தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. அம்மழையை மகிழ்ச்சியாக வரவேற்றனர் கேரள மக்கள். ஆனால் ஆகஸ்ட் எட்டாம் தேதி பெய்த கனமழை அந்த மகிழ்ச்சியை காவு வாங்கியது. கேரளாவின் பதினான்கு மாவட்டத்தில் பன்னிரெண்டு மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் மழைநீர் இன்னும் வடியாமல் வீடுகள் அனைத்தும் மூழ்கிக் கிடக்கின்றன.

மழை வெள்ள பாதிப்பிலிருந்து கேரள மக்கள் மீள்கிறார்களா? என்ன சொல்கிறார்கள்? அதிகம் பாதிக்கப்பட்ட ஆலப்புழா மாவட்டத்தின் செங்கனூர் நகருக்கு வினவு செய்தியாளர்கள் நேரில் சென்றனர்.

ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கனூர் நகராட்சி, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த திருவல்லா, கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கனச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையான சேதாரத்துக்கு ஆட்பட்டுள்ளன. புத்தன்காவு, பாண்டநாடு, குட்டன்நாடு ஆகிய பகுதிகளில் இன்னமும் நீர் வடியாமல் உள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அருகருகே உள்ள பள்ளி, கல்லூரிகள், பள்ளிவாசல், சர்ச் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய மருத்துவ உதவிகள், டெட்டால் மற்றும் சோப்பு போன்றவை அந்தந்த முகாம்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

முகாமில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் இழந்த பிறகு, மின்சாரம் இல்லாமல், வாழ்வதற்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் அங்கு சென்று என்ன செய்வது என்று கேட்கிறார்கள். நகரத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மட்டும் பகல் நேரத்தில் சுத்தம் செய்யும் பொருட்டு வீட்டிற்குச் செல்கிறார்கள். அவர்களும் உணவு மற்றும் இரவு தூங்குவதற்கு முகாமிற்குதான் திரும்புகின்றனர்.

ஒன்றிரண்டு  இடங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்து எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள் மட்டுமே சென்று வருகின்றன. மருத்துவ உதவிக்குச் செல்லும் மருத்துவர்கள் குழு, நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் அனைவரும் லாரிகளில்தான் செல்ல முடிகிறது. கடை வீதியில் ஒரு சில கடைகள் மட்டும் அத்தியாவசிய தேவைக்காக திறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு திறக்கப்பட்டுள்ள கடைகளில்  பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் சென்று வாங்குவதற்கு தயங்குகின்றனர். மாற்று துணி இல்லாதவர்கள் ஒரு சில இடங்களில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள நிவாரண துணிகளில் தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த பகுதிகளில் பம்பை, வரட்டாறு, மணிமாலா ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் அனைத்திலும் வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு செல்கிறது. பெரும்பாலான மக்கள் இந்த வெள்ள பாதிப்புக்கு, வரலாறு காணாத மழையே காரணம் எனக் கூறுகின்றனர். மேலும் பல இடங்களில் ஆற்றின் கரையோரம் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் காரணமாக நீரின் போக்கு  ஊருக்குள் திரும்பியதே காரணம் என்கிறார்கள் கேரள மக்கள். சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டதே இந்த பேரழிவுக்கு காரணம் என்று சிலர் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, ”அவை எல்லாம் முட்டாள்தனமான கருத்துகள்” என்றே சொல்லிச் செல்கிறார்கள்.

வெள்ளம் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் கேரள மக்கள் என்ன கருதுகிறார்கள்?

செங்கனூர் நகராட்சி முகாமில் தங்கியிருக்கும் பினிஷ் – அபிஷ் – சிவன்

எங்கள் பகுதிக்கு வெள்ளம் வராது என்றுதான் நினைத்திருந்தோம். அப்படியே வந்தாலும் இந்த அளவிற்கு வரும்… வீட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு பாதிக்கப்படுவோம்  என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. பல இடங்களில் ஒரு வாரமாக முகாமில் தங்கியிருக்கிறார்கள். நாங்கள் இந்த முகாமிற்கு வந்து  மூன்று நாள்தான் ஆகிறது. எங்களால் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. வீட்டின் முதல் தளம் வரை மூழ்கி விட்டது. வீட்டின் மாடிக்கு சென்றதால் தப்பித்தோம். வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களும் மூழ்கிவிட்டது. அங்கிருந்து வெளியேறக்கூட  வழி இல்லாது தவித்தோம், மீனவர்கள் வந்த பின்னர்தான் நாங்கள் பிழைக்க முடிந்தது.

பிரேம்தாஸ் – துணிக்கடை உரிமையாளர்.

எனக்கு இந்த இடத்தில் 3 கடைகள் இருக்கு. இங்கு வெள்ளம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்துலதான் பம்பை ஆறு ஓடுது. இது வரைக்கும் அந்த ஆத்து தண்ணி ஊருக்குள்ள வந்து பார்த்ததில்லை. அந்த நம்பிக்கையில இருந்துட்டேன். இடுப்பளவுக்கு தண்ணீ… சுத்தி இருக்குற எல்லா கடைகளிலும் வெள்ளம் புகுந்து நாசம். என் கடையில் இருந்த பொருட்கள் எல்லாம் பாதிக்கு பாதி வீணாகி போயுள்ளது. எனக்கு மட்டும் 25 லட்சத்துக்கும் மேல நஷ்டமாயிடுச்சு. ஓணம் பண்டிகைதான் முக்கியமான சீசன், அதெல்லாம் இப்ப நாசம். அதுக்கு பின்ன சபரிமலை சீசன். ஆனா அதுக்கு பொருள் எடுக்கக்கூட பணம் இல்ல. எல்லாம் நஷ்டம்.

அப்பச்சன்-சிசிலி தம்பதியினர். ஆவணி – செங்கனச்சேரி தாலுக்கா.

முழங்கால் வரைக்கும் தண்ணீர். எங்களை காப்பாத்திக்க நாங்க பட்டபாடு பெரும்பாடு. என்னோட மனைவிக்கு இரண்டு காலும் வராது. சுகர் பேஷன்ட். எனக்கு கால் நடக்க முடியாது. எங்க போனாலும் மூணு சக்கர வண்டியிலதான் போவேன். இப்படி இருக்கும் போது நாங்க என்ன பண்ண முடியும். இந்த ஊர்ல இருக்க எல்லோரும் கேம்ப் போயிட்டாங்க. நாங்க மட்டும் போகல. இந்த நொண்டி காலை வச்சிகிட்டி அவ்ளோ கூட்டத்துல என்ன பண்ண முடியும்? பாத்ரூம் போக கொள்ள என்னால எல்லோருக்கும் சிரமம்தான்.. அதான் முகாமுக்கு போகல. இங்கயே எங்க வார்டு மெம்பர்கிட்ட சொல்லி உணவு பொட்டலம் கொண்டு வந்து தர சொன்னேன்.. அவங்களும் கொண்டு வந்து தராங்க.

ரெமணன்  – சாலைப் பணியாளர். ஆவணி

எனக்கு 42 வயது ஆகிறது. இது வரைக்கும் இப்படி ஒரு வெள்ளத்தப் பாத்ததில்ல. வெள்ளம் வர்றதுக்கு முன்னாடியே எங்க ஊர்ல அறிவிச்சாங்க.. அதனால் புள்ளைகளோட புஸ்தகம், சர்டிபிகேட் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிட்டோம். ஆனா டிவி, பிரிட்ஜ் எல்லாம் மூழ்கிடுச்சி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு வீட்டுல பாதிப்பு ஏற்பட்டிருக்கு.  700 ரூபா கூலி வாங்குற நான், அதையெல்லாம் எப்படி மீட்க போறேன்னு தெரியல.  எங்க கவர்மென்ட் முடிஞ்ச வரைக்கும் செய்யுது…. வேற ஆட்களும் செய்யுறாங்க.. ஆனா எவ்ளோ பேருக்கு செய்ய முடியும்?

ஷானு – புழவாது பகுதி

ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு பதினோறு முப்பதுக்கு வெள்ளம்.. இரவோட இரவா எல்லாரும் கேம்புல போயிட்டு தங்கிட்டோம்.  எல்லா வீடும் தண்ணில மூழ்கிடுச்சி…. ராத்திரி நேரத்துல ஒரு பொருளும் எடுக்க முடியல… எல்லோரும் கட்டின துணியோட போயிட்டோம்.  எங்க பகுதி எல்லாம் குட்டநாடு ஏரியாவை சேர்ந்தது… எங்க மழை பெஞ்சாலும் குட்ட நாட்டுக்குதான் தண்ணி வரும். கடல் மட்டத்துல இருந்து 150 அடி கீழே இருக்கு.

இங்க இருக்க மக்கள் எல்லாம் சாதாரண மக்கள்தான். சின்னதா ஒரு வீடு கட்ட பன்னிரண்டு வருசம் கஷ்டபடுறோம். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தது எல்லாத்தையும் மொத்தமா இழந்துட்டோம். சர்கார் கொஞ்சம் கொஞ்சம் தருவதா சொல்லியிருக்கு…. கேம்புல தங்கியிருக்கவங்களுக்கு மூவாயிரம் ரூபா…. வீடு தகர்ந்தவங்களுக்கு ஆறு லட்சம், இடத்தையே பயன்படுத்த முடியாதவங்களுக்கு பத்து லட்சம்னு சொல்லுறாங்க… ஆனா அது உறுதியா தெரியல….  எப்படி இருந்தாலும் சர்கார் கொடுத்தே ஆகணும்.

மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களையும், முகாம்களை ஏற்பாடு செய்தவர்களையும் சந்தித்தோம்…

வி.கே. சிந்து – டி.ஆர். சிந்து – விஜயாம்மாள் – நகராட்சி பணியாளர்கள்

நாங்கள் கடந்த ஒருவாரமாக முகாமில் பணி செய்கிறோம். வழக்கமாக எங்கள் பணி காலை 7 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை செய்வோம். ஆனால் இப்போது நேரம் காலம் எல்லாம் கிடையாது தொடர்ந்து பணி செய்து வருகிறோம். செங்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள பாண்ட நாடு, பெரிச்சேரி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். கரண்ட் இல்லை, நெட்வொர்க் இல்லை, கடை இல்லை, சாதனங்கள் ஏதுவும் இல்லை. இன்னமும் வீட்டை சுற்றி இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் அவரவர் வீட்டிற்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

“எனது மகளுக்கு பிரசவம் ஆகி 3 நாள் குழந்தை உள்ளது. ஆனால், இன்னமும் போய் பார்க்க முடியவில்லை. மருத்துவமனையில்தான் இருக்கிறார்..” என்று சொல்லிக்கொண்டே கண்கலங்குகிறார் வி.கே.சிந்து.

ராஜேஷ் யவாலே, ஆய்வாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்,  புனே.

ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் இங்கு இருக்கிறேன். என் தலைமையில் 5 குழுக்கள், 5 படகுகள், மற்றும் 25 நபர்கள் உள்ளனர். இதுவரை 800 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். 200 பேரை மீட்டுள்ளோம்.

தாசன், கேரள சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்.

“என்னோட சொந்த ஊரு கோழிக்கோடு. கடந்த  ஏழு நாட்களாக இங்கதான்  வண்டி ஓட்டிட்டு இருக்கேன். மொத்த KSRTC ஊழியர்களும் இந்த மீட்பு பணிகளில்தான் ஈடுபட்டிருக்கோம். யாரும் வீட்டுக்கு போகல. இப்ப திருவனந்தபுரத்துல இருந்து செங்கனூர் வரைக்கும் வண்டி ஓட்டிட்டிருக்கேன். குறிப்பா நிவாரண பொருட்களை கொண்டு போயி சேர்க்கிறது. மிலிட்டரி, தேசிய பேரிடர் மீட்புப் படை இவங்க எல்லோரையும் எங்க வண்டியிலதான் கூட்டிட்டு போறோம். இந்த வெள்ள மீட்பு பணிகளில் எங்க ஊழியர்களோட வேலை அளப்பறியது”

வர்கீஸ் ஆப்ரகாம் – பொறியாளர், கேரளா குடிநீர் வாரியம். IHRD பொறியியல் கல்லூரி முகாம்.

(வலது ஓரம் இருப்பவர்)

கடந்த ஒரு வாரமா நாங்க இங்க தண்ணீர் விநியோகம் செய்யும் வேலைகள்ல இருக்கோம். தண்ணீர் விநியோகம் பெரும் சவாலாக இருக்கு. இந்த மழையால கேரள மாநிலம் முழுக்க குடி தண்ணீர் கடுமையா பாதிக்கப்பட்டு இருக்கு. நல்ல  தண்ணீர்  கிடைப்பதே சிரமமா உள்ளது. செங்கனூர் தாலுகாவில் மட்டும் ஊழியர்கள், பொறியாளர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்கள் இந்த  பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலைமைகள் சரி ஆக குறைந்தது 2 வாரம் ஆகும். அதுவும் இதுபோல மழை இல்லாமல் இருந்தால்தான். இல்லையெனில் சிரமம்தான். 1924–க்கு பிறகு இப்பதான் கேரளா இது போன்ற பெரு வெள்ளத்த பாத்து இருக்கு. ஒரு  நூற்றாண்டு காணாத வெள்ள பாதிப்புதான் இது. திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் சில பகுதிகளைத் தவிர கேரளாவின் அனைத்து பகுதிகளும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு.

ஜார்ஜ் வர்கீஸ், சஜிமோன் கே.ஜார்ஜ் ( சி.எஸ்.ஐ – சர்ச் கமிட்டி)

கேரளாவின் பல பகுதிகளும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு எங்கள் தேவாலயத்தை நிவாரண முகாமாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பிருந்தே நாங்கள் நிவாரணப் பணிகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம். மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது நங்கள் தேவாலயத்தை திறந்துவிட்டோம். மதம், கடவுள் என்பதற்கு மேலாக எங்களுக்கு மனிதம்தான் முக்கியம். எந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆனாலும் செத்தபின் எங்கு செல்வோம் என சொல்ல முடியுமா? அது இந்துவோ, இசுலாமியரோ அல்லது கிருத்தவரோ யாரும் எதையும் கண்டவர் இல்லை.

சலீம் – பி.எம்.ஜே. ஹால். புழவாது பள்ளிவாசல் முகாமின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர்.

இந்த பள்ளிவாசலில் மட்டும் 41 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளன. குழந்தைகள், முதியவர்கள் என மொத்தம் 135 பேர் இங்கு உள்ளனர். அனைவரும் சொல்வதுபோல இது வரலாறு காணாத மழைதான், நுற்றாண்டு காணாத மழை.

இவ்வளவு பேரழிவு ஏற்படக் காரணம் பருவநிலை மாற்றம்தான். இந்தப் பிரச்சினை கேரளாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமான பிரச்சினையாக மாறியுள்ளது. இன்று கேரளா. நாளை இது போன்ற அழிவு கோவாவுக்கு ஏற்படலாம். ஏன் சென்னை பெரு வெள்ளம் சொல்வதும் அதுதான். குறிப்பாக இந்த மழையின் போது அதிக அளவில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரளாவின் நில அமைப்பையே புரட்டி போட்டுள்ளது என சொல்லலாம்.

நிலச்சரிவுக்கு முக்கியமான காரணம் மலைப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் என சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தவர்கள் இந்த அரசுகள் தானே. அவர்கள் தானே இவற்றை கண்காணித்து இருக்க வேண்டும். இந்த பேரழிவிற்கு இயற்கையின் கோரத்தாண்டவம் மட்டுமல்ல, மனித தவறுகளும்தான் காரணம்.

தற்போதுவரை மீட்புப் பணிகள் துரிதமாகவும், சரியாகவும் நடந்து வருகின்றன. ஆனால் இதற்குப் பின்னான மறுகுடியேற்றம் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு என்பவைதான் பெரும் சவாலாக உள்ளன. வீடுகளை முழுமையாக இழந்தவர்கள், வீட்டைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்தவர்கள் என ஒன்றிரண்டு குடும்பங்கள் அல்ல பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களது வாழ்க்கைக்கு என்ன வழி என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

அனைத்து தரப்புகளில் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. UAE அரசு 700 கோடி தருவதாகக் கூறியுள்ளது. கேரளாவில் ஒரு மருத்துவர் 50 கோடி தருவதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள 600 கோடி நிதி என்பது போதாது. உண்மையில் தங்களுடைய மதவாத கண்ணோட்டத்தை அவர்கள் இதிலும் காட்டுவதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். ஆனால் கேரள மக்கள் மதவாதத்தை என்றும் ஏற்காதவர்கள். அவர்கள் இந்த பேரழிவை மட்டுமல்ல மதவாதத்தையும் எதிர்த்துப் போராடி வெல்வார்கள்.

  • வினவு களச் செய்தியார்கள், செங்கனூர், கேரளா (21-08-2018).

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க