பத் திரும்ப மெயின் ரோட்டுக்கு வர முடியல.

  • வினவு களச் செய்தியாளர்கள் செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பாகம் 1

கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்! பாகம் 2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க