வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 2

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கனச்சேரி, குட்டநாடு, பாண்டநாடு ஆகிய பகுதிகள் மிகவும் மோசமான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. செங்கனச்சேரியிலிருந்து ஆலப்புழா செல்லும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருக்கும் பகுதி குட்டநாடு. இப்பகுதியில்தான் பம்பை ஆறு ஓடுகிறது. இந்த பம்பை நதிக்கரையோரம் பல நூறு குடும்பங்கள் குடியிருக்கின்றன.

இன்றுவரை பம்பா நதியில் வெள்ளநீர் கரைபுரண்டு சாலைகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வாரி அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. இப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மீட்கபட்டாலும் எட்டுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் இறந்துள்ளதாக கூறுகின்றனர்.

கடந்த ஏழு நாட்களாக முகாமில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பார்வையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் யாரும் செல்லவில்லை. அதையும் மீறி சிலர் எட்டு கிலோ மீட்டர் துரம் வரை நடந்தே வீடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மீண்டும் மாலை நடந்தே முகாமிற்கு திரும்ப வேண்டிய நிலைதான் நீடிக்கிறது.

எட்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள முகாமிலிருந்து நடந்தே வந்து வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு மீண்டும் முகாமுக்கு செல்லும் அவலம்.

பாண்டநாடு பகுதியின் முழு சேதாரத்திற்கும் பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளில் வந்த வெள்ளபெருக்குதான் காரணம். இந்த இரண்டு ஆறுகளின் வடிகாலாக பாண்டநாடு குடியிருப்புப்பகுதி மாறியுள்ளது. அந்தளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வீடுகள் மற்றும் சுற்றுசுவர்கள் பெரும்பாலும் காட்டாற்று வெள்ளத்தில் தகர்ந்து கிடக்கின்றன. பல கடைகளின் ஷட்டர்கள் உடைந்து போயிள்ளன.

இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….!

தங்களுடைய வீட்டு மாடி முழுவதும் நிரம்ப தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும் மீனவர்கள் மட்டும் வரவில்லை என்றால் இங்கே யாரையும் உயிரோடு பார்த்திருக்க முடியாது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரம், சாலையின் இருபக்கமும் நிவாரண பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா என கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

பம்பையாற்றுக் கரையோரப் பகுதி மக்களுக்கான முகாம். மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவதால் முகாம் காலியாக இருக்கிறது.

செங்கனாச்சேரி, மணக்கச்சிரா, பம்பையாற்றங்கரை ஆகிய பகுதிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் தமது வீட்டு நிலைமையைக் காண வந்திருந்த மக்களின் கருத்துக்கள்:

லல்லு சூசன்,  புழவாது, செங்கனாச்சேரி.

இது எங்களோட  வீடும், அக்குபஞ்சர் ட்ரீட்மென்ட் சென்டரும். ஒன்னரை மாசமா பெய்த மழையால் ஒரு சிகிச்சை கூட செய்ய முடியலை. பதினைந்தாம் தேதி அன்று பலமாக மழை பெய்ததால் வீட்டில் இருந்த சில பொருட்களை மட்டும் பத்திரமாக எடுத்து மேலே வைச்சிட்டோம். கீழே இருந்த  சாதனங்கள் எல்லாம் நாசமாகிடுச்சி. வீட்டில் போட்டிருந்த தோட்டம் எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்போது வெள்ளம் வடிஞ்சிடுச்சு… கனமழையின்போது ஆள் உயரம் வெள்ளம் வந்தது. குடும்பத்தோட முகாமுக்கு போய் தங்கிட்டோம். ஆறு நாளா முகாமில்தான் இருக்கோம்.

பொன்னப்பன், தட்டு கடை வைத்திருப்பவர். மணக்கச்சிரா.

இந்த ஏரியா முழுவதும் வெள்ளம்… இங்க இருக்கும் முப்பது குடும்பமும் முகாமுக்கு போயிட்டோம். வெள்ளத்துல அடிபட்டவங்கள உடனடியா பக்கத்துல இருக்க அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனதால உயிர்கள காப்பாத்த முடிஞ்சது…. வீடு முழுக்க வெள்ளம். வீட்டிலிருந்த பொருள் எல்லாம் நஷ்டம்… இது என்னோட கடைதான். எல்லாம் போயிடுச்சு…. இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. இன்னமும் வீட்டுல வெள்ளம் வடியல….!

ஜோபின் ஜான்சன், மனக்கச்சிரா.

வீடு முழுக்க வெள்ளம்… 7 நாளா கேம்புல இருக்கோம். இன்னைக்குதான் வீடு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தோம்.. வீட்டில் இருந்த எல்லா சாதனங்களும் நஷ்டம். இப்ப குடிக்க சுத்தமான தண்ணி இல்ல… உணவு இல்ல…. கேரளா சர்கார் எல்லா உதவிகளையும் செஞ்சாலும் எல்லா பகுதிகளுக்கும் செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கு.. எங்க ஏரியாவில் இருந்து குட்டநாடு வரைக்கும் அதிகம் பாதிக்கபட்டிருக்கு. இந்த பக்கம் யாரும் இதுவரை வரலை… எங்களுக்கு வீட்டில் உள்ள சாதனங்கள் போனது கவலை இல்ல… உடனடியாக சுத்தமான தண்ணியும், உணவும்தான் தேவையா உள்ளது. கேம்பில் எல்லா அதிக ஆட்கள் இருக்கிறார்கள். எல்லா உதவியும் கிடைக்கிறது. அங்க பிரச்சனை இல்லை… ஆனால் இங்கு உள்ள பிரச்சனைகளை சர்கார் அறியணும்.

கனகன், பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.

வீட்டில் எதுவும் இல்ல, இங்க இருக்க எல்லாரும் முகாமுக்கு போயிட்டோம்… எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்ல முடியாது… இங்க இருக்க சவுரியம் கேம்பில் இல்ல…  இருந்தாலும் எங்க நிலைமை சரியில்லை… அங்க இருக்கோம்.

கோபி, பம்பையாற்றின் கரையோரம் வசிப்பவர்.

மொத்தம் இங்க தொண்ணூறு குடும்பங்கள் இருக்கு.. இப்ப யாரும் வீட்டில் இல்ல. எல்லாம் கேம்பில் இருக்காங்க.. இன்னைக்குதான் வீட்டை பார்க்க வந்தேன்… வீட்டில் எந்த சாதனமும் இல்ல. எல்லாம் வெள்ளத்தில் போயிடுச்சி.

  • வினவு களச் செய்தியாளர்கள், செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பாகம் 1