வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 9

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனாசேரியில் இருந்து ஆலப்புழா செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது புழவாது கிராமம். மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி.

அந்த பாதிப்புக்கு காரணம் அருகிலேயே ஓடும் பம்பை ஆறு. அந்த ஆற்றில் கலக்க செல்லும் கால்வாய் தண்ணீர் இந்த கிராமத்தின் வழியாகத்தான் செல்கிறது. இந்த கால்வாயில் அதன் கொள்ளளவை மீறி பாய்ச்சல் வேகத்தில் வந்த வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.

“நல்ல வேளையாக அரசு முன்னெச்சரிக்கை செய்ததால் நாங்கள் அனைவரும் கேம்பிற்கு சென்று விட்டோம் இல்லையென்றால் எங்களில் பாதி பேரது உயிர் போயிருக்கும்” என்கிறார்கள் அம்மக்கள்.

பொன்னம்மாள் அவர்களின் வீடு

பெரும்பாலும் இப்பகுதியில் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள் சரிவர இருந்தாலும் இவர்களுக்குள்  சற்றும் தொடர்பில்லாமல் இருந்தது. அதில் ஒன்று தான் பொன்னம்மாள் வீடு. கணவர் மனைவி இருவரும் கூலி வேலை செய்பவர்கள். ஒரு மகன், ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கு ஆகவில்லை. தனது தம்பி மகளை வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். அவருக்கு   கடந்த பத்தொன்பதாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகளை எல்லாம் மும்முரமாக செய்து வந்துள்ளனர். அந்தத் துயரம் தோய்ந்த கதையை நம்மிடம் விவரிக்கிறார் பொன்னம்மா.

வீட்டுக்கு பக்கத்திலே கால்வாய் போகுதே, இதுல எப்ப மழை பெஞ்சாலும் முழங்கால் வரைக்கும் தான் தண்ணி போகும். ஆனா இந்த வெள்ளத்தால வீடுகள்ள தண்ணி. நாங்களும் எல்லா பொருளையும் எடுத்து வைக்க முயற்சி பன்னோம். வேகமா வர வெள்ளம் நமக்காக வெயிட் பன்னுமா என்ன?

பொன்னம்மா உடன் அவரது பேத்தி

திடீர்னு எதிர்பாராத விதமா வந்த வெள்ளத்தால என்ன செய்யிறதுனு புரியல. கல்யாணத்துக்கு நாள் வேற கூடிடுச்சி. ஊர் மக்கள், சொந்த பந்தம்னு எல்லோருக்கும் பத்திரிகை கொடுத்து விட்டோம்.  திருமண மண்டபம், சாப்பாடு உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் முன்பணம் கொடுத்து விட்டோம். திருமணத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டோம். எல்லாம் கூடி விட்டது. ஆனால் இந்த மழையால் மேற்கொண்டு எந்த வேலையும் செய்ய முடியாம முடங்கிட்டோம்.

மழை விட்டுடும்னு நெனச்சோம்…. நிக்கல… திருமணத்தை நிறுத்தி விடாலம்னு உறவினர்களிடம் கலந்து ஆலோசிக்கவும் முடியல. மணமகன் வீட்டாரிடமும் உடனே பேச முடியல.

வீட்டுக்கு தேவையான பொருட்களை சுமந்துவரும் உறவினர். அவரது பின்புலத்தில் ஓடும் வாய்க்கால் மழை வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளதை காண முடியும்.

காரணம், வெள்ளம் வந்தது முதல் மின்சாரம் இல்லை. போக்குவரத்தும் இல்லை. மாப்பிள்ளை வீடு செங்கனூர்ல இருக்கு… அங்கே செல்வதற்கு எந்த வழியுமில்ல. அப்புறம் எப்படியோ அவங்க வீட்டுக்கு மட்டும் இப்ப திருமணத்த நடத்த முடியாதுன்னு தகவல் கொடுத்துட்டோம். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.

ஆனா, சுத்தி இருக்க சொந்த பந்தங்களுக்கு தகவல் எதுவும் தர முடியல. யாரு எந்த கேம்புல தங்கியிருக்காங்கன்னு தெரியாது. திருமணத்திற்கான நாளும் வந்து விட்டது. நம்பிக்கையோட உறவுக்காரங்க எல்லோரும் இந்த வெள்ளத்திலும் எப்படியோ திருமண மண்டபத்திற்கு வந்து விட்டார்கள்.

வந்தவங்க எல்லோரும் ஏமாற்றத்தோட கேம்புக்கே திரும்பி போயிருக்காங்க. இப்ப தான் அவர்களை சந்தித்து நடந்த சம்பவத்த பத்தி பேசி திருமணத்தை அடுத்த தேதிக்கு தள்ளி வச்சி இருக்கோம். அதுக்கான வேலைய மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். அதுக்கான பணம் கையில இல்லை. ஏற்கனவே இந்த கல்யாணத்துக்காக இருந்த ஐந்து செண்ட் நெலத்த வித்துட்டோம். இந்த நிலையில யாரிடமும் கடன் கேட்க முடியாது. எல்லோருக்கும் பாதிப்பு இருக்கு… என்ன செய்யிறதுன்னு புரியவில்லை” என்று தவிப்புடன் தன் குறைகளை கொட்டித் தீர்த்தார்.

இந்த வெள்ளத்திற்கு என்ன காரணமா  இருக்கும்னு நினைக்கிங்க?

அளவுக்கதிகமான மழை.. கக்கி, பம்பை’ன்னு எல்லா டேமும் நிறைஞ்சிடுச்சி. அதை தேக்கி வச்சாலும் ஆபத்து.. திறந்தாலும் ஆபத்து தான்… என்ன பண்றது? யாரயும் குறை சொல்ல முடியாது. ஆனா இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக் கூடாது.

ஆள் உயரத்துக்கு வெள்ளம்…. இந்த மாதிரி எப்பவும் பார்த்ததில்ல. இந்த வெள்ளத்துல இங்க இருக்க ஏழு குடும்பம் மாட்டிக்கிட்டோம். யாரும் கேம்புக்கு போகல… இங்கயே ஒரு வீட்டோட மாடியில எல்லோரும் தங்கிட்டாங்க. நாங்க மட்டும் போகல.

பொன்னம்மா வீடு

வீட்டுல கல்யாணத்துக்கு எடுத்து வச்ச சாதனங்கள் இருக்கு. யாராவது வந்து தூக்கிட்டு  போயிடுவாங்களோன்னு அச்சம்.  நாங்க மட்டும் தனியா வீட்டு மேல இங்கயே பாதுகாப்புக்கு கிடந்தேன். குடிக்க நல்ல தண்ணி கிடைக்கல. சோறு இல்ல. கழிப்பிடம் போக முடியல. பாத்ரூம் முழுக்க தண்ணி…. என்ன பண்ண முடியும்? அதே மாதிரி பாம்புங்க தொல்லை வேற…  நான் மட்டும்ன்னா பரவாயில்ல.. என்னோட பேரக் குழந்தைங்க….வயசான அம்மாவும் கிடந்தாங்க… இந்த கொடுமைய எங்களால மறக்கவே முடியாது.

இந்த மாசம் வீட்டு கரண்ட் பில் 1200 ரூபா வந்திருக்கு. அதை கட்ட பணம் எதுவும் இல்ல. இப்ப ஆபிசருங்க வந்து பீசை புடுங்கினாங்கன்னா அவங்க கிட்ட நடந்த சம்பவத்த சொல்லி கெஞ்சதான் முடியும். அதையும் மீறி புடுங்கினாங்கன்னா… போகட்டும்.. எங்களால ஒன்னும் பன்ன முடியாது..!

  • வினவு களச்செய்தியாளர்கள் செங்கனாசேரி, ஆலப்புழா மாவட்டம், கேரளா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க