வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 4

கேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து கேரள நகரங்களும் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறிப்போயுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தாலும் அவை போதுமானதாக உள்ளனவா என்பதும் ஒரு கேள்விக்குறிதான்.இவற்றை அறிய கேரள அரசின் மக்கள் தொடர்பாளரும் செங்கனூர் பகுதியின் துணைத் தாசில்தாருமான எஸ்.மோகனனிடம் பேசினோம்.

‘‘மழை வெள்ள பாதிப்புக்கள் தொடங்கியது முதல் (16-08-2018) அனைத்து நாட்களிலும், இந்த கேம்பில் இருந்து வருகிறேன். இங்கு செங்கனூர் பகுதியில் மட்டும் 214 முகாம்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மோகனன், துணைத் தாசில்தார், செங்கனூர்.

16 – 17 தேதிகளில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த பாதிப்புக்கு முக்கியக் காரணம், செங்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள ஆறுகளான பம்பை மற்றும் அச்சன் கோவில் ஆறுகளின் வெள்ளமும் அத்துடன் மழை நீரும் அதித வேகத்தில் கலந்ததும்தான். அதனால் தான் தற்போது வரை மீள முடியாத அளவுக்கு பிரச்சினைகள் தொடர்கின்றன.

அதிலும் பம்பை அணை மற்றும் கக்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டிய பின்னர் திறந்து விடப்பட்டன. இது இந்த பிரளயத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்தது.

இதனால் கிட்டத்தட்ட 3 – 4 நாட்கள் வரை எங்களால் ஏதும் செய்ய இயலவில்லை. இருந்தாலும் கொல்லம், விழியம் பகுதிகளில் இருந்து யாரும் கேட்காமலே நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளைக் கொண்டுவந்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளனர்.

மணக்கச்சிரா பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குளிர்சாதனப்பெட்டி.

அவர்கள் கேரள மண்ணின் மைந்தர்கள் என்பதாலும், கடலோடிகள் என்பதாலும் தங்கள் உயிரையும் கூட பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றினர். அதற்கு பின்னர் தான் தேசிய பேரிடன் மீட்புப் படையினர், தமிழ்நாடு தீயணைப்புப்படையினர், ஒடிசா தீயணைப்புப் படையினர், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர், கடற்படையினர், விமானப்படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்களின் பங்களிப்புதான் இங்கு முக்கியமானதாக அமைந்தது.

தற்போது வரை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான நிவாரணத்தைப் பொருத்தவரை முழுமையாக முடிவடையவில்லை. ஏனெனில் தற்போது வரை மக்கள் முகாம்களில் உள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லவே அச்சப்படுகின்றனர். அதே போல மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருந்த கால்நடைகள் பலவும் வெள்ளத்தில் இறந்து போயுள்ளன. மேலும் பிழைத்த கால்நடைகளும் உணவின்றி தவித்து வருகின்றன.

வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் வெள்ளத்தில் நாசமாகிவிட்டன. அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவது என்பது உண்மையில் மிகவும் சிரமமான ஒரு விசயமாகும். மேலும் மக்கள் தங்களது கல்விச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, ஆதார் என அனைத்தையும் இழந்துள்ளனர். எனவே அவற்றை ’அதாலத்’ மூலம் திரும்ப கிடைக்கப்பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பெரிய அளவிலான உயிர் சேதங்களை நாங்கள் தவிர்த்து மக்களை காப்பாற்றியுள்ளோம். ஆனால் தற்போது எங்கள் முன் உள்ள முக்கியமான பிரச்சினை மறுகுடியமர்த்துவதுதான். அதிலும் மிக சவாலான விசயம் என்பது சுகாதார ஏற்பாடுகள்தான். வெள்ளம் பாதித்த பின்னர் தற்போதுவரை தொற்று நோய்கள் ஏதும் பதிவாகவில்லை. அதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் யாரும் வீடுகளுக்கு இதுவரை செல்லவில்லை என்பதுதான். எனவே அதற்கு முன்பாகவே சுத்தம் செய்யும் பணிகளை துரிதகதியில் செய்ய வேண்டி இருக்கிறது.

கேரளத்தின் பல பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் முன்வந்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது. கேரள அரசின் பல்வேறு துறையினரும் ஒன்றாக இணைந்து இப்பணிகளை முன்னெடுத்து வருகிறோம். வெளியில் இருந்து வரும் உதவிகளையும் முறையாகச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

மணக்கச்சிரா பகுதியில் குப்பைகளோடு குப்பையாக கரையொதுங்கிக் கிடக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள்.

அதே போல மழையின் காரணமாக பல இடங்களில் விசப்பூச்சிகள், பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துவிட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் விஷ முறிவு மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும் பரசினிக்கடவு பாம்பு பண்ணையில் இருந்து வனச்சரகர் கணேசன் தலைமையில் பாம்பு பிடிப்பவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த பகுதியில் பாம்புக்கடி குறித்த புகார்கள் ஏதும் பதிவாகவில்லை.

வீடுகளை சரி செய்யும் வரை மக்களை முகாம்களில் தங்கவைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி ஆகிய நிறுவனங்களின் மூலம் மாணவர்களுக்கான புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பணிகளை செய்யவும் மேற்பார்வையிடவும், மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் தலைமையில், துணை ஆட்சியர் பி.எஸ். சொர்ணம்மா, இணை ஆட்சியர் அதுல் சுவாமிநாதன், ஆர்.டி.ஓ. ஹரிகுமார், தாசில்தார் கே.வி.சசி, தாசில்தார் எல்.ஆர். ஜோஸ்லி அம்மாள், மற்றும் துணைத் தாசில்தார் எஸ். மோகனன் ஆகியோர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் விழாவானது இந்த ஆண்டு அரசால் கொண்டாடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு ஒதுக்கப்படும் நிதியானது மக்களின் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

விமல் – பொதுப்பணித்துறை பொறியாளர். (புகைப்படம் தவிர்த்தார்)

”இந்த மழை வெள்ள பாதிப்பு சமயத்தில் அதாவது குறிப்பாக 14,15,16,17 ஆகிய நாட்களில் மொத்த செங்கனூர் பகுதியும் ஒரு தனித் தீவாக மாறிப்போனது. சாலைகள் பலவும் நீரில் மூழ்கிப் போயின. அதனால் போக்குவரத்தானது முற்றாக பாதிக்கப்பட்ட்து. தற்போது வரையிலும் கூட செங்கனாச்சேரி வழியாக ஆலப்புழா செல்லும் சாலையானது நீரில் மூழ்கியே கிடக்கிறது.

செங்கனூர் பகுதியைச் சுற்றி சுமார் 160 கிமீ தூரத்துக்கான சாலைகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சரி செய்ய குறைந்தது ஒரு வார காலமாவது தேவைப்படும். அதுவும் தற்போது உள்ளது போன்ற வானிலை நிலவினால்தான் இதுவும்கூட சாத்தியம். கேரளாவில் வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் தான் சாலைகள் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு சேதமாகியுள்ளன.

செங்கனூர் பகுதியில் உள்ள சேதம் குறித்த கோப்புகளை இப்பகுதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளிடம் விவாதிக்கத்தான் காத்துக் கொண்டு இருக்கிறேன்” என்றார்.

ஷாஜி செரியன், சட்டமன்ற உறுப்பினர், செங்கனூர் தொகுதி.

வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடும் செங்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜி செரியன்.

அதிகாரிகளைப் பார்த்துவிட்டு வெளியேறிய பின்னர் சி.பி.எம். கட்சியின் சர்பில் போடப்பட்டிருந்த பந்தலில் சென்று அவர்கள் இந்த பாதிப்பு சமயத்தில் என்ன மாதிரியான வேலைகளைச் செய்துவருகின்றனர் என்பது குறித்து விசாரித்தோம்.  செங்கனூர் சி.பி.ஐ (எம்) –ன் பகுதி செயலாளர் ரசீத் அவர்கள் கூறும் போது, ”மழை வெள்ளத்தை கேரள அரசு, திறமையாகக் கையாண்டு மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாது எங்கள் கட்சி மட்டுமல்லாது அனைத்து கட்சி நபர்களும் இணைந்து நிவாரணப்பணிகளில் இரவு பகல் பாராது உழைத்தனர்.

எங்கள் அனைவரது பங்களிப்புகளையும் தாண்டி எங்களின் மீனவ சகோதரர்கள் செய்த உதவி அளப்பரியது. பல ஆயிரம் மக்களை அவர்கள் தங்களின் சொந்தங்களாக நினைத்து மீட்டனர். அதுமட்டுமல்ல கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியோரைக் காட்டிலும்  இவர்கள் உடனடியாக செயல்பட்டனர். பலருடைய படகுகளும் கூட சேதமடைந்தள்ளன. ஆனால் அவர்கள் யாரும் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

பம்பை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் தஞ்சமடைந்திருக்கும் செங்கனூர் பகுதி மக்கள்.

தற்போது நிவாரண முகாம்களில் மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் மிகவும் சவாலான விசயம் அவர்களை மீண்டும் அவர்களது வசிப்பிடங்களில் அவர்களை மீள்குடியேற்றுவதுதான்.

குறிப்பாக சுத்தம் செய்யும் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளன, எங்கள் கட்சியின் சார்பாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் வருகின்றனர். அவர்களைக் கொண்டு நாங்கள் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்து வருகிறோம். இதுவரை சுமார் 1000 பேர் இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மற்றும் அதற்கு அடுத்த நாட்களில் சுமார் 2000 பேர் வரை இந்த பணிகளில் ஈடுபடப் போகின்றனர். ஆனாலும் இது போதாது எனக் கருதுகிறேன்.

ரசீத், பகுதி செயலாளர், சி.பி.ஐ (எம்), செங்கனூர் .

அரசானது மக்களின் மறுவாழ்வுக்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில் அனைத்து பணிகள் முடியும்வரை அவர்களை முகாம்களில் தங்கவைக்க முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சான்றிதழ்கள், ரேஷன் கார்டுகள் ஆகியவற்றை உடனே பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள அனைத்தையும் இழந்து உள்ளதால் அவர்கள் முகாம்களில் இருந்து திரும்பிச் செல்லும் போது அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் அரசால் வழங்கப்படும். தற்போதுவரை மாநில அரசானது அனைத்து பணிகளையும் துரிதமாக செய்கிறது. மத்திய அரசும் எங்களுடன் இணைந்து செயல்படும் என நம்புகிறோம்.” என்று கூறினார்.

அனைவரிடத்திலும் பேசியதிலிருந்து முக்கியமான மற்றும் மிகப்பெரிய சவாலான பணியாக இருக்கப் போவது மக்களின் மீள் குடியேற்றம்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. பல பகுதிகளில் மின்சாரம் வரவில்லை. இதன் காரணமாக மக்களால் தங்களது உறவினர்களைக் கூட அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக் கூட இயலவில்லை. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து இல்லாததன் காரணமாக இன்னும் சில இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட முடியாத நிலை. மீள்குடியேற்றப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளைப் பொருத்தவரையில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தாலும், நவீன இயந்திரங்கள் மூலம் அப்பணிகளை செயல்முறைப் படுத்துகையில் மட்டுமே விரையில் இயல்பு நிலை திரும்பும். மக்களுக்கான இழப்பீடு குறித்து அரசுத் தரப்பில் இதுவரை எதுவும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

பெரும்பாலான கேரள மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைதான் இப்போது உள்ளது.

  • வினவு களச் செய்தியாளர்கள் செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பாகம் 1

கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்! பாகம் 2

கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட் பாகம் 3

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க