வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : பாண்டநாடு – புத்தன்காவு பகுதிகளிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 6
கேரளாவில் பெய்த கனமழை அம்மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது என்பதற்கு சாட்சி பல லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் வடிந்த பிறகும் வீட்டுக்கு செல்லாமல் முகாம்களில் தங்கியுள்ளதே. முக்கியமாக பாண்டநாடு – பிரையார் பகுதி மற்றும் புத்தன்காவு பகுதியில் பம்பை ஆற்று வெள்ளம் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. #KeralaFlood #KeralaFloodRelief
இன்றுவரை இப்பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை. இப்பகுதிகளுக்கு மின்சாரம் வர குறைந்த பட்சம் 3 நாட்கள் ஆகும் என்கிறார்கள் மின்துறை ஊழியர்கள். பேருந்து செல்லவில்லை. ஆட்டோக்களும் இப்பகுதிகளுக்கு போக வேண்டும் என்றால் வர மறுக்கிறார்கள். இருப்பினும் மக்கள் நடந்தே தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களும் குறைந்தபட்ச வாழ்க்கை உத்திரவாதத்துடன் இருப்பவர்கள் மட்டும்தான்.
வீட்டிற்கு சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு சரிவர இல்லாததால் மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் சோர்வாகவே காணப்படுகிறார்கள். தன்னார்வலர்களின் நிவாரண உதவியும் பெரிய அளவில் இல்லாததால் அரசு சார்ந்த உதவிகளை மட்டுமே அப்பகுதி மக்கள் தற்போது பெற்று வருகின்றனர். உயர் நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் வீதியில் வரும் நிவாரண வாகனங்களை எதிர்பார்த்தே வாழும் நிலைதான் உள்ளது. அன்றாட தொழிலாளிகள், ஏழைகள் நிலை வேறு. அவர்களுக்கு இன்னமும் முகாம் ஒன்றே கதி.. படிப்படியாக தண்ணீர் வடிந்தாலும் அவர்களின் கண்ணீர் மட்டும் குறையவில்லை.
அணில் குமார் முன்னாள் ராணுவ ஊழியர்
என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லாரும் இப்போ குன்னூரில் இருக்காங்க.. என்னோட பொண்ணுக்கு பிரசவ காலம் என்பதால அதை பார்க்க போயிட்டாங்க.. நான் மட்டும் இங்க வந்தேன். வந்தபோது இங்க பெரும் மழையில் மாட்டிக்கிட்டேன். விஷயம் கேள்விப்பட்டு எங்க சொந்தக்காரங்க எல்லோரும் பதறிட்டாங்க. நான் இருக்கேனா இல்லையான்னு கூட தகவல் சொல்ல முடியலை. இப்பவும் கரண்ட் எதுவும் இந்த பகுதிக்கு வரல. இந்த கெட்டதுலயும் ஒரு நல்லது என் மனைவி அங்க இருந்துட்டாங்க. பொருட்களையும் எல்லா சாதனங்களையும் மீட்பது கடினம்தான்.
ஜெர்ரி தெரு விளக்குகள் அமைக்கும் நிறுவனம் வைத்திருப்பவர்எங்க வீடு முழுதும் நீரில் முழ்கி விட்டது. எங்களோட மாமா வீட்டின் இரண்டாவது மாடியில் மொத்த முடும்பமும் தங்கிட்டோம். அங்கேயே அனைவரும் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். ஆர்மி ஹெலிகாப்டரிலிருந்து போட்ட உணவு பொருட்களை கொண்டு சமாளிச்சோம். வீட்டில் உள்ள பொருட்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்துக்கும் மேல நஷ்டம். மின்சாதன பொருட்கள், துணி, பர்னிச்சர் எல்லாம் போச்சி… இப்ப எங்களோட பணியாளர்களை கொண்டு வீட்டை சுத்தம் செஞ்சிட்டு இருக்கோம். நாலஞ்சி பேர் இந்த வேலையை செஞ்சாலும் ரொம்ப சிரமமா இருக்கு. இதுக்கே நாங்கள் சொந்தமாக ஜெனரேட்டர் ஏற்பாடு செஞ்சி மோட்டார் வச்சி தண்ணீர் இறச்சி மிஷினால சுத்தம் பண்ணிட்டு இருக்கோம். ஆனாலும் வேலை தீர்ந்தபாடில்ல.
பிலிப் போஸ் ரப்பர் தோட்ட முன்னாள் அதிகாரி
பிலிப்-ன் வீட்டு வெளியில் காய வைக்கப்பட்டிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்
எங்களோட வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் ஒரு இரவில் வந்த பெரு மழை அழிச்சிட்டு போயிடுச்சி. இப்போ கேம்பில் இருந்து திரும்பி வந்து பார்த்தா பொருட்கள் எல்லாம் நாசமாயிருக்கு. வீட்டு கதவை திறக்குறதே ரொம்ப கஷ்டமாயிருந்தது. திறந்து பார்த்ததும் பெரிய நல்ல பாம்பு இருந்தது. நான் பொதுவா பாம்புகளை அடிக்க மாட்டேன். ஆனா வேற வழியில்ல. கிரசின் தெளிச்சி அடிச்சி அத தூக்கி போட வேண்டியதாயிற்று. அது ஒண்ணுதான்னு பார்த்தா, சிலாப்புல இன்னொரு பாம்பு இருக்கு. அதையும் அடிக்க வேண்டியதாக போச்சு. ரொம்ப மோசம்.
நாங்க இரண்டே பேர்தான் கணவன்-மனைவி. அறுபது வயசுக்கு மேல ஆனவங்க. எல்லாம் போச்சி. எனக்கு பென்சன் பணம் மட்டும்தான் வருமானம் என்பதால வீட்டுல சில தென்னை மரம், கோழி வளர்க்கிறதுன்னு செஞ்சேன். அறுபத்தி அஞ்சி கோழிக்கு மேல வளர்த்தேன். அது எல்லாம் செத்து போச்சு. அரசாங்கம் இவ்ளோ நடந்த பின்னாடியும் இழப்பீடு பத்தி பேசவே இல்ல. அணைகளை முழு கொள்ளளவு எட்டிய பிறகு திறந்து விட்டதுதான் இவ்ளோ பெரிய பாதிப்பு.
ஜோபி மற்றும் அவரது மாமியார்
என்னோட கணவர் வளைகுடா நாட்டுல வேலை செய்கிறார். நானும் என் மாமியார் என் குழந்தை, மூணு பேர்தான் இங்க இருக்கோம். மழை பெய்ய ஆரம்பிச்ச பின்னாடி இவ்ளோ வெள்ளம் வரும்னு நாங்க யாரும் எதிர்பாக்கல. இந்த திடீர் வெள்ளத்தால் பொருட்கள பாதுகாக்கிறது முடியாம போச்சி. எல்லா பொருட்களும் வீணாகி போச்சி. இது என்னோட சொந்த வீடு இல்ல. உறவினர் வீடு. எங்க வீட்டுல கொஞ்சம் சீரமைப்பு வேலை நடக்கிறதால. இங்க தங்கினோம். அங்க கொஞ்சம் பொருள், இங்க கொஞ்சம் பொருள்னு மொத்தமா போச்சி… இதெல்லாம் சீராக எத்தனை நாள் ஆகும்னு தெரியல. ஒரு சில தன்னார்வலர்கள் வந்து வீட்ட சுத்தம் பண்ண உதவி செஞ்சாங்க. அதுக்கு பின்னாடி இப்ப பொருட்களை எல்லாம் நாங்க சரி பண்ணிட்டு இருக்கோம்.
வேணுகோபால் மற்றும் கே.எஸ்.ராஜன் கரிங்காட்டுகாவு தேவி கோவில் அறங்காவலர்கள்
பம்பையாற்றின் கரையிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. இதுல பத்திரகாளியும், துர்கையும் இருக்காங்க. கோவிலுக்குள்ள வெள்ளம் புகுந்துடுச்சி. இப்ப கோவில் முழுக்கவே சேரும் சகதியுமா இருக்கு. அதை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை தான் இப்ப செய்யுறோம். ஓணம் தொடங்குறதால குறைந்தது பூஜைகளை செய்யலாம் அப்படிங்கிறதால முடிஞ்சத செஞ்சிட்டு இருக்கோம். மழை வெள்ளத்துக்கு பிறகு பூஜை எதுவும் நடக்கவேயில்லை.
வினிஷ்குமார் பம்பையாற்றின் கரையோரம் அமைந்துள்ள முகாமில் தற்போது தஞ்சமடைந்திருப்பவர்
வயதான அப்பா, அம்மாவோட சேர்ந்து இந்த முகாமில் தங்கியிருக்கிறோம். எங்களுடைய வீடு முழுவதும் சேதமடைந்து விட்டதால் திரும்ப போக முடியவில்லை. இந்த மழையின் போது என்னோட அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு ரொம்ப மோசமான நிலைக்கு போயிட்டார். எப்படியோ அவரை காப்பாத்தி வச்சிருக்கோம். இதெல்லாம் எப்ப சரியாகுமோ தெரியல.
சின்னம்மா சாக்கோ புத்தன்காவு.
”என்பத்தைந்து வயதான என்னோட வாழ்நாள்ல இந்த மாதிரி வெள்ளைத்த பார்த்ததே இல்ல. வீடு முழுக்க தண்ணி. கூரை மண்டை வரைக்கும் ஏறிடுச்சி. ஓடுகள் எல்லாம் ஒடஞ்சி சேதமாகிடுச்சி. இப்ப வரை ஒரு பொருளும் எனக்கு நிவாரணமா கிடைக்கல. நாம் கேம்புக்கு போயி தங்கல. இங்க பக்கத்துலயே உறவின வீட்டுல தங்கிட்டேன். அதையே சொல்லி அதிகாரிகள் யாரும் எந்த பொருளும் தராம இருக்காங்க. சாப்பாடு கூட சர்ச்லதான் கொடுத்தாங்க.” என்று சொல்லிக்கொண்டே தன்னிடம் இருக்கும் பிஸ்கட்டுகளை நம்மிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். ”அடுப்பு எதுவும் இல்லை. இல்லனா டீ போட்டு கொடுத்திருப்பேன்” என்கிறார்.
உஷா புத்தன்காவு.
இந்த வீடு கட்டி பதினெட்டு வருஷமாகுது. இந்த இடம் ரொம்ப பள்ளத்துல இருக்கு. மழை எப்ப வந்தாலும் முழங்கால் அளவுக்குதான் தண்ணி வரும். ஆனா இப்ப தரையில இருந்து 8 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் வந்துடுச்சி. மழை கொஞ்சம் அதிகமா வரும்போதே நான் கீழ இருந்த எல்லா பொருளையும் எடுத்து மாடி மேல வச்சிட்டு உறவினர் வீட்டுக்கு போயிட்டேன். வந்து பார்த்த பிறகு எல்லாம் சாதனங்களும் நனைஞ்சி வீணாகி போயிருக்கு. வீட்டுல இப்ப ஒரு சாதனமும் மிஞ்சல.. எனக்கு மகன் மகள் யாரும் இல்ல. எப்படி இதெல்லாம் சரிகட்ட போறன்னு தெரியல…!
வாசவன் வயது 75, புத்தன்காவு
நானும் என்னோட மனைவியும் மட்டும்தான் இருக்கோம். மழை வெள்ளம் வர ஆரம்பிச்சதுமே.. நாங்க முகாமுக்கு போயிட்டோம். திரும்பி வந்து பார்க்கும்போது பொருட்கள் எல்லாம் வீணாகி போயிருந்தது. ரொம்ப நாசமாகி போயிருக்கதால எங்களால சுத்தம் செய்ய முடியல… அவ்ளோ மண்ணு,குப்பை இருக்கு. அதனால தன்னார்வலரும், சர்ச்ல ஏற்பாடு செய்த ஆட்களும் வந்து சுத்தம் பண்ணிட்டு இருக்காங்க. இதெல்லாம் இனிமே எப்படி சம்பாதிக்க போறனோன்னு தெரியல.
செபாஸ்டின் பாதிரியார் மற்றும் பர்னாபாஸ் கேரளா பல்கலைக்கழக மாணவர்
சர்ச் சார்பா பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் வேலைகள்ல ஈடுபட்டிருக்கோம். ஜெனரேட்டர், மோட்டாரையும் கொண்டு போயி தண்ணிய வெளில இறச்சிட்டு கிணத்து தண்ணிய கொண்டு சுத்தம் பண்ணி தருகிறோம். அது மட்டுமில்லாம கிணத்தையும் சுத்தம் பண்ற வேலைய நாங்க செய்யுறோம். இதெல்லாம் எங்க சக்திகுட்பட்டுதான் செய்யுறோம். பல பகுதிகள்ல பாதிப்பு இருக்கு. அதையெல்லாம் சுத்தம் செய்ய அதிக ஆட்கள் தேவைப்படுறாங்க. என்னோட கல்லூரி இருக்க இடத்துல எதுவும் பெரிய அளவில் பிரச்சினை இல்ல. ஆனாலும் நாங்க மாணவர்கள் சார்பா பொருட்களை சேகரிப்பது, நிவாரண மருந்துகளை சேமிக்கிறது போன்ற வேலைகளை செஞ்சேன். இப்பதான் நான் எங்க வீட்டுகிட்டயே வந்திருக்கேன்.
சந்தோஷ் மற்றும் அவரது குடும்பம். நீர்விளாகம் பகுதி
சினு கேட்டரிங் சர்விஸ் என்ற பெயரில் இங்க கடை வச்சிருக்கேன். அரிசி மூட்டைகள், தட்டு, பேப்பர் ரோல், தேநீர் கப்புகள், என பல பொருட்கள் நாசமாகிட்டது. கேட்டரிங் உணவு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்துக்கு நஷ்டம். இது இல்லாம வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாமும் நாசமா போயிடுச்சி” என்று சொல்லிக் கொண்டே, “நீங்க ஏதாவது நிவாரணம் தருவீங்களா?” என்று ஏக்கமாகக் கேட்டார்.
- வினவு களச் செய்தியாளர்கள் பாண்டநாடு, புத்தன்காவு, ஆலப்புழா மாவட்டம், கேரளா.
- வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பாகம் 1
- கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்! பாகம் 2
- கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட் பாகம் 3
- கேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை ! கேரள அதிகாரிகள் நேர்காணல் ! நேரடி ரிப்போர்ட் பாகம் 4
- கேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட் பாகம் 5